மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 48

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

உடைந்தது சர்ப்ப வளையம்!

ளப்பரிய எழிலால் காண்போர் அகத்தைக் கொள்ளை கொள்ளும் செழிப்பை உடையதுதான் சேரவளநாடு.

தாயின் மடுவைக்கண்ட கன்றுகளைப்போல உற்சாகத்துடன் ஓடிவந்து முட்டி நிற்கும் மேகப்பொதிகளால் சூழ்ந்த மலைச்சிகரங் கள் ஒருபுறம் என்றால்... பூமகளின் மார்பில் தவழும் முத்தாரம் போன்று வெள்ளிச்சரமென ஆர்ப்பரித்து வீழும் அருவிகள் மறுபுறம் மனத்தை மயக்கும்.

மாலை மயங்கிவிட்டால் விண்ணில் பூத்து ஒளிவீசும் தாரகைகளோ, இயற்கைத் தாய் தன் கேசத்துக்குப் பூச்சூடிக்கொண்டதுபோல், அவளின் அழகுக்கு மெருகூட்டும். கழனிகளில் வாழை, காடுகளில் மா, மலைச்சரிவுகளில் வேர்ப்பலா என்று முக்கனிகளால் மட்டுமல்ல, வீதிகளெங்கும் தழைத்தோங்கி மணம் பரப்பும் முத்தமிழாலும் புகழ்பெற்று விளங்கியது மலை நாடு.

சிவமகுடம்
சிவமகுடம்

வீரத்திலும் சளைத்ததல்ல சேர தேசம். குறுங்கோழியூர்க்கிழார் எனும் புலவர் ஒருவர், `பைந்தும்பை மிசை அலங்கு உளைய பனைப் போழ்ச் செரீஇச் சின மாந்தர் வெறிக் குரவை ஓத நீரில் பெயர்பு பொங்க...’ எனப் பாடுகிறார். அதாவது, பொன்னால் செய்த தும்பை மாலையை அணிந்த படி, பனந்தோடு செருகிச் சினத்துடன் வீரர்கள் வெறியாடுவார்களாம். அவர்களின் அந்த ஒலி கடலொலிபோல கேட்குமாம்!

ஆனால், இந்த வீர மகாத்மியங்களையும், எழில் சிறப்புகளையும், மொழி மேன்மையையும் ரசிக்கவோ, வியக்கவோ விடாதபடி... களிறுகளும் இன்னும் பல ஆட்கொல்லி மிருகங்களும் நிறைந்த அந்த தேசத்தின் மலைக் காடுகள், யாத்ரீகர்களைப் பெரிதும் பயத்தில் ஆழ்த்திக்கலங்கடித்துவிடும். அதேநேரம், இயற்கையாகவே பெரும் ஆபத்துகளைக் கொண்ட அந்த மலைகளும் காடுகளுமே சேரனுக்குப் பெரும் காப்பாகத் திகழ்ந்தன.

ஆனால், இப்படியான சவால்களையும் ஆபத்துகளையும் சாக்காகக்கொண்டு தங்களின் லட்சியப் பயணத்தில் பின்வாங்கும் மரபினரா பாண்டியர்கள். அவர்கள் சவால்கள் எவையாயினும் அவற்றையே தங்களின் சாதனைக்குப் படிகளாக்கிக்கொள்பவர்கள் ஆயிற்றே. ஆகவே, மலைநாடு குறித்து ஒருபோதும் அவர்கள் மலைத்தது இல்லை. அதன் மீது பலமுறை படையெடுத்திருக்கிறார்கள்.

சிவமகுடம்
சிவமகுடம்

களப்பிரர் காலத்துக்குப் பிறகான - நம் கதை நிகழும் காலத்தையொட்டி, பேரரசுகளுக்கு இடையே அவரவர் ஆளுமையை நிலைப் படுத்தும் விதம் நிகழ்ந்தவை என்று, குறிப்பிட்ட சில போர்களை விவரித்துப் பேசுகிறது சரித்திரம். அவற்றில் முக்கியமானவை புள்ளலூர்ப் போர், சிம்பிகைப் போர், மணிமங்கலம் போர், வாதாபிப் பேரழிவு, நெல்வேலிப் போர் ஆகியன. இவற்றில் பெரும்பாலானவை சாளுக்கியர் - பல்லவர் - பாண்டியர் தொடர்பானவை. சேர நாட்டுடனான பாண்டியரின் மோதலை வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.'பார் அளவும் தனிச் செங்கோல் கேரளனைப் பலமுறையும் உரிமைச் சுற்றமும் மாவும் யானையும்...’ எனும் அந்தச் செப்பேடுகள் தரும் தகவல் மூலம், சேரன்மீது பாண்டிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி பலமுறை படையெடுத்துச் சென்று, அவனை அடக்கிச் செல்வத்தையும் யானைகளையும் குதிரைகளையும் கைப்பற்றினார் என்று அறியலாம்.

