மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 43

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

அடியவர் பாடி முடிக்க, கண்ணலர்ந்த தேவியார் தன் தந்தையாரின் திருமுகத்தை நோக்கினார்.

பிள்ளையின் பதிகம்!

தெற்குப்புறக் காற்றின் வலு குறைந்துவிட்டிருந்தது. அதுவரையிலும் விண்ணதிர இடி முழக்கத்தோடு கொட்டித்தீர்த்த பெருமழையைக் காற்று அந்தப் பகுதியிலிருந்து நகர்த்திவிட்டிருந்தது. ஆயினும் குளிர் குறைந்த பாடில்லை. வானின் இடிமுழக்கமும் அவ்வப்போது செவியைத் தாக்கிக்கொண்டிருந்தது. அதனால் உண்டான மிரட்சியில் மந்திகள் நிலைகொள்ளாமல் விருட்சத்துக்கு விருட்சம் தாவிக்கொண்டிருந்தன.

அந்தக் காட்சியும் சூழலும், அருகில் நின்றிருந்த அடியவரால் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணுடன் பாடப்பட்ட பதிகத்துக்கு மிகவும் பொருந்துவதாகத் தோன்றியது பாண்டிமாதேவியாருக்கு. மலையடிவாரத்தில் ஒரு பாறை நீட்சிக்குக் கீழ் தந்தையோடு அமர்ந்திருந்த தேவியார், அந்தப் பதிகத்தை மீண்டும் மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்.

அப்படியென்ன பதிகம் அது... யார் பாடியது?

இதுபற்றி சோழர்பிரான் விசாரித்தபோது திருவையாறு தலத்தில் சீர்காழிப் பிள்ளையால் பாடி அருளப்பட்டது என்று அகமகிழ்வோடு கூறிய அந்தச் சிவனடியார், இதோ இப்போது மூன்றாவது முறையாகப் பாடினார்.

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி

அறிவு அழிந்திட்டு ஐமேல் உந்தி

அலமந்தபோதாக அஞ்சேல் என்று அருள் செய்வான்

அமரும் கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர

மழை என்று அஞ்சி

சிலமந்தி அலமந்து மரம் ஏறி முகில்

பார்க்கும் திருவையாறு...

அடியவர் பாடி முடிக்க, கண்ணலர்ந்த தேவியார் தன் தந்தையாரின் திருமுகத்தை நோக்கினார். அவர் முகமும் பதிகத்தால் பொலிவுற்றுத் திகழ்ந்தது.

சிவமகுடம்
சிவமகுடம்

``தந்தையே, தங்களால் அற்புதமான இந்தப் பதிகத்தின் பொருளை உள்வாங்க முடிகிறதா?’’

``ஆம் அம்மா! பொருளின் உன்னதத்தால் உள்ளுக்குள் கசிந்துருகிக் கொண்டிருக்கிறேன்.’’

``எனில், நானறிந்ததைச் சொல்கிறேன். தவறிருந்தால் திருத்துங்கள்’’ என்றபடியே பதிகத்தின் பொருளுரைக்கத் தொடங்கினார் பாண்டிமாதேவியார்.

பெருமழை பிடிக்குமுன் ஆற்றுப்பயணத்தில் எதிர்கொண்ட ஆபத்தாலும் அதை நடத்தியவர்கள் குறித்த சிந்தனையாலும் அலைபாய்ந்துகொண்டிருந்த தேவியாரின் மனத்துக்கு, அந்தப் பதிகம் பெரும் ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும்.

அதனால் ஏற்பட்ட திருப்தியோடும் சிலிர்ப்போடும் அவர் பொருள் எடுத்துக்கூற, அவர் கூறியதை மணிமுடிச்சோழரும், அடியவரும், அவர்களைச் சூழ்ந்து நின்றிருந்த சேடியர் அணுக்கப்படையினரும் சேர்ந்துச் செவிமடுத்து இன்புற்றார்கள்.

