மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 32

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

விசித்திரமும் விளக்கமும்!

`சித்திரம் விசித்திரமாகும்!’

வெண்பட்டுச்சுருளில் எழுதப்பட்டிருந்த அந்த விசித்திர வாசகத்தை, ஏழாவது முறையாகப் படித்துப் பார்த்துவிட்டு, அது சொல்லும் ரகசியம் இதுவாகத்தான் இருக்கும் என்று எதையும் அனுமானிக்க இயலாத ஆற்றாமையுடன் இளங்குமரன் நிமிர்ந்தபோது, எதிரில் புன்னகையோடு நின்றிருந்தார் பேரமைச்சர் குலச்சிறையார்.

முன்தினம், பாண்டியர் மாளிகையின் மந்திராலோசனைச் சபையில் பதற்றத்துடன் பிரவேசித்த வீரனால் ஒப்படைக்கப்பட்டது அந்த வெண்பட்டுச் சுருள். அதைப் பிரித்துத் தகவலைப் படித்துவிட்டுக் குலச்சிறையாரிடம் ஒப்படைத்தார் மாமன்னர். சுருளைப் பிரித்த மாத்திரத்தில், அதில் கண்ட வாசகத்தின் பொருளை உணர்ந்தவர்போல் புன்னகைத்த பேரமைச்சர், அதை அப்படியே இளங்குமரனிடம் கொடுத்தார். அத்துடன், கண்களாலேயே அவனுக்குக் கட்டளையும் இட்டார்.

சிவமகுடம் - பாகம் 2 - 32

`படித்துப் பார்... புரிந்துகொள்... அதற்கேற்ப செயல்படு’ என்பதாக இருந்தது பேரமைச்சரின் அந்தப் பார்வை. அந்த இடத்திலேயே இளங்குமரனும் ஆர்வத் துடன் அந்த வெண்பட்டுச் சுருளைப் பிரித்தான். ஆனால், அதிலிருந்த வாசகம் விசித்திரமாகப்பட்டது அவனுக்கு. எவ்விதமாய்ச் சிந்தித்தும், அது சொல்ல வரும் செய்தி என்னவென்பதை, இப்போதுவரையிலும் அவனால் யூகித்தறிய முடியவில்லை!

வெண்பட்டுச்சுருள் தந்த தகவல் மட்டுமா, மாமன்னர் அவையில் விவரித்த வியூக ரகசியங்களும் விசித்திரமானவையாகவேபட்டன அவனுக்கு. `எதிரிகளை இப்படியும் வீழ்த்த முடியுமா என்ன...’ என்று எண்ணி வியந்தவன், `வெற்றிக்குச் சூத்ரதாரிகள் பாண்டிமாதேவியாரும் அமைச்சருமே’ என்று பேரரசர் வெளிப் படுத்தியபோது, அவ்விருவரின் திறமையை எண்ணிப் பெரிதும் வியந்தான்.

‘`ஒரே நேரத்தில் இருவிதமான படையெடுப்புகளை நடத்திவிட்டான் சேரன். ஒன்று ரகசியமானது; மற்றொன்று வெளிப்படையானது. சேரனின் தளபதியின் தலைமையில் வணிகர்களாக நம் தலைநகரில் ஊடுறுவிய ரகசியப்படை, இரவில் மெள்ள ஆலவாய்க் கோயிலைச் சூழ ஆரம்பித்தது. கோயிலை வசப்படுத்தி, அதையே தனக்குக் கோட்டையாக்கிக்கொள்வதுதான் சேரர் தளபதியின் திட்டம். அதேநேரம், வனப்புறத்திலிருக்கும் நம் பெரும்படையின் கவனத்தை ஈர்க்க வெளிப்படையாக வந்து பாய்ந்தது, சேரனின் தலைமையிலான மற்றொரு படை.

