மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 47

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சர்ப்ப வளையம்!

அற்புதமான பதிகத்தை வெகுநேரம் செவிமடுத்துத் திளைத்திருந்த குலச்சிறையார், ஆதவன் மலைமுகடுகளில் சரியத் தொடங்கவும் தான் அமர்ந்திருந்த பாறை ஆசனத்திலிருந்து, வெகு ஆகிருதியான தன் தேகம் குலுங்க எழுந்து நின்றார். தூதுவனுக்குச் சன்மானம் அளித்து, அவனைத் தலைநகருக்குத் திரும்ப கட்டளையிட்டவர், அருகிலுள்ள சிற்றோடையில் நீராடிக் கரையேறினார்.

தொடர்ந்து இடைக்கச்சையிலிருந்து திருநீற்றுப் பையை எடுத்து கொஞ்சம் திருநீறைக் கரத்தால் எடுத்து ஐந்தெழுத்தை ஓதியபடி நெற்றியிலும் மேனியிலும் முறைப்படி அணிந்துகொண்டார். அவரை நெருங்கி `தங்களுக்கும் வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டவர்களுக்கு அவரே திருநீறு பூசிவிட்டார். அப்படி அவர் பூசிவிட்டதும் தேகத்தில் புது சக்தி பிறந்தது போல் உத்வேகம் கொண்ட அந்த வீரர்கள், மிகப்பெரிதாக ஆர்ப்பரித்தார்கள். கூடவே, பேரமைச்சர் குலச்சிறையாருக்கே உரிய விஜய சன்னதமான பஞ்சாட்சாரப் பறை - பேரிகை முழக்கமும் சேர்ந்துகொள்ள, வீரர்கள் சிவகணங்களாகவும் அந்த இடம் திருக்கயிலையாகவும் தென்பட்டது குலச்சிறையாருக்கு.

அந்தச் சூழல் அளித்த ஆனந்தமும் உத்வேகமும் அவருக்குள்ளும் ஆவேசத் துள்ளலையும் துடிப்பையும் ஏற்படுத்த, தென்னாடுடைய சிவனாரின் வாகனனாம் ரிஷபதேவரே தன்னுள் புகுந்துவிட்டதுபோல் ஆவேசம் கொண்டார். அதே ஆவேசத்துடன் ஆணையும் பிறப்பித்தார்.

விடம் பருகி வினை தீர்த்த விடை வாகனன் திருத்தாண்டவம் ஆடிக்களித்த அந்தச் சந்தியா காலத்தில், பாண்டியதேசத்தைச் சூழ்ந்திருக்கும் வினைகளும் பொடிபட வேண்டி, சேர தேசத்தின் எல்லை நோக்கி சிறகு விரித்து நகரத் தொடங்கியது, பாண்டிய தேசத்து கிரெளஞ்சம். அடுத்த சில நாழிகைகளில் கிரெளஞ்ச வியூகத்தின் வால்பகுதி இறகு மட்டும் பேரரசியார் தலைமையில் தனியே பிரிந்தது. அதுகுறித்தத் தகவல் வந்து சேர்ந்ததும் குலச்சிறையார் கிரெளஞ்சப் படையணியின் நகர்வைத் துரிதப்படுத்தினார்.

சிவமகுடம்
சிவமகுடம்

வலப்பக்க இறக்கை, திருமேனி, இடப்பக்க இறக்கை என கிரெளஞ்சம் மூன்றாகப் பிரிந்து மூன்று வழிகளில் சேரனின் எல்லையை நோக்கி நகர்ந்தன. பாண்டியர் சேனையின் உளவுப் புரவிகள் இறக்கைகளைக் கிரெளஞ்சத்தின் திருமேனியோடு தொடர்புப்படுத்திக் கொண்டிருந்தன. ஆம்! தனித்தனியே பிரிந்து விட்ட இறக்கை அணிகளுக்கும் மூலப் படைக்குமான செய்தித் தகவலை உளவுப் படையினர் பகிர்ந்துகொண்டனர்.

ஐந்து அக்குரோணி அளவுகொண்ட அந்தப் படை, இரவில் முழுவதும் நகர்ந்து சேரர் எல்லையைத் தொட்டபோது அல் நீங்கி பொழுது புலர்ந்துவிட்டிருந்தது.