சிவமகுடம்
சிவமகுடம்

``புலன் ஐந்தும் பொறி கலங்கி... இதுதானே தந்தையே முதல் வரி...’’

``ஆம், அம்மா!’’

``மாந்தர்களின் ஐம்புலன்கள் மெய், வாய், விழி, நாசி, செவி. இந்த ஐந்தும் நம் நிறைவு காலத்தில் இயல்பிலிருந்து மாறி மயங்கும். அப்படி அவற்றின் இயல்பும் செயலும் கெட்டுப்போக, பித்தம், வாயு, சிலேத்தும நாளங்களிலும் மாறுபாடு நேரும். விளைவு கபம் பெருக வருந்தும் நிலை ஏற்படும்.

இப்படியான நிலை உயிரை வருத்தும் அல்லவா. அப்போது `அஞ்சேல் யாமிருக் கிறோம்’ என்று நமக்குக் காவல் தருபவன் எம்பிரான். அந்த ஐயாறப்பன் குடியிருக்கும் ஊர் ஐயாறு... இது முதல் பாதி பதிகத்தின் கருத்து’’ என்று கூறி, தனது உரையைச் சற்றே நிறுத்திய தேவியார், சில நொடிப்பொழுது தாங்கள் உறைந்திருந்த அந்த இடத்தின் அழகை ரசித்தவாறு மேற்கொண்டு பேசினார்.

``ஆஹா... இரண்டாம் பாதி இந்தச் சூழலுக்கும் ஓரளவு பொருந்துகிறது. அருகில் ஒரு சிவத்தளி இருந்திருந்தால் முற்றிலும் பொருந்தியிருக்கும்.’’

``என்ன சொல்கிறீர்கள் தாயே... விளக்க மாகச் சொல்லுங்களேன் நாங்களும் அனுபவிக்கலாம் அல்லவா...’’

உரிமையோடு கேட்டுக்கொண்ட சேடியர் அணுக்கப்படையின் தலைவியான பொங்கி தேவியை ஆதுரத்துடன் அருகில் அழைத்து அமர்த்திக்கொண்டு, மீதிப் பாதியின் பொருளைச் சொல்லத் தொடங்கினார் பாண்டிமாதேவியார். ஏற்ற இறக்கத்துடன் வெகு ரசனையோடு அவர் விவரிப்பதே பாடுவதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்தது அருகிலிருந்தவர்களுக்கு.

சிவமகுடம்
சிவமகுடம்

``வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர... அதாவது, ஐயாறு கோயிலை வரும் மங்கையர்கள் திருநடனம் புரிகிறார்கள். அதற்கேற்ப முழவுகள் இசைக்கப்படுகின்றன. அந்த முழவுகளின் ஓசையை மேகங்களின் ஓசையாக இடிமுழக்கமாகக் கருதி அச்சம் அடைந்து, விருட்சங்களின் மீது ஏறிக்கொண்டு மழை வரக்கூடுமோ என்று விண்ணின் முகில் கூட்டத்தை ஆராய்கின்றனவாம் மந்திகள்... இப்படி எழிலார்ந்த அந்த நகரின் சூழலை அற்புதமாக விவரித்திருக்கிறார் தோணிப் புரத்துப் பிள்ளை.

இங்கேயும் மந்திகள் தாவித் திரிகின்றன. ஆனால், சிவத்தளி இல்லை. ஆதலால் சுற்றி நடனமிட மங்கையரும் இல்லை. முழவுகளுக் குப் பதிலாக இடியே ஓங்கி முழங்க, மந்திகள் பயத்தில் தாவித் திரிகின்றன...’’ என்று கூறிச் சிரித்தார் பாண்டிமாதேவியார் .

