Published:Updated:

சிவமகுடம் - 83

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ஆலவாய் ஆதிரையன்

சிவமகுடம் - 83

ஆலவாய் ஆதிரையன்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

நற்பேறும், நல்ல வரங்களும், சுபகாரியங்களும், மங்கல வைபவங் களும் விலகாமல் தொடர்கின்றன என்றால், அதற்குக் காரணம் நமசிவாயரின் திருவருளும் அவர்தம் துணையான அங்கையற் கண்ணியின் பெருங்கருணையும் அல்லவா!

சிவமகுடம்
சிவமகுடம்


அப்படியான பெரும்பேற்றினை நிரம்பப் பெற்றவர் பாண்டிமா தேவியார். அதனால் அன்றோ அவர் நினைத்ததெல்லாம் நினைத்த படி நடந்துகொண்டிருக்கின்றன. சிவமகுடத்தை முன்னிட்டு அவர் ஏற்றிருக்கும் பெரும் சங்கல்பத்தை நிறைவேற்றிட, சகலவிதமான சூழல்களும் சாதகமாகிச் சூழ்ந்திருக்கின்றன.

ஒருபுறம் தடைகள் விலகுகின்றன; வெறியாட்டம் போட்ட பகைக் கூட்டம் தன்முனைந்து தோல்வியைத் தழுவுகின்றன. மறு புறமோ, தென்னவன் தேசத்தைச் சூழ்ந்திருக்கும் அஞ்ஞான இருளை அகற்றும் விடிவெள்ளியாய் சம்பந்தர் பெருமான் மாமதுரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். தேவியார் கண்ட நல் நிமித்தங்கள் யாவும் பலித்தன. அதன் தொடர்ச்சியாய்... இதோ, தோழி பொங்கி தேவியும் நல்லபடியாய் மீண்டு வந்துவிட்டாள்.

``நாதனின் கருணையால் நல்லபடி மீண்டு வந்தேன்!’’ என்றபடி தன் பதம் பணிந்த பொங்கிதேவியைத் தொட்டுத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்ட பாண்டிமாதேவியார், அவளுக்குச் சிவப் பிரசாதமாய் மலர்களும் கனிகளும் கொடுத்தார்.

பெற்றுக்கொண்ட பொங்கி தேவியின் கண்கள் முத்துத் துளிகளாய் நீரைப் பெருக்கின. வாஞ்சையுடன் துடைத்துவிட்டார் தேவியார். தொடர்ந்து, பொங்கி ஒப்படைத்த பொக்கிஷங்களின் மீது பார்வையைப் பதித்தார்.

உடன், அவை தன்னிடம் வந்துசேர்ந்த விவரங்களைப் பகிர வாயெடுத்தாள் பொங்கிதேவி. ஆனால் தேவியாரோ `அறிவேன்’ என்று ஒற்றை வார்த்தையைக் கூறி, அவளை மேற்கொண்டு பேசாவிடாமல் தடுத்துவிட்டார். வாய்மொழியை மட்டுமல்ல தேவி யாரின் உடற்மொழியையும் சடுதியில் புரிந்துகொள்ளும் மதியூகி பொங்கிதேவி.

ஆகவே, `அறிவேன்’ என்று வாய்மொழியாய் தேவியார் சொன்ன அதேதருணம், அவரின் கண்கள் இட்ட கட்டளையையும் புரிந்து கொண்டாள். சட்டென்று பேச்சை நிறுத்தி சிரவணக்கம் செய்து, அடுத்த கட்டளையை எதிர்கொள்ள தயார் ஆனாள்.

``பொங்கிதேவி! புறப்படலாம் வா... நம் அம்மையையும் அப்பனையும் தரிசித்து வருவோம்!’’

அடுத்த அரை நாழிகைப் பொழுதில் பாண்டிமாதேவியாரின் பரிவாரம், ஆலவாய் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டது!

ஆலவாய் ஆலயம்!

மங்கல வாத்தியங்களுடன் சங்கநாதமும், முரசும் - முழவமும், பேரிகைகளும், துந்துபிகளும் சேர்ந்து முழங்கிட, தாய்வீட்டுக்கு வரும் பெண்ணைப் போன்று அன்னை மீனாளின் சந்நிதியை நோக்கி நடைபோட்டார் மங்கையர்க்கரசியார். பொங்கிதேவி உள்ளிட்ட மெய்க்காவல் பெண்கள் கம்பீரமாக சூழ்ந்துவர, அஷ்டமங்கலப் பொருட்களை ஏந்தியபடி அரண்மனைத் தோழியரும் உடன்வர, உள்ளத்தில் ஐந்தெழுத்தை ஓதியபடி விரைவில் திருச்சந்நிதியை அடைந்தார் பாண்டிமாதேவியார். வாயிற்படியைத் தொட்டு வணங்கி உட்புகுந்தார்.

