Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 44

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

அழகர்மலை அடிவாரப்பகுதியில் வனப்புறப் புறச்சூழலில் அமைந்த இந்தக் காட்சி

சிவமகுடம் - பாகம் 2 - 44

அழகர்மலை அடிவாரப்பகுதியில் வனப்புறப் புறச்சூழலில் அமைந்த இந்தக் காட்சி

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ழகாக ஒரு சுனை. அதன் அருகிலேயே செழித்து வளர்ந்திருந்த மாமரத்தில் செழுமை யாகப் பழுத்துத் தொங்கின மாங்கனிகள். சற்று உன்னிப்பாகக் கவனித்தோமானால் பசுமையான இலைகளுக்கும் செங்கனிகளுக்கும் ஊடாக ஆங்காங்கே கருந்திட்டுகளைக் காண முடியும். இல்லையில்லை... தேனடைகள்தாம் அப்படித் திகழ்ந்தன.

இலைகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்... மாங்கனிச் சாறோ அல்லது தேனடை நிரம்பிப் பொழியும் தேனின் வீழ்ச்சியோ... அந்தச் சாறு மாவிலையில் விழுந்து இலையின் கூர்நுனி வழியே ஒழுகி, அருகிலுள்ள சுனையில் பூத்திருக்கும் செந்தாமரையில் விழுவதைப் பார்க்கலாம்.

சிவமகுடம்
சிவமகுடம்

அழகர்மலை அடிவாரப்பகுதியில் வனப்புறப் புறச்சூழலில் அமைந்த இந்தக் காட்சி, மற்றவர்களுக்கு எவ்விதமான கற்பனையைத் தோற்றுவிக்குமோ தெரியாது. ஆனால், சோழர்பிரானின் மனத்திரையில் அதியற்புதமான ஒரு சித்திரிப்பைத் தோற்றுவித்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆம்! சுனையில் மலர்ந்து இதழ்விரித்துத் திகழ்ந்த செந்தாமரை, வேள்வித்தீ போன்று தெரிந்தது சோழரின் மனக்கண்ணுக்கு. மாவிலையின் வழியே அந்தக் கமலத்தில் சாறு வழிந்தொழுகும் காட்சி, மாவிருட்ச வேதியர் மாவிலை மூலம் பசுநெய் ஊற்றி வேள்வி வளர்ப்பதுபோல் தோன்றியது. அற்புதமான இந்த மனச் சித்திரிப்பு பிற்காலத்தில் அருளாளர்

ஒருவருக்கும் தோன்றியிருக்கிறது. அதைப் பாடலாகவும் பதிவு செய்திருக்கிறார். அவர் இக்காட்சி வயற்புறத்தில் நிகழ்ந்ததாகச் சித்திரிக்கிறார். அந்தப் பாடல் இதுதான்...

பரந்தவிளை வயற்செய்ய பங்கயமாம் பொங்கெரியில்

வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்

நிரந்தரம்நீள் இலைக்கடையால் ஒழுதலால் நெடிதவ்வூர்

மரங்களும்ஆ குதிவேட்கும் தகையஎன மணந்துளதால்.

திருத்தொண்டர்களின் புராணத்தை அருளிய சேக்கிழாரின் பாடல்தான் இது. `பிள்ளை பாதி புராணம் பாதி’ என்பதற்கு ஏற்ப திருஞானசம்பந்தரின் பெருமையை அதிகம் சிறப்பித்த சேக்கிழார், சம்பந்தரின் திரு அவதாரம் நிகழ்ந்த சீர்காழியின் வளத்தைக் குறிப்பிடும் வகையில், மேற்காணும் கற்பனைக் காட்சியை தமது பாடலில் புகுத்தியுள்ளார்!

