மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 41

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

``சோழம் உங்களுக்கு நட்பாகவே இருக்க விரும்பியது; அடிமையாக அல்ல’’

முற்காலத்தின் முதுபெரும் புலவர் ஒருவர் பாடியதற்கேற்ப, நெல்லும் நீரும் எளிதில் கிடைப்பன எனக் கருதி, பொதியத்துச் சந்தனமும் ஆழ்கடல் முத்துக்குவியலுமான அரிய பொக்கிஷங்களையே தன்னிடத்தில் நிறைத்துக்கொண்டு மும்முரசங்களும் முழங்க திகழந்த பீடுடைய நகரமாம் மாமதுரை, அல்லங்காடிகளின் சந்தடியால் அந்த நடுநிசியிலும் விழித்திருக்க, பாண்டிமாதேவியாரும் விழித்திருந்தார் கண்சிவக்க.

பெரும் பாரத்தாலும் சோகத்தாலும் தவித்திருந்த அவரின் மனத்தைப் போன்றே, அவர் அமர்ந்திருந்த அந்தத் தூமணிமாடத்து இருள் விடை விளக்கின் சுடரும் சலனப் பட்டதுபோல், ஒரு நிலையின்றி அசைந்தாடிக் கொண்டிருந்தது. எவ்விதச் சூழலிலும் பூரண நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தேவியாரின் திருமுகம்... இப்போது சுடர் வெளிச்சத்தின் உபயத்தால் வலப்பாகத்தில் மட்டும் ஒளி பெற்று, பரமனார்தம் திருமுடியில் கொண்ட பிறைச்சந்திரனாய் பொலிந்து கொண்டிருந்தது.

sivamagudam
sivamagudam

மாடத்திலிருந்தபடி காவல் யவனர்களின் நகர்வுகளையும், அல்லங் காடிக்குச் சென்றுகொண்டிருக்கும் அயல்தேசத்து மனிதர்களையும் அவரின் கண்கள் கவனித்துக்கொண்டிருக்க, மனமோ வேறுவித சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது.

`நிச்சயம் தான் செய்தது படுபாதகம்தான். தந்தை என்பதால் அரச பரிபாலனத்தில் பாரபட்சம் காட்ட முடியாதுதான். ஆனாலும் அண்டை தேசத்தின் அரசர்... அதுவும் பாண்டியருக்கு உதவ முன்வந்த உபகாரி என்ற காரணத்தையொட்டியாவது, அவருக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்கலாம். கணப்பொழுதில் நிலை தவறிவிட்டேனே...

ஒரு தந்தையாய் எப்படி கலங்கியிருப்பார். இல்லையில்லை... மகளால் சிறைப்பட்டோமே என்று தன்பொருட்டு கலங்குபவர் அல்லர் அவர். தனக்கு ஏற்பட்ட நிலையை சோழர்குலத்துக்கே ஏற்பட்ட அவமானமாகக் கருதி மருகுவார். அந்த நிலைக்கு அவரை ஆளாக்கி பெரும் பிழை செய்துவிட்டேனே...

ஒரு கணம் தந்தையின்பொருட்டு இப்படியான சிந்தையை விதைத்து தேவியாரைப் பரிதவிக்கச் செய்த மனம், மறுகணமே அதற்கு நேர்மாறான எண்ணத்தை அவருள் எழச் செய்தது.

`நடந்துவிட்ட பிழை என் பொறுப்பல்ல. தேசத்தின் காவல்பொறுப்பில் இருக்கும் நான் அந்தச் சூழலில் அப்படிச் செய்தது சரிதான். என் நிலையிலிருந்து யோசித்தால் தந்தையார் நிச்சயம் என்னைப் புரிந்துகொள்வார்’ - இப்படி, மாறி மாறி எழுந்த முரண்பட்ட சிந்தனைகள் பாண்டிமாதேவியாரின் தூக்கத்தை மட்டுமல்ல... சித்தத் திடத்தையும் குலைக்கவே, சிந்தனை ஊற்றைத் தடுக்க யத்தனித்து விழிகளை இறுக மூடிக்கொண்டார். ஆனால், அவரின் அந்த முயற்சி பலிக்கவில்லை. மனத்திரை, தந்தையை அவர் சிறைபடுத்திய சூழலை மீண்டும் காட்சிப்படுத்தியது.