கருவறையில் அங்கையற்கண்ணி என்றும் ராஜமாதங்கி என்றும் ஞானநூல்கள் எல்லாம் போற்றிச் சிறப்பிக்கும் உலக மாதா - அன்னை மீனாட்சி கற்பகத்தருவென காட்சி தந்தாள். தாரகைகளின் நடுவே தண்ணொளி வீசும் பூரணச் சந்திரனாய் துலங்கியது அம்மையின் திருமுகம். சுடர்களின் ஒளிக்கு மேலும் ஒளி சேர்த்தன அவளின் ஆபரணங்கள்.

கல் இழைத்த பாடகச் சீர்பாதம், தங்கச் சரிகை இழைத்த பட்டுப் புடவைச் சாத்து, மாணிக்கக் கற்கள் சேர்ந்த முத்திரைக் கவசங்கள், யாழி முகத் தோடா, பொன்மணி கை காப்பு, முத்தங்கி, மாணிக்க மாலை, மாங்காய் மாலை, நளப் பதக்கம், நீல நாயகப் பதக்கம் பொருந்திய முத்தாரம், தங்க மகரக் காதணிகள், தோளில் இணைந்து நிற்கும் பொன்னால் ஆன கிளி, முத்துத் திலகக் கிரீடம்... என சர்வாலங்காரத்துடன் மீனாட்சியம்மை காட்சி தந்தாள்.

மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட காலமாக மகப்பேறு இல்லாததால் யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தையாகக் காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தவள் அல்லவா இந்த அம்மை.

பச்சைத் திருமேனி கொண்டதால் உலகுக்குப் பசுமை தரும் நாயகி. தடாதகைப் பிராட்டியாய் மறக்கருணைக் கொண்டு திக் விஜயம் செய்தவள்; அறக் கருணையோடு கண்களாலேயே தன் பிள்ளைகளாம் அடியார்களைக் காத்து ரட்சிப்பவள்.

ஆம், அன்னையின் அழகிய மீன் போன்ற கண்கள், கரிசனத்துடன் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கும். மீன்கள், முட்டையிலிருந்து தங்களது குஞ்சுகளைப் பார்வையின் வழியாகவே பொரிப்பது போன்று, நயனத்தின் வழியாகவே, பக்தர்கள் எங்கிருந்தாலும் அருள் தருவாள். ஆகவே, மீனாட்சி எனும் திருப்பெயர் மிகப் பொருத்தம்தான் இந்த அம்மைக்கு.

தோன்றாத் துணையாம் சிவனுக்கே துணையான அந்த அன்னையை, அடியார் துயரை அடியோடு துடைக்கும் மீனாட்சி அம்மையை அகம் குளிர, முகம் மலர பரவசத்தோடு வணங்கிப் பணிந்தார் பாண்டிமா தேவியார்.

மகா ஆராதனை நிகழும் தருணத்தில், கருவறையின் பிரதான விளக்கொன்று திடுமென தன் சுடரைப் பெரிதாக்கி ஒளிர்ந்தது. அந்தப் பேரொளியில் அன்னையானவள் தன்னைப் பார்த்துச் சிரித்தது போல் தோன்றியது பாண்டிமாதேவியாருக்கு. சிலிர்த்துப் போனார். அங்ஙனம் அவர் உள்ளம் சிலிர்த்த கணத்தில், அளவில் பெரியதான தாமரைப் பூவொன்று அன்னையின் மார்பிலிருந்து கீழே உதிர்ந்தது.

`அற்புதம்... அன்னையும் பூ வாக்கு கொடுத்துவிட்டாள். இனி எல்லாம் நன்மையே’ என்று எண்ணம் தோன்றிட, பாண்டி மாதேவியார் உள்ளம் உருக கண்களில் நீர் பெருக்கி வணங்கி நின்றார். அதேவேளையில் மாமதுரையின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது, திருஞான சம்பந்தப் பெருமானின் முத்துச்சிவிகை!

`செய்யனே, திருவாலவாய் மேவிய ஐயனே...

சித்தனே, அத்தனே, தக்கன் வேள்வி தகர்த்தருள் சொக்கனே...

சிட்டனே, ஆலவாய் மேவிய அட்டமூர்த்தியே...’