சிவமகுடம்
சிவமகுடம்

நம் சோழர்பிரான் இப்படியான காட்சியைத் தன் மனத்துள்ளே கண்டு சிலாகித்திருந்த வேளையில்தான், பாண்டிமாதேவியாரும் எரிகணைத் தாக்குதல், முரடனின் கொலை முயற்சி குறித்த சிந்தனைச் சுழலுக்குள் மூழ்கியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இருவருடைய சிந்தனையையும் ஏக காலத்தில் கலைத்துப்போட்டன, வனப்புறத்தின் விசித்திர சத்தங்கள். மிகச் சரியாக அந்த நேரத்தில் தான் இளைஞன்மூலம் வந்து சேர்ந்தது அந்த நறுக்கோலைத் தகவலும்!

`கருடப் பட்சி பறக்கட்டும்’ என்று ஒற்றை வரியிலான மாமன்னரின் கட்டளையைத் தாங்கி யிருந்தது அந்த நறுக்கோலை. `எனில், வடப்புறத்துக் காப்பு அரணை நிலைநிறுத்திவிட்டாரா மாமன்னர்’ என்று சிந்தித்தபடியே ஓலை கொண்டு வந்தவனை அருகில் அழைத்து, ஓலையை அவனிடமே ஒப்படைத்து, மிகச் சன்னமான குரலில் அவனுக்கு ஏதோ கட்டளையிட்டார் தேவியார்.

தலைதாழ்த்தி பணிவுடன் ஏற்றுக்கொண்டவன் அதே நிலையில் இரண்டடி பின்னால் நகர்ந்து, பிறகு ஓடோடிச் சென்று புரவியில் ஏறி அதை உசுப்பிவிட, மறுகணம் புயல்வேகத்தில் புறப்பட்ட புரவி, அடுத்த சில கணங்களில் சிறு புள்ளியாகச் சுருங்கி, பிறகு தேவியாரின் கண்ணைவிட்டும் மறைந்துபோனது. அதேநேரம், தேவியாரின் கவனம் மீண்டும் விநோதச் சத்தங்களின்மீது நிலைகொண்டது.

சீரும் சீரற்றதாயும் அந்த விசித்திர சத்தங்கள் தொடரவே, தந்தையையும் அணுக்க வீரர்களையும் அழைத்துக்கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார் பாண்டிமாதேவியார். அவர்கள், மேட்டுப்பகுதியாய்த் திகழ்ந்த குறிப்பிட்டதோர் இடத்தை அடைந்ததும் திடுமென வேறொரு சத்தம் ஒலித்தது. அது, முந்தைய விநோதச் சத்தங்களை அடக்கியது!

சிவமகுடம்
சிவமகுடம்

நடப்பதெல்லாம் விநோதமாகப்படவே தந்தையிடம் கேட்டார் பாண்டிமாதேவியார்...

``இதென்ன சத்தம் தந்தையே...’'

``எவரோ `கொக்கறை’ இசைக்கிறார்கள்!’’

``அது பண்டுமக்கள் சிலரின் இசைக் கருவியாயிற்றே. குறிப்பிட்ட வைபவங்களில் மட்டும்தானே அதை இசைப்பார்கள்... அதுவும் பாடலுடன் சேர்த்தல்லவா வாசிப்பார்கள்?!’’

``ஆம் தாயே! இரும்புக்குழல் போன்ற அந்தக் கருவியின் மேல் பகுதியில் குறுக்குவாட்டில் திகழும் கோடுகள்போன்ற வரிகளில் இரும்புக் கம்பியைக்கொண்டு உரசி இசையெழுப்பிப் பாடல் பாடுவார்கள். ஆனால் இங்கே... அந்த வாத்தியம் வேறு ஏதோ விஷயத்துக்குப் பயன்படுகிறது. எனது யூகம் சரியென்றால்... எவரோ, எவருக்கோ அந்த வாத்தியத்தின் மூலம் நம் வரவு குறித்து சங்கேத மொழியில் தகவல் கொடுக்கிறார்கள்!’’

