
துறவி உடைத்த ரகசியம்!
அறிவில் சிறந்த ஆன்றோர்களின் அறவுரைகள், செவிமடுப்போர் உள்ளத்தில் மெய்யொளியைப் பாய்ச்சி, அவர்களின் அக இருளை அகற்றி விடுவதைப் போன்று, கீழ்வானில் தகதகத்து ஒளி வீசிய செஞ்ஞாயிறு, அந்தப் பிராந்தியத்தின் இருளை நீக்கி புத்தொளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது.
பொங்கிப் பாய்கின்ற தீரமெல்லாம் பெரும்பாலும் தெற்கு நோக்கியே விரைந்தோடும் பொன்னி நதியாள், அந்தத் தலத்தில் மட்டும் கிழக்குநோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தாள். நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அவளின் நீர்ப்பரப்பை வெகுவிசையோடு விலக்கியபடி மேலெழுந்தான் இளங்குமரன். ஒருமுறை சிரத்தை உலுப்பி, தலையிலிருந்து முகம் வழியே நீர் வழிய வகை செய்துகொண்டவன், மெள்ள கண் விழித்த வேளையில், ஆயிரமாயிரம் ஆதவன்களை தரிசித்தான்.

ஆம்! நதியின் கரைநெடுக வளர்ந்து நின்ற நாணல்களில் பனித்துளியாய்ப் படிந்திருந்தன காவிரியின் நீர்ச் சிதறல்கள். அவையாவும் செஞ்ஞாயிற்றுக் கதிரொளியை உள்வாங்கிப் பிரதிபலிக்க, நாணல் ஒவ்வொன்றிலும் சூரியப்பூ மலர்ந்ததுபோன்ற அந்தக் காட்சி, இளங் குமரனின் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
இயற்கையாய் அமைந்து, இனியக் காட்சிகளாய்ப் பரிணமித்து, தரிசிப்போரை மலைப்பில் ஆழ்த்திவிடும் வண்ணம் பரமன் நிகழ்த்தும் இப்படியான ரசவாதங்களை எண்ண எண்ண அவனுக்குள் பரவசம் பொங்கியது. மிக்க ஆனந்தத்தோடு, ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருந்த மகுட நாதரின் ஆலய விமானத்தையும், விண்ணில் இன்னும் உயரம் ஏறியிருந்த ஆதவனையும் மும்முறை வணங்கித் தொழுதவன், மெள்ள படிகளின் வழியே கரையேறினான்.
கரையில், ஏற்கெனவே நீராடி முடித்துக் காத்திருந்தான் இளைஞன் மருதன். அவனைப் பார்த்ததும் நள்ளிரவில் நடந்த நிகழ்வுகள் யாவும் இளங்குமரனின் மனத் திரையில் விரிந்தன.
திருப்பாண்டிக்கொடுமுடி எனும் அந்த ஊரின் எல்லையை இளங்குமரன் தொட்டபோது, பொழுது நள்ளிரவு. எல்லைச் சத்திரத்தில் தங்கிவிடத் தீர்மானித்து புரவியை நகர்த்தியபோதுதான் அந்த விசித்திரக் காட்சியைக் கண்டான் இளங்குமரன்.
பார்த்த கணத்தில் அவன் மனதுக்கு ஏதும் விநோதமாகப் படவில்லைதான். ஆனால், வெள்ளுடை தரித்தபடி மெதுநடையாக வீதியில் சென்று கொண்டிருந்த மூவரில், நடுவில் உள்ளவனின் கால்களைக் கவனித்த போதுதான் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளானான். அந்த மனிதனின் கால்கள் தரையில் பதியவில்லை. தரைக்கு அரைக் கோலளவு உயரத்தில் ஊசலாடியபடியும் அவ்வப்போது பாதங்களின் பெருவிரல்கள் பூமியைத்தொட்டு கோடு கிழித்தபடியும் சென்றுகொண்டிருக்க, அவன் நடக்கவில்லை தூக்கிச் செல்லப்படுகிறான் என்பதை அனுமானிக்கமுடிந்தது இளங்குமரனால்.
