மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 40

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

அணிந்திருக்கும் போர்க்கவசமும், இடையில் தரித்திருக்கும் பெருவாளும், முதுகில் சுமந்திருக்கும் நெடுவேலும் ஒருபோதும் அந்தப் பேரரசிக்கு பாரமாய்த் தோன்றியதில்லை.

கட்டளையும் கட்டுத்தளையும்!

நெடுநாள் பிரிந்திருந்த காதலனை நேரில் கண்டதும் ஓடோடிச்சென்று அவன் மார்பில் முகம் புதைத்து, பிரிவாற்றாமையால் விளைந்த துயரை எண்ணி விம்மி அழத் துடிக்கும் காதலிக்கு ஒப்பான வேகம் கொண்டவன்போல் வழக்கத்தைவிடவும் அதிக வேகத்துடன் மேற்கு மலைச் சிகரங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான் சூரியன். அந்தப் பொன்கிரணக் கதிரோன் மேற்கில் சரியுமுன் தான் மதுரையை அடைந்துவிட வேண்டும் எனும் துடிப்புடன் புயல்வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தது அந்தக் கரும்புரவி.

அப்படி அது, அதிவேகத்துடன் செல்லும்படி உந்துதல் அளித்தவாறு அதன் முதுகில் ஆரோகணித்திருந்தவரின் சிந்தனைக் குதிரையோ அவ்வளவாய் வேகம் காட்டவில்லை. நிதானத்துடன் செயல்பட்டு பற்பல கேள்வி களை உருவாக்கிக்கொண்டிருந்தது அந்த மாதரசியாரின் உள்ளத்தில்.

அணிந்திருக்கும் போர்க்கவசமும், இடையில் தரித்திருக்கும் பெருவாளும், முதுகில் சுமந்திருக்கும் நெடுவேலும் ஒருபோதும் அந்தப் பேரரசிக்கு பாரமாய்த் தோன்றியதில்லை. சோழ தேசத்தின் இளவரசியாக இதே கோலத்தில் காடு மேடெல்லாம் சுற்றியிருக்கிறார். புரவியில் ஆரோகணித்தபடியே மேற்சொன்ன அனைத்தையும் சுமந்திருக்கும் நிலையிலும் சுழற்படையை ஏவி எதிரிகளைச் சாய்த்திருக் கிறார். அப்போதெல்லாம் சுமப்பதில் ஒருபொருட்டாகவே தோன்றாத இந்த உபகரணங்கள், இன்றைக்கு அவருக்குப் பெரும் பாரத்தைக் கொடுத்தன என்றே சொல்லலாம். மனத்தின் பாரம் தேகத்தையும் அயரவைத்தது போலும்!

சிவமகுடம்
சிவமகுடம்

ஆம்! மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியின் ஒற்றைக்கட்டளை பாண்டிமாதேவியாரைப் பலவாறு சிந்திக்கவைத்ததுடன் அதன்பொருட்டு இனம்புரியாத அயர்ச்சியையும் அவருக்கு ஏற்படுத்திவிட்டது.

`அங்கயற்கண்ணியின் மைந்தன் உக்கிரப் பாண்டியனே மீண்டும் கூன்பாண்டியராக வந்துதித்துவிட்டார் போலும். இல்லை யெனில், இந்த மனிதரால் இவ்வளவு தீர்க்கம் கொண்டவராகத் திகழ இயலாது. ஓர் உத்தரவுதான். ஆனால், அதன்மூலம் எத்தனை காய்நகர்த்தல்கள்... அப்பப்பா...’ மாமன்னரின் வியூக மதியூக வல்லமையை எண்ணிச் சிலாகித்த தேவியாரின் சிந்தனை, மறுகணமே சக்ரவர்த்தியின் ஆணையால் உண்டான விளைவுகளையும் எண்ணிப்பார்த்தது.

மாமன்னரின் அவசர அழைப்பின்பேரில் அவருடைய அறிவுறுத்தலுக்கு இணங்க போருடை தரித்துக்கொண்டு, ஆயுதபாணி யாய் புரவியேறி, தன்னந்தனியே புறப்பட்டு வந்து அவர் குறிப்பிட்டிருந்த வனப்புறத்தில் அவரைச் சந்தித்தார் பேரரசியார். அங்கு மாமன்னரை எதிர்கொள்ளுமுன் தேவியார் எதிர்கொண்டது, மன்னர்பிரானின் செல்லப் பிராணியான அந்தப் பொல்லாத யானையைதான்!

