Published:Updated:

சிவமகுடம் - 73

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவமகுடம்

சிவமகுடம் - 73

சிவமகுடம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

பாண்டியர் சொன்ன ரகசியம்!

இறையின் சிருஷ்டி கணக்கிலடங்கா விநோதங்களால் நிறைந்தது! துளியொன்றில் உயிர் புகுந்து உருக்கொள்வது சூட்சுமம் புரியாத விநோதத் தொடக்கம் எனில், சட்டென்று ஒரு கணத்தில் உயிர்க் காற்று உடலை உதறிவிட்டுப் போகும் முடிவு நிலையும் விநோதம்தான்.

இடைப்பட்ட காலத்திலும் காட்சிகளாய், நிகழ்வுகளாய், பொருள்களாய் எத்தனையோ விநோதங்கள் மனிதனைச் சூழ்ந்து, ஆதியந்தம் இல்லாத இறைவனின் சக்திக்கு சாட்சியாய் நிற்கின்றன. ஆனால் பாழும் மனிதனோ, பல தருணங்களில் அவற்றைக் கற்பனைச் சித்திரங்களாகவே கையாளுகிறான் அல்லது சிறிதினும் சிறிதான தன் புத்திக்கு எட்டிய வகையில், அந்த விநோதங்களுக்கு ஏதேதோ காரணங்களைக் கற்பிக்கிறான்!

ஆனால், தென்னவன் திருமுகத்தான் அப்படியல்ல!

வனப்புறத்தில் திடுமென்று தன் எதிரில் அந்த மனிதர் புரவியில் தோன்றியதும், அங்கிருந்து தன்னை அவர் மீட்டு வந்ததும்... ஆபத்தில் சிக்கியதால் உண்டான புறக் காயங்களுக்கு மட்டுமன்றி, `தன்னுடைய தாமதத்தால் எதிரிகள் முந்திக்கொண்டு இருப்பார்களே’ எனும் எண்ணத்தால் விளைந்த அகக் காயத்தையும் ஆற்றும்விதமாக அந்த மனிதர் கூறிய வார்த்தைகளும் பெரும் விநோதமாகவே பட்டன அவனுக்கு.

சிவமகுடம்
சிவமகுடம்


ஆனாலும் அவை அனைத்தும் இறைச் சித்தப்படியே நடந்தன என்று மிக உறுதியாய் நம்பினான். அதன் பொருட்டு, அனுதினமும் தான் வணங்கும் சொக்கருக்கு மனத்தளவில் நன்றி வணக்கமும் செலுத்தினான். அவ்வளவு ஏன்... தான் வணங்கும் சொக்கரே எதிரில் பாறையில் அமர்ந்திருக்கும் மனிதராகப் பிறந்திருக்கிறார் என்று எண்ணவும் தலைப்பட்டான்!

பாண்டிய முன்னோர்களால், கூடல் விண்ணகரக் கோயிலுக்குத் திருவிடையாக விடப்பட்ட அந்தப் நிலப் பரப்பைப் பெரும் நிசப்தம் சூழ்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஆள் அரவம் இல்லை. அவ்வப்போது தூரத்தில் புள்ளினங்கள் எழுப்பிய ஓசை தற்காலிகமாக நிசப்தத்தைக் குலைத்தாலும், பெரும்பாலும் பேரமைதியே அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தது.

அந்தத் திடலில் மையமாக அமைந்திருந்த ஒரு பாறையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார், தென்ன வன் திருமுகத்தானின் வியப்புக்குக் காரணமான மனிதர். ஆகிருதியான அவரின் தேகம், கதிரொளியின் வெம்மை காரணமாக வியர்வை பூத்திருந்தது. அந்தக் காட்சியைக் காண்பவருக்கு, அப்போதுதான் அபிஷேகம் கண்ட இறை மூர்த்தம் ஒன்று உயிர் சாந்நித்தியத்துடன், பாறையில் வந்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும்.

தென்னவன் திருமுகத்தானின் சிந்தையிலும் அப்படியான எண்ணமே தோன்றியது.

சூழலின் நிசப்தத்தையும் திருமுகத்தானின் சிந்தனையோட்டத்தையும் குலைக்கும் விதமாக, சற்று தொண்டையைச் செருமியபடி பேசத் தொடங்கினார் அந்தக் கம்பீர மனிதர்.

``என்ன... திருமுகத்தான் இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லையோ?’’

``ஆம் பேரரசே! பெரும் திகைப் பில் உயிர்மூச்சு தடைபட்டுப் போகும் நிலையில் இருக்கிறேன் அடியேன்...’’

இதைக் கேட்டதும் திசை அதிரச் சிரித்தார் கூன்பாண்டியன்!

``திருமுகத்தானே... இதில் திகைப்பதற்கு என்ன இருக்கிறது?’’

``தாங்கள் வியப்புக்கும் திகைப்புக்கும் அப்பாற்பட்டவர் என்பதை அறிவேன். ஆனால் நான் சாமானியன்...’’ என்றவனை இடைமறித்த பேரரசர் சொன்னார்: ``பாண்டிய வீரர்களில் எவரும் சாமான்யன் அல்ல. ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்த சூரரே!’’