னப்புறத்தில் பாண்டியமா மன்னரிடமிருந்து நறுக்கோலை உத்தரவைப் பெற்றுக்கொண்டு மதுரை அரண்மனைக்குத் தேவியார் வந்து சேர்ந்த வேளையில், சீற்றத்துடன் காத்திருந்தார் சோழர்பிரான்.

தேவியார் அவரிடம் பரிவோடு காரணத்தை வினவ, கூன்பாண்டியரின் கட்டளைப்படி பாண்டிய சேனை ஒன்று உறையூரில் நுழைந்திருப்பதாகவும், சோழர் தலைநகர் மாளிகையொன்றை சேனைத் தலைவன் தன்வசப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், கேள்வி கேட்கும் சோழர் தரப்பினரை அவனும் பாண்டியச் சேனை வீரர்களும் உரிமையோடு மிரட்டுவதாகவும் தகவல் சொன்னார் மணிமுடிச் சோழர்.

அத்துடன், ``தாங்கள் கேட்டுக் கொண்டபடி, தங்கள் தேசத்துக்கு உதவ நான் இங்கு வந்து நிலைகொண்டிருக்கும் சூழலில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, அதற்கும் மேலாக என் அனுமதியின்றி பாண்டிய சேனை உறையூருக்குள் பிரவேசித்திருக்கிறது என்றால்... என்ன பொருள்...’’ என்று ஆவேசமாக வினா எழுப்பவும் செய்தார்.

பாண்டிமாதேவியார் திகைத்தார். `மாமன்னரின் இந்த விளையாடல் எதற்காக’ என்று அவருள் எழுந்த கேள்வி அவரை திகைக்கச் செய்தால், `தாங்கள்... தங்களுக்காக...’ என்றெல்லாம் பன்மை மொழியிலும் அந்நியப்படுத்தியும் தந்தை தன்னை விளித்துப் பேசியது, அவரது திகைப்பை மேலும் அதிகப்படுத்தியது!

ஆம்! சோழர்பிரான், தன்னை `மகள்’ என்ற நிலையில் வைத்துப் பேசாமல் பாண்டிமாதேவியாராக வைத்துப் பேசுகிறார் என்பதை தேவியாரால் புரிந்துகொள்ள முடிந்தது. எனினும், அந்தச் சூழலில் தானும் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது; அவரிடம் பாண்டிமாதேவியாராகப் பேசக் கூடாது என்று முடிவெடுத்தார்; தந்தையை ஆசுவாசப்படுத்த முயன்றார்.

``தந்தையவர்கள், கவலைகொள்ளத் தேவையில்லை. மாமன்னர் எதைச் செய்தாலும் அதற்கொரு காரணம் இருக்கும்.’’

``இருந்துவிட்டுப்போகட்டும்... ஆனால், அந்தக் காரிய காரணங்களையெல்லாம் தென்னவன் தன் எல்லையில் வைத்துக்கொள்ளட்டும்.’’

சோழர்பிரானிடமிருந்து வந்து விழுந்த கடின வார்த்தைகள் அவருக்குள் வேறுவிதமான எண்ணம் விளைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டின ஆரம்பத்திலேயே அதைக் களைந்துவிட வேண்டும். இல்லையேல் பாதிப்பு பாண்டியர்களுக்கு மட்டுமல்ல; சோழர்களுக்கும்தான் என்பதைக் கணப்பொழுதில் தீர்மானித்துக்கொண்ட தேவியார், அதுகுறித்து தந்தைக்குச் சுட்டிக்காட்டவும் விளைந்தார்.