தேவியாரின் கரும்புரவி சற்று தூரத்தில் வரும்போதே, அதன் குளம்படிச் சத்தத்தையும் மண்ணின் அதிர்வையும் கொண்டு வேற்று நபர் யாரோ வருகிறார் என்று கணித்துவிட்டது அந்தக் களிறு.

ஒருவேளை வருவது பகைவர் எனில் மாமன் னருக்கு அரண் அமைக்கும் எண்ணத்தோடு தன் கருத்தப்பெருமேனியை அசைத்தெழுந்து, மன்னர் உறைந்திருக்கும் அந்தத் திடலுக்கு இட்டுச்செல்லும் அந்த ஒற்றை வழியை அடைத்தபடி நின்றிருந்தது.

ஆனாலும் பாதகமில்லை. மாமன்னர் தேவியாருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்... நட்பை உணர்த்தி அந்தக் களிறை வசப்படுத்த. அதன் படியே விநோதக் குரலொலியாலும் உரிய சமிக்ஞைகளாலும் யானையை விலகச் செய்து மன்னர்பிரானைச் சந்தித்தார் தேவியார்.

சிவமகுடம்
சிவமகுடம்

அங்கே, கயல் இலச்சினையோடு காத்திருந்தது நறுக்கோலை ஒன்று. மாமன்னர் அதிகம் பேசவில்லை. ஆணையை வழங்கினார். வரிகளை நிதானமாக வாசிப்பதற்கும் வாய்ப்பளிக்கவில்லை; தாமதமின்றி தலை நகருக்குப் புறப்படும்படி உத்தரவு இட்டுவிட்டு, தன் செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவரும் புறப்பட்டுவிட்டார். பிறகு, புரவிப்பயணத்தின் ஊடேதான் வாசிக்க முடிந்தது மன்னர்பிரானின் கட்டளை வாசகத்தை.

பாண்டிய தேசத்தின் தலைமைக் காவல் பொறுப்பை பாண்டிமாதேவியாரிடம் மாமன்னர் ஒப்படைத்திருப்பதைச் சொன்னது அந்தக் கட்டளை.

தேவியாரின் வீரத்தையும் மதியூகத்தையும் பெரிதும் மதித்து பேரரசர் வழங்கியிருக்கும் பெரும்பரிசு இது என்றே எண்ணத் தோன்றும். ஆனால், கூன்பாண்டியரின் ஒவ்வோர் அசைவுக்குமான துல்லிய காரணத்தை எளிதில் யூகித்துவிடும் பாண்டிமாதேவியாரால் மகிழ்ச்சி கொள்ள இயலவில்லை.

இனி, பாண்டிமாதேவியாரின் கண்ணசை வின்றி தூசுத் துரும்புகூட நகரமுடியாது பாண்டிய தேசத்தில். பாதுகாப்பைப் பொறுத்த வரையிலும் பேரமைச்சர் உட்பட சகலரும் அவருக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். ஆனால், பாதுகாப்பு மட்டுமே தேவியாரைச் சேர்ந்தது என்பதையும் தெளிவாக உணர்த்தியது அந்த ஆணை. அத்துடன், தேவியாரின் செயல்பாடுகளுக்கும் பெரும் கட்டுத் தளையாய் அமைந்துவிட்டது.

பாண்டிய நாட்டின் நன்மைக் காகவும், துரோகக்கூட்டத்தார் சிலரை மாமன்னருக்கு அடையாளம் காட்டவும் பேரரசியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இனி தொய்வடை யும். இதுவரையிலும் அவருக்குத் துணையாக இருந்து செயல்பட்ட சோழ வீரர்களையும் பரதவர்களையும் இனி அப்படி அதிகாரபூர்வமற்ற முறையில் உளவாளிகளாகவோ, வேறு ஏவல்களுக்கோ பயன்படுத்த முடியாது. அந்நிய தேசத்தவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொறுப்பும் தலைமைக்காவல் பதவிக்கு உண்டு என்பதால், தேவியாரே அதை மீறி செயல்பட இயலாது.

