Published:Updated:

சிவமகுடம் - 90

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவமகுடம்

சிவமகுடம் - 90

சிவமகுடம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

இயற்கையின் அம்சங்கள் உறவாய், நட்பாய், உரிமையாய், இன்னும் பல வடிவங்களாய் சூட்சும நூலிழைகளாகப் பின்னிப் பிணைந்து சிலந்தியின் வலை போன்று ஜீவன்களைப் பற்றிச் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஜீவன்களின் ஆட்டம் இந்த நூலிழைகளால் நிகழ்வதுதான். நூலறுந்தால் ஆட்டமும் நின்றுபோகும்.

சிவமகுடம்
சிவமகுடம்


இந்தச் சூட்சுமத்தை அறியாமல் வினை விதைக்கும் அற்பர்களை என்னவென்பது? அவர்களின் செயல்களால் அவர்களை அணுகி யிருப்போருக்கும் அல்லவா பாவம் வந்து தொலைகிறது!

இதையொட்டி அறநூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? நான்கு அம்சங்கள் உடனடியான பலன்களைத் தருமாம். தெய்வச் சித்தம், ஞானியரின் வாழ்த்து, மதியூகியரின் திட்டங்கள், துஷ்டர்களின் செயல்பாடுகள் ஆகிய நான்கும்தான் அவை. மாமன்னர் கூன்பாண்டியர் விஷயத்திலும் அப்படியே நடந்தது; பாதகர்கள் செய்த பாதகத்தின் விளைவு பெரும் தோஷமாய் மன்னரைப் பற்றிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

எப்போதும் சஞ்சலம் கொள்ளாத அவரின் மனம் பெரும் சஞ்சலத் துக்கு ஆளாகிவிட்டது. முந்தையநாள் முன்னிரவில் அவரைச் சந்தித்த கூட்டம், சீர்காழிப் பிள்ளையின் வருகையைச் சொல்லி அவரை மதுரை மண்ணிலிருந்து நகர்த்த வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தையும் எடுத்துரைத்தார்கள் அல்லவா?

`அவன் தங்கியிருக்கும் மடத்தைச் சேருமாறு வித்தை செய்து மந்திரம் ஓதி, கொடிய நெருப்பை ஏவுவோம். அதற்கு அஞ்சி அவன் இந்த நகரத்தைவிட்டே போய் விடுவான்!’ என்று தங்கள் திட்டத்தையும் அவர்கள் விவரித்திட, அப்போது மாமன்னர் இருந்த குழப்பமான மனநிலையில், `சரி! செய்யத்தக்கது இதுதான் என்றால் விரைந்து அதனைச் செய்க’ என்று கூறிவிட்டார்.

பின்னர் அவர் படுக்கையில் வந்து விழுந்தபிறகு, வழக்கப்படி அன்றைய தம்முடைய செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்தவேளையில்தான், சீர்காழி அடியவர் விஷயத்தில் அப்படியோர் அனுமதியைக் கொடுத்திருக்கக் கூடாது என்று எண்ணத் தோன்றியது அவருக்கு.

மாற்றுக் கருத்தினர் ஆயினும், அவர்கள் வந்திருக்கும் காரணம் எதுவாயினும்... மதுரை மண்ணைத் தேடி வந்தவர்களை விரட்டுவது எவ்விதத்தில் அறமாகும் என்று கேள்வி கேட்டது அவரின் மனம்.

ஏற்கெனவே மந்திராலோசனையால் ஏற்பட்ட குழப்பம், அவர் எதிர்பார்த்திருந்த மகுடம் இன்னமும் அவரிடம் வந்து சேராதது பற்றிய சிந்தனை ஆகியவற்றோடு இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் குற்றவுணர்ச்சியும் சேர்ந்துகொள்ள பெரும் மனச் சஞ்சலத்துக்கு ஆளானார் அந்த வீரபுருஷர்.

இப்படியான சிந்தனா அசதியோடு சோர்ந்துபோய் பஞ்சணையில் சரிந்திருந்த மாமன்னரை உடல் அசதியும் அணைத்துக்கொள்ள, அவரையும் அறியாமல் கண்ணயர்ந்தார். மெள்ள மெள்ள வெளிப் புலன்கள் அமைதிகொள்ள, மனம் விழித்துக்கொண்டது; அசரடிக்கும் பலவிதமான கனவுக்காட்சிகளை அரசருக்குக் காட்டவும் செய்தது.

இவரைப் போன்றே ஒருவன், எதிரில் நிற்கும் ஒருவரிடம் எதையோ வேண்டுகிறான்... உடன், எதிரில் நின்றிருக்கும் அவர் விசேஷமாய்த் திகழும் தன் உருவை அவனுக்குக் காட்டுகிறார். முத்தாரங்கள் திகழவேண்டிய அவரின் மார்பில் நாகங்களே ஆபரணங்களாய் நெளிந்து கொண்டிருந்தன. மார்பில் மட்டுமா கங்கணங்கள், வீரக் கழல்கள், அரை ஆபரணம், கணையாழிகள் - மோதிரங்கள், செவிக் குழைகள் ஆகிய அனைத்துமே சர்ப்பங்களாகவே திகழ்ந்தன.