அக்குரோணி என்பது அணிவகுப்பைக் குறிப்பது. களிறுகள் பத்து, தேர்கள் மூன்று, குதிரை பத்து, காலாட்படை வீரர்கள் ஆயிரம் கொண்டது ஒரு பதாதி. இப்படி 82 பதாதி அணிகள் அடங்கியது ஒரு தண்டு. இப்படி100 தண்டுகளைக் கொண்டது ஓர் அக்குரோணி என்றொரு கணக்கு உண்டு. கிரெளஞ்ச வியூகத்துடன் பேரமைச்சர் அழைத்துச் சென்ற படையணி ஐந்து அக்குரோணிகள் கொண்டதாக இருந்தது. கிரெளஞ்சத்தின் மூலத் திருமேனியில் மூன்று அக்குரோணிப் படைகள். இறக்கைகளுக்கு தலா ஓர் அக்குரோணி.

மூலத் திருமேனியைப் பிரிந்து வெவ்வேறு வழிகளில் வரும் இறக்கைகள், மூலப்படை சேரனின் எல்லையில் பாயத்தொடங்கி இரண்டு நாழிகைகளுக்குள், அவனது சர்ப்பவியூகத்தை வலது இடது இருபுறத்திலுமாக வளைத்து நெரிக்க வேண்டும். மும்முனைத் தாக்குதலில் சேரன் சிக்கிக்கொள்வான் என்பது திட்டம்.

சிவமகுடம்
சிவமகுடம்

ஆனால், நடந்தது வேறு. பேரமைச்சரின் மூலப்படை சேரனின் எல்லையைத் தொட்டதும் வந்து சேர்ந்தது அந்த விபரீதத் தகவல். ஆம்! பாண்டிய தேசத்தின் பெரும் கிரெளஞ்சம் ஒட்டுமொத்தமாய் சிக்கிக்கொண்டிருந்தது சேரனின் சர்ப்ப வளையத்துக்குள்!

குலச்சிறையாருக்கும் அவரின் படையணிக்கும் இப்படியோர் அனுபவத்தை அளித்த அந்த விடியல்... சோழ மண்டலத்தில், ஏறக்குறைய பல்லவரின் ஆதிக்கத்துக்குள் இருந்த திருநாகைக் காரோணத்தின் அருகிலுள்ள திருச்சிக்கல் என்னும் அந்தத் தலத் துக்குப் பேரானந்த விடியலாய் அமைந்தது!

ந்தச் சிவலிங்கத் திருவுருவை தரிசித்துக் கொண்டிருந்த சீர்காழிப்பிள்ளையின் உள்ளம், வெண்ணெயாக உருகித் திளைத்தது.

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் நம் ஈசனை... தாழும் அருளாளர், இருளார் மிடறர், இரவாளர், திருமார்பில் விரி நூலார், வரிதோலர், காடர், கரிகாலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில் தோடர், சரி கோவணவர், ஆவணவர்... என்று விதவிதமான திருப்பெயர்களால் போற்றிப் பாடியிருக்கிறது, கருவிலேயே திருவான அந்த ஞானப்பிள்ளை.

ஆம்! பெயரொன்றும் இல்லாதார்க்குப் பற்பல பெயர்களைச் சொல்லிப் பாடிமகிழ்ந்த சீர்காழி சிவக்கொழுந்தாம் திருஞான சம்பந்தர், இந்தத் தலத்தில் இந்த ஈசனின் திருமேனியைக் கண்டு, சிலகணம் மெய்ம்மறந்துதான் போனார்.

பாண்டிய பேரமைச்சரின் தூதன் தரிசித்தானே... அந்தத் திருத்தருமபுரத்தில் தரிசனம் முடித்து திருநள்ளாறு, திருச்சாத்த மங்கை, திருநாகைக்காரோணம் ஆகிய தலங்களை தரிசித்துப் பாடிப் பரவிக் களித்தபின், அணுக்கர்களோடு விடியல் நேரத்தில் இந்தத் தலத்தை அடைந்திருந்தார் திருஞானசம்பந்தர்.

யாத்திரையின் வழிநெடுக பல தலங்களின் மகிமைகளைக் கதையாய்ச் சொல்வதும் கேட்பதும் சம்பந்த அணுக்கர்களின் வழக்கம். அவ்வகையில் இவ்வூரின் பெருமையும் பகிரப்பட்டது.

வெண்ணெய் உகந்த சிவபிரான் எழுந்தருளிய தலம்; சப்தவிடங்கத் தலமாக இல்லையெனினும் மரகதவிடங்கராக தியாகேசர் காட்சி தரும் கோயில்; தாயைப் பணிகிற தனயனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கும் க்ஷேத்திரம்; கடல் நாகைக் காரோணத்தின் பஞ்ச குரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம் என இதன் அருமைபெருமைகளைச் சிலாகித்துச் சொன்னார்கள் அடியார்கள்.