சிவமகுடம் - பாகம் 2 - 32

போர் என்று தெரிந்ததும் நம் தலைநகரில் என்ன நடக்கும்?! மாமதுரையின் காவற்படையில் பெரும்பகுதி நகரிலிருந்து வெளியேறி, கோட்டையைச் சூழ்ந்து கொண்டு, வெளிப்புறத்தில் கோட்டைக்காவலைப் பலப்படுத்த முற்படும். உள்ளுக்குள் காவல் மட்டுப்படும். அந்த வாய்ப்பைச் சாதகமாக்கிக்கொண்டு கோயிலுக்குள் இருந்தபடி, கோட்டைக்குள் திடீர் தாக்குதல் நிகழ்த்தி, தலைநகரை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பது அந்தத் தளபதியின் திட்டம். இங்கே மாமதுரை வீழ்ந்துவிட்டால், அங்கே நானும் நிலைகுலைவேன்; என்னையும் எளிதில் வீழ்த்தலாம் என்பதுதான் பகைவர் போட்ட கணக்கு.

ஆனால், அந்தக் கணக்கும் அதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பலனும் கானல்நீராகிவிட்டன அவர்களுக்கு. காரணம், நம் குலச்சிறையாரும் பாண்டிமாதேவியாரும் வகுத்தத் திட்டங்களும் செயல்படுத்திய வியூகங்களும் அப்படி!

நகர்வுகள் இப்படியிருந்தால், விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை எளிதில் கணித்துவிடும் அறிவிற்சிறந்த தீர்க்கதரிசியாயிற்றே, நம் மகாராணியார். மிக அற்புதமான திட்டத்தைத் தீட்டி நம் பேரரசைக் காப்பாற்றிவிட்டார். அதற்கு பேரமைச்சரின் உதவி பக்கபலமாக இருந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 32

ஆம்! நம் கவனத்தைச் சிதறடிக்க பகைவர் முயன்ற அதேவேளையில், அவர்களின் கவனத்துக்கே வராதவாறு பல காரியங்களைச் செய்தார்கள், இவர்கள் இருவரும். கோட்டையைக் காக்க சோழர் சேனையையும் கோயிலைக் காக்க தென்பரதவர் படையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். நம் படையின் அசைவுகளைக் கவனித்துக்கொண்டிருந்த சேரன், இங்கே இந்தப் படைகள் இருப்பதை அறியவில்லை.

பாண்டியப் படை நகர்ந்ததும் ஏற்கெனவே தலைநகரில் வந்து பதுங்கியிருந்த சோழப்படை வெளிப்பட்டு, கோட்டையைத் தற்காத்தது. அதேநேரம், கோயிலுக்குள் நுழைந்த சேரனின் ரகசியப்படை, அங்கே திருக்குளத்துக்குள் மூச்சடக்கிக் காத்திருந்த பரதவர் படையால் வீழ்த்தப்பட்டது. ரத்தச் சேதாரமின்றி அனைவரும் சிறைப்பட்டார்கள். சோழப் படையை வழிநடத்தியது பாண்டிமாதேவியார்; பரதவர் படையை வழிநடத்தியது நம் பேரமைச்சர். இப்படியான நம் தரப்பின் ரகசியம் எவ்விதத்திலும் எதிரிகளுக்குத் தெரியக்கூடாது என்பதாலேயே, வழக்கமான யுத்த வாத்தியங்களை முழங்காமல், உடுக்கையொலியைப் பயன்படுத்தினோம். வெற்றி கொண்டோம்...’’

- மாமன்னர் விவரிக்க, அதைக்கேட்டு இளங்குமரன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அவையுமே பெரும் திகைப்பில் ஆழ்ந்துபோனது. அதையும் மீறி பாண்டியச் சேனைநாயகன் ஒருவன், ஒரு வினா தொடுத்தான்...

‘‘ஆனாலும் பேரரசே... நம் கவனத்தை மீறி, நம் அனுமதியின்றி சோழர்ப் படை நம் தலைநகரில் பிரவேசித்தது...’’

அவன் முடிப்பதற்குள் இடைமறித்துப் பதில் சொன்னார் மாமன்னர்.

