Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 46

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், அவரின் அருமை மனைவியார் மதங்க சூளாமணியார், அவரின் சுற்றத்தார் மற்றும் ஊரார் அனைவரும் அப்பதிகத்தைச் செவிமடுத்துச் சிந்தை மகிழ்ந்தனர்.

சிவமகுடம் - பாகம் 2 - 46

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், அவரின் அருமை மனைவியார் மதங்க சூளாமணியார், அவரின் சுற்றத்தார் மற்றும் ஊரார் அனைவரும் அப்பதிகத்தைச் செவிமடுத்துச் சிந்தை மகிழ்ந்தனர்.

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

பதிகமும் வியூகமும்!

யற்கை, காலம், வினை, விதி, கர்மம் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு திகழும் இறை எனும் சூட்சுமம் எவ்வளவு வேகத்தில் சரித்திரச் சக்கரத்தைச் சுழற்றுகிறது! விசை அதிகம்தான் என்றாலும் அதன் சில வினைப்பாடுகள் ஆழ வேரூன்றி பூவுலகில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றன. அந்த வகையில் திருத்தருமபுரம் எனும் அந்தப் புண்ணியப் பதியின் தல வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்டது, திருஞான சம்பந்தப் பெருமான் யாழ்முறி பதிகம் பாடி அருளிய சம்பவம்.

சிவமகுடம்
சிவமகுடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தங்கள் பதிகங்களாலேயே என் யாழிசைக்குப் பெருமை என்பதை, என் தாய் பிறந்த இந்த ஊருக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும். அதன் பொருட்டு இசை அளவுபடா முறையில் தாங்கள் ஒரு திருப்பதிகம் அருளல் வேண்டும். அதை நான் யாழிலிட்டு வாசித்து, அப்பதிகம் இசையில் அடங்காமையைக் காட்டி பேறு பெற வேண்டும்'' என்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் வேண்டிக்கொள்ள, சீர்காழிப் பிள்ளையும் `மாதர் மடப்பிடி' எனத் தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பாடினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், அவரின் அருமை மனைவியார் மதங்க சூளாமணியார், அவரின் சுற்றத்தார் மற்றும் ஊரார் அனைவரும் அப்பதிகத்தைச் செவிமடுத்துச் சிந்தை மகிழ்ந்தனர். தொடர்ந்து யாழ்ப்பாணர் பதிகத்துக்கு இசை கோக்க முயன்றார். இசை அடங்கவில்லை. ஊர் வியந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரோ உள்ளுக்குள் உருகினார். பிள்ளையின் பெருமையை உலகம் உணரவேண்டு மென்ற எண்ணத்தில் அவர்தான் பதிகம் பாடச் சொன்னார். ஆனாலும் அறியா மாந்தர்களின் பொருட்டு அரியமாணிக்கத்தைச் சோதிக்க நினைத்த தன் பேதமையை எண்ணி தன்னையே நொந்துகொண்டார். இனி தான் யாழிசைக்கத் தகுதியானவன் அல்லர் என்று தீர்மானித்தார். அதன் வெளிப்படாய் அந்தக் காரியத்தைச் செய்யத் துணிந்தார்.

சிவமகுடம்
சிவமகுடம்

``அனைத்துக்கும் காரணம் இந்த யாழ்தானே. இனி இதை நான் தீண்டவும் கூடாது'' என்று அரற்றியவாறு அதை உடைக்க ஓங்கினார். சம்பந்தப் பெருமான் அவரைத் தடுத்தாட்கொண்டார்.

``யாழ்ப்பாணரே எல்லையில்லா மகிமைகொண்ட எம்பெருமானின் கீர்த்தியை என் பதிகத்திலோ அல்லது உமது யாழிலோ அடக்கிவிட முடியுமா. சிந்தையில் அளவுபடாத ஒன்றை செய்கையில் அளவுபடுத்த முடியுமா... அனைத்துக்கும் எந்தை ஈசனே அல்லவா காரணம். இந்த யாழ் மட்டுமல்ல நாமும் கருவிகள்தான்.''

சீர்காழிப்பிள்ளை சொல்ல ஊர் ஆர்ப்பரித்தது. ஒட்டுமொத்த கூட்டமும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பாதத்தைப் பணிந்தது. அனைவருக்கும் சிவநாமம் ஓதி திருநீறு அளித்தார் சம்பந்தர். ஒவ்வொருவராய் வந்து பணிவுடன் அந்த மாமருந்தைப் பெற்றுச் செல்ல, வரிசையில் வந்த வெளியூரான் ஒருவனைக் கண்டதும் ஏதோ உவகை பொங்கியது சம்பந்தருக்குள். தனக்கு மிகப் பிடித்தமான ஏதோவொரு தலத்திலிருந்து அவன் வந்திருக்கிறான் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. அவனிடம் கேட்டார்.

