Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்!

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ஓரு பெயர், ஓர் உருவம் இல்லாத இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களும் பெயர்களும் அமைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்.

சிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்!

ஓரு பெயர், ஓர் உருவம் இல்லாத இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களும் பெயர்களும் அமைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்.

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

`கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்

எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்

எரியாடி என்று என்றும் இன்புறுவன் கொல்லோ

பெரியானைக் காணப் பெறின்...’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதியற்புதமான பாடல். இந்தப் பாடலைப் பாடியவரும் அற்புதமானவர்தான்!

எந்நாட்டவருக்கும் இறைவனாய் - தந்தையாய்த் திகழும் அந்த ஈசனே `எம் அம்மை’ என்று அழைத்த சிறப்புக்குரியவர் அவர். ஆம், காரைக்கால் அம்மைதான் மேற்காணும்படி பாடித் துதிக்கிறார் நம் ஈசனை.

`தன்னிகர் இல்லாத பெருமையுடைய சிவபெருமானை நான் கண்ணாரக் காண்பேன். கைகளைக் கூப்பி ஆரத் தொழுவேன். மனம் ஆர எண்ணி மகிழ்வேன். வானவர் தலைவனே, கையில் தீக்கனல் ஏந்தி ஆடும் ஈசனே என்று பலமுறை வாழ்த்தி மகிழ்ந்திருப்பேன்... நாதனே உன்னைக் காணும்போது’ என்று பாடி மகிழ்கிறார் காரைக்கால் அம்மையார். அம்மையின் உள்ளத்தில் எத்தகையதோர் உணர்ச்சிநிலை, பரவசம்... பார்த்தீர்களா!

சிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்!

யாழ் மண்டபத்தில் யாளிக் கண்கள் உமிழ்ந்த பச்சை வண்ண ஒளிக் கீற்றுகள், எதிர்புறச் சுவரில் சுட்டிக்காட்டிய சிற்பக் குறிப்பு களைக் கண்ணுற்ற பாண்டிமாதேவியாரும் இதேபோன்ற உணர்ச்சிக் களிப்புக்கும் பரவசநிலைக்கும் ஆளாகிவிட்டிருந்தார்.

காரணம், அந்தச் சிற்பத் தொகுப்பில் பிரதானமாகக் காட்சி தந்த ஈசனின் திரிபுராந்தக தரிசனம்!

ஓரு பெயர், ஓர் உருவம் இல்லாத இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களும் பெயர்களும் அமைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர். எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை, ஓர் இலக்கில் வைத்து வழிபடும் பொருட்டு சிவலிங்கமாக அமைத்தார்கள். தொடர்ந்து, உயிர்களை உய்விக்கும் விதமாக இறைவன் ஏற்ற திருக்கோலங்களையும் மூர்த்தங்களாக வடித்து வழிபடத் தொடங்கினார்கள்.

ஞானநூல்கள் பலவும் போற்றும் அத்தகைய சிவக்கோலங்களில் ஒன்றுதான் திரிபுராந்தகர் திருக்கோலம். சிவமகுடம் எனும் இக்காவியத்தின் நாயகன் ஈசன். அவரின் மறக்கருணையைச் சொல்லும் திருக்கோல மகிமையை அறியாமல் நாம் நகரலாமா?

வாருங்கள்... திரிபுராந்தகர் எனும் சிவவடிவின் மேன்மையைச் சற்று உற்றுநோக்குவோம்.

பொதுவாக சிவனாரின் ஒவ்வொரு கோலத்துக்கும் ஒரு கதை உண்டு. அரும்பெரும் தத்துவத்தை, எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் கதை வடிவில் சொல்கின்றன புராணங்கள். அவ்வகையில் ஈசன் நிகழ்த்திய வீரச் செயல்களில் ஒன்றை விளக்கும் கதை இது.

சங்க இலக்கியங்களான பரிபாடல், புறநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் மற்றும் தேவாரத் திருமுறைகள் திரிபுராந்தகரின் பெருமையை விரிவாகப் பேசுகின்றன.

முருகப்பெருமானால் அழிக்கப்பட்ட தாரகாசுரனின் மைந்தர் களான வித்யுன் மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் கடும் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் பல வரங்களை வேண்டினர்.

அதன்படி மூன்று பறக்கும் நகரங்களைப் பெற்றனர். இவர்கள் மூவருமே திரிபுர அசுரர்கள் ஆவார்கள். இவர்களின் மூன்று கோட்டை நகரங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓரிடத் தில் ஒன்றுசேரும். அப்போது, தேவர்கள் ஒவ்வொரு வரது சக்தியில் பாதியைத் தன்னிடம் தாங்கும் ஒருவர், ஒரே அம்பால் அந்த கோட்டைகளை வீழ்த்தினால் மட்டுமே திரிபுராசுரர்களுக்கு முடிவு ஏற்படும்.

