Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 42

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

முரடன் வியப்பிலிருந்து மீள்வதற்குள், வேகவேகமாக பாறைப் பிளவில் நுழைந்து மறைந்தும் போனார் மணிமுடிச்சோழர்.

ழகர் மலை. பெயருக்கேற்ப இயற்கையழகை மட்டுமன்றி இறையருளையும் தன்னுள் பொதிந்துவைத்திருக்கும் அற்புத மலை. அதனாலன்றோ சேர இளவல் இளங்கோ, தன்னுடைய பெரும் காப்பியமாம் சிலம்பின் மூலம்... `அவ்வழி படரீர் ஆயின் இடத்துச் செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும்’ எனத் தொடங்கி, இந்த மலையின் மாண்பைப் போற்றுகிறார். வாருங்கள் நாமும் சற்று அனுபவிப்போம்... மாலிருங்குன்று, திருமாலிருஞ் சோலை என்றெல்லாம் சிறப்புப் பெற்ற அழகர் மலையின் மகிமைகளை.

சிறகினை உடைய வண்டுகள் தேன் குடித்ததனால் உண்டான திளைப்பில் ஒலியெழுப்ப, அவற்றின் ரீங்காரம் நிறைந்த பொய்கைகளும் சோலைகளும் திகழும் மருத நிலத்தைக் கடந்து சென்றால், நிழல் நீங்கிய பொட்டல்கள் வரும். அவற்றையும் ஊடறுத்துப் பயணித்தால், அழகர் மலை புலப்படும் என்கிறது சிலம்பு.

சிவமகுடம்
சிவமகுடம்

இப்படியான இலக்கிய வர்ணனைகளை மனத்தில் கொண்டு, அழகர் மலைப் பயண வழி இப்படித்தான் இருக்குமென்று எதிர் பார்ப்புடன் இன்று செல்வோர், சற்றே ஏமாற்றத்துக்கு ஆளாக லாம். ஆனால், என்றுமே ஏமாற்றம் தராத பொக்கிஷங்கள் இன்றும் திகழ்கின்றன அந்த மலையில். ஆம், பேரானந்தப் பெருவடிவினரான அழகர் கோயில் கொண்டிருப்பது இங்குதான். அவரின் மருமகன் அருளும் பழமுதிர்ச்சோலையும் இங்குண்டு. அந்தக்காலத்தில் வேல்படைக் கோயிலாகத் திகழ்ந்தது. மட்டுமன்றி, நம் அகம் புறம் இரண்டின் மயக்கத்தையும் வேரறுக்கும் புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி ஆகிய இம்மலையின் பொய்கைகளைக் குறித்தும் இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. நூபுரகங்கை எனும் புண்ணியச் சிலம்பாறு இன்றும் இங்கே பொங்கிப் பிரவாகம் செய்கிறது!

இப்படியான அழகை மட்டும்தான் கொண்டதா அழகர் மலை என்று கேட்டால், `நிச்சயமாக இல்லை’ என்றே பதிலளிப்பார்கள் பாண்டிமா தேவியாரும், மணிமுடிச்சோழர் மீது விஷக்கணை தொடுக்கக் காத்திருந்த அந்த முரடனும். காரணம், இருவருக்கும் ஒருவருக்கொருவரால் பேராபத்தைச் சிருஷ்டித்துவிட்டிருந்தது காலம்.

சிவமகுடம்
சிவமகுடம்

முரடனைப் பொறுத்தவரை அவன் எதிர்பார்த்து வந்தது ஒன்று, நடந்தது வேறு. பாண்டியப் பேரரசரின் ஞானகுருவும் சதித் திட்டங்கள் தீட்டுவதில் மகா மதியூகியும், சிறந்த தீர்க்கதரிசியுமான அடிகளார் வழிகாட்டியபடியே அவன் செயற்பட்டான். `இன்னது இப்படி நடக்கும்...’ என்று யூகித்துத் திட்டம் வகுத்துக் காட்டியிருந்தார் அடிகளார்.

`வெளியே சென்றிருக்கும் பாண்டிமாதேவியார் மாளிகைக்குத் திரும்பியதும் அவருக்கும் சோழர்பிரானுக்கும் வார்த்தைப்போர் மூளும்; சோழரைப் பாண்டிமாதேவியார் மாளிகையில் சிறைவைப்பார்; அடுத்த சில நாழிகைகளில் வந்துசேரும் நம்பிதேவன் நறுக்கோலை ஒன்றை சோழர் வசம் ஒப்படைத்து அவரைத் தப்பிக்கச் செய்வான்.

