மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 49

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

ஆதவன் கிரணம் விரிக்க தாமரையும் மொட்டவிழ்க்கும். மலர்ந்ததும் மலரைப் பறித்து மனதார மகேசனுக்குச் சமர்ப்பணம் செய்வது அவருடைய வழக்கம்.

முருகனாரின் மகிழ்ச்சி நிறைந்த மனம்போலவே அந்த வனமும் பூத்துக் குலுங்கியது. அருணோதய காலம் வெகுவேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

மனத்தில் சிவத்தை நிரப்பியிருந்த முருகனார், தன் தோளில் சுமந்த குடலையில் சிவ பூஜைக்கான மலர்களைப் பறித்து நிரப்பிக்கொண்டிருந்தார்.

கொன்றை, ஞாழல், செண்பகம், பாதிரி ஆகிய கோட்டுப் பூக்களை விருட்சக் கிளைகளிலிருந்து இயன்றவரை பறித்துக்கொண்டார். தொடர்ந்து கொடிப்பூக்களை நாடினார். காந்தள், குருக்காட்சி ஆகியவை கிடைத்தன. அருகிலேயே தும்பை, செம்பரத்தை, செவ்வந்தி ஆகிய புதர்ப்பூக்களும் `எங்களையும் எடுத்துக்கொள்’ என்பதுபோல் மலர்ந்து சிரிக்க, ஆர்வத்துடன் கொய்து குடலையில் இட்டுக்கொண்டார். அடுத்து நீர்ப்பூ. வனத்துக்குள் இன்னும் சிறிது நடந்தால் சிறு தடாகம் ஒன்று உண்டு.

சிவமகுடம் - பாகம் 2 - 49

ஆதவன் கிரணம் விரிக்க தாமரையும் மொட்டவிழ்க்கும். மலர்ந்ததும் மலரைப் பறித்து மனதார மகேசனுக்குச் சமர்ப்பணம் செய்வது அவருடைய வழக்கம். நடையை வேகப்படுத்தினார்!

`புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்...’ என்பது திருமூலன் வாக்கு. முன்செய்த புண்ணியத்தாலேயே இப்பிறவியில் இறையனாருக்குப் பூக்களைத் தூவிப் பூசிக்கும் ஆசை உண்டாகுமாம். அவ்வகையில் முருகனார் நிறைய புண்ணியம் செய்திருக்கிறார்!

முன்னோர்கள், வழிபாட்டுச் செய்கைகளுக்குப் பொருத்தமாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். பூக்கள் முக்கியத்துவம் பெறுவதால்தான் இறைவழிபாட்டுக்குப் பூசெய் - பூசனை என்று பெயர் வைத்தார்களோ!

வழிபாட்டுக்கு மட்டுமா, அந்த இறைவனுக்கும் பூக்களைக் காரணம் காட்டி எத்தனை எத்தனை திருநாமங்களைச் சூட்டிவிட்டார்கள். கொன்றைவார் சடையன், மதமத்தஞ்சடைமுடியான், வெள்ளருக்கஞ்சடைமுடியான், தாமரைச் சைவன், செங்கழுநீர்த் தாமத்தான், தும்பைக் கண்ணியான்... இப்படி பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அம்பாளுக்கு மட்டும் என்னவாம்... செண்பகக் குழல்வாய்மொழி, பவளக்கொடி நாயகி, கொந்தார் பூங்குழலி, குரவம் கமழ்க்குழலி இப்படியான திருநாமங்கள் அவளுக்கும் உண்டு.

சிவமகுடம்
சிவமகுடம்

பூசனையில் மட்டுமல்ல, அதற்கான பூக்களைப் பறிப்பதிலும் பக்தியும் நியதியும் பிரதானம். பூக்களைப் பறிக்கும்போது கிளைகளை ஒடிப்பது, மலராத அரும்புகளைப் பறிப்பது, காம்புகளை ஒடிப்பது கூடாது. இந்த நியதிகளோடு மலர்களைப் பறித்து, ஆய்ந்து தூய்மைப்படுத்தி தூய நீரில் நனைத்தபிறகே இறைவனுக்குச் சூட்ட வேண்டும்.

முருகனாரும் அவ்வாறே செய்வார். நேரமும் வாய்ப்பும் இருந்தால் மலர்களைப் பன்னீரில் நனைத்து, வாசனைப் புகையில் காட்டிய பிறகு சிவ பூசனையில் சேர்ப்பார். மலர்களை வகைப்படுத்தி மாலையாக்கியும் சமர்ப்பிப்பார். பறித்துவந்த மலர்களை வகைப் படுத்துவார். தொடர்ந்து இண்டை, தாமம், கண்ணி, பிணையல் வகை மாலைகளாகத் தொடுத்து, எடுத்துச் சென்று அகம் மகிழ முகம் மலர, அன்றாடம் தான் வணங்கும் திருப்புகலூர் வர்த்தமானீச்சுவரருக்குச் சமர்ப்பித்து வழிபடுவார்.

