Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 51

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

பெருங்குகைப் பிரளயம்!

சிவமகுடம் - பாகம் 2 - 51

பெருங்குகைப் பிரளயம்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

காயத்தில் கோள்களின் நகர்வுகளுக்கும் அவை இடம்கொண்டிருக்கும் நிலைகளுக்கும் பூமியின் இயற்கை விளைவுகளுக்கும் பந்தம் உண்டு என்கின்றன வானியல் கிரந்தங்கள். அவை, சந்திரனை மனத்துக்கு ஆதாரமாகவும் சூரியனை உயிர்களுக்கு ஆதாரமாகவும் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வகையில் விண்ணில் கிரகங்களின் சில அசைவுகள் பூமியின் வளிமண்டலத்தில் பெருங்காற்றை உருவாக்கும். திரைக்கடலில் பேரலைகளைச் சிருஷ்டிக்கும் என்பார்கள்.

அட்டகுல பர்வதங்கள் என்று புராண நூல்கள் சிறப்பிக்கும் இமயம், மந்தரம், கயிலை, விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்த மாதனம் ஆகிய மலைகளுக்குச் சற்றும் இளைக்காத - வடக்கே குடகு தொட்டு தெற்கே பொதிகை வரையிலும் நீண்டு கிடக்கும் மேற்கு மலைத்தொடரின் மத்திய பாகத்தைப் பெருங்காற்று பீடித்துக்கொண்டதற்கும் வான்கோள்களின் சஞ்சாரம் காரணமாகி விட்டனவோ!

பிறைச்சந்திரன் மலைச்சிகரத்தின் உச்சிக்கும் மேலே விண்ணில் பொலிந்திருக்க, அந்த நிலையில் அந்தச் சிகரத்தை, நிஷ்டையில் இருக்கும் சிவமாகவே மனம் உள்வாங்கிக்கொள்ள, அதனால் உண்டான சிலிர்ப்பில் இளங்குமரன் திளைத்திருந்த வேளையில்தான் அந்த பிராந்தியத்தில் காற்றும் வேகமாக வீசத் தொடங்கியிருந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 51

திடுமென காற்று வேகம் பிடிக்கக் காரணம் என்னவாயிருக்கும் என்று ஆராயத் தலைப்பட்டவனாக விண்ணை நோக்கினான் இளங்குமரன். பாண்டிமாதேவியாரின் பெரும் நம்பிக்கைக்கு உரியவனும் சோழர் சேனையின் தளபதியுமான கோச்செங்கணன் கற்றுக்கொடுத்திருந்த வானியல் கணக்கு, இளங்குமரனின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்தது.

அன்றைய கோள்களின் சாரத்தை மனத்தில் கொண்டு கணக்கிட்டான். மீண்டும் ஒருமுறை சந்திரனை உற்று நோக்கினான். கோள்களின் சாரப்படி அறிவனுடன் (புதன்) வெள்ளியும் (சுக்கிரன்) செவ்வாயும் கூடிநின்றனர். அவர்களோடு திங்களும் சேர்ந்திருந்தது. காரியோ (சனி) 7-ம் நிலையில் நின்றிருந்தது.

கோள்களின் இந்த நிலை பெருங்காற்றுக்கு வழிவகுக்கும் என்பதை அவனால் தீர்மானிக்க முடிந்தது. காற்று இன்னும் வேகமெடுக்கலாம் என்று முடிவு செய்தவன், அந்த மலையேற்றப் பாதையில் தளர்நடை போட்டுக் கொண்டிருந்த புரவியின் முதுகில் லேசாகத் தட்டினான்; `சற்று வேகமாகச் செல்ல வேண்டும்’ என்று புரவிக்கு உணர்த்தும் கட்டளை அது. புரவியும் தளர்நடையை விடுத்து மெள்ள ஓடத் தொடங்கியது.

அதன் வேகத்தின் காரணமாக அடுத்த கால்நாழிகைப் பொழுதில் தான் தேடிவந்த இலக்கை எட்டிவிடும் நிலையில், இலக்கின் வாயிலில் அதாவது இளங்குமரன் நாடிவந்த சிகரக்குகையின் வாயிலை அவனால் காண முடிந்தது. அதுமட்டுமா அதன் வாயிலில் அந்த நிழலுருவத்தையும் கண்டான். நிலவொளியில் உருவத்தின் அசைவைக் காண முடிந்தது. எனினும் உருவத்துக்குச் சொந்தக்காரர் இன்னாரென்று துல்லியமாக அறியமுடியவில்லை.

ஆனால்... அவரின் ஆஜானுபாகுவான தேகம், முதுகு சற்று வளைந்திருந்தாலும் கம்பீரம் குறையாத நடை, அந்த நடையிலும் ஒரு துள்ளல்... இவை யாவும் அந்த உருவத்தினர் குறித்து ஓர் அனுமானத்தை விதைத்தன, மதியூகியான இளங்குமரனின் உள்ளத்தில். கூடவே அவன் உள்ளம் அவனை எச்சரிக்கவும் செய்தது.

சட்டென்று புரவியின் வயிற்றுப் பாகத்தில் வலக்கால் பெருவிரலால் அழுத்தி, அதன் ஓட்டத்தை நிறுத்தினான். திடுமென வந்த கட்டளையால் சட்டென்று நின்றுவிட்டாலும், தொடர்ந்து பிடரி மயிர்களை மெள்ள பற்றி, `கனைப்பொலி கூடாது’ என்று அவன் தந்த கட்டளையாலும் ஒருகணம் நிலைதடுமாறியது புரவி. என்றாலும் சுதாரித்துக்கொண்டு, மூச்சிறைப்பைத் தவிர வேறு எவ்வித சந்தடியும் இல்லாமல் தன் தேகத்தை நிலைநிறுத்தியது.

அதன் முதுகிலிருந்து மெள்ள தரையில் குதித்தவன், மீண்டுமொரு முறை புரவியின் முதுகைத் தட்ட, புரிந்துகொண்டதுபோல் பாதையிலிருந்து விலகி வன விருட்சங்களுக்கு இடையே சென்று மறைந்தது, புத்திசாதுர்யம் மிக்க அந்தப் புரவி.

இளங்குமரனின் அனுமானம் உண்மையெனில், வந்திருப்பது அவன் கணித்த நபர்தான் எனில்... இவனுடைய சிறு அசைவையும் அவர் அறிந்துகொள்வார். அவர் அறிந்துவிட்டால், வந்த காரியம் கைமீறிப் போகலாம். அத்துடன், இங்கு அவரது விஜயம் எதற்காக என்பதையும் அறிய முடியாது. ஆகவேதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டான் இளங்குமரன்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிழல் உருவத்தின் செயல்பாடுகளை இயன்றவரையிலும் கண்காணித்தபடி, பாதையிலிருந்து விலகி விருட்சங்களுக்கு இடையே மறைந்தபடி மெள்ள முன்னேறினான் இளங்குமரன்.

இப்படி அவன் எவ்வளவோ எச்சரிக்கையுடன் செயல்பட்டபோதும், புரவியிலிருந்து அவன் தரையில் குதித்ததனால் உண்டான சன்னமான சத்தம் அந்த நிழல் மனிதரின் திறன்மிக்க செவிப்புலனை உசுப்பியிருக்க வேண்டும். ஆகவேதான், குகையின் வாயிலை நெருங்கியவர் உடனே உள்நுழைந்துவிடாமல், சத்தம் வந்த திசையை நோக்கினார். இப்போது அவரின் திருமுகம் தெளிவாகத் தெரிந்தது இளங்குமரனுக்கு. உள்ளுக்குள் பெரிதாய் அதிர்ந்தான்.

`அவரேதான்... அவர் ஏன் இங்கு வர வேண்டும்...’ - அவன் மனம் அரற்றியது.

அதேநேரம், குகைவாயில் நிழல் உருவத்தினருக்குச் சூழலில் பெரிய வேறுபாடுகள் புலப்படாவிட்டாலும், அவரின் புத்தி சமாதானம் அடையவில்லை. புதியவன் எவனோ வந்திருக்கிறான் என்று உறுதியாய்ச் சொன்னது. எனினும் அதன்பொருட்டு அவர் அலட்டிக்கொள்ளவில்லை.

குகைக்கு எதிர்திசையை நோக்கிக்கொண்டிருந்தவர், தன் வீர மார்புக்குக் குறுக்காகக் கைகளைக்கட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை விடுத்தார். தொடர்ந்து இதழ்களில் முறுவலை வெளிக்காட்டிவிட்டு சட்டென்று திரும்பி குகைக்குள் பிரவேசித்து விட்டார்.