ஆனால், ``ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள்... ஏதோ உரிமையோடு மாமன்னர்...’’ என்று ஆரம்பிப்பதற்குள் அவரை இடைமறித்து, ``ஹா... எவ்வித உரிமையும் கிடையாது...’’ என்று ஆவேசத்துடன் தன் தேகம் குலுங்க முழங்கியவர் தொடர்ந்து, ``சோழம் உங்களுக்கு நட்பாகவே இருக்க விரும்பியது; அடிமையாக அல்ல’’ என்றபடியே, தேவியாரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர முயன்றார்.

அப்போதுதான் அந்த முடிவுக்கு வந்தார் பாண்டிமாதேவியார். சூழல் என்னவென்று தெரியாமல், ஆவேசத்தில் தந்தை எவ்வித முடிவெடுத்தாலும் அது பாண்டியர் - சோழர் இருதரப்புக்கும் சாதகமாக இருக்காது என்று தீர்மானித்தவர், வேறு வழியின்றி அந்தக் காரியத்தைச் செய்தார்.

ஆம்! அதுவரையிலும் அறக் கருணை காட்டிய பாண்டிமா தேவியாரின் விழிகள் அந்நிலையில் மறக்கருணை கொள்ள, அவரின் திருக்கரமோ சட்டென்று வீரவாளை உருவி அதன் கூர்முனையை மணிமுடிச்சோழரின் மார்பில் பதித்து, அவரை அந்த இடத்திலிருந்து அசையவிடாமல் தடுத்து நிறுத்தியது!

கடமையின் பொருட்டு மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கட்டளை பிறப்பித்தார் பாண்டிமாதேவியார்... ``இவரை அரண்மனைப் புற மாளிகை யில் சிறை வையுங்கள்’’ என்று!

சட்டென்று ஏற்பட்ட சந்தடி சிந்தனையைக் கலைக்க, கண் விழித்தார் பாண்டிமாதேவியார். படபடவென சிறகடித்தபடி உள்ளே நுழைந்து உரிமையோடு தோளில் வந்து அமர்ந்தது அவரின் பிரியத்துக்குரிய பைங்கிளி. அத்துடன் `கீச் கீச்’சென்று குரலெழுப்பவும் செய்தது.

சிறிதுகணம் அதன் செய்கையைக் கூர்ந்து கவனித்தவர், அந்தக் கிள்ளைமொழியின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர் போல், எங்கோ புறப்படுவதற்கு ஆயத்தமானார்!

`கானப்பேரெயில்’ என்று பெயர்பெற்ற அந்த ஊர் மதில்சூழத் திகழ்ந்தது. மதில்புறத்தில் ஆங்காங்கே, பிற்காலத்தில் பழுதுபார்க்கப் பட்டதற்கான அடையாளங்கள் தென்பட, மதிலைச் சூழ்ந்திருந்த அகழியில் நீரின் அளவும் குறைவாகவே இருந்தது. எனில், வழக்கமாக அகழியில் உலவவிடப்பட்டிருக்கும் முதலைகளும் இந்த அகழியில் இருக்காது என்பதையும் எளிதில் கணிக்க முடிந்தது.

சிவமகுடம்
சிவமகுடம்

அந்த ஊருக்கு வரும் வழிநெடுக, ஆதவனின் ஒளி உட்புகாத வண்ணம் மரங்கள் அடர்ந்து திகழ்ந்த காட்டின் அழகையும், முற்காலச் சரித்திரத்துக்குச் சான்றாக விளங்கும் காவல் அரண்களின் கம்பீரத்தையும் ரசித்து வியந்தபடியே வந்த அந்த யாத்ரிகனுக்கு, மதில் மற்றும் அகழியின் குறைபாடு வருத்தத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். ஒருவிதத்தில் இந்தக் குறைகளுக்குக் காரணம் தன் குல மூத்தோனே என்பதை நினைக்கும்போது யாத்ரிகனின் வருத்தம் மேலும் அதிகரித்தது.

பொதிச்சுமையோடு ஊரின் தலைவாயிலில் நின்று சிந்தனைவயப் பட்டிருந்தவனை, ஊருக்குள்ளிருந்து வெளியேறிய முதியவர் ஒருவர் தன் விசாரணைக் கேள்வியால் சலனப்படுத்தினார்.

