மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 50

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சந்திரனுக்கு மனோகாரகன் என்று பெயர் சூட்டியிருக்கின்றன ஜோதிடக் கிரந்தங்கள்.

பிறைசூடிய சிகரம்!

ந்த வெண் புரவியின் மேனி நிறம் விண்ணில் பொலிந்த நிலவின் கிரணங்களால் மேம்பட்டதுபோன்று, தன் வெண்மையை அதீதமாய்ப் பிரதிபலித்தது. புரவிக்கு இப்படியொரு பலனைத் தந்தது என்றால், அதன்மீது ஆரோகணித்திருந்த இளங்குமரனுக்கோ, மனத்தில் புதுவித சிந்தனை மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது வான்மதி.

சந்திரனுக்கு மனோகாரகன் என்று பெயர் சூட்டியிருக்கின்றன ஜோதிடக் கிரந்தங்கள். மற்ற கோள்கள் யாவையும் வெவ்வேறு உறுப்பு களைப் பாதித்தால், சந்திரன் மனத்தைப் பாதிப்பானாம். அதனால் அப்படியொரு பெயர் போலும்.

புலவர்களின் படைப்புகளும் மனம் மற்றும் மனத்தால் விளையும் கற்பனா சக்தியை அடிப்படையாகக் கொண்டவை என்பதாலோ என்னவோ, அவர்களும் இந்தச் சந்திரனை அதிகம் உபயோகித் திருக்கிறார்கள். நிலவு, அம்புலி, திங்கள், மதி, இந்து, சோமன், பிறை என்று சந்திரனுக்குப் பல பெயர்களைக் கொடுத்துக் கொண்டாடி யிருக்கிறார்கள் பன்மொழிப் புலவர்கள் பலரும்.

சிவமகுடம் - பாகம் 2 - 50

புராணப் பெளராணிகர்களும் சந்திரனை விட்டுவைக்கவில்லை. பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள் சந்திரனின் கதைகளை. `தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை’ என்று பெரியோர்கள் போற்றுவதற்கு ஏற்ப, தம்மைத் தொழும் அடியாரை ஈசன் காத்தருள் வதற்கு எடுத்துக்காட்டு, அவரின் திருமுடியில் தவழும் பிறை என்று கூறி, அவன் முக்கண்ணனின் அருள்பெற்ற கதையை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்களே.

மனோவேகத்தில் வெண்புரவி பாய்ந்துகொண்டிருந்தாலும் அதைச் செலுத்திக்கொண்டிருந்த இளங்குமரனின் மனவேகத்தை, தன் கட்டுக்குள் ஈர்த்து முழுமையாய் ஆக்ரமித்துக்கொண்டு விட்டான், விண்ணில் ஒளிர்ந்த சந்திரன். தனியாளாகப் பயணிக்கும் தனக்கு வழித்துணைவன் போல் சந்திரனும் தன்னோடு தொடர்வதாகப் பட்டது இளங்குமரனுக்கு.

என்ன அதிசயமோ தெரியவில்லை... பிறைச் சந்திரன்தான் என்றாலும் பயண வழியில் அவன் அதீத ஒளியை வீசிக்கொண்டிருக்க, அது அந்த முன்னிரவுப் பயணத்தில் மிக உதவியாக இருந்தது இளங் குமரனுக்கு! பேரமைச்சர் அடிக்கடி சொல்லும் சந்திரக் கதையை மனத்தில் அசைபோட்டபடி பயணத்தைத் தொடர்ந்தான்.

சந்திரனுக்கு இரவில் உலகுக்கு ஒளி வழங்கும் வரத்தை அருளியது சிவபெருமான் என்று சொல்லியிருக்கிறார் பேரமைச்சர். அது மட்டுமா சிவனருளால் பெரிய பொன் தேரையும் பெற்றானாம்.

முன்னதாக அவன் சாபம் பெற்ற கதையையும் சொல்லியிருக்கிறார் அமைச்சர்பிரான்.