சோழர்பிரானின் யூகம் மிகச் சரிதான். அவர்கள் மேற்கொண்டு சில அடிகள் நடப்பதற்குள் கொக்கறையின் நாதம் நின்றுபோனது. அடுத்த சில கணங்களில் கம்பும் கோடரியும் சுமந்தவாறு சிலர் ஓடிவந்து, இருவரையும் வணங்கி நின்றார்கள். அதேநேரம், பார்வைக்கெட்டும் தொலைவில் தென்பட்ட பனை விருட்சம் ஒன்றிலிருந்து விறுவிறுவென இறங்கிய மனிதன் ஒருவனும் ஓடோடி வந்து, தேவியாருக்குச் சிரவணக்கம் செய்தான். அவன் கையில் அந்தக் கொக்கறை வாத்தியம் இருந்தது.

``இங்கு என்ன நடக்கிறது?’’

அதிகாரத்தொனியில் தேவியார் கேட்கவும், பதற்றத்துக்குள்ளான குழுவின் தலைவன், நடப்பு விவரத்தைத் தெளிவாக விளக்க முனைந்தான்.

``அம்மா! அரசக்கட்டளைப்படி இந்த வனத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சில விருட்சங்களை வெட்டிக்கொண்டிருக்கிறோம். ரகசியப் பணி என்பதால் வேறு எவரேனும் எல்லையைத் தொடும்பட்சத்தில் சமிக்ஞை கொடுக்க இவனைப் பணித்திருந்தோம். அதன்படியே, உங்கள் பிரவேசத்தை எங்களுக்குக் காட்டிக்கொடுத்தான். வருவது நீங்கள் என்பதைச் சரியாகக் கவனித்திருக்கமாட்டான். அதன்பொருட்டு மன்னித்துவிடுங்கள்’’ இறைஞ்சினான் தலைவன்.

தேவியார் சகலத்தையும் சடுதியில் புரிந்து கொண்டார். `இப்போதுதான் விருட்சம் வெட்டும் பணி தொடங்கியிருக்க வேண்டும். அதனால் எழுந்த சத்தமே சிந்தையைக் கலைத்தது போலும். தொடர்ந்து இந்தக் கண்காணியின் கொக்கறை ஒலிக்க, சுதாரித்துக்கொண்டு பணியைச் சட்டென்று நிறுத்திய விருட்சம் வெட்டுவோர், என்னைக் கண்டதும் ஓடிவந்துவிட்டார்கள்...’ என்று யோசித்தவர், பாண்டிய குடிகளின் சுதாரிப்பையும் தீட்சண்யத்தையும் எண்ணி பெருமிதம் கொண்டவராய், குழுவின் தலைவனின் பதற்றத்தைப் போக்க முற்பட்டார்.

``மன்னிக்க ஒன்றுமில்லை... அவரவர் பணியைச் செவ்வனே செய்கிறீர்கள்... நன்று! நான் விருட்சம் வெட்டப்படும் இடத்தைப் பார்வையிடலாமா...’’

``தங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை தாயே!’’

அழைத்துச்சென்றான் குழுத் தலைவன். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் `நீங்கள் பணியைத் தொடரலாம்’ என்பதுபோல் தேவியார் கையசைக்க, பணி தொடர்ந்தது.

சோழர்பிரான் மகளிடம் கேட்டார், ``அம்மா! விருட்சம் வெட்டுவதிலும் கூடவா ரகசியம்...’’

``பாண்டிய தேசத்தில் எல்லாவற்றிலும் ஒரு ரகசியம் பொதிந்திருக்கும் தந்தையே. தேசத்தின் சூழல் அப்படி...’’

``அப்படியானால்...’’

``இந்தக் காரியமும் நாம் எதிர்பார்த்திருக்கும் போரின் பொருட்டுதான். கடலோடவும் பெரும் நதிகளில் நகரவும் புதுக் கலன்களை உருவாக்கத் திட்டமிடுகிறார் மாமன்னர் என்றே கருதுகிறேன்.’’

``இது வனப்புறம் அம்மா. இங்கே எப்படி...’’