``யாரப்பா நீ. கானப்பேரில் யார் வீட்டுக்கு வந்திருக்கிறாய்...’’

யாத்ரிகன் பதில் சொன்னான்: ``நெடும்பயணம் செய்பவன் நான். இன்று இவ்வூரில் தங்கலாம் என்று திட்டம். சத்திரம் எங்கே இருக்கிறது ஐயா?’’

``ஊருக்குள் செல். காளீச்சரம் முன்னால் ஊர்க் கூட்டம் நடக்கிறது. சத்திரமும் அங்குதான் உள்ளது.’’

யாத்ரிகன் அவருக்கு நன்றிகூறிவிட்டு ஊருக்குள் நுழைந்தான். `காளீச்சரம்’ என்று முதியவர் குறிப்பிட்டது, ஊரின் சிவாலயத்தை என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. கூட்டம் நடக்கும் இடத்தை நெருங்கினான். ஊர்ச்சபை வைபவம் அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். மாமன்னரின் மெய்க்கீர்த்தியை உரக்கச் சொல்லப்பட்டது. தொடர்ந்து முன்னோர் புகழ் சொல்லும் பழம் பாடலொன்றைப் படித்தார் வயதில் முதியவர் ஒருவர். பாண்டிய தேசத்தின் மரபு அது.

அருங்குறும்பு உடுத்த கானப்பேர் எயில்

கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்புஉண் நீரினும் மீட்டதற்கு அரிதுஎன...

அவர் பாடப் பாட, மூத்தோர்கொண்டிருந்த பெரும்புகழைச் செவிமடுத்து அவன் மேனி சிலிர்த்தது; உள்ளம் உவகைக்கொண்டது.

யாத்ரிகனுக்கு மட்டுமா... `கானப்பேரெயில்’ எனும் அவ்வூரின் தற்போதைய திருப்பெயர் `காளையார்கோவில்’ என்பதை அறிந்தால், நம் உள்ளமும் சிலிர்க்கும். காரணம், மருது சகோதரர்களின் தியாகமும் வீரம் செறிந்த அந்த மண்ணின் மகிமையும்.

ஆனால், அந்த யாத்ரிகன் முதலில் வருந்திய தற்கும், பின்னர் பாடலைக் கேட்டு உவகை கொண் டதற்கும் காரணம், அவனுக்கும் முற்காலத் தில் இந்த மண்ணில் நிகழ்ந்த பெரும்போரும் அதில் அவன் முன்னோருக்குக் கிடைத்த வெற்றியும்தான்!

அப்படியான பேருவகையோடு அவன் சத்திரத்தை நாடிச் செல்லட்டும். நாம் பாண்டிமா தேவியாரைப் பின்தொடர்வோம்.

கிள்ளைமொழி ரகசியத்தின் அடிப்படையில், சுரங்கப்பாதை ஒன்றின் உள்நுழைந்து, மாலிருஞ்சோலை மலையடிவாரத்தை ஒட்டிய மண்டபத்தின் தளத்தில் வெளிப்பட்டவர், எதிரில் தென்பட்ட இரண்டு காட்சிகளைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார், பாண்டிமாதேவியார்.

ஆம்! அவர் எதைத் தேடி அங்கு வந்தாரோ, அந்தப் பொக்கிஷத்தை - தன் உயிரென அவர் கருதும் சிவமகுடத்தை மடியில் சுமந்தபடி மண்ட பத்தின் பீடத்தில் அமர்ந்திருந்தார், மாளிகைச் சிறையிலிருந்து மீண்டுவிட்ட மணிமுடிச் சோழர். அவருக்கும் பின்னால் மண்டபச் சாளரத்தில் தென்பட்ட உருவமோ, சோழபிரானின் உயிரை உறிஞ்சத் துடிப்பதுபோல், ஊதல் கணைக்கொண்டு குறி பார்த்துக் காத்திருந்தது!

- மகுடம் சூடுவோம்...