திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 36

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

தன் மீது அவனைத் தாங்கிக்கொண்டு விண்ணின் ஜாலங்களை விதவிதமாய் அவனுக்குக்காட்டி உறங்கவைக்கும்.

வட்டப்பாறை கொடுத்த அஸ்திரம்!

திகாலையில் அடிவானில் அந்தக் காட்சியைக் கண்டதுமே கணித்துவிட்டான் இளங்குமரன், அன்றைய நாள் மழை நாளாகவே இருக்கும் என்று. அவன் கணிப்பு தவறவில்லை. வைகையைத் தாண்டுவதற்குள் தூறல் ஆரம்பித்தது.

இதைத்தான் அவனும் எதிர்பார்த்தான். மழை அவனுக்குப் பிடிக்கும். மழைபொழியும் வேளையில் வைகையில் நீராட மிகவும் பிடிக்கும். அதிலும் அவனுக்குப் பிடித்தமான அந்த வட்டப்பாறையில் ஏறிக்கொண்டு அதன்மீது விண்ணோக்கிப் படுத்தபடி மழைப்பொழிவை மார்பிலும் தன் முகத்திலுமாக வாங்கிக்கொள்வதில் பேரானந்தம் அவனுக்கு.

சிவமகுடம் - பாகம் 2 - 36

அதோ வட்டப்பாறையும் நெருங்கிவிட்டது. அவனைப் பொறுத்தவரையிலும் அந்தப் பாறை, அவனுக்குத் தாய்மடி போன்றது. துன்பச் சூழல்களால் மனம் கனக்கும் வேளையிலும், வேலைப்பளுவால் உடல் களைத்துப்போகும் தருணத்திலும் வட்டப்பாறையைத் தேடி வந்து விடுவான். பெரும்பாலும் வட்டப்பாறை, அவனை அரவணைக்கும் தருணம் முன்னிரவுப்பொழுதாகவே இருக்கும்.

தன் மீது அவனைத் தாங்கிக்கொண்டு விண்ணின் ஜாலங்களை விதவிதமாய் அவனுக்குக்காட்டி உறங்கவைக்கும். சிற்சில தருணங்களில் பாறையின் துளைகளில் காற்றுப்புகுந்து வெளிப்பட, அதனால் உண்டாகும் விநோதச் சத்தம், பாறையின் தாலாட்டாகவே படும் இளங்குமரனுக்கு. ஒருவேளை, பாறையைத் தேடி பகல்பொழுதில் செல்வான் எனில், அநேகமாக அது மழைப்பொழுதாகவே இருக்கும்!

இப்போதைய வருகை திட்ட மிட்டதல்ல; பயணத்தில் வழியில் பாறையைத் தேடிவந்துவிட்டான். வைகையின் புதுவெள்ளமும் மேனியை வருடிய குளிர்க்காற்றும் மேற்குப்புற மலைத்தொடரில் ஏற்கெனவே மாமழை ஆரம்பித்துவிட்டது என்பதை அவனுக்கு உணர்த்தின. இன்னும் சற்றுநேரத்தில் அந்த வட்டப்பாறைப் பகுதியிலும் மழை வலுத்துவிடும்.

பாறையை அணுகுவதற்குச் சிறிது தொலைவிலேயே, நதிமணலில் கால்கள் புதைய நடைபோட்டுக்கொண்டிருக்கும் தன் புரவியின் சிரமத்தைக் குறைக்க எண்ணி அதன் முதுகிலிருந்து தரையில் குதித்தவன், புரவியைத் தனியே விட்டான். புரவி மணற்பரப்பிலிருந்து சற்றே விலகி புல் பரப்பை நோக்கி நடைபோட, இளங்குமரனோ ஆர்வத் துடன் ஓடினான் பாறையை நோக்கி. நெருங்கியதும், வழக்கம்போல் அருகில் கிடக்கும் சிறு பாறைகளையே படிகளாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பெரும் பாறையின் மீது ஏறி அமர்ந்தான். தன் இடைக்கச்சை முதலானவற்றைத் தளர்த்திவிட்டுக்கொண்டவன் அப்படியே மல்லாந்து படுத்துக் கொண்டான்.