சிவமகுடம் - பாகம் 2 - 50

`விண் பூக்களாய் மலர்ந்து சிரிக்கும் 27 தாரகைகளே சந்திரனின் மனைவிகள். தட்சன் என்பவரின் மகள்களான அவர்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டும் அன்பு செலுத்தினான் சந்திரன்.

அதனால் மற்ற பெண்கள் அனைவரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். கடும் கோபம் கொண்ட தட்சன், ‘அமுத மயமான கலைகள் உள்ளதால்தானே, இப்படி ஆணவத்துடன் நடக்கிறாய்? அவை உடனே அழியட்டும்!’ என்று சந்திரனைச் சபித்தாராம்.

அதனால் அவதியுற்ற சந்திரன், பரிகாரம் தேடி சிவபெருமானைப் போற்றித் துதித்தான். அதனால் மூன்றாம் பிறையளவு தேய்ந்திருந்த சந்திரனை தன் திருமுடியில் சூடி, அவனைக் காத்தருளினார் ஈசன்!’

இவ்வாறு சந்திரனின் திருக்கதையைச் சொல்லும்போது, அமைச்சரின் திருமுகமும் பூரண நிலவாய் ஒளிர்வதை இளங்குமரன் கவனித்திருக்கிறான். அதற்குக் காரணம் சந்திரன் அல்ல சிவப்பரம் பொருள் என்பதையும் அவன் நன்கு அறிவான். சிவனாரின் அறக் கருணையைச் சொல்லும் திருக்கதைகள் என்றால், குலச்சிறையாருக்கு மிகவும் பிடிக்கும் என்பது இளங்குமரனுக்கு மட்டுமல்ல, அமைச்சரின் அணுக்கர்கள் அனைவருக்கும் தெரியும்.

சட்டென்று வெண்புரவி தன் வேகத்தை மட்டுப்படுத்துவதாய் உணர்ந்தான் இளங்குமரன். அதற்குக் காரணமும் இருந்தது!

விருட்சங்கள் அடர்ந்த வனப்பகுதியை அடைந்திருந்தது புரவி. விண்ணை மறைத்து வளர்ந்திருந்த விருட்சங்கள் பிறைநிலவையும் மறைத்துவிட்டன. ஒளி இல்லாததால் தளர்நடையிட்டு பயணித்த புரவி, நாழிகைப் பொழுதுக்குப் பிறகு வெட்டவெளியாய்த் திகழ்ந்த ஒரு திடலை அடைந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் மலைச் சிகரங்கள்.

விண்ணை நோக்கினான் இளங்குமரன். அதீதமாய் நகர்ந்திருந்த பிறைச்சந்திரன், சிகரம் ஒன்றின் உச்சியில் தென்பட்டது. அந்தக் காட்சியை அவன் தரிசித்தபோது, பிறைசூடிய பெருமானே தியானத்தில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. அனைத்திலும் இறையை உணர்த்தும் இயற்கையின் வல்லமையை எண்ணிச் சிலிர்த்த இளங்குமரனின் கண்கள், அந்தச் சிகரச் சிவனாரின் நாகாபரணம் எதுவாக இருக்கும் என்று தேடவும் தவறவில்லை!

சிவமகுடம் - பாகம் 2 - 50

அப்படியொரு காட்சி அந்தச் சிகரத்தின் புறத்தே தென்படா விட்டாலும், அதன் குகைகளில் ஒன்றின் உள்ளே நிஜமாகவே வளைந்துநெளிந்து கொண்டிருந்தது பெரும் சர்ப்பம் ஒன்று.

அந்தச் சர்ப்பத்தைக் கையில் ஏந்தியபடி நின்றிருந்த முரடன் பார்ப்பதற்குக் கால தூதன் போல் தென்பட்டான். அவனுடைய எஜமானராகிய அடிகளாரோ, தீபப் பந்தத்தின் ஒளிவெள்ளத்தில் கொடூர முக பாவனையுடன் காலனாகவே காட்சி தந்தார். அவரின் அந்தக் கொடூர முகத்தைக் காண விரும்பாததுபோல், முரடனின் கரங்களில் இருந்த சர்ப்பம் வேறு திசையில் முகத்தைத் திருப்பிச் சீறியது.

சர்ப்பங்களில் பலவகை உண்டு. நாமெல்லாம் அறிந்த வகைகள் ஒருவிதம் என்றால், நூல்கள் சில வேறுவிதமாய் வகைப்படுத்துகின்றன சர்ப்பங்களை. பாற்கடலில் பெருமாளுக்குப் படுக்கையாய்த் திகழும் ஆதிசேஷன் முதலான சர்ப்பங்கள் திவ்ய சர்ப்பங்களாம். கொடுங்குணம் படைத்த பெளம சர்ப்பங்கள் என்ற வகையும் உண்டு. அவற்றிலும் ஐவகை பிரிவு உண்டு.

தருவீகரம், மண்டலி, ராஜமந்தம், நிர்விஷம், வைகரஞ்ச சர்ப்பம் ஆகிய ஐந்தில் தருவீகர சர்ப்பத்தின் இலக்கணத்தைக் கொண்டிருந்தது, காலதூதனின் கையில் நெளிந்துகொண்டிருந்த நாகம்.

கலப்பை, குடை, அங்குசம் போன்ற வடிவில் உடலெங்கும் புள்ளிகளோடு திகழ்ந்த சர்ப்பம், சிறிது பிடியைத் தளரவிட்டால் தன்னையே தீண்டிவிடும் எனும் அபாயத்தை உணர்ந்தவனாக, பெரும் அவஸ்தையுடன் விழித்துக்கொண்டிருந்தான், அதைக் கையில் பிடித்திருந்த அந்தக் காலதூதன்!

துணையாய் நின்றிருந்த மற்றொரு முரடன் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாக, எதிரே பாறைத் திண்டினில் மயங்கிக் கிடந்த மங்கையைச் சுட்டிக்காட்டி அடிகளாரிடம் வினா தொடுத்தான்.

``ஐயனே, இவளிடமிருந்த ரகசியத்தைக் கைப்பற்றிவிட்டோம். இனி ஏன் காத்திருக்க வேண்டும். அவளின் உடற்கூட்டிலிருந்து உயிருக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டியது தானே... அத்துடன் வேறொரு கேள்வியும் உண்டு என்னிடத்தில்...’’

சிவமகுடம் - பாகம் 2 - 50

- அந்தக் கேள்வியைக் கேட்கலாமா கூடாதா என்ற தயக்கத் துடன் பேச்சை நிறுத்தி, அடிகளாரின் முகத்தைக் கவனித்தான்.

பெண்ணின் முகத்தை ஆழ்ந்த சிந்தனை யுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்த அடிகளார், சட்டென்று கேள்விகேட்டவனை நோக்கித் திரும்பினார். பாறைகள் மோதி உதிர்வதுபோன்று கர்ணக் கொடூரமான குரலில், அவனிடம் பேசினார்...

``எதையும் உள்ளுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. அது நம் கூட்டத்துக்கே பேராபத்தை விளைவித்து விடும். கேட்க நினைப்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்.’’

``இவளைக் கொன்றுவிடப் போகிறோம் அல்லவா?’’

``ஆமாம்... அதிலென்ன சந்தேகம்...’’

``தாமதம் எதற்கு என்பது முதல் கேள்வி.’’

``அடுத்த கேள்வி...’’

``ஆயுதப் பிரயோகத்தால் கதையை முடிக்காமல் விஷ நாகத்தைப் பயன்படுத்துவது ஏன்...’’

அவன் கேட்டு முடித்ததும் இதழொரம் குரூரப் புன்னகையைத் தவழவிட்டபடி திட்டத்தைச் சீடர்களுக்கு விவரித்தார் அடிகளார்.

``இவளிடம் நாம் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட விஷயம், அவளைச் சார்ந்தவர்களுக்குத் தெரியக்கூடாது. ஆயுதப் பிரயோகம் செய்தால் கொலையாகத் தெரியும். ரகசியம் அறிவதற்காகக் கொலை நிகழ்ந்தது என்று எளிதில் புரிந்துகொள்வார்கள்.