திருப்புகலூர்! இதுதான் முருகனார் பிறந்த ஊர். இவ்வூரைப் பற்றி அவசியம் வாசக அன்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நன்னிலம் நாகப்பட்டினம் சாலையில் உள்ளது திருப்புகலூர். ஊரின் நடுவே பெரியளவில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோணப்பிரான் எனும் அக்னீசுவரர் ஆலயம். சுற்றிலும் அகலமும் ஆழமும் கொண்ட பெரிய அகழியுண்டு. இதையே அக்னி தீர்த்தம் என்பார்களாம். அகழியைத் தென்கிழக்கில் தூர்த்து ஆலயத்துக்குப் பாதை போடப்பட்டது. அக்னி பகவான் சிவபிரானின் சந்திரசேகர கோலத்தை தரிசித்து அருள்பெற்ற தலம். இங்குள்ள அக்னி பகவான் திருவிக்கிரகம் அற்புதக் கலைப்பொக்கிஷம்.

சிவமகுடம்
சிவமகுடம்

நம் கதை நிகழ்ந்த காலத்துக்குப் பிற்பாடு சுந்தர மூர்த்தி நாயனாரும் இங்கு வந்திருக்கிறார். அவருக்குச் செங்கல்லைப் பொன் கல்லாக்கி அருள்புரிந்தாராம் சிவபிரான். இன்றைக்கும் வீடு கட்டும் அன்பர்கள், மூன்று செங்கற்களை இந்த ஆலயத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்டு எடுத்து வந்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

இந்த அக்னீசுவரர் ஆலயத்துக்குள் ஓர் ஆலயமாகத் திகழ்கிறது, அருள்மிகு வர்த்தமானீச்சுவரர் சந்நிதி. இவருக்குத்தான் அனுதினமும் மேற்சொன்னவாறு பூக்களைச் சூட்டி மலர்ப்பணி செய்து வந்தார் முருகனார்!

பொழுது புலர்ந்தது. கீழ்வானில் ஆதவன் ஒளிக்கிரணங்களை விரித்து மலர, முருகனார் நாடிச் சென்ற தடாகத்திலும் செங்கமலப் பூக்கள் இதழ் விரித்து மலர்ந்தன. வண்டுக்கள் புகுமுன் ஐந்தெழுத்து ஓதியபடி அந்த மலர்களைப் பறித்துக் கரைசேர்ந்தார் முருகனார். அதேநேரம், வேகவேகமாய் ஓடி வந்து மகிழ்ச்சியான அந்தச் சேதியைச் சொன்னார் முருகனாரின் அணுக்கர் ஒருவர்.

``ஐயனே! விரைந்து வாரும். ஆகவேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. சீர்காழிப்பிள்ளை வெகுசீக்கிரம் திருப்புகலூர் எல்லையை அடைவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.’’

``நல்ல சேதி. சிவனே... என் சிவனே... தெய்வப் பிள்ளையைப் பார்க்க எவ்வளவு நாள்கள் காத்துக் கிடந்தேன். இன்று அருள் செய்துவிட்டாய் ஐயனே...’’ என்றபடி விண்ணோக்கி வணங்கித் தொழுதவர், பூக்குடலையை முதுகில் சுமந்தபடி அணுக்கரோடு ஓட்டமும் நடையுமாக ஊரை நோக்கி விரைந்தார். அவர் திருப்புகலூர் ஆலயம் சென்று வர்த்தமானீச்சுவரருக்குத் தினப்படி மலர்த் திருப்பணியை நிறைவேற்றிவிட்டு, இல்லம் சேர்ந்த ஆறேழு நாழிகைகளுக்கெல்லாம், ஊர் எல்லையில் விஜயபேரிகைகள் முழங்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து, பஞ்சாட்சர முழக்கத்துடன் திருஞானசம்பந்தப் பெருமானின் குழு திருப்புகலூரில் பிரவேசித்தது.

ஏறக்குறைய இதே தருணத்தில் பெரும் வெற்றிக்கான முன்னோட்ட செய்தி கிடைத்தது, பேரமைச்சர் குலச்சிறையாருக்கு.