‘‘சோழருக்கு அந்த உரிமை உண்டு. அவர் நம் அன்புக்குக் கட்டுப்பட்டவர். மேலும், பாண்டிய நாட்டின் பாதுகாப்புக்குப் பாத்தியப்பட்டவரும்கூட’’ என்றவர், ‘‘நாம் மட்டும் என்ன செய்தோம்... பல்லவ தேசத்தை நோக்கி நகர்ந்தபோது, சோழ தேசத்தை நம் களமாக்கிக்கொள்ளத் துணியவில்லையா. சோழருக்கே தெரியாமல் சோழமண்டலத்து வனப் புறத்தில் பாசறைகளையும் ஆயுதக் கிடங்குகளையும் அமைத்துக் கொள்ளவில்லையா...’’ என்று தன் பங்குக்கு ஒரு வினாவைத் தொடுத்து, அந்தச் சேனைநாயகனின் வாயை அடைத்தார்.

ஆனால், அது அந்தத் தருணத்துக்கான சமாளிப்பு என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. உண்மையில், சோழரின் ரகசியப் பிரவேசம் மாமன்னருக்கும் ஏற்புடையதாக இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். சபை கலைந்ததும் அதற்கான விளைவுகளைப் பேரமைச்சரும் பாண்டிமாதேவியாரும் நிச்சயம் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால், தேவியார் கொடுத்தனுப்பிய இந்த வெண்பட்டுச்சுருள் மாமன்னரின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது.

தகவலைப் படித்ததும் ஓரிரு விநாடிகள் சிந்தனை வயப்பட்டவர், பிறகு ஏதோ தீர்மானத்துக்கு வந்தவராக அந்தச் சுருளை பேரமைச்சரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, சேரன் முறியடிக்கப் பட்ட விவரத்தை விரிவாக விளக்கிவிட்டுச் சபையைக் கலைத்தார். பின்னர், அந்தச் சுருளை பேரமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு, சடுதியில் கிளம்பிவிட்டார். அமைச்சரிடமிருந்து அந்தச் சுருள் இளங்குமரனிடம் வந்து சேர்ந்தது.

அப்போதிருந்து இப்போது வரை பலமுறைப் படித்துப்பார்த்துவிட்டான் இளங்குமரன். அதிலிருந்து எவ்வித விளக்கமும் அவனுக்குப் புலப்படவில்லை. அதன்பொருட்டு எழுந்த இயலாமையுடன் பெருமூச்சொன்றை விட்டபடி நிமிர்ந்தவனின் எதிரில்தான் புன்னகையோடு நின்றிருந்தார், பேரமைச்சர் குலச்சிறையார்.

தலைதாழ்த்தி அவருக்குச் சிரவணக்கம் செய்த இளங்குமரன், வெண்பட்டுச் சுருளை அவரிடமே ஒப்படைத்துவிட்டுக் கேட்டான், ‘‘அமைச்சர் பிரானே, எத்தனையோ ரகசியக் குறிப்புகளைப் புலனாய்ந்து உண்மையை அறிந்திருக்கிறேன். ஆனால், இந்தச் சித்திர விசித்திரம் என்னை மிகவும் குழப்புகிறது. நீங்களே சொல்லிவிடுங்கள் இதற்கான விளக்கத்தை... அடுத்து நான் செய்யவேண்டிய காரியத்தை!’’

பேரமைச்சர், அந்த வீர இளைஞனுக்குப் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள், கம்பீரமாய் குறுக்கிட்டது ஒரு குரல்.

``அதை, நானே சொல்கிறேன்!’’

குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப, இளங்குமரனின் அந்த மாளிகைக்குள் பிரவேசித்தார், பாண்டிமாதேவியார்.

‘‘நாம் ஒரு சித்திரம் தீட்டினால், அதைவிட விநோதமாய் வேறொரு விசித்திரத்தை உண்டாக்கி விட்டான் சேரன்.’’