பதவியெனும் பெரும்பிணைப்பால் தன்னைக்கட்டிப்போட்டு விட்டார் சக்ரவர்த்தி என்ற எண்ணத்தால் உண்டான அயர்ச்சி அவர் மனத்தைப் பாரமாக்கியது. அத்துடன் அவரை மேலும் அயரவைக்கும் வேறு கேள்விகளும் எழுந்தன அவருக்குள். அவற்றுக்கான விடைதேடும் சிந்தனைகளோடு பயணித்த பாண்டிமாதேவியார் தலைநகருக்குள் பிரவேசித்தபோது இருட்டிவிட்டிருந்தது.

வேகவேகமாய் மாமதுரையைச் சூழ்ந்துகொண்ட காரிருள் தன் மனத் திலும் புகுந்துவிட்டதுபோன்ற தொனியில், அந்த இருள் திருமுகத்திலும் படர்ந்திருக்க கண்களில் மட்டும் சீற்றம் காட்டியபடி, அரண்மனை மாளிகையில் தன் மகளின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் மணி முடிச் சோழர்.

ண்ணொளியால் இரவின் வெண் பூக்கள் அனைத்தும் மலர்ந்து சிரிக்கும்படி கிரணங்களைப் பாய்ச்சிக்கொண்டிருந்த நிலவு, அதே கிரணங்களை அகழி, ஆழ்கிணறு, கூதும், கூவல், கேணி, சுனை, சேங்கை, கண்மாய், தடாகம், ஏரி, ஆறு உட்பட சகல நீர்நிலைகளின் பரப்பிலும் பாய்ச்சி, ஏற்கெனவே குளிர்ந்திருந்த அவற்றின் நீரை மேலும் குளிரவைத்ததோடு அவற்றின் பரப்பை வெள்ளித்தகடுகளாய் தகதகக்கவைத்துக்கொண்டிருந்தது.

இப்படியான காட்சியுடன் மெல்லிய காற்றும் சேர்ந்துகொள்ள, பாண்டியதேசத்தின் அந்தப் பிராந்தியத்தின் சூழல் மிக ரம்மியமாக இருந்தது. காற்றையும் குளிர்ச்சியையும் இரண்டும் இணைந்த அந்தச் சூழலையும் ரசித்து அனுபவித்துக்கொண்டிருந்த இளங்குமரனுக்கு இடையிடையே ஒலித்த அந்த ஓசைதான் பெரும் தொந்தரவாக இருந்தது.

சிவமகுடம்
சிவமகுடம்

அந்தப் பிராந்தியம் முழுக்க பரவியிருந்த பனைமரங்களின் ஓலைகள் காற்றின் விசையால் அசைந்தாடியதால் ஏற்பட்ட ஓசை அது. காய்ந்த ஓலைகள் காற்றில் அசைந்தாடிய காட்சியும் ஓர் ஒழுங்கின்றி எழுப்பிய சத்தமும்... கதைகளில் வரும் மந்திரக்காரக் கிழவிகள் பலரும் நேரில் வந்து தலைவிரித்த கோலத்தில் கோரச் சிரிப்புடன் பயம்காட்டுவதுபோல் தோன்றியது அவனுக்கு.

திடுமென ஏதோ கலயங்கள் மோதி உடையும் சத்தம் கவனத்தைக் கலைக்க யதார்த்த நிலையை அடைந்தான் அந்த இளைஞன். குயவர் ஒருவரது குடிசை வாயிலில் ஒரு பாறையையே ஆசனமாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் இளங்குமரன்.

`குசத் திறையை (வரி) விலக்குகிறேன் நான் சொல்வதைச் செய்து கொடு’’ என்று அவன் ஏவியிருந்தபடி, தான் வனைந்திருந்த பானையை இருட்டில் தேடிக்கொண்டிருந்தான், அந்தக் குடிசையின் தலைவன். கைப்பிடி விளக்கின் சுடர் போதுமான வெளிச்சத்தைக் கொடுத்தாலும், அங்கிருந்த பெரிய அஃகப் பானைகள் வெளிச்சத்தை மறைத்தபடியால், குறிப்பிட்ட அந்தச் சிறிய பானையைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது அந்தக் குயவருக்கு.

அவரது அந்தத் திண்டாட்டம் ஏற்படுத் திய அனுதாபத்தின் காரணமாக அவரை வேகப்படுத்தி மேலும் சிரமப்படுத்த வேண்டாம் எனும் எண்ணத்தோடு, குடிசைக்கு வெளியே அடுக்கப்பட்டிருந்த சட்டிகளின் மீது கவனத்தைத் திருப்பினான் இளங்குமரன்.