தலத்தின் திருப்பெயருக்கும் ஒரு சிறப்பே காரணம் என்பதையும் சம்பந்தப் பெருமான் அறிந்திருந்தார். புராணம் அதை அழகாக விவரிக்கிறது.

மாமுனிகளில் ஒருவரான வசிஷ்டர் இந்தத் தலத்து சிவபெருமானைப் பூஜித்து காமதேனுவை வரமாகப் பெற்றாராம். அந்தத் தெய்வப் பசுவிடமிருந்து பாலமிர்தம் பொங்கிவர, அதிலிருந்து வெண்ணெயை எடுத்து, அந்த வெண்ணெயால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டாராம் வசிஷ்ட முனிவர்.

பூசனைகள் முறைப்படி முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தைத் தன்னோடு எடுத்துச் செல்ல முயன்றாராம் அந்தப் பெருமுனி. தனியொருவனுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுவாரா சிவப்பரம் பொருள்! சிவம் அந்த இடத்திலேயே நிலைகொண்டு அருள்புரிய திருவுளம் கொண்டது போலும். ஆகவே, முனிவரால் வெண்ணெய் லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.

அவ்வாறு சிவலிங்கம் பூமியில் சிக்கிக்கொண்டதால், ஊருக்குச் சிக்கல் என்று திருப்பெயர். இறைவனும் வெண்ணெய் நாதர் என்றே திருப்பெயர் ஏற்றுள்ளார். வெண்ணெய்ப்பிரான், வெண்ணெய்லிங்கேஸ்வரர், பால் வெண்ணெய் நாயனார் ஆகிய பெயர் களும் உண்டு இந்த இறையனாருக்கு.

சிவமகுடம்
சிவமகுடம்

இவ்வளவு மகிமைகளையும் சிந்தை யில் கோத்து சிந்தித்தபடி சீர்காழிப் பிள்ளை, வெண்ணெய் நாதரை தரிசித்ததும்...அந்தச் சதுரபீட ஆவுடையையும் அதன் மீது வெண்ணெயால் குழைக்கப் பெற்றதால் குழைவாகவே காட்சி தந்தருளும் லிங்கத் திருமேனியையும் கண்டு, தானும் மெய்ம்மறந்து உள்ளம் உருகி நின்றதில் வியப்பில்லைதான்.

ஆனாலும் சில கணமே நீடித்தது அந்த நிலை. ஞானக்குழந்தையின் பதிகத்தைப் பெறாமல் விட்டுவிடுவானா அந்தப் பரமன். ஆகவே பாட வைத்தார்; பிள்ளையும் பாடியது.

வானுலாவு மதி வந்துலவும் மதின்மாளிகை

தேனுலாவு மலர்ச்சோலை மல்குந்திகழ் சிக்கலுள்

வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமானடி

ஞானமாக நினைவார் வினையாயின நையுமே

முன்னுமாடம் மதில்மூன்றுடனே எரியாய்விழத்

துன்னுவார் வெங்கணைஒன்று செலுத்திய சோதியான்

செந்நெல் ஆகும் வயல்சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி

உன்னி நீடும் மனமே நினையாய் வினை ஓயவே...

கொவ்வைச் செவ்வாயிதழ் விரித்து, இந்தளப் பண்ணமைத்து, பிள்ளை பாடிய பதிகம், அங்கிருந்த அனைவரின் மனத்தையும் உருக வைத்தது.

``பாலுக்குள்ளே, வெண் ணெயும் நெய்யும் இருந்தாலும், பாலைப் பார்க்கும்போது, அவற்றைக் காணவா முடிகிறது. அப்படித்தான் நம் அகம் எனும் அமிர்தக்கடலிலும் அம்மையப்பன் உறைந்திருக் கிறார்கள். ஆனால், அந்த அதிசயத்தை உணராமல், நாம் ஆண்ட வனை எங்கெங்கோ தேடுகிறோம்.

இத்தலத்தில் வசிஷ்டர் செய்ததுபோல், மாமுனிவர்கள் பலரும் உள்ளக் கடலைக் கடைந்து, உள்ளிருக்கும் சிவத்தை வெளிப்படுத்தி, வெண்ணெயாக்கி வழி பட்டனர். இந்தச் சூட்சமத்தைத் திருக்கதைகளாக்கியும் அளித்திருக்கிறார்கள். அந்தக் கதைகள் சொல்லும் தத்துவங்களுக்குச் சீர்காழிப்பிள்ளையின் பதிகங்கள் பொருள் கற்பித்து, பாடம் நடத்துகின்றன. பாடத்தை மனத்தில் பதித்தால் நமக்கும் பரமனருள் நிச்சயம் கிடைக்கும்.’’