சிவமகுடம் - பாகம் 2 - 51

இளங்குமரனும் மெள்ள குகையை நோக்கி முன்னேறத் தொடங்கினான். காற்றின் வேகம் மேலும் அதிகரித்திருந்தது. அதன் வீச்சு மலைப்பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே புகுந்து வெளிப்பட்டதால் எழும்பிய விநோத அலறல் சத்தம், அந்தப் பிராந்தியத்தையே ஓர் அமானுஷ்ய சிருஷ்டியாக்கிவிட்டிருந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 51

வெளிக்காற்றின் வேகம் இப்படியென்றால் குகையில் அடிகளாரின் மேனிக்குள் நிகழ்ந்த தசவாயுக்களின் சேர்க்கைப் பிரளயம், அவரின் திருமுகத்தை மிக விகாரமாய்ச் சமைத்திருந்தது.

சிவமகுடம் - பாகம் 2 - 51
சிவமகுடம் - பாகம் 2 - 51

பிராணன், அபாநன், உதாநன், வியாநன், சமாநன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகிய பத்து வாயுக்கள் நிலைத்திருக்கின்றன தேகத்தில்.

இவற்றில் பிராணன் என்பது உயிர்க்காற்று. அபாநன் எனும் வாயு, எடுக்கும் உணவுகளில் சத்தை ஏற்று, சக்கையை கீழ்நோக்கித் தள்ளும். உதாநனை ஒளிக்காற்று என்கின்றன ஞானநூல்கள். சத்தைச் சேமிப்பது இதுவே. தேகத்தின் நாடிகளில் வியாபித்திருப்பது வியாநன்; சேமிக்கப்படும் சத்துகளை நாடிகளுக்கு எடுத்துச் செல்லும். சமாநன் உதரவிதானப் பகுதியில் இருப்பது; நாடிகளின் இயக்கத்தைச் சமன்படுத்துவது.

நாகன் தொண்டைக்குழியில் அதாவது கண்டத்தில் திகழ்வது; வாக்குக்கும் வாக்குப் பலிதத்துக்கும் காரணம் இதுவே. கூர்மன் - தேக பலம் இதைச் சார்ந்தது; நாம் இமைப்பதற்கும் இதுவே காரணம். கிருகரன் எனும் வாயு நாசிக்குழியில் இருப்பது; இருமலின்போதும் தும்மலின்போதும் வெளியேறுவது; காமம், பசி போன்ற உணர்ச்சிகளின் தூண்டலுக்கு இதுவே காரணம். தேவதத்தன் மூலாதாரத்தில் நிலைத்திருக்கும்; கோபம் முதலானவற்றின் தூண்டுதலுடன் தொடர்புடையது. தனஞ்சயன் - இதுவே குண்டலினியில் உறைந்திருக்கும். ஆயுளில் உறவின்போதும் (சிறிய அளவில்) உயிர் முக்தி நிலையிலும் மட்டுமே வெளிப்படும்.

அடிகளாரைப் பொறுத்தவரையிலும் இந்த தச வாயுக்களில் தேவதத்தனை அதிகம் தூண்டிவிட்டிருந்தது சூழல். அதன் காரணமாக மற்ற வாயுக்களின் நிலைகளும் சமநிலையில் குலைந்துபோக, அதன் விளைவு அவரின் திருமுகம் விகாரமாகிவிட்டிருந்தது.

காரணம், பாண்டிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி அடிகளாரிடம் கேட்ட ஒரு கேள்வி!

ஆம், திடீர் விஜயத்தால் அடிகளாரின் சீடர்கள் அச்சம் கொள்ளவும், திருமுகத்தைக் கண்டு இளங்குமரன் அதிர்ச்சிக்கு ஆளாகவும் காரணமான நிழல் உருவத்துக்குச் சொந்தக்காரர், பாண்டிய மாமன்னரேதான். அவரின் வருகையை அடிகளார் எதிர்பார்த்தே இருந்தார். அதனால் சில நன்மைகள் தன் தரப்புக்கு விளையும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், மன்னரின் கேள்வி அடிகளாரின் நம்பிக்கையைச் சிதறடித்து விட்டது.

