திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 54

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

வாருங்கள் பரஞ்சோதியாரே... வணங்குகிறேன்!

மாமதுரை அன்னை மீனாளின் திருக்கதையை திருநாவுக்கரசர் பெருமான் சொல்லிக் கொண்டிருக்க, வீதியில் விஜய பேரிகைகள் முழங்கின. தொடர்ந்து, அடியார்களின் ஐந்தெழுத்து முழக்கம் ஒலிக்க, `அடியார்களுக்கு அடியேன் போற்றி’ என்றபடியே உள்ளே பிரவேசித்தார் புதியவரான அந்த அடியார்.

அவரைக் கண்டதும் பரவசத்துக்கும் பெருமகிழ்ச்சிக்கும் ஆளான முருகனார் எழுந்து நின்று வரவேற்று வணங்கினார்...

``வாருங்கள் பரஞ்சோதியாரே... வணங்குகிறேன்!’’

அவரின் வரவேற்புரையைக் கேட்டு பதைபதைத்துப் போனார் வந்தவர். அந்தப் பதற்ற நிலை கொஞ்சமும் குறையாமல், உடல் நடுங்கக் கரம்கூப்பி வணங்கியபடி பதில் சொன்னார்.

சிவமகுடம்
சிவமகுடம்

``அடியார்கள் அனைவருக்கும் வணக்கம். வாகீசப் பெருமானுக்கும் சீர்காழிச் சிவக்கொழுந்துக்கும் என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் அழைத்த பெயருக்குடையவன் அடியேன் அல்ல. அவர் என் ஸ்வாமி; குருநாதர். அவரைச் சிந்தையில் இருத்தி குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் சிறியேன் நான். தங்கள் அகத்தில் வாகீசரும் சீர்காழிப் பிள்ளையும் எழுந்தருளியிருப்பதாக தகவல் அறிந்தேன். ஆகவே, இருவருக்கும் என் தலைவரின் பொருட்டு வணக்கங்களைச் சமர்ப்பித்து ஆசியும் அருளும் பெறவே வந்தேன்.

ஆனால், என் பிரவேசத்தைக் கண்டதும்... மேனியெங்கும் திருநீறு துலங்கும் அடியார்கள் வந்தால் எவ்விதமான வரவேற்பைத் தங்களின் அணுக்கர்கள் தருவார்களோ, அவ்விதமாக பேரிகைகள் முழங்க வரவேற்றார்கள்... அதன் பொருட்டு என்னை என் தலைவராக எண்ணிக் கொண்டீர்கள் போலும்...’’

அந்த அடியவரைக் கட்டியணைத்துக்கொண்ட முருகனார், அவரை ஆற்றுப்படுத்துவது போல் புன்னகையோடு பதில் சொன் னார்: ``பிழை ஏதும் நிகழவில்லை அடியாரே. பதற்றம் வேண்டாம். எனக்கும் தெரியும் தாங்கள் யாரென்று. மேலும்... இந்தத் தேசத்தில் பரஞ்சோதியாரை அறியாதவர் உண்டோ.

சித்தத்தில் சிவனை ஏற்றிய அடியார்களை தரிசிக்கும் தருணம் அந்தச் சிவபெருமானையே தரிசித்த பேருவுவகையை நாம் அடைவதில்லையா. அப்படியே செங்காட்டங்குடி பரஞ்சோதியாரை எப்போதும் மனத்தில் வைத்துப் போற்றும் உம்மைக் கண்டதும் அவரையே கண்டதுபோல் உவகையுற்றேன். அதன்பொருட்டு அவ்வாறு அழைத்து வரவேற்றேன். அந்த வகையில் இன்று அவரின் திருப்பெயரை உச்சரித்து வணங்கும் பேறும் உம்மால் கிடைத்தது எமக்கு!’’ என்றார் பெருமகிழ்ச்சியுடன்.

மறக்கருணையைக் களைந்து அறக்கருணையை ஏற்று, எப்போதும் சிந்தையில் சிவத்தைத் தொழுது நின்ற சிறுத்தொண்டரின் திருக்கதை, அளப்பரிய மகிமையை உடையது.

``அப்பனே... பரஞ்சோதியின் அணுக்கனா நீ. என்றும் குறையாத எம்பெருமானின் திருவருள் எப்போதும் உன்னுள் நிறைந்திருக்கட்டும்’’ என்று திருநாவுக்கரசப் பெருமான் அந்த அடியவருக்கு மிக்கப் பரிவுடன் தன் ஆசியை வழங்க, சீர்காழிப் பிள்ளை ஆசனத்திலிருந்து எழுந்தார்.

சிவமகுடம்
சிவமகுடம்

``அடியவரே! முருகனார் சொன்னதுபோல் உன் உருவில் உன் தலைவரையே கண்டோம். எம் அகம் மகிழ்ந்தது. வாகீசர் வாக்கு பொய்க்காது. அவர் அருளியது போல் எம்பெருமானின் திருவருள் தங்களிடம் நீங்காதிருக்கும். என் சார்பில் திருச்செங்காட்டங்குடி சிறுத் தொண்டருக்கு வணக்கங்களைத் தெரிவியுங்கள்’’ என்றார்.