அகட்டுப் பானை, அடிசிற் பானை, அடுக்குப் பானை, உறிப் பானை, எழுப்புப் பானை, ஓதப் பானை, ஓர்மப் பானை, ஓவியப் பானை, கஞ்சிப் பானை, கட்டப் பானை, கதிர்ப் பானை, கரகப் பானை, கழுநீர்ப் பானை... என விதவிதமாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பானைகள் அவன் ரசிப்புத் தன்மையை அதிகப்படுத்தின. மெல்லிய நிலவொளியில் ஒருவகை பானை பூதம் போல் தோன்றினால், மற்றொன்று கால்களை ஓட்டுக்குள் அடக்கிய ஆமை போல் காட்சியளித்தது.

உயரமாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குதிர்ப் பானை திருஷ்டிப் பொம்மையை நினைவூட்ட, ஓர் ஓரமாய் விலக்கிவைக்கப்பட்டிருந்த தாழிப் பானை ஏனோ மனத்தில் சலனத்தை உண்டாக்கியது. `முடிவைக் காட்டுவது அல்லவா... மனத்தின் ஆட்டத்தை அடக்கத்தான் செய்யும்’ என்று எண்ணியவாறு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

அத்துடன், விதவிதமான அந்தப் பானைகள் அவற்றைப் படைக்கும் குலத்தவரின் பெருமையையும் அவனுக்கு நினைவூட்டின.

` `கலம் செய் கோ’ எனும் அளவுக்கல்லவா இந்த மட்பாண்ட வனைஞர்கள் சிறப்பிக்கப் படுகிறார்கள். பழம்பெரும் நூல்களெல்லாம் `வேட்கோ’ என்று அழைத்துப்பாடுகின்றன என்றால், இவர்களின் சிறப்பை என்னவென்பது...’ - இவ்வாறான எண்ணவோட்டத்தில் திளைத்திருந்த இளங்குமரனின் சிந்தையைக் கலைத்தது, குடிசைக்காரரின் குரல்.

ஒருவழியாகக் குறிப்பிட்ட அந்தச் சிறிய பானையைத் தேடிப்பிடித்து எடுத்து வந்திருந்தார் அவர். அவன் முன்வந்து சிரம் தாழ்த்தி அந்தப் பானையைக் கொடுத்தார். பெற்றுக்கொண்டவன், நிலவொளியில் பானையை ஆராயத் தொடங்கினான்.

அதேநேரம், அவன் கேட்காமலேயே சிறு நாமக்கட்டி போன்ற வஸ்துவை எடுத்துவந்து அவனிடம் நீட்டினார் குயவர். அதைக் கொண்டு பானையில் குறிப்பிட்ட இடத்தில் தோய்த்தான் இளங்குமரன்.

வஸ்துவின் வெண்துகள்கள் பானையின் பரப்பில் தோய்ந்து குயவர் வரைந்திருந்த கோடுகளையும் சித்திரங்களையும் அவனுக்குக் காட்டிக்கொடுத்தன. அவற்றைக் கண்டு வியப்பின் உச்சத்துக்கே சென்றான் அந்த வீர இளைஞன். யானையின் முதுகில் மாமன்னர் வரைந்துபார்த்த அதே கோடுகள், குறிகள், சித்திரங்கள் பானையின் பரப்பிலும்!

இங்கே இப்படியென்றால், அரண்மனை மாளிகையில் தன் தந்தை மணிமுடிசோழரின் சீற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் ஏறக்குறைய தோல்வியைத் தழுவியிருந்தார், பாண்டிமாதேவியார். நிறைவில் அவர் தொடுத்த வினாவுக்கு சோழர் அளித்த பதில், சூழலை மேலும் விபரீதமாக்கியது.

ஆம்! `வளவர்கோன்’ என்றும் `செம்பியன் வளவன்’ என்றும் ஞான நூல்கள் எல்லாம் போற்றும் மணிமுடிச்சோழரை - தன் தந்தையை, பாண்டிமாதேவியார் வாள்முனையில் சிறைப் படுத்தும் அளவுக்குத் தீவிரமானது சூழல்!

- மகுடம் சூடுவோம்