``தங்கள் அபிப்ராயத்துக்கு நன்றி மன்னா. அதேநேரம், தேசத்தின் மேன்மைக்கும் எங்கள் சாதனை ஒவ்வொன்றுக்கும் காரணகர்த்தா தாங்களே அல்லவா? மேலும், முன் யூகம் இன்றி எதிரிகளின் சதியில் சிக்கிப் பரிதவிக்கும் என்னைப் போன்றோர் புழுவுக்குச் சமானம்... தங்களின் பாராட்டு எனக்குப் பொருந்தாது!’’

கூன்பாண்டியன்
கூன்பாண்டியன்


இதைக் கூறும்போது தென்னவன் திருமுகத் தானின் குரல் தழுதழுத்தது. அவன் கண்களில் நீர் துளிர்ப்பதைக் கண்டு பொறுக்காதவராக, பாறை யில் இருந்து தரைக்குத் துள்ளிக்குதித்த பேரரசர் கூன்பாண்டியர், அவனைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டார். தென்னவன் திருமுகத்தான் விம்மினான்.

`இதுதான்... மாமன்னரின் இந்தப் பண்புதான்... அவரைத் தென்பரதக் கண்டத்தின் யுகபுருஷராக மாற்றியிருக்கிறது...’ என்று எண்ணியவன், சட்டென்று அவரின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, பேரரசரின் தண்டையணிக் கால் களைப் பற்றிக்கொண்டான்.

பாண்டிய தேசத்துக்கு எப்பேர்ப்பட்ட அரசர் வாய்த்திருக்கிறார்?!

முன்னிரவுப் பொழுதில் வனப்புறத்து ஆபத்திலிருந்து ஒருவாறு மீண்டு வந்தவன் தன் புரவியைத் தேடிய நேரத்தில், புரவியில் வந்து எதிர்கொண்டார் கூன்பாண்டியர்.

அப்போது அவன் இருந்த நிலையில், எதிர்பாராத அந்தத் தருணத் தில் மாமன்னரின் தரிசனம் பேரதிர்ச்சியைக் கொடுத்தது உண்மைதான். ஆனால், மாமன்னர் அவனை ஆற்றுப்படுத்தினார். அவனுக்கு ஆபத்தை உண்டாக்கிய விரோதி கொல்லப்பட்டான் என்ற தகவலைச் சொல்லி, அவன் மனத்துக்கும் மருந்திட்டார்.

பெரும் நிம்மதி கிடைத்தது திருமுகத் தானுக்கு. அதேநேரம், ஆபத்துடன் போராடிய தால் உண்டான களைப்பாலும் காயங்களாலும் மயக்கத்துக்கு ஆளானான். அவன் கண் விழித்தபோது இந்தத் திடலில் மணற்பரப்பில் கிடத்தப்பட்டிருந்தான். கதகதப்பான கதிரின் ஒளியே அவன் தேகத்தைச் சுட்டது; விழித்தெழவும் வைத்தது.

பெரும் சதியோடு எதிரிகள் வகுத்து வைத்திருக் கும் திட்ட வியூகத்தை மாமன்னரின் கவனம் சேர்க்கச் சொல்லியிருந்தார் குலச்சிறையார். அந்த ரகசியத்தை உரிய தருணத்தில் மன்னரிடம் தெரிவித்தால் மட்டுமே மாற்று வியூகம் வகுக்க இயலும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். இல்லையெனில், எதிரிகள் முந்திக்கொள்வார்கள்; பெரும் அபவாதங்கள் நிகழலாம் என்பது பேரமைச்சரின் எச்சரிக்கை.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட பகை உளவாளிகள், உரிய நேரத்தில் மன்னருக்குத் தகவல் சேராதபடி தடுக்க நினைத்து, தென்னவன் திருமுகத்தானை வீழ்த்த நினைத்தார்கள்.

ஆனால் மன்னர் காப்பாற்றிவிட்டார். எதிரிகள் முந்திக்கொள்ளுமுன்... இறையருள், மன்னருடனான் சந்திப்பை உரிய நேரத்தில் சாத்தியப்படுத்திவிட்டது என்று பெரும் நிம்மதி வாய்த்தது திருமுகத்தானுக்கு. இப்போது மாமன்னரின் அன்பும் பெருமகிழ்வைத் தந்திருந்தது அவனுக்கு.

கால்களைப் பற்றிக்கொண்டிருந்த தென்னவனை உசுப்பினார் மாமன்னர். அவன் தோள்களைப் பற்றித் தூக்கினார். எழுந்து நின்றவன். மிகப் பெருமிதத்தோடு மாமன்னருக்குச் சிரவணக்கம் செய்தான். பேரமைச்சரின் தகவலை மன்னரிடம் பகிர முற்பட்டான்.

``மாமன்னருக்குப் பேரமைச்சர் மிகவும் முக்கியமான தகவல் ஒன்றைத்தந்துள்ளார்...’’