ஆக, இருவர் சேர்ந்து ஒருவனைக் கடத்துகிறார்கள் என்பது இளங்குமரனின் புத்திக்கு உறைத்தபிறகு, அவனது வீரவாள் உறைக்குள் தங்கவில்லை. வெள்ளுடை ஆசாமிகள்மீது பாய்ந்தேவிட்டான். சடுதியில் நடந்த தாக்குதலால் இருபுறமும் வந்துகொண்டிருந்தவர்கள் நிலைகுலைய, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விலகி ஓடினான் நடுவன்.
கால் நாழிகைப்பொழுது நீடித்தது மோதல். பிறை வடிவிலான மிகச் சிறியதும் ஆனால் அதிகம் ஆபத்து நிறைந்ததுமான விநோத ஆயுதத்தால், இளங்குமரனின் வாள் வீச்சைத் தடுக்கவும் தாக்கவும் செய்தார்கள் அந்த முரடர்கள். அவனுக்கும் அவர்களுக்குமான இடைவெளி குறையும் நேரத்தில் எல்லாம், கைவிரல்களாலும் அவன் மேனியில் சில பாகங்களைத் தாக்க யத்தனித்தார்கள் அவர்கள்.

சேரர் தரப்பினரின் பயிற்சி அது என்பதை சடுதியில் புரிந்துகொண்டு, அவர்களின் அந்தத் தாக்குதலுக்கு இடம் கொடுத்துவிடாமல் மிகக் கவனத்துடன் சண்டையிட்டான் இளங்குமரன். பெரும்பாலும் வாளின் நுனியாலேயே அவர்களைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்துக்குமேல் பதில் தாக்குதலைச் சட்டென்று நிறுத்தியதுடன், அவனிடமிருந்து விலகவும் செய்த அந்த முரடர்கள், தங்களிடமிருந்து தப்பித்த அந்த இளைஞனின் மீது கோபப்பார்வை ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்கள். துரத்தினால் அகப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், இளங்குமரன் அவர்களை விரட்டிச்செல்ல விரும்பவில்லை.
`நோய்நாடி நோய் முதல் நாடி' என்பதற்கேற்ப, அவர்களைப் பற்றிய விஷயங்களை, இளைஞன் கடத்தப்பட்டதற்கான காரணங்களை முழுமையாக அறிய விரும்பினான். இளைஞனை அணுகி சங்கிலிப் பிணைப்புகளிலிருந்து விடுவித் தான்; விசாரித்தான்.
`தன் பெயர் மருதன்’ என்பதைத் தவிர, வேறு எதைக்குறித்தும் வாய் திறக்கவில்லை இளைஞன். அந்த நிலையில் அந்த அளவுக்கே விஷயத்தை வாங்க முடியும் என்பதைப் புரிந்துகொண்ட இளங்குமரன், மேற்கொண்டு விசாரணையைத் தொடராமல், இளைஞனோடு நட்பு உணர்வு வாய்த்ததும் பேசிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டான். இதோ இப்போதுவரையிலும் அதுபற்றி வேறு எதுவும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை
கரையேறி ஆடை மாற்றிக்கொண்ட இளங் குமரனை நெருங்கிய இளைஞன் புன்னகைத்தான். ஆதரவுடன் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு நட்புடன் புன்னகைத்த இளங்குமரன், ``வா! கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்து வரலாம்’’ என்றபடியே அவனை அழைத்துக்கொண்டு மகுட நாதரின் திருக்கோயில் வாயிலை அடைந்தான்.
ஆலயத்துக்குள், திருவலப் பாதையை அடைத்தபடி சிறுகூட்டம் அமர்ந்திருந்தது. அங்கிருந்த வன்னி மரத்தடியில் திண்டு ஒன்றின் மீது அமர்ந்திருந்தவர், அந்தக் கூட்டத்தாரிடம் ஏதோ உரையாற்றிக்கொண்டிருந்தார். இளங் குமரனுக்கு அவரின் முதுகுப்பக்கமே புலப்பட்டது. அவரின் மேனியில் திகழ்ந்த செந்நிற வஸ்திரங்கள், அவரொரு துறவி என்பதை உணர்த்தியது.