அவர் வணங்கிட, அங்கிருந்த மற்ற அடியார்களும் எழுந்து நின்று `அடியார்க்கு அடியேன் போற்றி’ என்று தங்களின் வணக்கத்தையும் தெரிவித்தார்கள்.

சிறுத்தொண்டர்! அடியார்களும் பெரியபுராணம் போன்ற ஞான நூல்களும் போற்றும் பரஞ்சோதியார், பல்லவனின் தளபதியாய் சாளுக்கியம் சென்று வாதாபியை வென்று வந்த மாவீரர். பின்னர் மறக்கருணையைக் களைந்து அறக்கருணையை ஏற்று எப்போதும் சிந்தையில் சிவத்தைத் தொழுது நின்ற திருக்கதை அளப்பரிய மகிமையை உடையது. பிள்ளைக்கறி கேட்டு சிவம் அருளாடல் புரிந்த திருக்கதை ஒன்றே போதும் இவரின் மாண்பை விளக்க.

ஆகவேதான் பிற்காலத்துப் பெரியவர்கள் பலரும் இந்த நாயனாரைப் பலவாறுப் போற்றிச் சிறப்பித்தார்கள்.

பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ்

படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்

செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்

றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை

நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்

னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்

புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்

போற்றியவர் சிவனருளே பொருந்தினாரே.

என்று சிறுத்தொண்டரின் சிறப்பைப் போற்றுகிறது பாடல் ஒன்று. நாமும் சிறுத் தொண்டரின் திருவடியைப் போற்றி, கதைக்குள் நகர்வோம்.

திருப்புகலூரில் இப்படியான ஆன்மிகச் சங்கமம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே வேளையில் சிற்றாறு ஒன்றின் கரையை அடைந்திருந்தான் இளங்குமரன்.

அந்த ஆற்றிலிருந்து சற்றே விலகி... வெள்ளக் காலத்தில் ஆற்றின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும் கரை போன்று அமைந்திருந்த அந்த மேடான பகுதியில் ஏறி நின்று, அந்தச் சிறு நதியை உற்று நோக்கினால் ஓர் அற்புதம் புலப்படும். மிகத் தெளிவான நீரோட்டத்துடன் திகழும் அந்த நதி, தூரத்தில் வைகையின் கிளையாகப் பிரிவது தெரியும்.

சிவமகுடம் - பாகம் 2 - 54

ஆம், வைகையின் கிளை நதிதான் அது. கிருதமால் என்று பெயர் (தற்போது இந்த நதி இல்லை). திருவரங்கத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் பிரிந்து செல்ல இரண்டுக்கும் நடுவே திருவரங்கனின் கோயில் அமைந்திருப்பது போல, வைகைக்கும் கிருதமால் நதிக்கு நடுவேயும் ஒரு விண்ணகரம் அமைந்திருந்தது. அதற்குள் எழுந்தருளி யிருக்கும் பெருமாளுக்கு கூடலழகர் என்று திருப்பெயர்.

சனத்குமாரர் எனும் முனிவருக்கு அருள்வழங்கும் பொருட்டு இங்கே இந்தப் பெருமாள் எழுந்தருளியதாக அந்த விண்ணகரத்தைச் சேர்ந்த பெரியவர்கள் திருக்கதை சொல்லிக் கேட்டிருக்கிறான் இளங்குமரன்.

தான் விரட்டி வந்த முரடன் அகப்பட்டதும் அவன் வசம் அடிகளார் கொடுத்தனுப்பிய ரகசிய வஸ்துவைக் கைப்பற்றிவிட்டான் என்றாலும், தொடர்ந்த பயணத்துக்கு இடையே இளங்குமரன் சற்று அயர்ந்த தருணத்தில், முரடன் தப்பிவிட்டான். அதன் பொருட்டு எழுந்த அயர்ச்சியும், பயணத்தால் உண்டான களைப்பும் சேர்ந்து இளங்குமரனை இந்த நதிக்கரைக்கு அழைத்து வந்துவிட்டன.

அவனுடைய புரவியும் மிகுந்த களைப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும். அவன் அதன் முதுகிலிருந்து இறங்கிக்கொண்டதும் வேக வேகமாகச் சென்று ஆற்றுநீரைப் பருகத் தொடங்கிவிட்டது. இளங்குமரனும் கிருதமாலின் தெளிந்த நீரில் இறங்கினான். அதன் குளிர்ச்சி அவன் மேனியெங்கும் பரவி புதுவித உற்சாகத்தை உற்பத்தி செய்தது அவனிடம்.

கைகளால் நீரை அள்ளி முகத்தில் தெளித்துக்கொண்டான். களைப்பு விடைபெற; உற்சாகம் இன்னும் அதிகமானது. மீண்டும் ஒருமுறை நீரை அள்ள குனிந்தவன், பலவித மலர்களைச் சுமந்து வரும் நீரோட்டத்தை ரசிக்கத் தலைப்பட்டான். சலசலக்கும் நீரின் ஓசையோடு தூரத்தே ஒலித்த விண்ணகரத்தின் மணியோசையும் இணைந்துகொள்ள... இளங்குமரனின் சிந்தனை `சத்திய விரதன்’ எனும் மன்னின் கதையை அசைபோட ஆரம்பித்தது.

அந்த மன்னனும் இப்படித்தானே இந்த நதியில் நின்றிருப்பான். அவனும் தன்னைப்போன்றே கைகளால் நீரை அள்ளும்போதுதானே பரந்தாமக் கடவுள், மீனாக வந்து அவன் கைகளில் தவழ்ந்தார் என்று திருக்கதை சொல்லப்படுகிறது.

அப்படியே ஆற்றுக்குள் அவன் நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்த சிறு பாறையின் மீது அமர்ந்துகொண்டான். நதி பற்றிய திருக்கதையைச் சிந்திப்பது அவன் மனத்துக்குப் பெரிதும் திருப்தியை அளித்தது.

சத்தியவிரதன் என்ற மன்னன் கிருதமால் நதியில் இறங்கி, சந்தியா கால வணக்கத்தின் பொருட்டு நதியின் நீரை கைகளில் அள்ள முற்படும்போது சிறு மீன் ஒன்று அவன் கைகளில் அகப்பட்டது. அதை நீரில் விட்டுவிட்டு மீண்டும் கடமையில் இறங்க அவன் முயற்சி செய்தபோது... மீண்டும் மீண்டும் அவன் கரம் வந்து சேர்ந்தது மீன்.

இது ஏதோ இறைச் சித்தம் என்று நினைத்த மன்னன், அதை தன் கமண்டல பாத்திரத்தில் இட்டுவிட்டு வந்து கடமையை நிறைவேற்றினான். கரையேறினால் பாத்திரத்தை மீறி வளர்ந்திருந்தது மீன். அரண்மனைக்குச் சென்று பானை நீரில் மீனைச் சேர்த்தான் மன்னன். அடுத்த சில நாழிகைகளில் பானையை மிஞ்சி வளர்ந்து விட்டது. தொடர்ந்து கிணற்றில் சேர்க்கப் பட்டது. அங்கும் மீன் பெரிதாய் வளர்ந்தது. கிணற்றிலிருந்து ஏரி, ஏரியிலிருந்து மீண்டும் நதி என்று சேர்க்கப்பட்ட மீன் அங்கும் உருவத்தில் பெரிதாகி வளர, நிறைவில் சமுத்திரத்தில் விடப்பட்டது.

தொடர்ந்து மாலவனின் அவதாரமே என்று மன்னனுக்கு உணர்த்தப்பட, மாபெரும் பிரளயத்திலிருந்து அந்த மச்சம் மன்னனையும் அவனைச் சார்ந்தோரையும் ரட்சித்து, உலகம் மீண்டும் உய்வடைய அருள்பாலித்தது என்று புராணப் புலவர்கள் மிகச் சிலிர்ப்புடன் திருக்கதையைச் சொல்வார்கள்.

மீண்டும் ஒலித்த விண்ணகரத்தின் மணியோசை இளங்குமரனின் சிந்தையைக் களைத்தது. விண்ணகரத்தை நோக்கினான். ஒருவித பரவசத்துக்கு ஆளானது அவன் மனது.

மழைக் காலமான நான்கு மாதங்களுக்குத் தேவையான பதார்த்தங்களை, மற்ற மாதங்களில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவுக்கு வேண்டியதை பகலில் சம்பாதிக்க வேண்டும். முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே சேர்க்க வேண்டும். மோட்சத்துக்கு வேண்டியதை இந்தப் பிறவியிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்!

மோட்சத்துக்காக நாம் சேமிக்க வேண்டியது புண்ணியத்தை அல்லவா? இதற்கு வழிகாட்டக் கூடியவன் இறைவன் மட்டுமே.

ஆகவேதான் அவனின் அருள்பெறவேண்டி, அவனின் அணுக்கத்தை வேண்டி எண்ணற்ற விண்ணகரங்களை, சிவாலயங்களைப் பெரியோர்கள் மண்ணில் நிறுவியிருக்கிறார்கள் போலும்.

மனத்துக்குள் சொல்லிக்கொண்டவன் கரம்கூப்பி வணங்கினான் விண்ணகரத்துப் பெருமாளை.

கிருதமால் நதியில் நின்று இளங்குமரன் விண்ணகரை வணங்கிக் கொண்டிருக்க, மாலிருஞ்சோலையின் காட்டாறு ஒன்றின் நடுவில் இருந்த திட்டு ஒன்றில் கண்மூடி அமர்ந்திருந்த பேரரசி - மங்கையர்க் கரசியார், மனத்துக்குள் தம் சிவத்தை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பிராந்தியம் எங்கும் சிவலிங்கங்கள் வியாபித்திருக்கும் அதியற்புதக் காட்சியை அவரின் மனத்திரை அவருக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

எம்பெருமானின் பூவாக்கு கிடைக்கும் வரை நீண்டது அந்தப் பேரரசியின் தியானம்!

- மகுடம் சூடுவோம்...