அவற்றில் ஒன்று அவரின் மேனியிலிருந்து தரையில் இறங்கியது. பின்னர் ஒருமுறை அவரின் முகத்தை நோக்கி ஏதோ வேண்டி, அவரின் அனுமதி கிடைத்ததும் நெளிந்தும் வளைந்தும் சென்றது. அவ்வாறு அது தரையில் ஊர்ந்தபோதுதான் அதன் பிரமாண்டம் புலப்பட்டது. கீழ்த் திசை நோக்கிச் சென்ற சர்ப்பம், குறிப்பிட்ட ஓரிடத்தில் தன் வாலினைப் பதியவைத்தது. பின்னர், வலமாகச் சுற்றி வால் இருக்கும் இடத்துக்குத் தலைப்பாகம் வந்ததும் வாயினால் வாலைப் பற்றிக் கொண்டது.

அங்கே ஓர் சர்ப்ப வளையம் உண்டாகிவிட்டது. அந்த வளையமே எல்லையாய்த் திகழ, சட்டென்று அதன் உள்ளே பிரமாண்டமாய் ஒரு பெருநகரம் தோன்றியது. மறுகணமே காட்சிகள் மாற அந்த நகரை மூழ்கடிக்க வருகிறது பெரும் பிரளயம். அக்கணத்தில் மீண்டும் ஒருவன் வருகிறான் வேற்படையை எறிந்து பிரளய வெள்ளத்தை வற்றச் செய்கிறான். மலைத்து நிற்கிறார் மாமன்னர். அந்தக் கனவுக் காட்சியில் ஒரு துரும்பாய் மாறிப்போனார்.

மதுரையம்பதி
மதுரையம்பதி


சட்டென்று பெரும் விசையோடு காற்று வீச, சருகுபோன்று மிதந்து சென்று கூன்பாண்டியர் வீழ்ந்த இடம் அந்த நகரின் மையமான ஒரு மண்டபத்தின் வாயிலில்! அதேநேரம் அங்கிருந்து சீற்றத்துடன் வெளியேறிய பெண்ணொருத்தி ஏதோ ஓலமிடுகிறாள்... உடன் பற்றியெரிந்தது அந்தப் பெருநகரம். அதனால் உண்டான வெம்மை மாமன்னரின் தேகத்தையும் பற்றிக்கொள்ள... பதறிப்போய் கண் விழித்துக்கொண்டார் கூன்பாண்டியர்.

ஆம்! முன்னோர்கள் சொல்லிவைத்து அவருக்குள் புதைந்துபோன மாமதுரையின் கதைகள் எல்லாம் கனவுகளாய் வெளிப்பட்டன போலும். ஆதிகாலத்தில் மாமதுரையைப் பிரளயம் சூழ, இறையனாரின் ஆணைப்படி உக்கிரகுமார பாண்டியன் வேல் எறிந்து வெள்ளத்தை வற்றச் செய்தாராம்.

இதேபோன்று வேறொரு ஊழியின்போது மதுரை நகரம் சிதைந்து போக, எல்லையே தெரியாமல் போனது. கீர்த்திபூஷண பாண்டியன் ஆண்ட காலத்தில், அவன் இதுபற்றி இறைவனிடம் முறையிட்டான். சொக்கநாதர், தன் திருமேனியில் ஆபரணங்களாய் சர்ப்பங்கள் நெளிய, சித்தபுருஷராய்த் தோன்றினார். அவர் ஆணைப்படி அவரின் மேனியை விட்டு இறங்கிய சர்ப்பம் ஒன்று, வளையம் போன்று வடமிட்டு மாமதுரையின் எல்லையைக் காட்டிக் கொடுத்ததாம்.

இதை, திருவிளையாடற்புராணம் அழகாக விவரிக்கிறது.

கீழ்த் திசை தலைச் சென்று தன் கேழ்கிளர் வாலை

நீட்டி மாநகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்

கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவர்க்கு எல்லை

காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்... என்று விவரிக்கிறது அந்தப் புராணம். இப்படிப் பாம்பு தன் விஷம் (ஆலம்) உள்ள வாயினால் வாலைக் கவ்விக்கொண்டு வரம்பு காட்டியதால் மாமதுரைக்கு திருஆலவாய் என்று திருப்பெயர் வந்ததாகச் சொல்வர்.

இப்படியான கதைக் காட்சிகளோடு கண்ணகியால் மாதுரை தீக்கிரையான காட்சியும் கனவாய் நீள... பதறிப்போய் கண் விழித்துக்கொண்டார் மாமன்னர். அவர் விழித்ததும் கனவுகள் மறைந்துவிட்டன என்றாலும் அந்த வெம்மையின் தகிப்பு... மக்களின் ஓலம் மறையவில்லையே... அது எப்படி?!