மாமன்னரின் நிழலுருவம் குகைவாயிலில் தென்பட்டதும் அவரை வரவேற்க ஆயத்தமான அடிகளார், அதேநேரம் கண்ணசைவால் அணுக்கர்களுக்கு ரகசியக் கட்டளை விடுக்கவும் தவறவில்லை. மன்னரின் பிரவேசத்தால் பெரிதும் அச்சத்துக்கு ஆளாகியிருந்த அந்த முரட்டுச் சீடர்கள், பின்னர் ஒருவாறு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். அடிகளாரின் ஆணையை சடுதியில் நிறைவேற்றவும் செய்தார்கள். கொடும் விஷம் கொண்ட நாகத்தை மறைத்து வைத்தார்கள். மூங்கில் குடலை ஒன்றில் சிறைப்பட்ட நாகம், குகையின் பாறை ஒன்றுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டது.

மாமன்னர் வருவதற்குள் மயங்கிக்கிடக்கும் மங்கையை நிரந்தரமாய் உறங்கவைப்பது, அவளிடமிருந்து கைப்பற்றிய ஓலை நறுக்குக்குப் பதிலாக தான் தயார் செய்து வைத்துள்ள ஓலை நறுக்கை மாமன்னரின் கவனத்துக்குக் கொண்டு செல்வது, அதன் மூலம் அவளை சதிக் கூட்டத்தின் உளவு ஏவலாளியாக மன்னரிடம் காட்டுவது, அவளைச் சார்ந்தோருக்கு எதிராக மன்னரைத் திருப்புவது என்று எவ்வளவோ திட்டங்கள் வைத்திருந்தார் அடிகளார்.

ஆனால், அவை அனைத்தும் மாமன்னரின் கேள்வியாலும், அடுத்து அவர் செய்த காரியத்தாலும் கானல் நீராகிவிட்டன!

உள்ளே நுழைந்த மாமன்னர் முதலில் கவனித்தது, பாறைத் திண்டில் கிடத்தப்பட்டிருந்த மங்கையைத்தான். மறுகணமே அவரின் திருமுகம் சுணக்கமுற்றது. ஓடோடிச் சென்று உற்று நோக்கியவர், மறுகணம் அந்தப் பெருங்குகை அதிரும்வண்ணம் கத்தினார்.

``அடிகளாரே! பொங்கிதேவி இங்கே எப்படி? இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது தாங்கள்தானா? தங்களுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியுமா...’’

இந்தக் கேள்வி அடிகளாரைத் திகைக்கவைத்தது எனில், அடுத்து மாமன்னர் செய்த காரியம் அவரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

ஆம்! சற்றும் தாமதிக்காமல் பொங்கிதேவியைத் தூக்கி தன் தோளில் சுமந்தபடி அந்தக் குகையைவிட்டு வெளியேறினார்.

மேற்கொண்டு செய்வதறியாது நிலைகுலைந்துபோன அடிகளார் குகையின் பாறைத் திண்டில், தானும் ஒரு பாறையாய் அமர்ந்துவிட, வெளியே மலைச்சரிவில் மாமன்னரின் திருவுருவம் மறையும் வரை காத்திருந்து, பின்னர் அவரைப் பின்தொடர ஆரம்பித்தான் இளங்குமரன்.

ஏறக்குறைய அதேநேரம், மாமதுரையின் யாழி மண்டபத்தில் பிரவேசித்திருந்தார் பாண்டிமாதேவியார். மண்டபத்தின் விதானங்களைத் தாங்கிக் கொண்டிருந்த பெரும் யாழிகளில் ஒன்றின் மரகதக் கண்கள், அவருக்கு அநேக ரகசியங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

- மகுடம் சூடுவோம்...

பூஜையும் பூக்களும்!

ல்லாவிதமான பூக்களும் பூஜைக்கு ஏற்றவை என்றாலும், சில வகை பூக்களால் பூஜிப்பது, விசேஷ பலன்களைத் தரும்.

அவ்வகையில் அதிகாலை, காலை, நண்பகல், மாலை ஆகிய நான்கு வேளைகளில் இறைவனுக்குச்

சமர்ப்பிக்க வேண்டிய பூக்கள் - இலைகளை ஞானநூல்கள் பட்டியலிடுகின்றன.

அதிகாலையில்: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோர்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை

காலையில்: அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி

நண்பகல்: பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை

மாலை: மல்லிகை, காட்டுமல்லிகை, மரமல்லிகை, மகிழ், கொன்றை, சண்பகம், சிறு சண்பகம், மருக்கொழுந்து

-இ.ராமு, மதுரை-2