தூறலின் சிறுதுளிகள் பெருந் துளிகளாகப் பரிணமித்து அந்த இளைஞனின் வீரமுகத்தில் விழுந்து தெறித்தது. மழை குறித்த தனது கணிப்பு பலித்ததை எண்ணி தனக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டவன், அடுத்த கணிப்புக்குத் தயாரானான்.

ஆம்! திருப்பாண்டிக்கொடுமுடியிலிருந்து தொடர்ந்த அவனது பயணம் உணவு இடைவெளி தவிர, வேறு எதன்பொருட்டும் தேங்கவில்லை. தொடர்ந்து பயணித்து பாண்டிய தேசத்தின் எல்லையைத் தொட்டபோது விடியல் தொடங்கியிருந்தது. கீழ்வானில் வடக்குப்புறத்தில் உதயத்துக்கு முன்னதாக பளிச்சென்று தோன்றிய வெண்மீன் (விடிவெள்ளி - சுக்கிரக்கோள்) மழையின் வருகையை அவனுக்குக் காட்டிக்கொடுத்தது. அதையொட்டியே மழை வரும் என்று கணித்திருந்தான். அது அப்படியே பலிக்கவே, தனது வானியல் ஞானம் குறித்த பெருமிதத்தோடு இப்போது மீண்டுமொருமுறை விண்ணை நோக்கினான்.

அடிவானின் காட்சி, வான மயிலாள் தன் மேகத்தோகையைக்கொண்டு பூமகளுக்குச் சாமரம் வீசுவதுபோலிருந்தது. அந்த எழிற்கோலத்தை ரசித்த கணத்தில், அவனையும் அறியாமல் அவன் வாய்முணுமுணுத்தது முன்னோரின் பாடல் ஒன்றை.

பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை...

மேகங்கள் அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைப் பருகி, வலமாக உயர்ந்து எழுந்து, மலைகளில் தங்கி விரைந்து சென்றன... எனும் கருத்துடைய பாடல் அது. அந்தப் பாடல் குறித்தும் தன் முன்னோரின் மொழிப்புலமை குறித்தும் பெருமிதம் எழுந்தது. அதேநேரம், முகில் கூட்டத்தின் வேகமான நகர்வைக்கொண்டும் காற்றின் விசையை அறிந்தும் அவன் மனம் அடுத்தக் கணிப்பைச் சொன்னது. மழை நீடிக்காது; விட்டுவிட்டுப் பெய்யும் என்று.

சிவமகுடம் - பாகம் 2 - 36

அந்தக் கணிப்பும் மிகத் துல்லியம்தான். கால் நாழிகை மட்டுமே அவனைப் பரவசப்படுத்திய அந்தச் சூழல், சட்டென்று மாறியது. மழை நின்று காற்று வலுத்தது. அதனால் அவன் ஆடைகள் அலைபாய, வேகமாய்ப் படபடத்த மேலாடை, தன் அலங்காரச் சிறுமணிகளை இளங்குமரனின் முகத்தில் மோதவிட, பரவசத்திலிருந்து மீண்டான் அவன். சுற்றுமுற்றும் முகத்தைத் திருப்பி புறச்சூழலைக் கவனித்தவன் கண்களில், அந்தப் பாறையின் பெருந்துளையொன்றுபட்டதும், தான் தலைப்பட்டிருக்கும் பெரும்பணியின் தீவிரம் நினைவுக்கு வந்தது.

கண்களை மூடிக்கொண்டான். இப்போது அவன் மனத்திரையில் பாண்டிய மாமன்னரும், தேவியாரும், குலச்சிறையாரும், மருதனும், அவனைக் கடத்த முற்பட்ட வீரர்களும், துறவியாரும் மாறிமாறி வந்து போயினர். நிறைவில் தாரு லிங்கங்களும் மனக்கண்ணில் தோன்றிட, சட்டென்று துள்ளியெழுந்தான் இளங்குமரன்.