தங்கள் ரகசியம் வெளிப்பட்டுவிட்டது என்பதை அறிந்தால், திட்டத்தை மாற்றிக் கொள்வார்கள். நமக்குப் பயன் இல்லாமல் போகும். நாகம் தீண்டினால் இயற்கை மரணம். வேறு பிரச்னைகள் இல்லை. புரிந்ததா...’’

``புரிகிறது சுவாமி. எனில் தாமதம் எதற்கு. இப்போதே சர்ப்பத்தைப் பயன்படுத்தலாமே...’’

``அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ரகசியத்தின் முழு அளவையும் அறிய ஆசைப்படுகிறேன். அதற்கு இவள் கண் விழிக்கவேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன். இவள் விழித்ததும் விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு விஷத்தைப் பரிசளித்துவிடலாம்!’’

அவர் பேசி முடிக்கவும் வெளியே அந்தச் சந்தடி கேட்டது.

சீடர்கள் அதிர்ச்சியில் உறைய, அடிகளாரோ எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகச் சொன்னார்: ``பயம் வேண்டாம் வருவது அவராகத்தான் இருக்கவேண்டும்.’’

அடிகளார் எதிர்பார்த்த அந்த நபர் குகைவாயிலில் தோன்றியபோது, சீடர்களின் அதிர்ச்சி மேலும் அதிகரித்தது.

``இவரா?’’ - பயத்தில் மேனிநடுங்க தங்களையுமறியாமல், ஏக காலத்தில் அந்தக் குகை அதிர ஓலமிட்டார்கள்!

சிகரத்தின் உச்சியில் விண்ணிலிருந்த சந்திரன் மெள்ள நகரத் தொடங்க, அதற்குப் போட்டியாய்ப் பொழுதும் நகர்ந்தது.

வாகீசர் விஜயம்!

திருப்புகலூரின் விடியல் இரண்டாம் நாளாகச் சிறப்புற்றது. அடியார்களின் வரவால் மகிழ்ச்சியில் திளைத்தது அந்தப் பெருநகரம்.

உள்ளூர் ஆலயத்தின் பிராகாரத்தை வலம் வந்துகொண்டிருந்த அடியார் கூட்டம், முந்தைய நாள் திருஞானசம்பந்தர் அருளிய பதிகத் தைச் `செவ்வழி' பண்ணோடு பொருத்தி பாடி மகிழ்ந்தது.

`வெங்கள்விம்மு குழலிளைய

ராடவ்வெறி விரவுநீர்ப்

பொங்குசெங்கட் கருங்கயல்கள்

பாயும்புக லூர்தனுள்

திங்கள்சூடித் திரிபுரமொ

ரம்பாஎரி யூட்டிய

எங்கள்பெம்மான் அடிபரவ

நாளும்மிடர் கழியுமே.’

பதிகம் பாடி முடித்ததும் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

``இந்தப் பதிகத்துக்கான பொருளை எவரேனும் சொல்ல முடியுமா?’’

வேறொருவர் அருமையாக அர்த்தம் சொன்னார்.

``விரும்பத் தக்க தேன் விம்மும் மலர்கள் சூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மை மிக்க கண்களைக் கொண்ட கரிய கயல்கள் துள்ளிப் பாயும் புகலூரில் அருளும் நம் ஈசனை... திங்கள் சூடித் திரிபுரங்களை எரியூட்டிய எங்கள் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பரவிட, இடர்கள் யாவும் நீங்கும்!’’

``அற்புதம்... அற்புதம்...’’

கூட்டம் ஆர்ப்பரிக்க... அந்த ஆரவாரத்தை மிஞ்சும் விதம் உரக்கக் கூவியபடி வந்தார் வேறொருவர்.

``வாகீசப் பெருமானும் வந்துவிட்டார் நம் ஊருக்கு!’’

அவ்வளவுதான்... ஒட்டுமொத்த கூட்டமும் ஏக காலத்தில் ஆர்ப்பரித்தது. பேரானந்தம் பெருக்கெடுத்தது அவ்வூரில்!

- மகுடம் சூடுவோம்...