பிள்ளையின் பதிகத்தால் சிந்தை மகிழ்ந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் சிலாகித்துச் சொல்ல, அந்தக் கோயிலுக்குள் குழுமிவிட்டிருந்த ஒட்டுமொத்த ஊரும் அதை ஆமோதித்தது. பிள்ளை புன்னகைத்தது.

மீண்டும் இறையனாரின் சந்நிதியை நோக்கி சிரமேற் கரம் குவித்து, பவளவாயிதழ்களை விரித்து பிள்ளை ``திருச்சிற்றம்பலம்’’ என்று முழங்க, ஊரும் அவரைப் பின்தொடர்ந்து சொன்னது...

``திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்..!’’ என்று.

பொழுது மெள்ள மெள்ள கரைய, ஆதவன் விண்ணேறி நின்றிருந்தான். பிள்ளை அடுத்தத் தலத்துக்குப் புறப்பட்டது. அவருக்குள் விரைவில் திருப்புகலூர் செல்ல வேண்டும் என்று துடிப்பு.

காரணம், சீர்காழிப்பிள்ளைக்காக அந்தச் சீர்மிகு தலத்துக்கு வந்து காத்திருக்கிறார் அப்பர் பெருமான். காலமும் காத்திருந்தது!

இப்படி, இங்கே இந்த இருவருக்குமான சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருந்த இயற்கை, மேற்கு மலைத் தொடரையொட்டி ஓடும் சிறு நதியில், ஓர் ஓடத்தை வெகு வேகமாய்ச் செலுத்திக்கொண்டிருந்தது.

விசையுடன் துடுப்பு வலித்துக்கொண்டிருந்த ஓடக்காரன்... இல்லையில்லை... சேர தேசத்தின் அந்த உளவு வீரன், ஓடம் குறிப்பிட்ட ஓரிடத்தை அடைந்ததும் வேகத்தைக் கட்டுப்படுத்தினான். நீர்ப்பரப்பில் ஏற்பட்ட சலனம் அவன் கவனத்தை ஈர்த்தது.

ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவன் புத்திக்கு உறைத்த வேளையில், அந்த விபரீதம் நிகழ்ந்தேவிட்டது. ஆம்! திடுமென நீர்ப்பரப்பை விலக்கி மேலெழுந்த கவச உருவம் ஒன்று, விரைந்து அந்த ஓடத்தைப் பற்றி அதன் மேல் ஏறியது. அதே வேகத்தில் தன் வீரவாளை சேர உளவு வீரனின் கண்டத்தை நோக்கி வீசவும் செய்தது!

வீரனின் சிரத்தைத் துண்டாடியதோ இல்லையோ, சேரனின் சர்ப்ப வளையத்தைத் துண்டாடிவிட்டது கவச உருவம் தொடங்கிய அந்த வீரத் தாக்குதல்!

- மகுடம் சூடுவோம்...

திருப்பெயர்களும் சிறப்பும்

ந்த அத்தியாயத்தில் ஞானசம்பந்தர் பாடிப்பரவிய இறைவனின் திருப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பதிகங்களில் திகழும் அந்தத் திருப்பெயர்களுக்கான பொருள் விளக்கம் இங்கே...

தாழும் அருளாளர்: எளி வந்து அருள்பவர்

இருளார் மிடறர்: கருமையான தொண்டை கொண்டவர்

இரவாளர்: பிக்ஷை ஏற்றவர்

திருமார்பில் விரி நூலார்: ஒளி மிக்க முப்புரிநூல் அணிந்தவர்

வரிதோலர்: புலித் தோலை அணிந்தவர்.

காடர்: சுடுகாடர்

கரிகாலர்: யானைக்கு எமனானவர்

கனல் கையர்: கையில் அனல் தாங்கியவர்,

அனல் மெய்யர்: நெருப்பு போன்ற உடல் கொண்டவர்

உடல் செய்யர்: செந்நிற மேனி படைத்தவர்,

செவியில் தோடர்: தோடு அணிந்தவர்,

சரி கோவணவர்: சரிந்த கோவணம் தரித்தவர்

ஆவணவர்: பசு மீது வருபவர்

கற்பூரம் போல கலந்து போவோம்...

க்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன. தேங்காய் பேச ஆரம்பித்தது: ''நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!'' என்றது. அடுத்து வாழைப்பழம், ''நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 47

பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

- குமார், மதுராந்தகம்

படம்: மதன் சுந்தர்