``ஐயனே... தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?''

``வையை தீரத்திலிருந்து வருகிறேன்...''

``வைகையைச் சொல்கிறீரா...

எனில் தங்கள் ஊர் திருஆலவாயிலா?''

திருஞானசம்பந்தரின் இந்தக் கேள்விக்கு மிக அழகாய்த் தெளிவாய்ப் பதில் சொன்னான் அவன். அது பாடலாகவேபட்டது சம்பந்தருக்கு.

``ஆமாம் சாமி...

பஃறுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும்கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவனின் நாட்டிலிருந்து வருகிறேன்''

திருஞானசம்பந்தர் உள்ளபடியே உள்ளுக்குள் மகிழ்ந்தார். தன்னைப் பற்றி சொல்லுமுன் தன் நாட்டின் பெருமையை முதன்மைப்படுத்துவது பாண்டியரின் தொன்றுதொட்ட வழக்கம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவனது பதிலை உள்ளூர ரசித்தார். அவன் தொடர்ந்தான்.

``தென்னவன் திருநாட்டில் மணமேற்குடி என் ஊர். எங்களூர்த் தலைவரே தேசத்தின் முதன்மை அமைச்சரும்கூட... அவர் பெயர் குலச்சிறையார். அவரின் தூதனாய் பல இடங்களுக்குச் சென்று வருவது எனது பணி...''

சிவமகுடம்
சிவமகுடம்

அவன் சொன்ன பெயரைக் கேட்டதும் திருஞான சம்பந்தரின் திருமுகத்தில் இனம்புரியாதவொரு மலர்ச்சி. தொடர்ந்து ஆர்வத்துடன் அவனிடம் கேட்டார்...

``எப்படியிருக்கிறது தென்னாடும் தலைநகரும்... எல்லாம் சுபிட்சம்தானே?''

அவன் பதில் சொன்னான்: ``பெரும்படை நகர்கிறது ஐயா... மலை நாடு நோக்கி, பெரும் கிரெளஞ்ச பட்சி தரையில் தரை தாழ்ந்து பறப்பது போல எங்கள் படையணி நகர்ந்துகொண்டிருக் கிறது!''

பாண்டிய நாட்டில் போர்ச்சூழல் என்பதைப் புரிந்துகொண்டார் திருஞானசம்பந்தர்.

``சிவனருளால் நல்லதே நடக்கட்டும்!'' என்று அவனுக்கு ஆசிகூறி திருநீற்றுப் பிரசாதம் கொடுத்தார். பயபக்தியுடன் பெற்றுக் கொண்டான் அந்த பாண்டிய தூதன். அன்றிலிருந்து நான்கைந்து நாள் பயணத்தின் முடிவில் அவன் தன் தலைவரின் அருகிலிருந்தான்!

பாண்டிய தேசத்தின் படை பலத்தில் ஐந்தில் ஒரு பகுதி படையணியே, மேற்குமலைத் தொடர் சிகரம் ஒன்றின் அடிவாரத்தில் நிலை கொண்டிருந்தது. உரம், இறக்கைகள் (இரண்டு), மத்தியம், பிரதிக்கிரகம், பிரிட்டம், கோடி என்று ஏழு நிலைகளாக... வடபுலத்து போர் வியூகச் சாத்திரத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது படையின் அணிவகுப்பு. அதன் தோற்றம்... வானிலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்த்தோமானால் தரையில் கிரெளஞ்ச பட்சியொன்று சிறகு விரித்து அமர்ந்திருப்பது போல் இருந்தது. குலச்சிறையார், முன்னேற்பாடாக அருகிலிருந்த மலைமுகட்டில் ஏறிநின்ற பார்வையிட்டபோது, அவருக்கும் அப்படித்தான் தோன்றியது.

வியூகங்களில் பலவகையை விவரிக்கின்றன போர்ச் சாத்திர நூல்கள்.

சூசி வியூகம் என்று ஒன்று உண்டு. இதன்படி, படையணியின் முகப்பு, அஸ்திரத்தின் கூர்முனை யைப் போல திகழும். முகப்பைத் தொடர்ந்து நீண்ட தண்டத்தினைபோல அடுத்தடுத்த பிரிவுகள் சேர்ந்துகொள்ளும். அடுத்து சக்கர வியூகம். எட்டு வகையான வளைவுகளுடன் திகழ்வது இது.