கூட்டத்தை விலக்கிவிட்டு வலத்தைத் தொடரலாம். ஆனால், அது துறவியின் உரைக்கு இடைஞ்சலாகிவிடும் என்று கருதிய இளங்குமரன், வேறு வழியின்றி கூட்டத்தை நெருங்கி, தானும் தரையில் அமர்ந்துகொண்டான். அப்படி அவனும் இளைஞனும் அமர்ந்துகொண்ட அந்த இடமும், துறவியானவருக்குப் பக்கவாட்டில் அமைந்தபடியால், அப்போதும் துறவியின் திருமுகத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

``மறைகளுக்கான விருட்சம் வன்னி. அவ்வகை யில், நாம் மறையின் நிழலில் வீற்றிருக்கிறோம். நீங்கள் உள்ளூர்வாசிகள். உங்களுக்கு இங்கிருக்கும் இந்த வன்னியின் மகத்துவம் தெரியுமா?’’ - துறவியார் கேட்க, கூட்டத்தில் வயதில் முதியவரா கத் தெரிந்த ஒருவர், தனக்குத் தெரியும் என்பதாக தலையசைத்தார்.
‘‘சொல்லுங்களேன் கேட்கலாம்...’’
``இந்த வன்னி மரத்தில் முள்ளோ, பூவோ, காயோ கிடையாது! இங்கே நான்முகன் வந்து இறைவனை வழிபட்டு அருள் பெறுகிறாராம். அதனால், எங்கள் ஊருக்கு வந்து எங்கள் மகுடநாதரை வணங்கினால், அப்படித் தொழுவோரைப் பாவங்கள் எதுவும் பற்றிக்கொள்ளாதாம்!’’
``நீங்கள் சொன்னது உண்மை. அப்படித்தான் நம் ஞானநூல்கள் பலவும் உங்கள் ஊரைப் பற்றிச் சொல்கின்றன. சரி... இங்கு அருள்பாலிக்கும் ஆடல் தாண்டவருக்கான சிறப்பு என்ன தெரியுமா?’’
துறவியாரின் இந்தக் கேள்விக்கு எவருக்கும் பதில் தெரியவில்லை. இளங்குமரன் தானும் அந்தக் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள ஆசைப்பட்டான். ஆகவே, துறவியாரின் விளக்கத்தைச் செவிமடுக்க ஆர்வமானான்.
``ஆதியின் முனிவர் பெருந்தகை ஒருவர் உங்கள் ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது பெரும் வனமாக இருந்ததாம் இந்த இடம். உள்ளபடியே காவிரியில் நீர்ப்பெருக்கு அதிகம் உண்டு. நித்தமும் காவிரியில் நீராடி தென்னாடுடைய நம் ஆண்டவனின் ஆடல்கோலத்தையே மனதில் சிந்தித்து தவமியற்றி வந்தாராம் அவர். இறையனார் அகமகிழ்ந்து போனார். அதனால் அந்த முனிவருக்கு சதுர்முக தாண்டவ கோலத்தைக் காட்டியருளினாராம். குஞ்சித பாதம் தூக்கி ஆடும் கோலம் அபூர்வமானது தெரியுமா! இப்படி ஆடல் கோலத்தால் சிறப்புப் பெற்ற உங்கள் ஊர் இறைவனையே `நாதாந்த நட்டன்’ என்றே சிறப்பிக்கிறார்கள் பெரியோர்கள்...’’ என்று விளக்கம் அளித்த துறவியார், ``நிறைவாக ஒன்றைச் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள்...’’ என்றபடியே உரையைத் தொடர்ந்தார்.
``இங்கே ஈசனின் லிங்கத் திருமேனியில் விரல் தடங்களையும் தரிசித்தேன். அவை அகத்தியர் பெருமான் வழிபட்ட காலத்து உண்டானதாக இருக்கலாம் என்பது என் யூகம். ஆகவே, நீங்கள் பாக்கியசாலிகள். அனுதினமும் உங்கள் இறைவனைக் கொண்டாடுங்கள். இந்த ஊர் செழிக்கும்; உங்கள் உழவும் தொழிலும் வளம்பெறும்; இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்கும்!’’
ஆசி கூறும் தொனியில் தன் அறவுரையை நிறைவுசெய்த துறவியார், அடுத்து செய்த காரியம்தான் இளங்குமரனை பெரிதும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆம்... ``இளங்குமரா, மருதா... தென்னவனின் வீரக் காளைகளே... இப்படி என் முன்னால் வாருங்கள்’’ என்று அழைத்தார் துறவியார்.
ஒரு கணம் வியப்பின் உச்சிக்கே சென்று மீண்டான் இளங்குமரன்.
`பெயர் சொல்லி அழைக்கிறார் எனில், இவர் யார்... தங்களைப் பற்றிய விவரங்களை எப்படி அறிந்தார்...' எனும்படியான எண்ணங்கள் ஒருபுறம் எழுந்து அடங்க, மறுபுறம் `தென்னவன் காளைகளே' என்று துறவி தன்னையும் மருதனையும் சேர்த்து அழைத்ததன் மூலம் `மருதன் பாண்டியர் தரப்பினன்' என்ற தகவலை அளித்தது, அவனைப் பெரிதும் மலைக்கவைத்தது.
அவனுடைய மலைப்பையும் திகைப்பை யும் பன்மடங்காக்கின, துறவியாரின் திருமுக தரிசனமும், அவர் அளித்த பிரசாதங்களும், தகவல்களும்.
ஆம்! வியப்புடன் தன்னை நெருங்கிய இளங்குமரன் மற்றும் மருதனின் சிரம் தொட்டு ஆசீர்வதித்த துறவியார், இளங்குமரனை இன்னும் அருகில் அழைத்து அவனுக்குத் திருநீறும் வழங்கினார். அந்த அருள் பிரசாதத் தோடு வேறொன்றும் அவன் வலக்கரத்தை வந்தடைந்தது.
அது... தாருவாலான சிறு லிங்கமூர்த்தம். ஆம், குலச்சிறையார் குறிப்பிட்டிருந்த இரண்டாவது லிங்கம். தான் நாடி வந்தது தன்னையே தேடி வந்ததை எண்ணிப் பெருமகிழ்வோடு, துறவியின் திருமுகத்தை நோக்கியவன் பெரிதும் அதிர்ந்தான். மிக நெருக்கத்தில் அவர் யாரென்பதை அவனால் தெளிவாக அறியமுடிந்தது; அப்படி அறிந்த தால் அவன் தேகம் நடுநடுங்கியது. அவரோ கண்களால் கட்டளையிட்டார் `எதையும் வெளிப்படுத்திவிடக் கூடாது’ என்று!
அந்தத் தருணத்தில் கூட்டம் கலைந்திருந்தது. அங்கே அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லாத சூழல். இளங்குமரனுக்கு ஆசி கூறியவர், அடுத்து மருதனை அருகில் அழைத்தார். அவன் நெருங்குவதற்குள், அருகிலிருந்த வன்னி விருட்சத்தின் கிளை மறைவிலிருந்து அஸ்திரம் ஒன்றை வெளியிலெடுத்தவர், ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அதை மருதனிடம் ஒப்படைத்தார். அஸ்திரத்தின் முனைப்பகுதியிலிருந்த முத்திரை, மருதனை மருளவைத்தது.
துறவி அளித்த பொக்கிஷங்கள் இப்படியென்றால், அடுத்து அவர் அந்த இளைஞர்களிடம் சொன்ன ரகசியங்கள் அதிபயங்கரமாக இருந்தன. அவர்கள் மனதில், தன் சொல்லாலும் செயலாலும் அக்கோயிலில் உறையும் மகுடநாதராகவே வளர்ந்து நின்றார் அந்தத் துறவி!
- மகுடம் சூடுவோம்...