அந்தரத்தில் பறக்கும் வல்லமை பெற்ற திரிபுர கோட்டைகளால் விண்ணுலகம் மற்றும் மண்ணுலக உயிர்கள் பல துன்பங்களைச் சந்தித்தன. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவரின் ஆணைப்படி தேர் ஒன்று தயாரானது.

அந்தத் தேருக்கு சூரிய- சந்திரர்கள் சக்கரங்கள் ஆயினர். உதய- அஸ்தமன மலைகள், தேர் அச்சாக அமைந்தன. பருவங்கள்- தேர்க் கால்களாகவும், வேதங்கள்- குதிரைகளாகவும், சந்தஸ்- கடிவாள மாகவும், ‘ஓம்’ எனும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன.

பிரம்மன்- சாரதி ஆனார். கங்கை முதலிய நதிப் பெண்கள் சாமரம் வீச, விந்திய மலை குடையானது. பாதாளத்தைக் குறிக்கும் ஏழு தட்டுகள் கீழேயும், வானுலகைக் குறிக்கும் ஏழு அடுக்குகள் மேலேயும் இருந்தன. அஷ்டமா நாகங்கள் தேரைச் சுற்றியிருந்தன. இந்தத் தேர் கயிலை மலையில் சிவபிரான் சந்நிதியில் நிறுத்தப்பட்டது.

சிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்!

தேவர்கள் அனைவரும் தங்களது சரிபாதி பலத்தை சிவ பெருமானுக்கு அளித்தனர். பிறகு, சிவபெருமான் உமாதேவியுடன் அந்த அற்புதமான ரதத்தில் ஏறினார். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், பதினெண் கணத்தார் ஆகியோர் தேரைச் சூழ்ந்து ஜய கோஷம் இட்டனர். அந்தத் தேர் முப்புரம் உள்ள இடம் நோக்கிச் சென்றது. முப்புரங்கள் ஒன்று கூடும் காலத்தை எதிர்பார்த்தனர்.

‘சரத்’ காலத்தில், சந்திரபுஷ்ப யோகமும், அபிஜித் முகூர்த்தமும் கூடிய வேளையில் சரம் தொடுக்கத் தயாராயினர். ஆனால், வில்லை வளைத்து அம்பை நாண் ஏற்றிய சிவனார், அம்பை நாணில் இருந்து விடுவிக்காமல் முப்புரங்களையும் நோக்கிப் புன்னகைத்தார். மறு கணம் அவை தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. தொடர்ந்து முப்புர அசுரர்களையும் அழித்தார். அனைவரும் பெருமானைப் போற்றித் துதித்தனர். இந்த வரலாறு, சிவமகா புராணம், சனத் குமார சம்ஹிதை, பதினெண் புராணங்கள் மற்றும் அநேக தல புராணங்கள் முதலான வற்றில் சிற்சில மாறுதல்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

தேவர்கள் தன்னிடம் சரணடைந்ததும், சிவபெருமான் அவர்கள் அனைவரது சக்தியையும் தாங்கினார் அல்லவா? அப்போது தேவர்கள், பரமேஸ்வரனைப் பணிந்து ‘பசுபதி’ என்று அவரைப் போற்றி பாடியதே ஸ்ரீருத்ரம். இதில், ஈசனது வில்லுக்கும்- அம்புக்கும் முதலில் நமஸ்காரம் என்று சொல்லப்படுவது குறிப்பிடத் தக்கது.திரிபுர சம்ஹார மூர்த்தியுடன் உறையும் அம்பிகையின் திருநாமம் ‘ஜன்ம ம்ருத்யு விநாசினி’.

காசி, திரியம்பகம் ஆகிய வடநாட்டுத் தலங்களில் திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்ததாகச் சிவ புராணங்கள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தில், பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் நிகழ்ந்ததாக `திருவதிகை தல புராணம்’ கூறுகிறது. ‘திரு வதிகை வீரட்டானம்’ என்று இந்தத் தலத்தைப் போற்றுவார்கள்.

`வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே’ என்று இத்தலத்து ஈசனைப் போற்றுகிறார், வாகீசராம் நம் திருநாவுக்கரசர்.

மூன்று அசுரர்களை அழித்த திரிபுராந்தகரின் திருக்கதைக்குத் தத்துவ நோக்கிலும் விளக்கம் சொல்வார்கள் ஆன்றோர்கள். சிந்தையில் சிவத்தை நிறுத்தினால், நம்முள் இருந்து நம்மை ஆட்டிப்படைக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆக்கிய முக்குணங்களை அழிக்கலாம் என்பது அவர்களின் கூற்று.

அப்பணி செஞ்சடை ஆகி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவன மும்மல காரியம்

அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே.

- எனப் பாடி அருளியுள்ளார் திருமூலர். இப்படிய உயரிய தத்துவத்தையும், அநீதியை அழிக்கும் வீரப் பண்பையும் தன்னகத்தே கொண்ட அந்த அற்புத சிற்பவடிவம், பாண்டிமாதேவியாரின் சிந்தையையும் தன்பால் ஈர்த்துக் கட்டிப்போட்டதில் வியப்பில்லைதான்.

மேன்மை பொருந்திய அற்புத ரதத்தையும், அதன் சூரிய-சந்திர சக்கரங்களையும், அஷ்ட நாகங்களையும், நான்முகன் சாரதியையும், ரதத்தின் மைய பீடத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானையும் கண்ணாரக் கண்டு களித்திருந்த தேவியாரின் கண்களில், அருகில் திகழ்ந்த வேறிரண்டு சிற்பங்களும் தென்பட்டன. அவை உருவில் சிறிய சிவலிங்கங்கள்.

அந்த லிங்கங்களையும் திரிபுராந்தக ரதத்தையும் ஒட்டுமொத்தமாக பாண்டிமாதேவியார் கண்டபோது, மாபெரும் சூட்சுமம் ஒன்றையும் கண்டுகொண்டார். தாரு லிங்கங்கள் இரண்டும், பொங்கிதேவியிடம் வந்துசேர வேண்டிய நறுக்கோலைத் தகவலும் உடனடி தேவை என்பதையும் புரிந்துகொண்டார். இந்தச் சிந்தனை அவர் புத்தியில் உதித்தபோது, கூடவே பொங்கிதேவி குறித்த சிந்தனையும் எழுந்தது.

திட்டமிட்டபடி அனைத் தும் நடந்திருந்தால், இந்நேரம் பொங்கி தேவி தன்னைச் சந்தித்திருக்க வேண் டும். ஆனால், அவள் இன்னும் வரவில்லை. எனில், இடையில் ஏதோ இடையூறு நிகழ்ந்திருக்க வேண் டும் என்ற சிந்தனை மேலோங்க, அடுத்து ஆற்ற வேண்டிய காரியம் பற்றி யோசிக்கலானார்.

இளங்குமரனிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பொங்கிதேவிக்கான ஆபத்தை அதிகப்படுத்தலாம். ஆகவே, அவளைத் தேடி தானே புறப்பட்டுவிடுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

மெள்ள யாளி மண்டபத்திலிருந்து வெளியேறி, மீண்டும் மண்டப விதானத்துக் கந்தர்வப் பொறியை இயக்கி ரகசிய வாயிலை அடைத்து விட்டு, வைகையை நோக்கி நகர்ந்தார்.

தேவியாரின் வருகையை அறிந்துகொண்ட அவரின் புத்திசாலிக் கரும்புரவி மறைவிலிருந்து வெளிப்பட்டு, தளர்நடையிட்டு அவரை நோக்கி முன்னேறியது. புரவி தன்னிடம் வரும்வரை காத்திராமல், ஓடோடிச் சென்று தாவி ஏறி அதன் முதுகில் ஆரோகணித்துக்கொண்டார் பாண்டிமாதேவியார்.

பெருங்காற்று விசையுடன் வீசத் தொடங்கியது. அதைப் பொருட் படுத்தாமல் தேவியார் கரங்களால் புரவியைத் தட்டிவிட, ஆணையை ஏற்று ஆக்ரோஷத்துடன் புழுதியைக் கிளப்பி விட்டபடி பாயத் தயாரானது கரும்புரவி. அதேநேரம், சிறகு விரித்துப் பறந்து வந்தது பச்சைக்கிளி ஒன்று.

தன் அலகால் வேலைப்பாடு மிகுந்த ருத்திராட்ச ஆரம் ஒன்றைப் பற்றிக்கொண்டிருந்தது அந்தக் கிள்ளை. அதைக் கண்டதும் தேவியார் முகத்தில் பூரிப்பு.

அந்தக் கிளியைப் பாசத்துடன் வரவேற்கும் தொனியில் அவர் தன் வலக்கரத்தை நீட்ட, கிளியோ மிக உரிமையோடு அவரின் தோளில் வந்து அமர்ந்துக்கொண்டது. கூடவே, தான் கொண்டுவந்த ஆரத்தையும் அவரிடம் ஒப்படைத்தது.

ருத்திராட்சங்களுக்கு இடையே வட்டச் சுவடிகள் சேர்த்துக் கோக்கப்பட்டிருந்த அந்த ஆரம், பொங்கிதேவியிடம் இருந்து வந்துள்ளது என்பதை, அதன் வட்டச் சுவடி ஒன்றிலிருந்த தகவல் தேவியாருக்குத் தெரிவித்தது!

பாண்டியப் பேரரசியார் இப்படிப் புரவியில் ஏறிப் புறப்பட ஆயத்தமான அதே வேளையில், அங்கே மலைப்புறக் குகையிலிருந்து அடிகளாரின் படுபயங்கரமான திட்டத்தைச் சிந்தையில் சுமந்தபடி புறப்பட்டு விட்டிருந்தான் அவரின் சீடர்களில் ஒருவன்.

சிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்!

இன்னும் நான்கு நாழிகை நேரத்துக்குள், தான் அளிக்கும் ஓலை கருவியிடம் சேர்ந்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார் அடிகளார்.

`கருவி என்று அவர் சுட்டிக்காட்டிய நபரைப் பார்த்தாலே குலைநடுங்கும். ஆனால் இப்போதோ, அவரைக் கொலை செய்ய முயலவேண்டும். அந்த முயற்சியில் வலுக்கட்டாயமாகத் தோற்க வேண்டும்; அவரின் வீரர்களிடம் சிக்கிக்கொள்ளவும்வேண்டும்.

அதைச் சாக்காக வைத்து தான் அளித்த ஓலை நறுக்கை அவர்களிடம் பறிகொடுக்க வேண்டும் என்றல்லவா கட்டளையிட்டுள்ளார்... இல்லையில்லை... மரணக்குழியில் என்னை தள்ளிவிட்டுள்ளார்... பாதகர்’ என்று மனத்தில் தன் எஜமானரான அடிகளாரை வசை பாடியபடியே தனது புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான் அந்தச் சீடன்.

எப்போதும் எவ்வளவு அடித்தாலும் வேகத் தைக் காட்டாத தன் புரவியும், இப்போது எவ்வித ஆணையும் இடாமலேயே புயல் வேகம் காட்டுவதைக் கண்ணுற்றவன், மரணவாயிலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்பது புரவிக்கும் தெரிந்துவிட்டது போலும். இவ்வளவு வேகம் காட்டுகிறதே இந்தப் பிராணி... என்று புரவி குறித்தும் தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டான்.

அதையொட்டி எழுந்த வெறுப்பால், அவ்வப்போது தன் கைகளால் அதன் பிடரி முடிகளை இழுத்தும், கால்களால் வயிற்றுப் புறத்தில் மிதித்தும் அந்தப் புரவியை வதைக்கவும் செய்தான். ஆயினும் அது தன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.

ஆனால் அந்தச் சீடனுக்கு... அவன் எண்ணிச் செல்லும் காரியம் அவ்வளவு எளிதில் கைகூடாது; மரணமும் அவனை நெருங்கப் போவதில்லை; கருவியாகிய குலச்சிறையாரையும் அவன் சந்திக்கப் போவதில்லை என்ற தீர்க்கதரிசனம் தெரிந்திருக்கவில்லை.

இந்த ரகசியத்தை, அவன் அறியாவண்ணம் அவனைப் பின்தொடர்ந்த இளங்குமரன் நன்கு அறிந்திருந்தான்!

திருப்புகலூரில் முருகனாரின் வீடு மென்மேலும் பொலிவு பெற்றது.

மாமதுரை அன்னை மீனாளின் திருக் கதையை திருநாவுக்கரசர் பெருமான் சொல்லிக் கொண்டிருக்க, வீதியில் விஜய பேரிகைகள் முழங்கின.

தொடர்ந்து, அடியார்களின் ஐந்தெழுத்து முழக்கம் ஒலிக்க, `அடியார்களுக்கு அடியேன் போற்றி’ என்றபடியே உள்ளே பிரவேசித்தார் புதியவரான அந்த அடியார்.

அவரைக் கண்டதும் பரவசத்துக்கும் பெருமகிழ்ச்சிக்கும் ஆளான முருகனார் எழுந்து நின்று வரவேற்று வணங்கினார்...

``வாருங்கள் பரஞ்சோதியாரே... வணங்குகிறேன்!’’

- மகுடம் சூடுவோம்...