பாண்டிமாதேவியார் சொன்னதைக் கேட்டு பேரமைச்சர் பதிலேதும் பேசவில்லை. ஆதலால், அவருக்கும் அதுகுறித்த விஷயம் தெரிந்திருக்கக் கூடும் என்று யூகித்த இளங்குமரன், தானும் அதுபற்றி அறியும் ஆவலுடன் கேட்டான்:

‘‘விளக்கமாகச் சொல்லுங்கள் தாயே!’’

பாண்டிமாதேவியார் சொன்ன விளக்கம், தென்னாட்டின் தலையெழுத்தையே மாற்ற வல்லதாய் இருந்தது!

இவர்களின் இந்தச் சந்திப்பு நடந்துமுடிந்து மூன்று தினங்கள் கழித்து, சிறு படையோடு அந்த வனப்புறத்துக்கு வந்து சேர்ந்திருந்தார், குலச்சிறையார். உடன் இளங்குமரனும் வந்திருந் தான். முன்பொருமுறை, குறத்திப்பெண்ணைச் சந்தித்து பாண்டிய தேசம் குறித்து குலச்சிறையார் அருள்வாக்கு கேட்டாரே... அதே இடம்தான் அது!

சிவமகுடம் - பாகம் 2 - 32

புரவியிலிருந்து குலச்சிறையார் தரையில் குதித்ததும், வீரர்கள் இருவர் ஓடி வந்து அவரது புரவியைக் களைப்பாற்றுவதற்காக ஓட்டிச் சென்றார்கள். குலச்சிறையார், அந்த இடத்தில் முன்பு தாம் அமர்ந்திருந்த அதே பாறையைத் தேடிச் சென்று, அதில் ஏறி அமர்ந்துகொண்டார். அவரின் செயல்பாடுகள் அனைத்தும் இளங்குமரனுக்குப் பெரும் விநோதமாய்த் தோன்றின.

பாறையில் ஏறி அமர்ந்தவர், எவரின் வருகைக்காகவோ காத்திருப்பதாகப்பட்டது இளங்குமரனுக்கு. அவன் யூகம் சரிதான். ஓரிரு நாழிகைகள் கழித்து, குலச்சிறையார் எதிர்பார்த்த அந்த நபர் வந்துசேர்ந்தார். நேருக்குநேராக அந்த நபரைச் சந்தித்ததும் பேரதிர்ச்சிக்கு ஆளானான் இளங்குமரன்!

இங்கே இப்படியென்றால், அதே நாள் அதே வேளையில் வைகைநதி தீரத்தில், பரதவர் படைக்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தார், பாண்டிமாதேவியார்!

கனவில் கண்ட காட்சி!

ட்டென்று எழுந்து அமர்ந்தான் அந்த இளைஞன். அவன், ஏதோ கனவு கண்டிருக்க வேண்டும்! விழிப்பு வந்தும் கனவு தந்த மலைப்பிலிருந்து நீங்காதவனாக, திகைப்புடன் எழுந்து நின்றான். முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தெறிந்தான்.

சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கு, தான் தங்கியிருப்பது ஒரு சத்திரம் என்பதும், இவ்வளவு நேரமும் தான் கண்ட காட்சிகளும் அடைந்த அனுபவங்களும் வெறும் கனவே என்பதும் தெரியவந்தது. அவனையுமறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது:

‘‘எல்லாம் வெறும் கனவா..!’’

தொடர்ந்து, அவன் தன் கண்களை மூடிக் கொள்ள, கனவில் தோன்றிய காட்சிகள் இப்போது மனதில் விரிந்தன.

ஞானத்தின் திருவுருவாய்

நான்மறையின் தனித்துணையாய்

வானத்தின் மிசையின்றி

மண்ணில் வளர் மதிக்கொழுந்தாய்...

அந்தத் தெய்வப்பிள்ளை நடந்து வந்து, அந்த இளைஞனின் சிரம் தொட்டு ஆசியும், விபூதிப் பிரசாதமும் வழங்கிய அந்த அற்புதக் காட்சி மனக் கண்ணில் விரிய, மலர்ந்தது அவன் திருமுகம்!

- மகுடம் சூடுவோம்...