``அற்புதம் அம்மா... மிக அற்புதம்...’’ என்று சோழர்பிரான் குதூகலித்தார். அங்ஙனம் அவர் தம்மையுமறியாமல் எழுந்து நின்று தேகம் குலுங்க ஆர்ப்பரித்ததால், தலையின் கட்டு அசைந்தது. கட்டுத்துணியின் அசைவு கேசத்தை இழுக்க, கேசத்தின் சலனம் தேவியாரின் சுழற்படையால் உண்டான காயத்தை நெருட... மறுகணமே `ஆ...’ என்று பெருஞ் சத்தத்தோடு மீண்டும் அமர்ந்து விட்டார் சோழர்பிரான்.

சிவமகுடம்
சிவமகுடம்

பாண்டிமாதேவியார் பதறிப்போனார். ஓடோடி வந்து தந்தையின் காயத்தை ஆராயத் தலைப்பட்டார். நல்லவேளையாக தந்தையார் சுழற்படையின் பெருவிசைக்கு ஆளாகவில்லை. முரடனை நோக்கி ஏவிய சுழற்படை மீள்கையில் அதன் வேகம் குறைந்த தால் தலைதப்பியது. சிறிது பிசகியிருந்தாலும்... நினைத்துப்பார்க்கவும் இயலாத அசம்பாவிதம் அரங்கேறியிருக்கும். பெரும் பாதகத்துக்கு ஆளாகியிருப்பார் பாண்டிமா தேவியார். நல்லகாலம்... இமைப்பொழுதும் மறவாமல் அனுதினமும் அவர் வணங்கும் சொக்கநாதனும் மீனாளும் அப்படியேதும் நிகழாமல் காப்பாற்றிவிட்டார்கள். அப்போது மட்டுமா, ஆற்றுப் பயணத்தின் பேராபத்திலிருந்து இவர்கள் தப்பியதும், அந்த அம்மையப்பனின் பெருங்கருணையால் அல்லவா!

ஆம்! உயிராபத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் சுழற்படையின் தாக்குதல் மணிமுடிச்சோழரை மயக்கத்தில் தள்ளவே செய்தது. அப்போதைய சூழலில் அவரின் தேகநிலையைத் துல்லியமாகக் கணிக்க இயாலாததால், வேடர்களின் உதவியோடு முதற்கட்ட சிசுருஷையைச் செய்துமுடித்த பாண்டிமாதேவியார்,

சோழருக்கு ராஜ வைத்தியம் அவசியமாக லாம் என்று கருதினார்.

ஆகவே கார்மேகங்களால் வான் இருளும் சூழலையும் பொருட்படுத் தாமல், வெகுசீக்கிரம் தலைநகருக்குச் சென்றுவிடும் நோக்கில் காட்டாற்றில் பயணிக்கத் துணிந்தார்.

சில ரகசியக் கட்டளைகளுடன் சிவ மகுடத்தை வேடர்களிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களின் ஒத்துழைப்போடு மணிமுடிச் சோழரை ஓடத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

அந்த ஓடம் தன் பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, கற்பூரத்தின் மணம் நாசியைத் துளைக்க, `ஏதோ விபரீதம் நிகழப்போகிறது’ என்று தேவியார் தீர்மானித்த நிலையில், முதலில் ஒன்றும் அடுத்தடுத்து சரம்சரமாகவும் எங்கிருந்தோ பாய்ந்து வந்தன எரிகணைகள்.

விபரீதத்தை உணர்ந்தவர், முதல் கணையைத் தனது சுழற்படையால் தடுத்து வீழ்த்தினார். அடுத்து வந்த ஒன்றிரண்டைத் துடுப்பினால் தடுத்து நீருக்குள் அமிழ்த்தினார்.