``அறிவோம்... மதுரை மீதான படையெடுப்பு இன்றே நிகழவேண்டும். நானும் உடனடியாக சாளுக்கிய எல்லைக்கு நகரவேண்டும் அப்படித்தானே...’’

அதிர்ந்துபோனான் அந்த வீர இளைஞன். `இந்தத் தகவல் இவரை எப்படி அடைந்தது?’ என்று திகைத்தான். அவன் திகைப்பை மேலும் அதிகப்படுத்தும் விதமாய்ப் பேசினார் பேரரசர்.

``மேலும் சில செய்திகளையும் அறிவோம். அதை நீதான் பேரமைச்சரிடம் தெரிவிக்கவேண்டும்’’ என்றவராய், அந்தத் தகவல்களையும் அதற்கேற்ப அமைச்சர் நகர்த்தவேண்டிய திட்டங்களையும் அவனிடம் விவரித்தார்.

அவற்றைச் செவிமடுத்த தென்னவன் திருமுகத்தானுக்கு, வருங் காலத்தில் பாண்டிய பேரரசின் கதி என்னவென்பது தெள்ளத் தெளி வாகப் புலப்பட்டது!

பரமனின் விளையாட்டு!

மறைந்தும் தோன்றியும் அருள் செய்வது இறைவனுக்கு மிகப் பிடித்த மான விளையாட்டு!

சித்தத்தில் சிவம் நிறைத்து ஞான விளக்கேற்று வோர் உள்ளத்தில் தோன்றி அருள்வதும், அகந்தை நிரம்ப அறியாமையில் மூழ்கிப்போகும் உள்ளத்தில் மறைந்துபோவதுமாய் அக விளையாட்டு நடத்துவான் ஈசன்.

அவனே, அன்புமிகு அடியார்களுக்காக மண்ணில் இறங்கிப் பலவிதமாய் புற விளையாடல் களை நிகழ்த்தியதும் உண்டு. திருவாய்மூர் எல்லைச் சத்திரத்திலும் அப்படியோர் அருள் விளையாடலை அரங்கேற்றினான் பரமன்.

``திருவாய்மூருக்கு வா!’’ என்று கட்டளையிட்டு, நாவுக்கரசரைப் பின்தொடர வைத்த உருவம், திருவாய்மூர் எல்லையை அடைந்ததும் மாயமாய் மறைந்து போனது. திகைத்துப்போன திருநாவுக்கரசப் பெருமான் அங்கே ஒரு சத்திரத் தைக் கண்டு உள்ளே நுழைந்தார்.

சத்திரத்துத் திண்ணையில் இளைஞன் ஒருவன் உறக்கத்தில் இருந் தான். மெள்ள குரல் கொடுத்து அவனை உசுப்பினார் வாகீசர். அவனும் கண் விழித்தான்!

``ஐயா! அடியார்க்கு அடியேன் நான். மறைக்காட்டிலிருந்த எம்மை ஒருவர் இவ்வூர் எல்லை வரையிலும் அழைத்து வந்தார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்று புலப்படவில்லை. இங்கு வந்திருக்கலாம் என்று உள்ளே நுழைந்தேன். ஆனால், உம்மைத் தவிர இங்கு வேறு எவரும் இருப்பதாகத் தெரிய வில்லையே.... ஒருவேளை, எம்மை அழைத்து வந்தது நீவிர்தானோ...’’

வாகீசப் பெருமான் கேட்டு முடிப்பதற்குள் இடியென பெருங்குரலெடுத்துச் சிரித்தான் அந்த இளைஞன். அந்தச் சிரிப்பு, சாதாரண மானுடரின் சிரிப்பாகத் தோன்றவில்லை வாகீசருக்கு. அண்ட பகிரண்டமும் அதிரும்படி சிரித்தான் அவன்.

அந்தத் தருணத்தில் வாகீசர் விநோத அனுபவத்தை உணர்ந்தார். பாதங்களின் கீழ் தரை நழுவவது போல் தேகம் தள்ளாடியது. பார்வையில் புறக்காட்சிகள் மங்கிப்போக, இளைஞனும் மறைந்து போனான். அவன் இருந்த இடத்தில் பிரகாசமாய்த் தோன்றிய ஓர் ஒளி, சத்திரத்தின் வாயிலை அடைந்தது.

சகலமும் ஒரு கணம்தான்... சிரிப்புச் சத்தம் ஓய்ந்தது. வாகீசர் இயல்புக்குத் திரும்பியபோது, வாயிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான் இளைஞன். வாகீசப் பெருமான் மருகினார்.

``சிவமே... சிவமே... எளியேனிடம் ஏன் இந்த விளையாட்டு’’ என்று வாய் முணுமுணுக்க தள்ளாட்டத்துடன், மீண்டும் அந்த உருவத்தைப் பின்தொடர முனைந்தார்.

நிறைவாய் அவர் வந்து சேர்ந்த இடம் திருவாய்மூர் சிவாலயம்!

-மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism