Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 52

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

யாழி மண்டபத்துச் சிற்ப ரகசியம்!

சிவமகுடம் - பாகம் 2 - 52

யாழி மண்டபத்துச் சிற்ப ரகசியம்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்
அழகான அந்த வனப்புறத்தை மேலும் அதீத அற்புதம் நிறைந்ததாய் சடுதியில் சிருஷ்டித்துவிட்டன, ஆகாயத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்.

ஏற்கெனவே வீசிக்கொண்டிருந்த பெருங்காற்று, மேகப்பொதிகளை மேற்கு நோக்கி இழுத்துவர, கட்டவிழ்த்ததும் பசுவின் மடிநோக்கிப் பாய்ந்து செல்லும் கன்றினைப் போல, மலை முகடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தன கார்முகில்கள்.

அவ்வப்போது அவற்றின் உராய்வுகளுக்கு இடையே ஒலித்த இடியோசையை முழவின் சத்தமாகக் கருதியிருக்கவேண்டும் மயில்கள். அத்துடன் சூழலின் குளிர்ச்சியும் இணைந்து மனத்தை மகிழ்விக்க, தோகை விரித்து ஒயிலாக நாட்டியமாடத் தொடங்கிவிட்டன அவை. வண்டுகள் இடும் ரீங்காரமோ மயிலாட்டத்துக்கு இசைக் கோப்பதுபோல் இருந்தது.

`அழகு... மிக அழகு... உங்களின் இசையும் நாட்டியமும்’ என்று அவற்றுக்குப் பாராட்டு தெரிவிப்பதுபோல் கிளையசைத்து கலகலத்த கொன்றை மரங்கள், இயற்கையின் கலைக்குச் சன்மானம் வழங்குவதுபோல் தன் மலர்களையும் தரைக்குச் சமர்ப்பித்தன. பரிசிலைப் பணிவுடன் ஏற்கும் புலவனைப் போல, கொன்றை மலர்களைத் தாங்கும் விதமாய் இதழ் விரித்தன காந்தள் மலர்கள்.

இதுவே சாதாரணமானதொரு தருணமாக இருந்திருந்தால், கலாரசிகனான இளங்குமரன் நிச்சயம் ஒரு கவி புனைந்திருப்பான். ஆனால், அவன் இருந்த தருணமும் சூழலும் அதற்கு இடம் கொடுக்காததால், இயற்கையின் கோல விளையாட்டை ரசிக்க இயலாதவனாய், மாமன்னர் சென்ற பாதை எதுவென்று தேடிக் கொண்டிருந்தான்.

சிவமகுடம்
சிவமகுடம்

ஆம், பொங்கிதேவியைத் தோளில் சுமந்தபடி மலைச் சரிவில் நடக்கத் தொடங்கிய மாமன்னர் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் காத்திருந்து, பிறகு அவரைப் பின்தொடர்வது என்று முடிவுசெய்தவன், அப்படியே காரியமாற்றினான். ஆனால் மீண்டும் அவரைக் காண இயலாமல் போனது. இடையில், புரவியின் கனைப்பொலியை மட்டும் செவிமடுத்தான். அந்தத் திசையை நோக்கி வேகவேகமாக வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் வந்தடைந்த இடத்தில் அவன் எதிரில் மூன்று பாதைகள் புலப்பட்டன. அவற்றில் மாமன்னர் எதைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது குறித்து நிறைவான ஒரு தீர்மானத்துக்கு அவனால் வர இயலவில்லை.

பாதைகள் மூன்றைக் கண்ட மறுகணம், மதியூகியான அவனின் கண்கள் நிலத்தை ஆய்வு செய்தன, புரவியின் குளம்படித் தடங்களைக் காண. ஆனால் வந்தவர் சாமானியரா என்ன. அசகாயச் சூரராயிற்றே. எளிதில் கண்டடையும்படியான தடயங்களை அவர் விட்டுச்செல்லவில்லை.

ஆம்! தென்பட்ட மூன்று பாதைகளிலும் புரவிகளின் குளம்படிகள் இருந்தன.