அத்துடன் நில்லாமல், தன்னால் இயன்றளவுக்கு வெகு பிரயத்தனத்துடனும் சாதுர்யத்துடனும் ஓடத்தை அசைத்து அது ஓரிடத்தில் தேங்காதபடி அங்குமிங்குமாக அலைபாயும்படிச் செய்தார். அதன் பலனாக எரிகணைகள் இலக்குத் தவறின. ஆயினும் சில கணைகள் ஓடத்தில் வந்து விழவும் செய்தன. ஏற்கெனவே கற்பூரம் பூசப்பட்டிருந்த அந்த ஓடம், எரிகணையின் பொறிகள் பட்டு சட்டென்று தீப்பற்றிக்கொண்டது. ஒருகணம் நிலைகுலைந்துபோனார் பாண்டிமாதேவியார். ஆனால், காலமும் இயற்கையும் அவர் பக்கம் இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

ஏற்கெனவே சூழ்கொண்டு சூழ்ந்திருந்த மேகங்கள் சட்டென்று மழை பொழியத் தொடங்கின. அத்துடன் எரிகணைகள் ஏவப்பட்ட திசைக்கு நேரெதிர் திசையிலிருந்து பாய்ந்துவந்த அஸ்திரங்கள் பல, எரிகணைகளைத் தடுத்து வீழ்த்தியதுடன், அவற்றை ஏவியவர்களையும் தாக்கத் தொடங்கியிருந்தன. எதிர் தாக்குதல் நடத்தியவர்களில் வேடர்களும் சில வீராங்கனை களும் இருந்ததைக் கண்டார் பாண்டிமாதேவியார்!

அதேநேரம், சுழன்றடித்தக் காற்றுடன் பெருவிசையோடு பெய்த பெருமழையால் ஓடத்தில் பற்றியிருந்த நெருப்பு அணைந்துபோக, திடுமென வேறொரு படகு அவர்களை நோக்கி வந்தது.

அதைச் செலுத்தி வந்தவர், பாண்டிமாதேவியாரின் அன்புத் தோழியும் சேடியர் அணுக்கப் படையின் தண்டநாயகியுமான பொங்கிதேவி.

பாண்டிமாதேவியார் நடப்பதை புரிந்து கொண்டார். தக்க தருணத்தில் இறைவன் பெருமழையைப் பெய்வித்தார் எனில், மீனாட்சியம்பிகை பொங்கிதேவியின் வடிவில் வந்து துணை செய்திருக்கிறாள் என்று எண்ணி உள்ளம்கசிந்தார். அடுத்தடுத்த காரியங்கள் நல்ல படியே நிகழ்ந்தன.

எரிகணை தாக்குதல் நடத்தியோர், வந்தது போலவே மர்மமாய் மறைந்தும்போனார்கள். ஓடத்திலிருந்து படகுக்கு மாறி அவர்கள் கரைசேர்ந்தபோது மணிமுடிச்சோழரும் கண் விழித்துவிட்டார். அவருக்கு விபரீதமாக ஏதும் நிகழவில்லை; ராஜ வைத்தியமும் அவசியப் படவில்லை என்பதை அறிந்து பெரும் நிம்மதிக்கு ஆளானார் பாண்டிமாதேவியார்.

தந்தையாரின் தலைக்காயத்தை ஆராய்ந்து, காயத்தை அழுத்தாதபடி கேசத்தை விலக்கி, ஒளஷத தொகுப்பைச் சரிசெய்து, கட்டுத்துணியையும் சிறிது தளர்த்திச் சரியானபடி கட்டிமுடித்தார் பாண்டிமா தேவியார்.

இப்போது அவருக்குள் பதிக சிந்தனை மறந்து பழைய சிந்தனைகள் மீண்டும் கிளர்ந் தெழுந்தன. ஆகவே, பதிகம் பாடி மகிழ்வித்த சிவனடியாருக்குத் தகுந்த சன்மானம் வழங்க செய்து வழியனுப்பினார்.

அத்துடன், தந்தை பசியாற ஏற்பாடு செய்து விட்டு, ஏற்கெனவே தான் அமர்ந்திருந்த பாறை நீட்சியின் கீழ் வந்தமர்ந்து, சிந்தனைக் கேள்விகளுக்கு விடை தேட முனைந்தார்.