ஒருமுறை தலையைச் சிலுப்பிக்கொண்டவன், ஒரே தாவலில் பாறையிலிருந்து கீழே குதித்தான். இப்போது அவன் கைக்கெட்டும் உயரத்திலிருந்தது பாறையின் பெருந்துளை. ஆம்! வட்டப்பாறை, அவன் இளைப்பாறும் தாய்மடியாக மட்டுமல்ல, அவனுடைய ரகசியங்களைக் காக்கும் பெரும் பேழையாகவும் திகழ்ந்தது. மற்றவர்களுக்கு எளிதில் புலப்படாத, சற்றே உள்வாங்கித் திகழும் பாறையின் பெருந் துளைகள், இளங்குமரனால் ரகசியக் காப்பு அறைகளாகவே பயன் படுத்தப்பட்டன!

தரையில் குதித்து ஒருகணம் நிதானித்த இளங்குமரன், பிறகு தன் இடைக் கச்சையைப் பரிசோதித்தான். மிகப் பத்திரமாக இருந்தது துறவியார் ஒப்படைத்த தாரு லிங்கம்.

அடுத்த கணம், அருகில் கிடந்த பாறைத் திண்டில் ஏறி நின்றுகொண்டு, வட்டப் பாறையின் பெருந்துளைக்குள் கையைவிட்டுத் துழாவினான். அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு ஏதோவொன்று அவன் கரத்தில் தட்டுப்பட்டது. ஆர்வத்துடன் வெளியே எடுத்துப் பார்த்தவன், அதிர்ந்தான்!

அந்த வஸ்து, துறவியார் மருதனிடம் ஒப்படைத்த அஸ்திரம்; அதன் நுனியில் அதே முத்திரை!

மீண்டுமொருமுறை யத்தனித்து, பெருந் துளைக்குள் கையைவிட்டு ஆராய்ந்தவன், உள்ளே வேறு எதுவும் இல்லை என்பதை அறிந்து அயர்ந்தான். உள்ளுக்குள் தோன்றிய அதிர்ச்சியும் படபடப்பும் இன்னும் அதிகரிக்க, வேறெதுவும் செய்யத் தோன்றாமல் யோசனையில் ஆழ்ந்தான்.

`எனில், நான் இங்கு மறைத்துவைத்த - பேரமைச்சர் தந்த முதல் தாரு லிங்கம் என்னவானது... யார் எடுத்திருப்பார்கள்...’

எண்ணவோட்டம் மனதுக்குள் தொடர, கையிலிருக்கும் அஸ்திரத்தைப் பார்த்தவனுக்கு, மருதனின் நினைவு வந்தது. கோயிலில் வைத்து மருதனுக்கு வேறொரு பணியை ஒப்படைத்திருந்தார் துறவியார்; அதுவும் பாண்டிமாதேவியாரின் கட்டளைப்படியே என்றும் கூறியிருந்தார். என்ன ஏது என்பதை இளங்குமரனால் அறியமுடியவில்லை. காரணம், கட்டளையை மருதனின் செவிகளில் மட்டுமே ரகசியமாய்ச் சொன்னார் துறவியார். அங்கிருந்தபடியே தன்வழியில் பயணப்பட்டும் விட்டான் மருதன். அப்போது அதுகுறித்து இளங்குமரனுக்குள் எந்த சஞ்சலமும் எழவில்லை. பாண்டிமாதேவியாரின் கட்டளை என்பதால், ரகசியம் காக்கப்படுவதில் உரிய காரண காரியம் இருக்கும் என்று சமாதானம் அடைந்துகொண்டான்.

ஆனால், இப்போது அஸ்திரத்தைப் பார்த்ததும் சந்தேகம் உண்டானது; சஞ்சலம் எழுந்தது. மட்டுமன்றி, அவனுக்குள் ஓடிய எண்ணவோட்டம் பலதரப்பட்ட வினாக்களை எழுப்பியது.

`மருதன் இங்கு வந்திருப்பான் எனில், அவனுக்கு இடப்பட்ட கட்டளையே இதுதானா எனில், அஸ்திரத்தை ஏன் இங்கே விட்டுச் செல்ல வேண்டும்... துறவியார் கூற்றுப்படி தாரு லிங்கத்துக்கான முக்கியத்துவம் இந்த அஸ்திரத்துக்கும் உண்டே. ஆக, நிச்சயம் அவன் அஸ்திரத்தை விட்டுச்செல்ல வாய்ப்பே இல்லை. அப்படியானால்...’