ஆம்! பாண்டிமாதேவியார் சேரனின் பெரும் சர்ப்ப வியூகத்தை ஒருபுறத்தில் உடைத்துத் தன் படையுடன் உள்ளே பிரவேசித்து விட்டார். அத்துடன், தம்மைத் தொடர்ந்து பாண்டிய தரப்பின் ஓர் இறக்கை அணி உள்ளே வரவும் பெரும் வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டார் என்ற தகவல்தான் அது.

தகவலை அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்றார் பேரமைச்சர். `இது எப்படி சாத்திய மானது’ என்று பலவாறு சிந்தித்தும் பதில் கிடைக்கவில்லை அவருக்கு. அடுத்தடுத்து தூதர்கள் கொண்டு வந்த தகவல்கள், அவரின் வியப்பை மென்மேலும் அதிகப்படுத்தின.

பூசனையில் மட்டுமல்ல, அதற்கான பூக்களைப் பறிப்பதிலும் பக்தியும் நியதியும் பிரதானம்.

சர்ப்ப வளையத்தை உடைத்ததுடன் அரை நாழிகைப் பொழுது பாண்டிமாதேவியாரின் படையணி மறைமுகப் போர் நிகழ்த்தியது என்றும், அந்தக் குறுகிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் திசையிலிருந்த நம் இறக்கை அணி உட்புகுந்து, உடைந்த சர்ப்பம் மீண்டும் இணையாதவாறு துண்டித்துவிட்டது என்றும் விவரித்தன அந்தத் தகவல்கள்.

``எனில், மர்மப் படைகள் சில நம் இறக்கை அணிமீது பாய்ந்ததாக தகவல் வந்ததே... அந்த எதிரிகள் என்னவானார்கள். அவர்களிட மிருந்து நம் அணி மீண்டது எங்ஙனம்?’’

``தக்க தருணத்தில் சோழர்பிரான் வந்து கைகொடுத்தார். அவர்களோடு பரதவர் படையும் சேர்ந்து வந்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் மர்மப் படையினர் பின்வாங்கி விட்டார்கள். பரதவர் படையோடு சோழர் தரப்பு அவர்களைத் துரத்திச் செல்கிறது.’’

``பாண்டிமாதேவியார் இப்போது எங்கே?’’

``சில வீரர்களோடு தலைநகரம் நோக்கி நகர்கிறார்’’

தகவல் கொண்டு வந்த வீரன் இப்படிச் சொன்னதைக் கேட்டு மிகவும் திருப்தி யடைந்தார் குலச்சிறையார். `மிக அற்புதமான ஆளுமை. ஆழ்ந்த தீர்க்க தரிசனம்... பலே! தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கை. அதை முடித்து விட்டு அடுத்தப் பணி... மாமன்னர் மிக அருமையான துணையைப் பெற்றிருக் கிறார்’ என்று பாண்டிமாதேவியார் குறித்து உள்ளுக்குள் பெருமிதம் பொங்கியது. அதன் விளைவு, அவரையுமறியாமல் இதழோரம் புன்னகை அரும்பியது.

இனி, கவலையில்லை. சேரர் தரப்பு அடுத்து என்ன செய்வது குழம்பிக்கொண்டிருக்கும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவர், அடுத்தடுத்து ஆணைகள் பிறப்பித்தார். கிரெளஞ்சப் படை ஆக்ரோஷமானது.

இளங்குமரனின் தலைமையில் கிரெளஞ்சத் தின் அலகும் தன் பங்குக்குச் சேர சர்ப்பத்தை ஒருபுறத்தில் குதறிப்போட்டது அவ்வழியே இரண்டாம் இறக்கையணியும் உள்ளே புகுந்துவிட, வெகு விரைவில் சர்ப்பத்தின் பல பாகங்கள் துண்டாடப்பட்டன. பெரும் தோல்வியைப் பரிசாகச் சம்பாதித்தான் சேரன்.

பார் அளவும் தனிச் செங்கோல்

கேரளனைப் பலமுறையும்... - என்று பிற்காலச் செப்பேடுகள் சிறப்பிப்பதற்கேற்ப பாண்டி யருக்கு வெற்றி விளைந்தது அந்தக் களத்தில்.

வெற்றிச் செய்திகள் பெரும் களிப்பைத் தந்தாலும், மர்மப் படைத் தரப்பின் உளவாளிக்கு நேர்ந்த மரணம், இந்தக் கணம் வரை பெரும் நெருடலைத் தந்துகொண்டிருந்தது குலச்சிறையாருக்கு. பனையைப் பிளந்து முதுகு வழியே அவன் தேகத்தையும் துளைத்து மார்பின் வழியே கூர்முனையை நீட்டியதென்றால், அந்த வேலாயுதம் எவ்வளவு விசையுடன் வீசப் பட்டிருக்க வேண்டும்.

`குறிப்பிட்ட தூரத்திலிருந்து இவ்வளவு விசையுடன் வேல் எறிகிறார்கள் என்றால், அந்தத் திறமையும் திண்மையும் தென்பரத கண்டத்தில் ஒரு குழுவுக்கு மட்டும்தான் உண்டு. ஒருவேளை, இது அவர்களின் கைங்கர்யமாகத்தான் இருக்குமோ... அவர்கள்தான் என்றால்...’

நினைத்துப்பார்க்கவே நெஞ்சு பதறியது குலச்சிறையாருக்கு. தன் யூகமும் கணிப்பும் சரிதான் என்பதை எப்படி முடிவுசெய்வது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் வெகுநேரம் அவரின் சிந்தை குழம்பிக் கொண்டிருந்தது!

இவ்வாறான சிந்தனைக் குழப்பத்துடன் பேரமைச்சர் தங்கியிருந்த அந்தக் களத்தி லிருந்து ஏறக்குறைய ஏழு காத தூரத்தில், மலைச்சாரலின் பெரும் குகைக்குள்... அமைச்சரின் கேள்விக்கான விடையை, தனக்கே உரித்தான பாணியில் காலத்திடம் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார் அடிகளார்.

அவரின் திருக்கரத்தில் ஓர் ஓலைநறுக்கு. அருகிலிருந்த பாறைத் திண்டின்மீது மயங்கிய நிலையில் கிடந்தாள், இளநங்கை ஒருத்தி. மயக்கத்தில் இருக்கும் அவளை நாக பாஷாணத்தால் மரணதேவனிடம் ஒப்படைத்துவிடும் துடிப்புடன், சீற்றம் கொண்ட விஷ நாகத்தை ஏந்தியபடி அடிகளாரின் ஆணைக்காகக் காத்திருந்தான் முரடன் ஒருவன். பெரும் வாளுடன் மற்றொருவன்!

சேரனின் சர்ப்பத்தை வீழ்த்திய பாண்டிய தேசம், இந்தச் சர்ப்பத் தால் அழிவைச் சந்திக்குமோ என்று பதைபதைத்தபடி அவர்களின் செய்கையைக் கவனித்துக்கொண்டிருந்தது காலம்.

- மகுடம் சூடுவோம்...

சென்ற அத்தியாயங்களிலிருந்து...

மாமதுரையின் பெரும் காவல் பொறுப்பைப் பாண்டிமாதேவியாரிடம் கொடுத்த மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி, வடக்கு எல்லையைக் கண்காணிக்க நகர்ந்தார்.

உள்நாட்டில் உளவும் மறைமுக எதிரிகள் யார் என்பதை அறிவதிலும் ஆர்வம்காட்டினார். அரசியாரின் தந்தை சோழர் பிரானின் ஆதிக்கம் மதுரையில் அதிகப்படுகிறதோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. இவை குறித்த ரகசியங்களை அறிவதற்கேற்ப மறைமுகமாய்க் காய்நகர்த்தினார். அதற்கான கருவியாக தேவியாரையே அவர் பயன்படுத்தியது காலத்தின் கோலமே.

சிவமகுடம் - பாகம் 2 - 49

தந்தையையே கைது செய்யும் நிலை, சிவமகுடத்தைக் காப்பாற்றும் பொறுப்பு, ஆற்றில் எரிகணை பேராபத்து என தேவியாரின் வாழ்வில் காலம் பல விநோத சம்பவங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்க, சேர தேசத்தின் மீதான படையெடுப்பும் தொடங்கியது.

அதேநேரம், திருஞானசம்பந்தப் பெருமான் தல யாத்திரையைத் தொடங்கியிருந்தார். தருமபுரம், சிக்கல் என்று நீடித்த அவரது பயணம் குறித்த தகவல் குலச்சிறையாரை அடைந்தபோது, அவர் போர்க்களத்தில் இருந்தார்.

சேரனின் சர்ப்பவியூகத்தை அழிக்க கிரெளஞ்ச வியூகத்துடன் வந்திருந்த குலச்சிறையார், எதிரியின் சர்ப்ப வியூகத்தில் சிக்கிக்கொள்கிறார். அவருக்கு உதவத் தயாராக இருந்த பாண்டியரின் வேறு இரு படையணிகளோ, அடையாளம் காணமுடியாத மர்மக் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகின்றன. அதேநேரம், குலச்சிறையாரிடம் சிக்கிய உளவாளி ஒருவன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான்.

இத்தகைய குழப்பமான சூழலில், வீழ்வோமா வெல்வோமா என்ற முடிவு தெரியாத பதைபதைப்பில் தவித்துக்கொண்டிருக்கிறது, பாண்டியர் பெரும் சேனை!