`ஓடத்தில் கற்பூரம் பூசியது எவருடைய வேலை, எரிகணை தாக்குதலுக்கு யார் காரணம், முரடனின் கொலை முயற்சி ஏன், அவனை ஏவியது யாராக இருக்கும்... சகல சதிகளுக்கும் தான் யூகித்துவைத்திருக்கும் எதிரி ஒருவர் மட்டுமே காரணமா அல்லது வேறு வேறு நபர்களா... இப்போது மாமன்னர் எங்கு இருப்பார், என்ன காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்...’

இப்படிச் சிந்தனைச் சுழலுக்குள் படிப்படி யாய் மூழ்கிக்கொண்டிருந்தவரை, காற்றின் வேகத்தில் பறந்துவந்து திருமுகத்தில் மோதிய ஓலை நறுக்கொன்றும் வனப்புறத்திலிருந்து திடுமென சீரும் சீரற்றதாயும் ஒலிக்கத் தொடங் கிய விசித்திர சத்தங்களும் துடித்தெழச் செய்தன.

அதேநேரம்... அவருக்குக் கொடுக்கவந்த ஓலையைக் காற்றில் பறக்கவிட்டதனால் ஏற்பட்ட பரிதவிப்போடு புரவியிலிருந்து தரையில் குதித்த இளைஞன், வேகவேகமாக வந்து அவரைப் பணிந்து சிரவணக்கம் செய்தான்.

அந்த ஓலை நறுக்கின் மூலம் அவன் கொண்டு வந்த செய்தி தேவியாரைத் திகைக்க வைத்தது என்றால், வனப்புறத்தில் விநோதச் சத்தம் வந்த இடத்தை ஆராயச் சென்று அங்கு அவர் கண்ட காட்சி, அவரின் வியப்பை பன்மடங்காக்கியது.

- மகுடம் சூடுவோம்...

விக்கிரக ஆராதனை!

மணரை தரிசிக்க வந்த ஒருவர், ``ஸ்வாமி, விக்கிரக ஆராதனை செய்வதை மூடநம்பிக்கை என்று சிலர் கேலி செய்கிறார்கள்... என்ன செய்வது?'' என்று வருத்தத்துடன் கேட்டார்.

இதற்கு ரமணர், ``அவர்களிடம் `விக்கிரக ஆராதனையில் என்னை மிஞ்சும் ஆசாமிகள் நீங்கள்' என்று எதிர்வாதம் செய்வதுதானே... தினமும் தங்கள் உடலைக் கழுவி, அபிஷேகம் செய்து (குளித்து), நிவேதனம் (உணவு) அளித்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து அதை அவர்கள் ஆராதிக்கவில்லையா... உடலே எல்லாவற்றையும்விட பெரிய விக்கிரகம் அல்லவா? அப்படிப் பார்த்தால்... யார்தான் விக்கிரக வழிபாடு செய்யாதவர்?'' என்று கேட்டார்.

- ஆர். பிரகாசம், கோவிலூர்

மௌனம் காத்திடுங்கள்!

`குளிக்கும்போது பேசுகிறவனது சக்தியை வருணன் அபகரிக்கிறார். ஹோம காலத்தில் பேசுகிறவனது சம்பத்துகளை அக்னி பகவான் அபகரிக்கிறார். போஜன காலத்தில் பேசுகிறவனது ஆயுளை யமன் அபகரிக்கிறார். ஆகையால், இந்த மூன்று வேளைகளிலும் மௌனம் சாதிப்பவன் பல நன்மைகள் பெறுகிறான்' - தர்மசாஸ்திரம்

- கோவை எஸ்.திருமலை.

முஸ்தாபி சூரணம்!

விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, நாள்தோறும் ‘முஸ்தாபி சூரணம்’ என்ற மகா நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது. கோரைக்கிழங்கு, சர்க்கரை, பசு நெய், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்ப் பொடி ஆகிய பொருள்களால் செய்யப்படும் இந்தப் பிரசாதம், பல நோய் களைத் தீர்க்கும் தன்மை கொண்டது!

- நெ. இராமன், சென்னை-74