நறுக்கோலை எவரிடமிருந்து எப்போது நம்பிதேவனுக்கு வந்துசேர்ந்தது என்பதை நானறிவேன். ஆனால், அந்த ஓலையிலுள்ள தகவல் என்ன என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை. ஆனால், ஒருவாறு யூகிக்க முடிகிறது. பல நாள்களாக நான் அடைய துடித்துக் கொண்டிருக்கும் பொக்கிஷம் ஒன்றின் ரகசிய இருப்பிடம் குறித்த விவரம் அந்த ஓலையில் இருக்கலாம். நீ சோழரைப் பின்தொடர்ந்து செல். என் யூகம் சரியெனில்... பொக்கிஷத்தைச் சோழர் கைப்பற்றுவார் எனில், அவரைக் கொன்று போட்டுவிட்டு பொக்கிஷத்தைக் கொண்டு வா!’

- இதுவே அடிகளார் முரடனுக்கு இட்ட கட்டளை. அப்படி அவர் கட்டளையிட்ட தருணத்தில் அவரின் மதியூகத்தையும் செயல் திட்டங்களையும் எண்ணி பெரிதும் வியந்து போனான் முரடன். `நிகழப்போகும் சம்பவங்களை இவரால் மட்டும் எப்படி முன்னதாகவே கணிக்க முடிகிறது’ என்று திகைக்கவும் செய்தான்.

ஆனால், அவனால் அதுபற்றி அவரிடம் பிரஸ்தாபிக்க இயலாது. மீறினால் கடிந்துகொள்வார் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆகவே, அவர் கட்டளையிட்டதும் வேறு கேள்விகள் கேட்காமல் களத்தில் இறங்கினான்.

அடிகளார் சொன்னதுபோலவே சோழர்பிரான் நறுக்கோலையின் வழிகாட்டுதலோடு புறப்பட்டார். வைகைப் படித்துறையை அடைந் தவர், ஒருமுறை சுற்றுமுற்றும் நோக்கினார். அவரைப் பின்தொடர்ந்த முரடன் சட்டென்று அருகிலிருந்த ஆலவிழுதின் பின்னால் மறைந்து கொண்டதை அவர் கவனிக்கவில்லை. எவரும் இல்லை என்று தீர்மானித்தவராக மெள்ள படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தார். மிகச் சரியாக ஐந்தாவது படியை அவர் அடைந்ததும், தனது இடுப்புக் கச்சையில் மறைத்து வைத்திருந்த நறுக்கோலையை எடுத்து நிலவின் வெளிச்சத்தில் ஓலைத் தகவலில் ஏதோ விவரத்தைத் தேடினார். அது கிடைத்ததும் அந்த விவரம் சொல்லும் அடை யாளம் அந்த ஐந்தாவது படியில் எங்கிருக்கிறது எனத் தேடத் தொடங்கினார்.

குறிப்பிட்ட இடத்தில் கால்களில் ஏதோ தட்டுப்பட, குனிந்துப் பார்த்தவரின் திருமுகம் மலர்ந்தது. நறுக்கோலை காட்டும் அடையாளம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். படியில் ஒரு புடைப்புச் சிற்பமாகத் திகழ்ந்த அந்தக் கமலத்தின் மீது தன் வலக்காலைப் பதித்து நன்கு அழுத்தினார். மறுகணம் `கிர்ர்... புர்ர்’ என்று ஏதோ விநோதச் சத்தம் எழுந்தது!

படித்துறையில் நின்றிருந்த சோழர்பிரான் மட்டுமல்ல, அவர் அறியாவண்ணம், விழுதுகளின் மறைவில் ஒளிந்திருந்த முரடனும் சத்தம் வந்த திசையில் நிகழ்ந்த அதிசயத்தைக் கண்டு வியப்பில் வாய்பிளந்தான்.

சிவமகுடம்
சிவமகுடம்

ஆம்! நதிக்கரை மணற்பரப்பில் பாதியளவு மண்ணில் புதைந்துகிடந்த பெரும் பாறையொன்று பிளந்துகொண்டது. நிலவின் கிரணங்கள் தாமதிக்காமல் அந்தப் பிலத்தினுள் புகுந்துவிட, அதனால் ஏற்பட்ட வெளிச்சம் அதுவொரு சுரங்கப்பாதை என்பதைப் புலப்படுத்தியது.