சிவமகுடம் - பாகம் 2 - 46

சர்வதோபத்திரவியூகம் என்று ஒன்றைச் சொல்வார்கள். இது நான்குபுறமும் எட்டுவகை வளைவுகளுடன் அமைக்கப்படுவது. அடுத்தது சகட வியூகம். இது ஒரு சக்கரத்தைப் போன்று அமையும். இந்த வியூகத்தையே பல்சக்கரம் போன்று நிலைநிறுத்தினால் அது கோன வியூகம். இந்த வியூகத்தை உடைக்க நினைத்து எந்தப்பக்கம் சென்றாலும் கூர்முனை முகப்புடன் திகழும். நாகத்தின் வடிவிலும் வியூகம் அமைப்பார்கள். இதைச் சர்ப்ப வியூகம் என்பார்கள். போர்ச் சாத்திரங்கள் வியான வியூகம் என்று விளக்குகிறது.

இவற்றின் வரிசையில் வருவதுதான் கிரெளஞ்ச வியூகம்; மிக மிக நுட்பமானது. ஆகாயத்தில் வரிசையாய்ப் பறக்கும் கிரெளஞ்ச பறவையைப்போல நுண்ணிய கழுத்தையும், பருத்துத் திரண்ட இறக்கைகளையும் கொண்டதாய் படை வகுப்பு அமையும். இப்படியான அமைப்பிலேயே வியூகம் வகுத்திருந்தார் பாண்டிமாதேவியார்.

மாமன்னர் இருந்திருந்தாலும் இப்படித்தான் யோசித்திருப்பார். சேரனின் எல்லையை நோக்கி செல்ல யூகித்திருக்கும் பாதைகள் மிக ஆபத்தானவை. அவற்றின் வழியில் உட்புக வேண்டுமென்றால் பறவை வியூகம்தான் மிகச் சரியாக இருக்கும். மாமன்னரின் நறுக்கோலையும் `கருடப்பட்சி பறக்கட்டும்' என்றே கட்டளையிட்டிருந்தது. அதில் சிறு மாற்றம் செய்து கிரெளஞ்ச வியூகமாக்கி விட்டார் பேரரசியார். கிரெளஞ்சம் என்றால் அன்றில் பறவை.

கருட வியூகம் எனில் ஒரே பட்சிதான். கிரெளஞ்ச வியூகத்திலோ பல அன்றில் பட்சிகள் சேர்ந்து பெரும்பட்சியாக மாறிப் பறக்கும், சேரதேசத்தை நோக்கி. அதாவது, பெரும்பட்சியின் முகப்பகுதியில் ஐந்து சிறு பட்சிகளாய் ஐந்து படையணிகள் திகழும். இரண்டு இறக்கைகளாக - தலா இருபது என்ற எண்ணிக்கையில் சிறு பட்சிக் குழுக்கள் இருக்கும். உடம்பிலும் வால் இறகுப் பகுதியிலும் சேர்ந்தாற்போல ஐம்பது பட்சிகள் அதாவது ஐம்பது படையணிகள் திகழும். பட்சிகளில் ஒன்று வீழ்ந்தாலும் மற்றொன்று தாக்கும். அதேநேரம், எதிரிகள் பின்புறம் சூழ்ந்து தாக்கினால், பெரும்பட்சியின் வால்பகுதியே முகமாகவும் மாறும். அப்படியோர் அற்புத வியூகம் அமைத்திருந்தார் பாண்டிமாதேவியார்.

அந்த மலையடிவாரத்தில் கிரெளஞ்ச பட்சியின் முகப்பில் மாதண்டநாயகராக குலச்சிறையார் இருந்தார். பேரரசியாரின் கட்டளைக்காகக் காத்திருந்தது, அமைச்சரின் தலைமையிலான கிரெளஞ்சம். குலச்சிறையாரின் அருகில் அந்தத் தூதன் பணிவோடு நின்றிருந்தான்.

``இன்னும் சில நாழிகைகள் இருக்கின்றன நாம் புறப்படுவதற்கு. அதுவரையில் பேசலாம். நீ சொல்... அந்த அற்புதர் வேறென்ன அற்புதங்களெல்லாம் செய்திருக்கிறாராம்...''