குழம்பிப்போனான் இளங்குமரன். ஓர் அனுமானத்திலாவது ஏதேனும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறலாம் என்றால், அதற்கும் அவன் மனம் ஒப்பவில்லை. காரணம் இரண்டு. முதலாவது முன்னிரவு போன்று இருள் சூழ்ந்துவிட்ட சூழல்; இரண்டாவது `பிரயத்தனப்பட்டு மாமன்னரைப் பின்தொடர்வதை விட்டு, குகைக்குத் திரும்பினால் அடிகளாரின் சதித் திட்டத்தை அறியலாமே’ என்று அவனுடைய அறிவுப்புலன் தந்த புத்திமதி. இளங்குமரன் அதற்குக் கட்டுப்பட்டான். ஆனாலும் அவனுக்குள் வேறொரு சிந்தனையும் எழுந்தது, `நாம் செல்லும் வரையில் அந்த அடிகளார் குகையில் உறைந்திருக்க வேண்டுமே’ என்று.

நல்லவேளையாக காலம் அவனுக்குச் சாதகம் செய்தது. ஆம், எதிர்பாராத விதமாய் அமைந்துவிட்ட மாமன்னரின் செயல்பாடு அடிகளாரை நிலைகுலைய வைத்திருக்கவேண்டும். ஆகவே, பாறைத் திண்டில் பெரும் பாறையாக அமர்ந்துவிட்டவர், வெகுநேரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துச் சிந்தனையில் ஆழ்ந்திருப்பார் போலும். இளங்குமரன் மிக ரகசியமாய் மீண்டும் குகைவாயிலை அடைந்த தருணத்தில்தான் தன்னுடைய அடுத்தகட்ட திட்டங்களை அணுக்கர்களிடம் விவரிக்கத் தொடங்கியிருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக அடிகளாரின் குரல் மிகச் சன்னமாக குகைக் குள்ளிருந்து கேட்கவே, இளங்குமரன், ஏதுவான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்தபடி தன் செவிப்புலனைக் கூர்மையாக்கினான். தொடர்ந்து, அதிபயங்கரரான அடிகளாரின் திட்டங்கள் யாவும் செவிவழி நுழைந்து அவன் புத்தியில் சேகரமாகத் தொடங்கின.

``பாண்டிமாதேவியாருக்குச் செல்ல வேண்டிய தகவலில் முதல் பாதி நமக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு வந்த குமரியைச் சொர்க்கலோகம் அனுப்பிவிட்டு, தகவலை தேவியாருக்கு எதிராகத் திரித்து மன்னரிடம் சேர்க்க திட்டமிட்டேன். அதனால் இரண்டு பலன்கள் கிடைத்திருக்கும். தேவியார் தரப்பு எதிர்பார்த்த தகவலை அவர்களுக்குக் கிடைக்காமல் செய்திருக்கலாம். அத்துடன், தகவலை மாற்றி அவர்களை மாமன்னருக்கு விரோதமானவர்களாகச் சித்திரித்திருக்கலாம். ஆனால், சூழல் நமக்கு விரோதமாக அமைந்து விட்டது. ஆனாலும் முதல் பலன் நமக்குக் கிடைத்துவிட்டது. இரண்டாவதுதான் சிரமமாகி விட்டது...’’

``இப்போது என்ன செய்வது?’’

``திட்டத்தில் சற்று மாற்றத்தை உருவாக்கி யுள்ளது என் சிந்தனை. அதைச் செயல்படுத்து வதற்குமுன் நான் அறிய வேண்டியது ஒன்று உண்டு...’’ என்று கூறிவிட்டுப் பேச்சை நிறுத்திய அடிகளார், தீட்சண்யமான தன் நேத்திரங்களால் சீடர்களை உற்றுநோக்கினார்.

அவர்களோ, அவர் எதிர்பார்க்கும் விஷயம் என்னவென்பதை அறிந்துகொள்ளும் துடிப்புடன் நின்றிருந்தார்கள்!

``குகைக்கு வந்து சென்றபிறகு மாமன்னருக்கு என்மீதான அபிமானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்குமோ என ஐயப்படுகிறேன். ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால், அதை மாற்றியாகவேண்டும். அதற்கு ஏதுவாகவும் நம் திட்டம் அமையவேண்டும்...’’

``என்ன செய்வதாக உத்தேசம் ஐயனே...’’

``விவரமாகச் சொல்கிறேன் கேளுங்கள்...’’ என்று ஆரம்பித்த அடிகளார், தீக்கனலாய் ஜொலிக்கும் தன் சிவந்தவிழிகளை இன்னும் அகலவிரித்தபடி, கேள்வியும் பதிலுமாக தன் மந்திராலோசனையை நிகழ்த்தினார்.

சிவமகுடம்
சிவமகுடம்

``பொங்கி எப்படி மயங்கினாள்?’’

``எங்களால் தாக்கப்பட்டு.’’

``அதை அவள் அறிவாளா?’’

``வாய்ப்பே இல்லை. நாங்கள் மறைந்திருந்து அல்லவா தாக்கினோம்.’’

``எனில், அவளைத் தாக்கியது சோழர் தரப்பு என்று மாமன்னரை நாம் நம்பவைக்கவேண்டும். அதற்கான சாட்சியங்களையும் சூழலையும் நாம் உருவாக்கவேண்டும். இதுதான் ஏற்கெனவே நாம் போட்டுவைத்திருந்த திட்டம். அப்படித்தானே...’’

``ஆமாம்’’

``அந்தத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அதைச் செயல்படுத்தப்போகும் கருவி மாறுகிறது...’’ என்றபடியே, தன் புருவங்களை நெறித்தும் உதடுகளைச் சுழித்தும், காண்பவர் சகிக்க இயலாதபடி விகாரச் சிரிப்பொன்றை வெளிப்படுத்தியவர், தன் திட்டத்துக்குக் கருவியாகப் போகும் நபரின் பெயரை உச்சரித்தார். அந்தப் பெயரைச் செவிமடுத்த இளங்குமரன், தன் செவிப் புலனில் ஆயிரம் தேள்கள் கொட்டியதுபோல் அதிர்ந்தான்!

அதேநேரம், வைகை தீரத்தில் - சுரங்க மண்டபத்தில்... யாழிகளின் மரகதக் கண்கள் காட்டிக்கொடுத்த ரகசியங்களைக் கண்டு, இனம்புரியாத உணர்ச்சிக் களிப்புக்கு ஆளாகி யிருந்தார், பாண்டிமாதேவியார்.

வைகை நதியின் கரையோரம் உள்ளடங்கி இருந்த யாழ் மண்டபத்தின் தரைத் தளத்தின் திறப்பை... மண்டப விதானத்திலிருந்த கந்தர்வச் சிற்பமொன்றின் நாபியை அழுத்தி, தனக்கு மட்டுமே தெரிந்த பொறியை இயக்கித் திறந்தார் பாண்டிமாதேவியார்.

தளம் வழியைக் காட்டியதும், படிகளில் இறங்கத் தொடங்கினார். அவர் முன்னேற முன்னேற வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது. வழியில், சுவரில் திகழ்ந்த பந்தம் ஒன்றை எடுத்துக்கொண்டவர், அதன் துணையோடு மேலும் முன்னேறினார். அரைநாழிகை பொழுது கழிந்த நிலையில் அந்த அற்புத இடத்தை அடைந்தார். பிரமாண்ட யாழித் தூண்கள் அவரை வரவேற்றன.

சிம்ம யாழிகள் பல விதானத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும்படி அமைந்திருந்தது, அந்த மண்டபம். அத்துடன் மண்டபம் முழுவதும் வியாபித்து ஜொலித்த பச்சை வண்ணம், தேவியாரைப் பிரமிக்கவைத்தது.

அதற்கான காரணம், சிம்ம யாழி ஒன்றின் கண்களாகத் திகழ்ந்த பச்சைக் கற்கள் என்பதையும் அறிந்துகொண்டார். பந்தச் சுடரின் வெளிச்சம் அந்தக் கற்களின் வண்ணத்தில் கலந்து சுரங்க மண்டபத்தைப் பச்சை வண்ணமாக்கி யிருந்தது!

வெளிச்சம், சுரங்கத்துக்கு வெளியில் இருக்கும் எவரையேனும் ஈர்த்து விடக்கூடாது என்று தீர்மானித்த பாண்டிமாதேவியார், பந்தச் சுடரை தரையில் தேய்த்து அணைத்தார். பச்சை ஒளிவெள்ளம் மெள்ள வீரியம் குறைந்தது என்றாலும் முற்றிலும் நீங்காமல், இரண்டு மெள்ளிய ஒளிக்கீற்றுகளாய் மாறியிருந்தது. அவை, யாழிக்கண்கள் அதுவரை உள்வாங்கிய ஒளியை வெளிப்படுத்துவதால் ஏற்பட்டவை என்பதைத் தெரிந்துகொண்டார்.

அவற்றில் ஏதோ சூட்சுமம் உள்ளது என்று உள்மனம் உணர்த்தியது. குறிப்பிட்ட சிம்ம யாழிக்கு எதிர்ப்புறத்துச் சுவரில் ஒளிக் கீற்றுகள் விழும் இடத்தைக் கவனித்தார். அக்கணம், அவரின் பிரமிப்புப் பன்மடங்கானது. பெரும் ரகசியத்தை உடைக்கும் சிற்பக்குறிகளை அங்கே கண்டார்!

தரைக்குக் கீழே ரகசியச் சுரங்கம் அமைத்து, அதில் மாபெரும் ரகசியத்தையும் பொதிந்து வைத்து, மதியூகிகள் அதைக் கண்டு கொள்வதற்கான சூட்சுமத் திறவுகோல்களாய் யாழியின் கண்களைக் கற்களால் படைத்து வைத்த படைப்பாளனை எண்ணி வியந்தார்.

சிவமகுடம்
சிவமகுடம்

சாமான்யர்கள் ஒருவேளை சுரங்கத்துக்குள் புகுந்தாலும், பச்சை ஒளி வெள்ளத்தின் இந்திர ஜாலத்தைக் கண்டு மயங்கியிருப்பார்களே தவிர, வெகுநிச்சயமாய் ஒளிக்கீற்றின் சூட்சுமத்தை அறியத் தவறிவிடுவார்கள்.

தேவியார் ஒளிக்கீற்று விழும் இடத்தில் உள்ள சிற்பக் குறிகளை மிகக் கவனமாய் ஆராய்ந்தார். அவை, மாமதுரையின் எதிர்காலக் கதையைச் சொல்லாமல் சொல்லின!

திருப்புகலூரில் முருகனாரின் வீடு அடியார்க் கூட்டத்தால் நிறைந்திருந்தது. அனைவரின் கண்களும் கூடத்தின் நடுவே பிரதானமாய் அமர்ந்திருந்த புண்ணியர் இருவரை இமைக்கா மல் பார்த்துக் கொண்டிருந்தன. புண்ணியரில் ஒருவர் சீர்காழிப் பிள்ளை; மற்றவர் அப்பர்.

ஆளுடைப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆலவாய் அம்மையின் மகிமைகளைக் கூறிக் கொண்டிருந் தார் வாகீசரான அப்பர்: ``வேதப் பழம்பாடல்; அருள் பழுத்த கற்பகம்; தோன்றாத் துணையாம் சிவனுக்கே துணையானவள்; அண்டப் பெரு வெளியில் பரமானந்தப் பெருக்கைத் தரும் பூரண நிலவு; அடியார் துயரை அடியோடு துடைக்கும் கருணை நாயகி... நம் மீனாட்சியம்மை.

மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சன மாலைக்கும் நீண்டகாலமாக மகப்பேறு இல்லாததால் யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றியவள். மூன்று மார்பகங் களுடன் குழந்தை தோன்ற, கலங்கி நின்றனர் பெற்றோர். அப்போது அசரீரி ஒலித்தது...’’

திருநாவுக்கரசர் திருக்கதையைச் சொல்லிக் கொண்டிருக்க, அதேவேளையில் புதியவர் ஒருவரின் வருகையைத் தெரிவிக்கும் விதம் வீதியில் பெரிதாய் ஒலித்தது விஜய பேரிகை!

- மகுடம் சூடுவோம்...