அவ்வகையில் திடுமென ஏற்பட்டுவிட்ட ஒரு போரையே தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார், பண்டிய மாமன்னரின் பெரும் நம்பிக்கைக்கு உரிய பேரமைச்சர் குலச்சிறையார். வடக்கே எப்போது வேண்டுமானாலும் பல்லவர்களைத் துவம்சம் செய்து, உறையூரையும் கடந்து மதுரையின் மீது பாயவும் காத்திருந்தது சாளுக்கியம். ஆகவே, மாமன்னர் வட எல்லைக்குச் சென்றுவிட்டார். பேரரசியார் தனிப்படையோடு தலைநகரில் நிலைகொண்டிருக்க வேண்டும் என்பது பேரரசரின் ஆணை.

இந்த நிலையில்தான் குலச்சிறையாரிடம் இந்தப் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தாரு லிங்கங்கள் மூலம் கிடைத்தத் தகவலுக்கேற்பவும், பேரரசியாரின் மந்திராலோசனைப்படியும்தான் கிரெளஞ்ச வியூகம் வகுத்திருந்தார் அமைச்சர்.

இரவில் புறப்பட்ட கிரெளஞ்சம், குலச்சிறையார் குறித்துசொன்ன களத்தை அடைந்தபோது பெரும் விபரீதத்தைச் சந்தித்தது. தோல்வியையே சந்தித்திராத மாவீரரான குலச்சிறையாரும் களத்தின் நிலை கண்டு ஒருகணம் திகைத்துதான் போனார்.

ஆம்! அவரின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக சேரன் ஏவியிருந்த சர்ப்பப் படையணி மிகச் சிறியதாக இருந்தது. இந்தச் சிறிய சர்ப்பத்தை நசுக்கவா இவ்வளவு பெரிய கிரெளஞ்சத்தைக் கொண்டு வந்தோம் என்று உள்ளுக்குள் அங்கலாய்த்துக்கொண்டார். அதேநேரம், மிகச் சிறந்த மதியூகியான அவரின் மனத்தில் வேறொரு சிந்தனையும் எழுந்தது. அவரை எச்சரிக்கும் விதமாக எழுந்த அந்தச் சிந்தனை உணர்த்திய தகவல் மட்டும் உண்மை எனில், அவருடைய படை பெரும் புதைக்குழிக்குள் விழுந்ததற்குச் சமம் அல்லவா!

யூகச் சிந்தனை உணர்த்திய தகவல் உண்மைதான் என்பதை நிரூபிப்பது போல் புதிய தகவலோடு வந்து சேர்ந்தான் ஓர் உளவு வீரன். சேரனின் பெரும் சர்ப்பம் தன்னிலிருந்து சிறு சர்ப்பத்தைப் பிரித்து இங்கே அனுப்பியிருக்கிறது. பெரும் சர்ப்பம், பெரியதொரு வளையமாய்க் குலச்சிறையாரின் கிரெளஞ்சத்தை வளைத்துவிட்டது என்பது தான் அவன் கொண்டுவந்த தகவல். குலச்சிறையாரின் சிந்தனையும் இப்படியோர் ஆபத்து நிகழும் என்றுதான் அவரை எச்சரித்தது.

சேரனின் பெரும் சர்ப்ப வளையத்தை உடைத்து களத்தில் பிரவேசித்திருந்தது பேரரசியாரின் படையணி!
சிவமகுடம்
சிவமகுடம்

அதுமட்டுமா? கிரெளஞ்சத்தின் திருமேனியி லிருந்து பிரிந்த இறக்கை அணிகள் மீண்டும் வந்து இணையாதபடியும், இவர்களுக்கு உதவ வாய்ப்பில்லாதபடியும் சுற்றி வளைத் திருக்கிறது சேரனின் சர்ப்பம். சிறு சர்ப்பம் மையத்திலிருந்து தாக்கும்; பெரும் சர்ப்பம் ஒரு மலைப்பாம்பினைப் போன்று கிரெளஞ்சத்தைச் சுற்றி வளைத்து நெறிக்கும். பெரும் விபரீதம்தான்!

ஒருகணம் திகைத்தார் என்றாலும் மறுகணம் வேறோர் யோசனை எழ, அதையொட்டி உளவு வீரனிடம் கேட்டார் குலச்சிறையார்.

``வீரனே! நம் நிலைமை இறக்கை அணி களுக்குத் தெரியும் அல்லவா... அவர்கள் வெளிப் புறமிருந்து பெரும் சர்ப்பத்தைத் தாக்கத் தொடங்கினால், நிலைமையைச் சமாளிக்கலாம் அல்லவா... ஒருவேளை அவர்கள் பெரும் சர்ப்ப வளையத்தை உடைக்கவும் செய்யலாம்தானே...’’ இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லுமுன் வேறொரு குரல் முந்திக்கொண்டு ஒலித்தது.

``அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது அமைச்சர் பிரானே.’’

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இளங்குமரன். வெகுவேகமாக வந்தவன், அதே வேகத்தில் படைத்தலைவரும் அமைச்சருமான குலச்சிறையாரைச் சிரவணக்கம் செய்து பணிந்ததோடு, இடிபோன்ற அந்தச் செய்தியையும் அவரின் பெருந்தலையில் இறக்கினான்.

``அந்த இரு அணிகளுக்கும் வேறொரு சவால் முளைத்துவிட்டது பேரமைச்சரே. திடுமென மலைப்புறத்திலிருந்து பாய்ந்துவந்த மர்மப் படைகள் அவர்கள் மீது மூர்க்கமாக தாக்குதல் தொடுத்திருக்கிறார்களாம். மர்மப் படையினரில் சிலர், மறைந்திருந்து தாக்குவதால், நம் வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்குவதாக தகவல்.’’

அதிர்ந்துபோய்விட்டார் குலச்சிறையார். ``தகவல் யாரிடமிருந்து வந்தது?’’

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பதில் தன் கரங்களைத் தட்டி ஓசை எழுப்பினான் இளங்குமரன். மறுகணம் கைகள் பிணைக்கப்பட்ட ஒருவனை இழுத்து வந்தார்கள் பாண்டிய மறவர்கள்.

``யார் இவன்?’’

``தன் குறித்து விவரம் சொல்ல மறுக்கிறான்...’’ - இளங்குமரன் பதில் தந்தான்.

``தன்னைப் பற்றியே சொல்லாதவன் நீ சொன்ன விவரத்தை எப்படிப் பகிர்ந்து கொண்டான்?’’

``திட்டமிட்டுப் பகிர்ந்திருக்கிறான்...’’

``புரியவில்லையே...’’

``அமைச்சர்பிரானே! பெரும் சதி நடந்திருக்கிறது. இவன் நம்மில் ஒருவன் போன்று நம் படையில் கலந்திருக்கிறான். அங்கே தாக்குதல் நடைபெறும் தகவலை வேண்டுமென்றே நம் வீரர்களிடம் பரப்பியிருக்கிறான். அதன் மூலம் `இக்கட்டான சூழலில் நாம் மாட்டிக்கொண்டு விட்டோம்’ என்ற எண்ணத்தை விதைத்து, நம் வீரர்களின் மனத்திடத்தைக் குலைக்கும் நோக்கம் இவனுடையது. அது எவ்வளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தங்களுக்குத் தெரியாதா...’’

``நம் வீரர்கள் முதலில் எப்படி இவனை நம்பினார்கள்?’’

``தங்கள் பொருட்டு தூதுப்பணியில் இருந்ததாகவும், தற்போதுதான் தகவலோடு வந்து சேர்ந்ததாகவும் சொல்லி எல்லோரையும் நம்ப வைக்க முயன்றுள்ளான்...’’

``பிறகு எப்படி சிக்கினான்?’’

``வழக்கத்துக்கு மாறான நம் வாள் சமிக்ஞை குறித்த சூட்சுமம் தெரியாததால், செய்யத் தெரியாமல் சமிக்ஞை செய்து மாட்டிக் கொண்டான்...’’

``அது சரி... இவன் சொல்வது உண்மையென்று எப்படி ஏற்பது... பொய் உரைத்திருக்கலாம் அல்லவா?’’

``இருக்காது என்பது என் யூகம். இவன் சொன்னது பொய் எனில், இந்நேரம் நம் இறக்கைப் படைகள் சர்ப்ப வளையத்தின்மீது பாய்ந்துவிட்ட தகவல் வந்து சேந்திருக்கும். ஆனால்...’’

``புரிகிறது... இருந்தாலும் இவனைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது’’ என்றவர், தானே விசாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்பதால், படை நடத்தும் பொறுப்பை இளங்குமரனிடம் ஒப்படைத்தார். பெரும் சர்ப்பம் தங்களை வளைத்து இறுக்க, இன்னும் நான்கைந்து நாழிகைகளாவது ஆகும் என்பது அவரின் கணிப்பு. அதற்குள் அந்த மர்ம மனிதனிடமிருந்து விஷயத்தை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

விளைவு... அந்தப் பெருந்திடலில் நின்றிருந்த மொட்டைப் பனைமரக் கழுவில் கட்டப்பட்டான் மர்மமனிதன். அமைச்சரின் அணுக்க வீரர்கள் செய்த அதீத உபசரிப்பின் உபயத்தால் பிராண அவஸ்தைக்கு ஆளானான் அவன். வலி தாங்காமல் அவன் தன் ரகசியத்தை உடைக்கும் எண்ணத்தோடு வாய்திறந்த வேளையில், மிகுந்த விசையுடன் எங்கிருந்தோ பாய்ந்து வந்த வேல் ஒன்று பனை மரத்தில் பாய்ந்து, அவன் முதுகைத் துளைத்து மார்பில் வெளிப்பட்டது.

நடந்த விபரீதத்தைக் கண்டு பேரமைச்சர் அதிர்ச்சியும் அயர்ச்சியும் அடைந்து நின்ற அதேவேளையில், சேரனின் பெரும் சர்ப்ப வளையத்தை உடைத்து களத்தில் பிரவேசித்திருந்தது பேரரசியாரின் படையணி!

- மகுடம் சூடுவோம்...