Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 33

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

கனவும் தீர்க்கதரிசனமும்!

சிவமகுடம் - பாகம் 2 - 33

கனவும் தீர்க்கதரிசனமும்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

`இதென்ன விந்தை!’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட அந்த இளைஞன், சுற்றுமுற்றும் தனது பார்வையை வீசி, தான் இருப்பது உறையூரின் புறநகர்ச் சத்திரம்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றான்.

சிவமகுடம் - பாகம் 2 - 33

சுவரில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த மாடவிளக்குகளும், அவற்றின் ஒளிச்சுடர் தந்த வெளிச்சத்தில் புலப்பட்ட தாழ்வாரமும், வரிசையாக அமைக்கப்பட்டிருந்த அகன்ற துயில் மேடைகளும், அவற்றின் மீது அசதியுடன் படுத்துறங்கும் யாத்ரீகர் கூட்டமும்... அவன் இருக்கும் இடம் சத்திரம்தான் என்பதைத் தெளிவாக உணர்த்தின. ஆனாலும் அவன் சமாதானம் அடையவில்லை! ஒருமுறை தன்னைத் தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டான். அப்படியான சுயபரிசோதனைக்குப் பிறகே, `இதுதான்... இப்போது சந்திக்கும் இந்தச் சூழல்தான் நிஜம்’ என்று அவன் புத்தியும் மனமும் உவப்புடன் ஏற்றுக்கொண்டன!

காரணம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உறக்கத்தில் அவன் கண்ட கனவு அப்படி! மெள்ள கண்களை மூடிக்கொண்டான். கனவில் கண்ட காட்சிகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டுவர முற்பட்டான். ஆலயத்தின் பெருங்கூட்டம், மகா ஆராதனை, சீர்காழிப் பிள்ளையின் பிரவேசம், அவர் பதிகம் பாடும் காட்சி... ஒவ்வொன்றாய் மனத்திரையில் விரிய, பெரிதாக மலர்ந்தது அந்த இளைஞனின் திருமுகம்.

பிறகு மெள்ள கண் விழித்தவன், கனவு, நிஜம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி, அபூர்வமானவர்களுக்கு மிக அபூர்வமாக வாய்க்கும் தீர்க்கதரிசனம் இது என்று தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தான். இப்படியான ஒரு முடிவுக்கு அவன் வரக் காரணம் உண்டு.

கனவில் கண்ட ஞானப்பிள்ளையை அவன் நேரில் தரிசித்தது, வடுகூரில் அல்ல; தோணிபுரத்தில். உமையாளின் முலைப்பால் அருந்தி, மழலைப் பருவத்திலேயே மகேசனின் அருள்பெற்று, `தோடுடைய செவியன்...’ என்று தொடங்கி, பல தலங்களுக்கும் யாத்திரையாகச் சென்று சிவ மகிமையைப் பாடிப்பரவி வரும் அந்த ஞானக்குழந்தையின் மகிமையை அடியவர் ஒருவர் மூலம் கேட்டறிந்த பாண்டிமாதேவியார், அந்தச் சிவபாலன் குறித்து மேலும் அதிக தகவல்களை அறிந்துவருமாறு இவனிடம் பணித்திருந்தார். மட்டுமன்றி, ``மருதா! அந்தப் பிள்ளையை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், மாமதுரையின் மேன்மைக்காக ஆசியும் வாங்கி வா’’ என்றும் கட்டளை இட்டிருந்தார்.

ஆம்! மருதன் என்பதுதான் இவன் பெயர். சமீபத்தில்தான் தேவியாரின் அணுக்கப்படையில் இணைந்திருந்தான். அவனுக்கான முதல் பணியே பல்லவ தேசத்தின் எல்லையைத் தொட்டு மீளும்படி அமைந்தது. கூடவே, இந்தப் பணியும் சேர்ந்துகொள்ள, உவகையோடு பயணப்பட்டான். பல்லவ தேசம் நோக்கிச் செல்லும் வழியில், `தோணிபுரம்' எனப்படும் சீர்காழியில் ஞானப்பிள்ளையை தரிசித்தான். ஆனால் அவரிடம் உரையாடவோ, ஆசி பெறவோ வாய்ப்பு கிட்டவில்லை. திரும்பும் வழியில்தான் வடுகூருக்குச் சென்றான். ஆனால், கனவில் கண்ட எவ்வித நிகழ்வும் அங்கே நிகழவில்லை!

சிவமகுடம் - பாகம் 2 - 33

இப்படியான சகல சம்பவங்களையும் கோத்துக் கணக்கிட்ட மருதனின் மனதில், `ஒருவேளை, தனித்தனியே அமைந்த சீர்காழிப்பிள்ளை மற்றும் வடுகூர் தரிசன அனுபங்களோடு, தேவியார் இட்ட கட்டளையின் அழுத்தமும்

சேர்ந்துகொள்ள, இப்படியொரு கனவு வாய்த்திருக்கலாம். சீர்காழிப்பிள்ளையின் வடுகூர் வருகை எதிர்காலத்தில் நிகழலாம். ஏன்... கனவில் அந்தப் பிள்ளை வழங்கிய ஆசி வார்த்தைக்கு ஏற்ப, மதுரைக்கேகூட அவர் எழுந்தருளலாம்...’ எனும் எண்ணம் எழ, அதன் பொருட்டு கிடைத்த தீர்க்கதரிசனமாகவே தன் கனவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்தான். அத்துடன், அந்தச் சத்திரத்திலிருந்தும் புறப்பட ஆயத்தமானான்.

ஆனால், அங்கிருந்து மிக எளிதில் நகராதபடி, அவ்வூரிலேயே அவனைக் கட்டிப்போட்டுவிடக் காத்திருந்தது காலம்!

சிவம் காட்டிய சித்திரம்!

`இந்தப் பெண்ணுக்கு மட்டும் எப்படி இவையெல்லாம் சாத்தியமாகின்றன. நினைத்த பொழுதில் நினைத்த இடத்தில் தோன்றுகிறாள். விரும்பும் தருணத்

தில் விரும்பும் தோற்றத்துக்கு மாறிவிடுகிறாள். அதுமட்டுமா? அந்தத் தோற்றத்துக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்துவதிலும் தேர்ந்தவளாக இருக்கிறாளே...’ என்று பெரும் விநோதத்துக்கு ஆட்பட்டவனாய், சிரம் தாழ்த்தி குலச்சிறையாரை வணங்கிக்கொண்டிருக்கும் அந்தக் குறத்திப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான், இளங்குமரன்.

‘‘பகைவர் எதிர்பார்ப்பதுபோல் சித்திரம் விசித்திரமாகுமா அமைச்சர்பிரானே?’’

- அந்தப் பெண்ணின் குரல் உசுப்பியதால், சிந்தனை களைந்த இளங்குமரன், தொடர்ந்து அவர்களுக்கிடையே நடந்த விவாதத்தைக் கவனிக்கலானான்.

வினா எழுப்பியவளாய், முந்தானை முடிப்பிலிருந்து மிகச் சிரத்தையுடன் வேறொரு துணிமுடிப்பொன்றை அவிழ்த்தெடுத்து, அதைப் பேரமைச்சரிடம் ஒப்படைத்தாள் அந்தப் பெண். வழக்கத்துக்கு மாறாக மிகுந்தப் பணிவுடன் அதை ஏற்றுக்கொண்ட குலச்சிறையார், அந்தத் துணி முடிப்பை அங்கேயே அவிழ்க்கவும் தொடங்கினார்.

அந்த முடிப்பிலிருந்து வெளிப்பட்ட பொருளைப் பார்த்த பிறகுதான், குலச்சிறையார் மிகவும் பணிவு காட்டியதற்கான காரணம் விளங்கியது இளங்குமரனுக்கு. அத்துடன், பாண்டியதேசத்தின் ரகசியப் பகிர்வுகள் பரிமாறப்படும் விதம் குறித்து வியக்கவும் தவறவில்லை அவன்.

ஆம்! துணி முடிப்பிலிருந்து வெளிப் பட்டது, தாருவால் (மரத்தால்) ஆன சிறு லிங்க மூர்த்தம். துணி முடிப்பில் திருநீற்றுக்குள் அமிழ்த்திப் பொதியப்பட்டிருந்தது அந்த லிங்க மூர்த்தம். பக்தியோடு சிறிது திருநீற்றை விரல்களால் எடுத்து ஐந்தெழுத்தை ஓதியவராக நெற்றியில் இட்டுக்கொண்ட குலச்சிறையார், பிறகு ஒரு கணம் அந்த லிங்க மூர்த்தத்தைத் தன் வலக்கை உள்ளங்கையில் வைத்து ஏந்தியபடி தரிசித்தார். அவரின் திருமுகம் காட்டிய பரவசம், அவர் தனக்குள் ஏதோ பதிகம் பாடியபடி மனத்தால் சிவத்தை வணங்குகிறார் என்பதைப் புலப்படுத்தியது.

தொடர்ந்து, ஐந்து விரல்களையும் மடக்கி லிங்க மூர்த்தத்தை உள்ளங்கையில் அடக்கிக்கொண்டவர், அந்தக் கரத்தை அப்படியே நெஞ்சில் வைத்தபடி கண்களை மூடிக்கொண்டார். இளங்குமரன் யூகித்தது போன்று அவருக்குள் பதிகம் தொடர்ந்தது. சில விநாடிகள் கழித்துக் கண் விழித்தவர், மீண்டுமொருமுறை சிரம் தாழ்த்தி அந்தக் குறுலிங்கச் சிவபிரானை வணங்கினார். பின்னர், லிங்க மூர்த்தத்தை முகத்தருகே கொண்டு வந்து, கண்களைச் சுருக்கி ஆவுடைபாகத்தில் எதையோ ஆராயத் தலைப்பட்டார். இப்படியே சில கணப்பொழுதுகள் கரைய, தேடியதைக் கண்டுகொண்டபின் திருப்தியோடு நிமிர்ந்தார்.

அவரின் ஆழ்ந்த சிவபக்தியை நன்கு அறிவான் இளங்குமரன் என்றாலும், ஆய்வுத் தொனியுடன்கூடிய அவரின் இந்த விநோதச் செயல்கள், அவனைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தின. ஏற்கெனவே, `சித்திர விசித்திர’ வாக்கியத்தின் ரகசியத்தை அறியமுடியாமல் தவித்துக்கொண்டி ருந்தவனுக்கு, குலச்சிறையாரின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேலும் குழப்பத்தையும் அயர்ச்சியையும் அளித்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 33

அந்த நிலையிலிருந்து அவனை மீட்பதாக அமைந்தது, தொடர்ந்து குறத்திப் பெண்ணுக்குக் குலச்சிறையார் கொடுத்த விளக்கம்.

‘‘சித்திரம் விசித்திரமாகும்...’’ என்று வெண்பட்டுச் சுருள் வாக்கியத்தை ஒருமுறை அழுந்தச் சொல்லியபடி, தொண்டையைச் செருமிக் கொண்டவர் ‘‘பெண்ணே! மீண்டும் ஏமாறப் போகிறார்கள் பகைவர்கள்...’’ என்ற முன்னோட் டத்தோடு பேசத் தொடங்கினார், குலச்சிறையார்.

‘‘சித்திரித்தல் என்பது ஒருவன் தன் மனதில் விரும்பியதை வண்ணத்தாலும் வடிவாலும் தீட்டி பிறருக்கு வெளிப்படுத்தும் கலை. அவ்விதம் தனது கற்பனையை வண்ணத்தில் குழைத்து சித்திரமாக்கிக் காட்சிப்படுத்துகிறான் சித்திரக்காரன். இதோ, நம் பரமனும் பெரும் சித்திரக்காரனே!

அண்டப்பெருவெளியாகிய திரைச்சீலையில், ஆனந்த நடனமெனும் தூரிகையால், இறைவன் தன் மனதில் எண்ணியவை வெளிப்படுமாறு தீட்டிய சித்திரங்களே இந்த உலகும் உயிர்களும். ஆனால் அவன் தீட்டும் சித்திரங்கள், மற்ற சித்திரக்காரர்கள் வரைந்தளிக்கும் சித்திரங்கள் போன்று இயக்கமற்றவை அல்ல; இயங்குபவை. அவற்றைத் தீட்டும் அந்தப் பெரும் ஓவியக்காரனும் ஓய்வதில்லை. அவற்றைப் படைப்பதோடு அவற்றுள் உயிரை ஊதி இயக்கவும் செய் கிறான்; வினை விதைத்து விளையாடவும் செய்கிறான். அந்த விளையாடலின் முடிவை அவனே அறிவான். ஆனால்...’’ என்று பூடகத்தோடு பேச்சை நிறுத்தியவர், குறத்திப் பெண்ணையும் இளங்குமரனையும் அருகில் அழைத்தார்.

இருவரும் அருகில் வந்ததும் ``நம் விஷயத்தில் நம் மீது அவன் கொண்ட கருணையால், நமக்குச் சாதகமாய் ஒரு தீர்வைச் சொல்கிறான் பாருங்கள்...’’ என்றபடியே, லிங்க மூர்த்தத்தின் ஆவுடை பாகத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஆவுடை பீடத்தில், மிக மெல்லியதாகத் தீட்டப்பட்டிருந்த ஒரு சித்திரம், பெரும் போர் வியூக வரைபடத்தைக் காட்டியது அவர்களின் கண்களுக்கு!

- மகுடம் சூடுவோம்...