முரடன் வியப்பிலிருந்து மீள்வதற்குள், வேகவேகமாக பாறைப் பிளவில் நுழைந்து மறைந்தும் போனார் மணிமுடிச்சோழர். அடுத்த சில நொடிகளில் மீண்டும் அந்தச் சத்தம். பாறை பழையபடி மூடிக்கொண்டது.

முரடன் காத்திருந்தான். சுரங்கப் பாதையில் சோழர்பிரான் குறிப்பிட்ட தூரம் கடந்து சென்றபின், தான் நுழையலாம் என்று முடிவு செய்தான். கால் நாழிகைப் பொழுது கழிந்ததும் தானும் கற்கமலத்தை மிதித்து சுரங்க வாயிலைத் திறந்து உள்நுழைந்தான்.

அடுத்த சில விநாடிகளில் பாறைக் கதவுகள் மூடிக்கொள்ள சுரங்கத்தில் இருட்டு சூழ்ந்தது. ஆனால், முன்னேற்பாட்டுடன் அவன் கொண்டு வந்திருந்த சுரைக்குடுவை அவனுக்கு வெளிச்சம் காட்டியது. ஆம், சிறு சிறு துளைகளுடன் கூடிய காய்ந்த சுரைக்குடுவையில் மின்மினிப் பூச்சிகளைப் போட்டுவைத்து, அவற்றின் ஒளியால் பொலியும் குடுவையை விளக்காகப் பயன்படுத்தும் வித்தையை அடிகளார் தன் கூட்டத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்.

மெள்ள முன்னேறினான் முரடன். இப்போது அவனுக்கு முன் இரண்டு சவால்கள். சோழர் சுரங்கத்திலிருந்து வெளியேறியதும் அதன் திறப்பு வாயிலை மூடிவைத்துவிட்டால், இவன் வெளியேறுவது சிரமம். அங்கும் சுரங்கம் திறந்துகொள்ள ஏதேனும் சூட்சுமப் பொறி இருந்தால் இவன் பாடு திண்டாட்டம் அல்லவா. ஒருவேளை, சுரங்கம் திறந்திருந்து தான் அதன் வழியே வெளியேறும்போது சோழர் கவனித்துவிட்டால், நிச்சயம் அவருடன் மோத வேண்டியிருக்கும். அவரை நேருக்குநேர் எதிர்கொண்டு வெல்வது எளிதான காரியமா!

இப்படியான சிந்தனைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தவனுக்குக் காலம் உதவி செய்தது. சுரங்கத்தின் வாயில் திறந்தே இருந்தது. சுரைக் குடுவையின் திறப்பை விலக்கி உள்ளிருந்த பூச்சிகளுக்கு விடுதலை கொடுத்தான். பின்னர், குடுவையை வீசியெறிந்துவிட்டு, மிகக் கவனத் துடன் சுரங்க வாயிலை அணுக முற்பட்டான். முன்புபோலவே சில படிக்கட்டுகள் தென்பட மெள்ள ஏறி, தலையை மட்டும் உயர்த்தி வெளிப் புறச் சூழலைக் கவனித்தான். இந்த இடத்திலும் காலம் அவனைக் கைவிடவில்லை.

தகதகக்கும் மகுடம் ஒன்றைச் சுமந்தபடி களிப்பில் ஆழ்ந்திருந்தார் மணிமுடிச் சோழர். அந்த மகுடம்தான் அடிகளார் தேடிக்கொண்டிருக்கும் பொக்கிஷமாக இருக்கக்கூடும் எனும் சிந்தனை யோடு மீண்டும் சோழரைக் கவனித்தான் முரடன். அந்த மகுடத்தை ஆராயும் முனைப்பில் ஆழ்ந்திருந்த சோழர், அதன் பொருட்டு வெளிச்சம் தேடி மண்டபத்தின் வாயிலை நோக்கி நகர்ந்தார். அற்புதமான அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு சுரங்கத்திலிருந்து வெளியேறிய முரடன், பழுதடைந்து கிடந்த அந்த மண்டபச் சுவர்களின் கல் நீட்சிகளைப் பிடிகளாகப் பயன்படுத்தி ஏறி அந்தச் சாளரத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.

அதேநேரம் மீண்டும் மண்டபத்துக்குள் நுழைந்த சோழர்பிரான், மையமாக அமைந்திருந்த மேடையில் ஏறி, சாளர திசைக்கு எதிர் திசையை நோக்கியபடி அமர்ந்துகொண்டார். எவரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கப் போகிறார் என்று கணித்தான் முரடன். அப்படி எவரேனும் வருவதற்குள் சோழரின் கதையை முடித்துவிடலாம் என்று தீர்மானித்தவன், தன் இடைக்கச்சையிலிருந்த ஊதல் கணையை வெளியே எடுத்தான். வாயால் ஊதி, கொடிய விஷம் தோய்ந்த அந்தக் கணையை சோழரின் திருமேனியில் ஏவினால் போதும், மறுகணம் அவரின் உடற்கூட்டிலிருந்து உயிர்ப்பறவை விடுதலைப் பெற்றுவிடும்!

இப்படியான திட்டத்துடன் கொலைப் பாதகத்தை அவன் செயற்படுத்த முனைந்த அந்தத் தருணத்தில்தான், அவனே எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எந்தச் சுரங்கத்தின் வழியே சோழரும் முரடனும் வந்து சேர்ந்தார்களோ, அதே சுரங்கத்தின் வாயிலில் திடுமென பிரவேசித்தார் பாண்டிமாதேவியாராம் மங்கையர்க்கரசியார். அப்படி அவர் பிரவேசித்தபோது... சோழரைப் பார்த்தனவோ இல்லையோ, சாளரத்திலிருந்தபடி கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த முரடனைக் கண்டுகொண்டன தேவியாரின் விழிகள். மறுகணம் அவரிடமிருந்து பாய்ந்துவந்தது சுழற்படை. தன்னை தற்காத்துக்கொள்ள முயன்ற முரடன் நிலைதடுமாறினான். விளைவு சாளரத்தி லிருந்து பின்புறமாகச் சரிந்தான். அதேநேரம், இந்தக் களேபரத்தால் துணுக்குற்ற சோழர்பிரான் ஆவேசத்துடன் எழுந்துகொள்ள, மீண்டு வந்த சுழற்படையின் முனை அவரின் சிரத்தைத் தாக்கியது. மயங்கி விழுந்தார் சோழர்பிரான்!

விரைந்து செயற்பட்டார் பாண்டிமாதேவியார். வாயிலுக்கு விரைந்தார். வலக்கரத்தால் வாயைப் பாதி மூடிக்கொண்டபடி, விநோதமாய்க் குரலெழுப்பினார். அது, அருகிலிருக்கும் அணுக்கர்களை உதவிக்கு அழைக்கும் சமிக்ஞை. அந்தக் குரலுக்குச் சீக்கிரம் பலன் கிடைத்தது. சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் வேடவர் இருவர். தேவியாரை அடையாளம்கண்டு கொண்டவர்கள் அவரின் ஆணைப்படி சோழர்பிரானைச் சுமந்துகொண்டு அருகில் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். கரையில் கட்டப்பட்டிருந்த ஓடத்தில் சோழரைப் படுக்கவைத்தார்கள். அதற்குள் தேவியாரும் வந்துசேர, அவரும் ஓடத்தில் ஏறிக்கொண்டார். சிவமகுடம் வேடுவர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் காதோர ரகசியமாய் அவர்களுக்கு இரண்டு கட்டளைகளையும் பிறப்பித்த தேவியார், துடுப்புவலிக்க ஆரம்பித்தார்.

சோழர் இருக்கும் நிலையில் அவருக்கு ராஜ வைத்தியம் தேவை. ஆகவே, வெகு சீக்கிரம் அவரை அரண்மனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காட்டாற்றின் புதுவெள்ளம் தேவியாருக்கு உதவி செய்தது. அதன் விசையால் ஓடம் விரைந்து நகரத் தொடங்கிய சிறிது நேரத்தில், விநோத மணம் கமழ்வதை நுகர்ந்தார் தேவியார்.

கற்பூரத் தைலத்தின் மணம் அது. விபரீதம் புத்திக்கு எட்ட, அதிர்ச்சியுடன் அவர்தம் புருவம் நெறித்த நேரத்தில், அந்த ஓடத்தை நோக்கி பாய்ந்துவந்தது எரிகணை ஒன்று!

இங்கே நிலைமை இப்படியிருக்க, அங்கே கானப்பேரெயில் தலத்தில் யாத்ரிகன் மேற்கொண்ட நடவடிக்கையால், பெரும் போருக்கு அச்சாரம் இடப்பட்டது!

- மகுடம் சூடுவோம்...