பல கோணங்களில் ஆய்ந்த இளங்குமரனின் மனம், `ஒருவேளை மருதன் மீண்டும் ஆபத்துக் குள்ளாகியிருப்பானோ’ என்று எண்ணித் துணுக்குற்றது. தொடர்ந்து, `பகைவர் யாரேனும் கையில் மருதன் சிக்கியிருப்பான் எனில், இங்கிருந்த தாரு லிங்கத்தையும் நிச்சயம் அவர்களே வசப்படுத்தியிருப்பார்கள்’ என்ற முடிவுக்கு வந்தான். அக்கணத்தில் வேறு சில சிந்தனைகளும் எழுந்தன அவனுக்குள்.

‘லிங்கத்தை வசப்படுத்தியவர்கள், அஸ்திரத்தை இங்கே விட்டுச் செல்ல காரணம் என்ன? மருதன் தங்கள் வசம் இருக்கிறான் என்பதை எனக்கு அறிவிக்கவா... அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், ஒற்றை லிங்கத்தை வைத்துக்கொண்டு எவ்வித ரகசியத்தையும் அவர்கள் அறிந்துகொள்ள முடியாதே... ஒருவேளை, இரண்டாவதாக ஒரு லிங்கம் இருக்கும் ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பார்களோ...’

சிவமகுடம் - பாகம் 2 - 36

சிந்தனையின் முடிவில் இப்படியொரு கேள்வி எழவும், சட்டென்று நிமிர்ந்தான் இளங்குமரன்.

‘இரண்டாவது லிங்கம் குறித்த ரகசியத்தையும் அறிந்தவர்கள் எனில், உன்னையும் ஆபத்து சூழலாம் இளங்குமரா...’ என்று புத்தி அவனை ஆயத்தப்படுத்தவும், இளங்குமரனின் வலக்கரம் அனிச்சையாய் இடைக்கச்சையில் தொங்கும் வாள்பிடியைப் பற்ற நகர்ந்தது.

அதேநேரம்... அவன் கழுத்தில் ஏதோ உறுத்தியது.

``வீரவாளைப் பயன்படுத்த உனக்கு இப்போது அவகாசம் இல்லை இளைஞனே’’ என்றபடியே, எதிரில் வந்து குதித்தான் வீரன் ஒருவன். அவன் சகாக்களில் ஒருவனது வாள்முனைதான் இளங்குமரனின் கழுத்தை அழுத்திக்கொண்டிருந்தது. அந்த இருவருக்கும் பின்னாலும் பத்துப் பதினைந்து வீரர்கள் புரவிகள் சகிதமாய் அவனைச் சூழ்ந்துவிட்டிருந்தார்கள்.

இளங்குமரன் இப்படியோர் ஆபத்தைச் சந்தித்துக்கொண்டிருந்த வேளையில், சற்று நேரத்துக்குமுன் அவன் யாரைக் குறித்து கவலைப்பட்டானோ, அந்த மருதன் எனும் இளைஞன் பாண்டிமாதேவியாரின் திருமுன் மிகப் பணிவுடன் நின்றிருந்தான்.

அவன் குறிப்புகள் சொல்லச் சொல்ல ஏதோ சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தார், பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார். சில நாழிகைப் பொழுது நீண்ட சித்திரப்பணி முடிவுக்கு வந்ததும், தேவியார் சற்றே நகர்ந்து தான் வரைந்த சித்திரத்தைச் சுட்டிக்காட்டி மருதனிடம் கேட்டார்.

``இவர்தான் அந்தப் பாலகனா..?’’

மருதன் முகம் நிறைந்த பரவசத்தோடு கூவினான்.

``இவரேதான் அம்மா... இவரேதான்..!’’

அந்தச் சித்திரத்தில்... திருக்கரங்களில் பொற்றாளம் திகழ, கண்மூடி சிவ தியானத்தில் லயித்திருந்தது, சீர்காழிப்பிள்ளை!

- மகுடம் சூடுவோம்...