திருஞானசம்பந்தரைச் சந்தித்தது குறித்தும் அவர் நிகழ்த்திய அற்புதங் களைக் குறித்தும் பேரமைச்சரிடம் விளக்கிக்கொண்டிருந்தவன், ஏற்கெனவே சம்பந்தப்பெருமான் யாழ்முறி பதிகம் பாடிய சம்பவத்தைச் சொல்லிவிட்டிருந்தான். இப்போது அவன், திருக்கொடிமாடச் செங்கன்றூர் பகுதியில் மக்களை வாட்டிவதைத்த குளிர்ச்சுரம் நீங்கும் வகையில், அவர் பதிகம் பாடியருளியது குறித்துத் தான் செவிமடுத்த திருக்கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

``பொன்னி நதியின் தென்கரைத் தலங்களைத் தரிசித்து வந்த பிள்ளை, திருக்கொடிமாட செங்குன்றத்துக்கும் சென்றாராம். அங்கிருந்தபடியே திருநணா எனும் தலத்துக்குச் சென்று திரும்பினார் பிள்ளை. அப்போது அந்தப் பகுதியில் தங்களைக் குளிர்சுரம் வாட்டி வதைப்பது குறித்து சீர்காழிப்பிள்ளையிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டார்களாம் மக்கள்.

பிள்ளையும், `இது இந்த மண்ணின் இயல்பு. இது பனிக்காலம் ஆதலால் இப்படியொரு பிணி. அது நம்மை ஒன்றும் செய்யாது' என்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறைவனைப் பணிந்து பதிகம் ஒன்றும் பாடினாராம்... தொடர்ந்து, அந்தப் பகுதியில் நிலவிய குளிர்ச்சுரம் முற்றிலும் விலகியதாம்'' என்று தூதன் சொல்லி நிறுத்த, பேரமைச்சர் அவனை நிறுத்த விடவில்லை.

``ஆஹா... அது என்ன பதிகமென்று சொல்... உனக்கு உரிய பண் தெரிந்தால் பாடவும் செய்யலாம். பிள்ளை பாடிய பதிகம் நம் அணுக்கர்களுக்கு உந்துதலாய் இருக்கும்'' என்று அவனைப் பாடத் தூண்டினார். அவனுக்கு ராகம் தாளம் அமைத்துப் பாடவெல்லாம் வராது என்பது அமைச்சருக்குத் தெரியும். ஆனாலும், பதிகத்தை அவன் உரக்கக் கூறினாலே போதும் அருகிலிருக்கும் எல்லோரும் கேட்டு மகிழ்வார்களே என்பது அவரது எண்ணம்.

தான் வைத்திருந்த துணிமுடிப்பொன்றிலிருந்து சில ஓலை நறுக்குகளை வெளியிலெடுத்த தூதன், அவற்றைக் கண்களில் பயபக்தியோடு ஒற்றிக்கொண்டு, பிறகு அதிலிருந்த வரிகளைப் பாட... இல்லையில்லை வாசிக்க ஆரம்பித்தான்.

``அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்...''

எனத் தொடங்கி, வியாழக்குறிச்சி பண்ணில் அமைந்த `திருநீலகண்டப் பதிகம்' என்று தற்காலம் வரையிலும் பெரிதும் சிறப்பிக்கப்படும் அற்புதமான அந்தப் பதிகத்தை ஏற்ற இறக்கத்துடன் அவன் வாசிக்க, கண்மூடி பரவசத்துடன் செவிமடுத்தார் குலச்சிறையார். அத்துடன் பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் முடியும்போது, தானும் தூதனுடன் சேர்ந்து `திருநீலகண்டம்... திருநீலகண்டம்...' என்று ஓதவும் அவர் தவறவில்லை.

``பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண்ட் டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர்கோனொடுங் கூடுவரே''

எனும் பலன் சொல்லும் பதிகத்தை தூதன் பாடிமுடிக்கும் தறுவாயில், முக்கிய தகவலொன்று வந்து சேர்ந்தது பேரரசியாரிடமிருந்து.

`இரண்டாம் இறகு பிரிகிறது' இதுதான் அந்தத் தகவல். குலச்சிறையார் புரிந்து கொண்டார். பட்சி வியூகத்தின் சிறு பிரிவு பாண்டிமாதேவியாரின் தலைமையில் முன்னோட்டம் காணச் செல்கிறதென்று.

ஆம்! முன்னோட்டம் காணச்சென்ற அந்தப் பிரிவின் முகப்பில் கனகம்பீர மாகத் திகழ்ந்த களிறுதான், பேரரசியாரின் கட்டளைக்கிணங்க மலைப்பாறைகளா லான அந்தப் பெருந்தடையை சிதறடித்துக் கொண்டிருந்தது!

- மகுடம் சூடுவோம்...