இப்போது கேட்கும் இந்த ஓலமும் மாமன்னரைப் பற்றிக் கொண்டிருந்த வெம்மையும் கனவல்ல... உண்மை. சீர்காழிப் பிள்ளை திருமடத்தில் தீப்பற்றிக் கொள்ள, அதை கண்டு மக்கள் இடும் ஓலமும் கூக்குரலுமே மன்னவரின் செவிகளில் விழுந்தன.

எனில், அந்த வெம்மையின் தகிப்புக்குக் காரணம்... அடிவயிற்றில் தோன்றிய வலி மேனியெங்கும் வெம்மையாய்ப் பரவியதோ? அறநூல்கள் சொன்னது போன்று துஷ்டர்களின் செயல் உடனே பலித்ததோ; பெரும் பாவமாகி மன்னவரைப் பற்றிக் கொண்டதோ?!

``பிள்ளைக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே’’

திருமடத்தில் தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் பேரமைச் சரை வரவழைத்தார் பாண்டிமாதேவியார். அதன்படி அவர் வந்து சேர்ந்ததும் தேவியார் கேட்ட முதல் கேள்வி இதுதான்!

``நலமாக இருக்கிறார். எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பேராபத்து நிகழ்வதை அடியார்களும் பிறகு வந்து சேர்ந்துகொண்ட மக்களும் தடுத்துவிட்டார்கள்.’’

பேரமைச்சரின் இந்தப் பதிலைச் செவிமடுத்தபிறகே, சற்றே நிம்மதி வாய்த்து தேவியாருக்கு. ஆனாலும் அவரின் ஆவேசம் தணியவில்லை.

``யார் செய்திருப்பார்கள் இந்தப் பாதகத்தை?’’

``தேவியாரே! இக்கேள்வியை நீங்கள் கேட்கும் கணத்தில், உங்கள் மனதிலேயே பதிலும் தோன்றியிருக்கும்’’

அந்த அபாயச் சூழலிலும் நிதானமாக உறுதியாகப் பேசினார் பேரமைச்சர் குலச்சிறையார்.

``அடிகள்மாரா? இப்படியான செயல்கள் பெரும் பாதகமானவை - பாவம் சேர்ப்பவை என்று அவர்களின் மார்க்கம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லையா?’’

``தத்துவத்தை நேசிப்பவர்கள் உண்மையை அறிவார்கள் தாயே. ஆனால் இவர்கள் வெறும் தர்க்கவாதிகள்; மந்திரக் கலை மாயம் செய்யும் என்று பிதற்றித் திரிபவர்கள். இவர்களுக்கு மெய்ப்பொருள், தத்துவம் எதுவும் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை!’’

``இப்போது நாம் என்ன செய்வது?’’

``முதலில், மாமன்னருக்குத் தகவல் சொல்வோம். விபத்தா, சூழ்ச்சியா என்று விசாரிக்கும் கடமை அவருக்கு உண்டு. அத்துடன் பிள்ளையை தரிசித்து நலம் விசாரிக்கலாம்...’’

பேரமைச்சர் இப்படிச் சொல்லி வாய்மூடவும் பதற்றத்தோடு உள்ளே பிரவேசித்தான் இளங்குமரன். வழக்கமான வணக்கச் சம்பிர தாயங்களைச் செய்ய மறந்தவனாய், வேகவேகமாக கொண்டு வந்த தகவலைச் சொல்லி முடித்தான்: ``மாமன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மேனி தகிக்கிறது. தேவியார் உடனே வரும்படி உத்தரவு!’’

தேவியார் அதிர்ந்தார். அவரையும் அறியாமல் அவரின் விழிகள் மூடிக்கொள்ள, ``என் ஈசனே என்ன இது சோதனை?’’ வாய்விட்டு அரற்றினார். அவருக்குள் அவரின் மனக்குரலோ சிவவாக்கு போன்று ஓங்கி ஒலித்தது... `தென்னவனுக்கு ஆபத்தில்லை’ என்று!

-மகுடம் சூடுவோம்...

மாரியம்மன்
மாரியம்மன்

பிள்ளை வரம் தருவாள்!

தஞ்சை மாவட்டம், திருவையாறில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இலுப்பைகோரை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், மணலூர் கிராமத்தையும் அங்கே உள்ள மாரியம்மன் கோயிலையும் அடையலாம்.

இங்கே கோயில் கொண்டிருக்கும் மாரியம்மன் சிறந்த வரப்பிரசாதி. அம்மை நோய் விலகவும், கல்யாண வரம் வேண்டியும் இந்த அம்மனை வழிபட்டு அருள்பெறுகிறார்கள் பக்தர்கள். இங்கே அருள்பாலிக்கும் பச்சைக்காளி, பவளக்காளி தெய்வங்களும் அருள்மாரிப் பொழிகிறார்கள்.

ஆம்... குழந்தை பாக்கியம் இன்றி ஏக்கமும் துக்கமுமாக உள்ள பெண்கள், இங்கு வந்து, பச்சைக்காளி, பவளக்காளி ஆகிய இருவருக்கும் வளையல் அணிவித்து வணங்கி, மாரியம்மனையும் வழிபட்டால், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

-கே.ஆனந்தி, திருச்சி