என்றெல்லாம் மதுரைத் தலைவனை - திருவிளையாடல் நாயகனை வாயார பாடிப் பரவப் போகும் அந்தப் பிள்ளை மதுரை யைத் தொடுவதற்கு சில காத தூரம் இருக்கும்வேளையில், அவரை எதிர்கொண்டு அழைக்க வந்தார் குலச்சிறையார்.

திருஞான சம்பந்தர்
திருஞான சம்பந்தர்


`நங்கள் தம்பிரானார் ஆய ஞானபோனகர் முன்புஎய்தி

இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும்’
- என்று பாண்டிமா தேவியார் இட்டிருந்த உத்தரவை ஏற்று, சிவஞானக் கொழுந்தை - திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு வணங்கி வரவேற்க வந்தார் குலச்சிறையார். அப்போது அவரின் உள்ளம் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்று மதுரைச் சூழலும் குளிர்ந்து திகழ்ந்தது.

அதோ, சம்பந்தர் குழாம் வருகிறது. சைவ முத்தினைத் தன்னுள் பொதிந்து சுமக்கும் முத்துச்சிவிகை கண்ணில் தெரிகிறது.

`நமசிவாய... நமசிவாய’ என்றபடி, தான் நின்ற இடத்திலேயே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் - வணங்கினார் பேரமைச்சர் குலச்சிறையார். பிறகு, எழுந்தார் சிறிது தூரம் ஓடோடிச் சென்றார், சிவிகையை நெருங்குவதற்குள் மீண்டும் ஒருமுறை நிலத்தில் விழுந்து வணங்கினார்.

மரியாதையின் நிமித்தம் சம்பந்தரின் அணுக்கர்கள் அமைச்சரை நெருங்கி, வணங்கினர். அப்போதும் குலச்சிறையார் எழுந்துகொள்ள வில்லை. அணுக்கர்கள் முத்துச்சிவிகையை நோக்கி விரைந்தனர். ``நிலம்தோய விழுந்து தொழுது கிடக்கும் அமைச்சர் எழுந்துகொள்ள மறுப்பதாகத் தெரிகிறது...’’ என்று தெரிவித்தனர்.

முத்துச் சிவிகையிலிருந்து, கமலம் போன்று சிவந்து மலர்ந்த தன் திருமுகத்தை வெளிப்படுத்தினார் திருஞானசம்பந்தர். மதுரை யைக் கண்டார். சிவிகையில் இருந்து மெள்ள இறங்கி தன் திருப் பாதத்தை மாமதுரையின் மண்ணில் பதித்தார்.

ஆலவாய் அழகனின் ஆலய மணி, `ஓம்... ஓம்...’ எனும் வண்ணம் ஓங்கி ஒலித்து பிரணவ நாதம் எழுப்பியது!

- மகுடம் சூடுவோம்...

கேள்வியும் பதிலும்!


மனிதன் ஒருவன் ஒரு ஞானியிடம் சென்றான். அவரிடம் ``நான் திராட்சை சாப்பிடலாமா’’ எனக் கேட்டான். ``சாப்பிடலாம் தவறில்லை’’ என்றார் ஞானி. உடனே அவன் ``தண்ணீர் அருந்தலாமா’’ எனக் கேட்டான். அவரும் ``அருந்தலாம்’’ என்றார். தொடர்ந்து, ``சிறிது புளிப்புப் பொருள்...’’ என்று இழுத்தான் அந்த மனிதன். ``சாப்பிடலாமே’’ என்றார் ஞானி.

உடனே அவன், ``இந்த மூன்றும் சேர்ந்ததுதானே மது. அதைப் பருகுவதை மட்டும் பாவம் என்பது ஏன்?’’ என்றான்.

இப்போது ஞானி சிரித்தபடி கேட்டார்:

``உன் தலையில் சிறிது மண்ணைத் தூவலாமா?’’

``தாராளமாக...’’

``சிறிது நீரைத் தெளிக்கட்டுமா’’

``அப்போதும் கவலைப்பட மாட்டேன்...’’

``சரி... மண்ணையும் நீரையும் கலந்து தீயில் சுட்டு உருவாக்கப் பட்ட செங்கல்லை உன் தலையில் போட்டால் என்ன செய்வாய்?’’

இந்தக் கேள்வியை ஞானி கேட்டதும் தன் தவறு புலப்பட்டது அந்த மனிதனுக்கு. ஞானியிடம் மன்னிப்பு கேட்டான்.

- எம்.கதிரவன், தென்காசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism