மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 34

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

வில்வ வியூக ரகசியம்

காலமும் ஒருவகையில் கலைஞனைப் போன்றதே. சிந்தையில் ஊறும் கற்பனை ஊற்றைத் தன் எண்ணத்துக்கேற்ப - விருப்பத்துக்கேற்ப விதவிதமான காவியங்களாகவும், ஓவியங் களாகவும், சிற்பங்களாகவும் சிருஷ்டித்துவிடுவான் கலைஞன். காலமும் அப்படியே அண்டசராசரத்தில் சகலத்தையும் தன் சித்தப்படியே படைத்து அழகு பார்க்கிறது!

இருவருக்கும் வேற்றுமை உண்டென்றால் அது... கலைஞன் சிருஷ்டிப்பதுடன் நிறுத்திக்கொள்வான். அவனால் தன் படைப்புக்குள் உயிர்மூச்சை ஊத இயலாது. காலமோ உயிர் கொடுக்கும்; இஷ்டப்படி படைத்த படைப்புகளைத் தன் இஷ்டப்படியே ஆட்டுவிக்கவும் செய்யும்.

சிவமகுடம் - பாகம் 2 - 34

காரணம், காலம் கடவுளின் அம்சம்!

தென்னவனின் தேசத்திலும் சகலமும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தன என்றே சொல்லவேண்டும். அப்படி, காலம் ஆடிய ஆட்டங்களில் ஒன்று, அந்த வனப்புறத்திலும் அரங்கேறிக்கொண்டிருந்தது!

சிறுதுளிகளாய் தம்முடைய பசுந்தளிர்களில் ஏற்றிருந்தத்தூறலை, அவ்வப்போது காற்றின் மோதலால் அசைந்தாடிப் பன்னீர்த் தூவலாய் அங்கிருந்தோரின் மேனி சிலிர்க்கும்படித் தூவிக்கொண்டிருந்தன விருட்சங்கள். அவற்றின் கிளைகளில் பூத்திருந்த பூக்களும், அந்தப் பூக்களில் தேனைத் தேடி வந்த சிட்டுகளும், கிளைக்குக் கிளை தாவி குரங்குகள் புரியும் சேட்டைகளுக்குப் பயந்து, மரம்விட்டு மேலெழும்பி பறந்து அபய ஒலி எழுப்பும் கிள்ளைகளுமாய்... காலம், கற்பனைக் கெட்டாத அற்புத ஓவியமாக்கியிருந்தது அந்த வனச் சூழலை!

இன்னும், பண்டைய புலவர்தம் மொழியில் சொல்வதானால்...

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும்

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும்,

வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்

நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று

விளிக்கும் கானமும்...

- எனும்படித் திகழ்ந்த அந்த வனத்துக்குக் கொள்ளை அழகைச் சேர்த்திருந்தது காலம்!

ஆனால், இப்படியான எழில்கோலத்தை ரசிக்கமுடியாதபடி, அங்கிருந்தவர்களுக்குப் பெரும்பணியையும் சுமத்திவிட்டிருந்தது.

``ஏதாவது தென்படுகிறதா இளங்குமரா?’’

பேரமைச்சர் குலச்சிறையாரின் இந்தக் கேள்விக்கு, அவர்தம் உள்ளங்கையில் ஏந்தியிருந்த அந்தச் சிறிய சிவலிங்கத்தை உன்னிப்பாக ஆராய்ந்தபடியே பதில்சொன்னான் இளங்குமரன்.

‘‘ஆவுடையில் சில கோடுகள். அத்துடன்... வில்வத் தழை போன்று சிறிய சித்திரம் ஒன்றும் இருக்கிறதே...’’

``மிகச் சரியாகச் சொன்னாய். அது வில்வ வடிவமேதான். அதுசரி, கோடுகளும் வில்வமும் சொல்ல வரும் செய்தி என்ன... பொங்கி, நீ சொல் பார்க்கலாம்...’’

சிவமகுடம் - பாகம் 2 - 34

குறத்திப்பெண் வேடத்திலிருந்த பொங்கிதேவி சட்டென்று சொன்னாள்: ``என்னிடம் இதை ஒப்படைத்தபோதே, பாண்டிமாதேவியார் இதுகுறித்து என்னிடம் கேட்டார். நன்கு ஆய்ந்தும் யோசித்தும் எனக்குப் பதில் புலப்பட வில்லை. அதை அவரிடம் தெரிவித்தேன். அத்துடன் இதுபற்றி அவர் விளக்குவார் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ, பதில் தங்களிடம் கிடைக்கும் என்றுகூறிவிட்டார்’’

பேரமைச்சர் சிரித்துக்கொண்டார். `உனக்கு ஏதேனும் புலப்படுகிறதா’ என்று கேட்பதுபோல் இளங்குமரனை நோக்கினார்.

``போர் வியூகம் குறித்த ரகசியம் என்று தெரிகிறது. ஆனால், வியூகத்தின் ஒருபாதியே இது. மீதி...’’

இளங்குமரன் கேட்டு முடிப்பதற்குள் தான் முந்திக்கொண்டு, ‘‘மீதியைக் காண இதேபோல் இன்னுமொரு லிங்கமூர்த்தம் நமக்குக் கிடைக்க வேண்டும் இளங்குமரா’’ எனக்கூறிய பாண்டிய தேசத்தின் பேரமைச்சர், தன் பதிலால் வியந்து நிற்கும் அந்த இளையவர்களுக்கு மேலும் மேலும் வியப்பை ஏற்படுத்தும் விஷயங்களை விவரிக்கலானார்.

``நான் சொல்லப் போகும் விஷயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். எனது யூகம் துல்லியமெனில்... நம் தேசம் பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. மீளவேண்டும் எனில் கடும் பிரயத்தனம் தேவை...’’

முன்னோட்டமே உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்த, இருவரும் பேரமைச்சரின் உரையைக் கூர்ந்து கவனிக்கலானார்கள். குலச்சிறையார் தொடர்ந்தார்.

‘‘சித்திர விசித்திரம் என்று பாண்டிமா தேவியார் பூடகமாய் ஒரு விஷயத்தை விளக்கினார் அல்லவா... அதாவது, மாமதுரையில் நடந்த களேபரங்களையொட்டி நாம் சில திட்டங்களைத் தீட்டிவைத்திருக்க, அவற்றை மிஞ்சும் வேறு திட்டங்களால் நம்மைத் திணறடிக்கக் காத்திருக் கிறான் சேரன். ஆம்! மதுரையின் மீதான தாக்குதலை நாம் முறியடித்துவிட்டோம். அதையொட்டி நாம் வென்றுவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், விஷயம் அத்துடன் முடியவில்லை. சேரர்களின் அந்தத் தாக்குதல், அவன் மேற்கொள்ளப் போகும் பெரும் யுத்தத்துக்கான ஒத்திகை!

ஒற்றர்களை அனுப்பி உளவு பார்ப்பது உலக வழக்கம். ஆனால் சேரனோ மிகச் சிறந்த மதியூகி; சிறு போரை ஏற்படுத்தி நம்மை, நம் வலிமையை உளவறிந்துவிட்டான்...’’

``என்ன சொல்கிறீர்கள் பேரமைச்சரே..?’’

குலச்சிறையாரின் விளக்கம் உள்ளுக்குள் பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட, அதன் விளைவு, ஏககாலத்தில் பெருஞ்சத்தத்துடன்கூடிய வினாவாக வெளிப் பட்டது... பொங்கிதேவி, இளங்குமரன் இருவரிடமிருந்தும்!

உடன், ``ஹூம்ம்...’’ என்று மிகச் சன்னமான ஹூங்காரத்துடன், விழிகளை அகல விரித்து விழித்து `அதிகம் சத்தம் வேண்டாம்’ என்பதாக அவர்களை எச்சரித்த குலச்சிறையார், மேற்கொண்டு விவரிக்கலானார்.

சிவமகுடம் - பாகம் 2 - 34

‘‘நம் பெரும் சேனை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒருபிரிவு பல்லவ எல்லை நோக்கி நகர்ந்திருப்பதையும் மற்றொன்று வனப்புறத்தில் மறைந்திருந்ததையும் ஏற்கெனவே அறிந்துவைத்திருந்த சேரன், அது உண்மைதானா என்பதைத் தன் தாக்குதலைப் பயன்படுத்தி உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டான்.

அத்துடன், திடுமென ஒரு தாக்குதல் நிகழ்ந்தால், நம் நகர்வுகள் எப்படியிருக்கும் என்பதையும் பார்த்துவிட்டான். எல்லாவற்றுக்கும் மேலாக, பாண்டியர்மீது கை வைத்தால் வேறு யார் யாரெல்லாம் அவர் தரப்புக்கு உதவிக்கு வருவார்கள் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொண்டுவிட்டான். விளைவு, சித்திரங்கள் விசித்திரமாயின!’’

``அப்படியென்றால்...’’ இளங்குமரன் கேட்டான்.

``புரியவில்லையா... போரைத் தொடர்ந்து நாம் போட்டுவைத்த திட்டங்கள் யாவும் பயனற்றுப் போகும்படி சேரன் வேறு திட்டங் களைத் தீட்டிவிட்டான் என்று பொருள்.’’

``எதைவைத்து இப்படி உறுதியாகச் சொல் கிறீர்கள்...?’’

``இந்தச் சிவலிங்க மூர்த்தத்தை வைத்துதான். மேலும் முழுமையான விவரங்களை மிகத் துல்லியமாக அறியவேண்டுமானால், இரண்டா வது லிங்க மூர்த்தமும் நமக்குத் தேவை!’’

``எங்கு, யார் வசமுள்ளது அந்த மூர்த்தம்?’’

பொங்கிதேவி கேட்ட இந்தக் கேள்விக்கு, பெருமூச்சொன்றை விட்டபடி ஒரு பதிலைச் சொன்னார் குலச்சிறையார்.

``திருப்பாண்டிக் கொடுமுடி!’’

பதிலைச் சொன்னதோடு, ``இளங்குமரா! நீ இப்போதே இங்கிருந்தபடியே அந்தத் தலத்துக் குப் புறப்படவேண்டும். அங்கு சென்றால், அந்த லிங்க மூர்த்தம் யார் வசம் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்வாய். உடனே புறப்படு. பொங்கிதேவி என்னோடு நம் தலைநகருக்கு வரட்டும்’’ என்று கட்டளையிட்டவர், ‘`லிங்க மூர்த்தத்தைக் கொண்டுவருவது மட்டுமல்ல, உனக்கு வேறொரு பணியும் அங்கே காத்திருக்கிறது இளங்குமரா’’ என்றும் சொல்லியனுப்பினார்.

பேரமைச்சர் சுட்டிக்காட்டிய கூடுதல் பணி, பாண்டிய பேரரசருக்கே எதிரானது என்பதை அறியாத அந்த வீரஇளைஞன், தன் தேசத்துக்குக் கடமையாற்றக் கிடைத்த வாய்ப்பாகவே கருதி உவகைக்கொண்டவனாய்ப் புறப்பட்டான்!

அவன் அங்கு செல்லுமுன் திருப்பாண்டிக் கொடுமுடி எனும் அவ்வூரைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம்!

அங்கவர்த்தனபுரம்!

அமுதபுரி, பிரமபுரி, ஹரிஹரபுரம், கறையூர், கன்மாடபுரம், கறைசை, பாண்டியூர், பரத்வாஜ க்ஷேத்திரம், சிறுமேரு, தென் கயிலாயம்... இவ்வாறெல்லாம் போற்றப்படும் தலம் - காவிரிக் கரையில் எழிலுற மிளிரும் திருப்பாண்டிக் கொடுமுடி. கொங்கு மண்டலத்தின் ஏழு சிவத் தலங்களில் ஒன்று. புராணங்கள், இந்த ஊர் குறித்து வெகுவாகச் சிறப்பித்துச் சொல்கின்றன.

சிவ - பார்வதி திருமணத்தின்போது, இறை ஆணைப்படி, உலகைச் சமன் செய்ய தெற்கே புறப்பட்ட அகத்தியர், வரும் வழியில் விந்தியத்தின் செருக்கை அடக்கிவிட்டு, மேற்கு மலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது கமண்டலத்துக்குள் கங்கை நீர். அதேநேரம், சீர்காழிப் பகுதியில் வளம் பெருக வேண்டும் என்ற தேவேந்திரனின் பிரார்த்தனையை ஏற்ற விநாயகர், காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டிவிட்டார். கமண்டல நீர் காவிரியாக பாய்ந்தது. அப்படி, காகம் கமண்டலத்தைத் தட்டிவிட்ட இடம், இந்தக் கொடுமுடித் துறை என்பார்கள். இங்கேதான் காவிரி திசை மாறுகிறது!

ஒருமுறை வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக் கும் `தங்களில் யார் பெரியவர்’ என்று போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேருவைச் சுற்றி வளைத்து இறுக்கிப் பிடித்துக்கொள்ள, வாயு தன் பலத்தால் மேருவை அசைக்கவேண்டும் என்பதே போட்டியின் சாரம். போட்டி தொடங்கியது. வாயு பலத்தால் வெகுவேகமாய்க் காற்று வீச, மேருவின் பல சிகரங்கள் சிதறின. சிதறிய சிகரங்களில் நான்கு இன்றைக்கும் மலைகளாகவே திகழ்கின்றன; ஒன்று மட்டும் சுயம்பு சிவலிங்கமாய் அமைந்தது. அந்தச் சுயம்பு கோயில்கொண்டிருக்கும் தலமே கொடுமுடி. அந்தச் சுயம்பு இறைவனுக்குக் கொடுமுடிநாதர் என்று திருப்பெயர். கொடுமுடி என்றால் பெரிய சிகரம் எனப் பொருள்.

இந்தத் தலத்துக்கும் பாண்டிய தேசத்துக்கும் தொடர்புள்ள திருக்கதை ஒன்றும் உண்டு.

முற்காலத்தில், பாண்டிய மன்னன் ஒருவனின் மகனுக்குப் பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டிய பின், குறை தீர்ந்தது. எனவே, அங்கவர்த்தனபுரம் என்றும் பெயர் பெற்றதாம் இந்தத் தலம்.

அந்தப் பாண்டியனும் இந்தக் கோயிலுக்கு மூன்று கோபுரங்கள், மண்டபங்கள் அமைத்தான். பல மூர்த்தங்களைச் செய்தான்; மடமும் அன்ன சாலையும் எழுப்பினான்; பெரிய தேரும் வழங்கி னான். பாண்டியனின் திருப்பணிகளைப் பெற்ற தால், ஊரும் பாண்டிக்கொடுமுடி ஆனது.

இப்படியான மகிமைகளைக் கொண்ட திருப்பாண்டிக்கொடுமுடி எனும் அந்தத் தலத்துக்கு இளங்குமரன் வெகுவிரைவில் போய்ச்சேர்ந்தான். அவ்வூரை அவன் அடைந்த அதேநாளில்தான், பாண்டிமாதேவியாரின் அணுக்கப்படையைச் சேர்ந்தவனும் கனவில் காழிப்பிள்ளையைக் கண்டு களிப்புற்றவனுமான அந்த மருதனும் ஒரு கைதியாய் வந்து சேர்ந்தான் எனில், அது காலத்தின் திருவிளையாடலே!

- மகுடம் சூடுவோம்...