``தந்தையே! தேவையான மரங்கள் மட்டும் இங்குச் சேகரிக்கப்படும். பின்னர் அவை பார வண்டிகள் மூலம் நதிதீரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெள்ள ஓட்டத்தின் மூலம் சமுத்திரத்தைச் சேரும். அங்கு காத்திருப்பவர்கள் முறைப்படி அவற்றைச் சேகரித்து கட்டுத் தளத்துக்குக் கொண்டு செல்வார்கள். அந்தக் கட்டுத்தளமும் ரகசியமான இடத்திலேயே இயங்கும் என்றே எண்ணுகிறேன்.’’

``ஆக, கடற்புரத்திலும் பாண்டியர் பலம் பெறுவது எதிரிகளுக்குத் தெரியாமலேயே நடக்கும்... அப்படித்தானே?’’

``சரியாகச் சொன்னீர்கள். முறைப்படி மொத்தமாகத் தரைவழியில் நெடும்பாதையில் எடுத்துச்சென்றால், எல்லோர் பார்வையிலும்படும். ஏன் எதற்கென்று கேள்விகள் எழும். நம் தேசமெங்கும் நீக்கமற உலவும் எதிரிகளின் ஒற்றர்கள், யூகத்தின் அடிப்படையிலாவது நடப்பதை அறிய வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என எண்ணுகிறேன்.’’

பாண்டிய மாமன்னரின் செயல்பாடுகள் சோழர்பிரானை வியக்கவைத்தன.

``தென்னகம் மிகச் சிறந்த மதியூகியைத் தலைவனாகப்

பெற்றிருக்கிறது தாயே... இனி சாளுக்கியர் குறித்தோ, அவர்களுக்கும் வடக்கேயுள் ளவர்கள் வந்துவிடுவார்கள் என்றோ எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை’’ என்று மகளின் மணவாளனை மனதாரப் பாராட்டியபடியே, விருட்சங்களை நோக்கி நகர்ந்தார்.

நாவல், வேம்பு, இலுப்பை, புன்னை போன்ற விருட்சங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தன. அதிலொன்றை நெருங்கி பார்வை யிட்டவர், அருகிலிருந்த வீரர்களை அழைத்து விருட்சத்தில் எதையோ சுட்டிக்காட்டி, ``இது வேண்டாம் ’’ என்று அறிவுறுத்தினார். அந்த விருட்சத் தண்டு விலக்கிவைக்கப்பட்டது.

``ஏன் தந்தையே இதை விலக்குகிறீர்கள்?’’

பாண்டிமாதேவியார் கேட்க, ``கண்ணடை கொண்டதம்மா. அதன் வெட்டுவாயைக் கவனித் தாயா... சுழி இருக்கிறது. பூ உருவமும் உள்ளது. ஆகவே இது கலன்கட்ட உவப்பில்லாதது’’ என்று சோழர் பதில் சொன்னார்.

தந்தையின் விருட்ச ஞானத்தையும் தங்கள் மீது அவர்கொண்ட அக்கறையையும் எண்ணி உள்ளுக்குள் உவகையும் மகிழ்வும் கொண்டார் பாண்டிமாதேவியார். அவரின் மகிழ்ச்சியை நீடிக்கவிடுவதா வேண்டாமா எனும் சிந்தனைக் குழப்பம்கொண்டதுபோல், பல விதமான சம்பவங்களை அடுத்தடுத்து நிகழ்த்தத் தொடங்கியது காலம்!

அதேநேரம்... அந்தக் காலத்துக்கே அதிபனான சிவப்பரம்பொருளின் செல்லப் பிள்ளையாம் சீர்காழிச் சிவக்கொழுந்து, திருத்தருமபுரம் எனும் ஊரில், திருநீலகண்ட யாழ்பாணர் எனும் அடியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழில் இசைக்க முடியாதவண்ணம் திருப்பதிகம் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தது.

அதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்தது!

- மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism