Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்!

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

பண்டைய காலத்தில் பலவகை வடிவங்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன சுவடிகள். நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்பதும் அறிந்திருப்பதும் நீள்வடிவ செவ்வகச் சுவடியையே.

சிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்!

பண்டைய காலத்தில் பலவகை வடிவங்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன சுவடிகள். நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்பதும் அறிந்திருப்பதும் நீள்வடிவ செவ்வகச் சுவடியையே.

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்
சந்தியா காலத்துச் சூரியன் மேற்கில் சாயும் நேரம். மலைமுகடுகளில் மறைவதற்கு முன் அழகோவியம் ஒன்றைப் படைத்துவிடவேண்டும் என்று முனைப்பு கொண்டவன் போல், ஆதவன் தன் செங்கிரணங்களை அழகர்மலை தீரமெங்கும் அள்ளித் தெளித்திருந்தான்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிரதிபலிப்பு மாலிருஞ்சோலையின் அடிவானிலும், அந்த மலையின் மேனியில் வழியும் சிற்றருவிகளிலும், அருவிச் சாரலின் விளைவாய் தாவர இலைகள், பூக்கள் மற்றும் நாணல்களின் நுனியில் தேங்கி நின்ற நீர்த் திவளைகளிலும் இளங்கனலின் வண்ணத்தை அடித்திருந்தது!

அந்தச் சூழலில் அவ்வண்ணத்துடன் திகழும் அந்த மலைப் பிராந்தியம், பார்ப்பவர் கண்களுக்கு பொன்மலையாய் ஜொலிப்பதுடன், பொன்னார் மேனியனை தேன்மதுரச் சுந்தரனை நினைவூட்டி மனத்தால் அவனைத் தியானிக்கும் பெரும்பாக்கியத்தை நிச்சயம் அளிக்கும். அப்படியிருக்க, காட்டாற்றின் நடுவே பாறைத் திட்டில் ஏற்கெனவே சிவத் தியானத்தில் இருக்கும் பாண்டிமாதேவியார் கண் திறந்தால், அவரின் புறக்கண்களுக்கும் அகக்கண்ணுக்கும் கிடைக்கும் காட்சி குறித்து கேட்கவா வேண்டும்!

பிற்கால குறவஞ்சிப் பாட்டொன்று இப்படிப் பாடுகிறது:

கிளைகளாய் கிளைத்த

பல கொப்பெலாம்

சதுர்வேதம் கிளைகளீன்ற

களையெல்லாம் சிவலிங்கம்

கனியெல்லாம் சிவலிங்கம் கனிகளீன்ற

சுளையெல்லாம் சிவலிங்கம்...

- என்று போற்றுகிறது. இப்பாடலைப் பாடிய புலவருக்குக் கிளைக் கொப்புகள் நான்மறைகளாய்த் தோன்ற, அக்கிளைகள் ஈன்ற கனிகளும் கனிகள் ஈன்ற சுளைகளும் சிவலிங்கமாய்த் தென்பட்டனவாம்! இங்கோ, செங்கிரணங்களால் கனலாய் ஜொலிக்கும் மலையே பொன்னார்மேனியனாய்க் காட்சி தந்தது தேவியாருக்கு.

தானும் தன்னைச் சேர்ந்தோரும் அவன் மடியில் சிறுத் துரும்புகளாய்த் தவழ்வதுபோல் தோன்ற, கூடவே மலையின் பாறைகள், மரங்கள், மலர்கள் அனைத்தும் சிவரூபமாய், லிங்க மேனிகளாகத் தோன்றின! அந்த அற்புதக் காட்சியில் சில கணத் துளிகள் மெய்ம் மறந்து அப்படியே சிலையென அமர்ந்துவிட்டார் பாண்டிமாதேவியார். சட்டென வீசியக் காற்றில் கிளைவிடுத்து உதிர்ந்த கொன்றை மலரொன்று அவரின் திருமுகத்தில் விழுந்து, அவரின் புலன்களை உசுப்பியது.

சிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்!

கண் மலர்ந்தவர் தன் மடியில் பூ கிடப்பதைக் கண்டதும், சற்று முன் தியானக் காட்சியில் சிவம் தந்த பூவாக்கை நினைவுகூர்ந்தார்.

`ஆரத்தில் வழியுண்டு மறைக்காட்டில் மலர் உண்டு’

சிவம் தந்த மனத்தின் குரல் மீண்டும் சன்னமாய்ச் செவிகளில் ஒலிப்பதாக உணர்ந்தவர், வைகையின் கரையில் யாளி மண்டத்து வாயிலிலிருந்து தான் புறப்பட்டபோது, பைங்கிளி கொண்டு வந்து ஒப்படைத்த ருத்ராட்ச ஆரத்தையே சிவனாரின் பூவாக்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை அறிந்தார்; மலர்ந்தார்.

தன்னுடைய கவச உடைக்கும் மேலாக இடைக்கச்சையில் பத்திரமாகப் பொதிந்து வைத்திருந்த அந்த ஆரத்தை, பயபக்தியோடு மெள்ள வெளியே எடுத்தார்; கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு அந்த ஆரத்தை வலக்கரத்தில் ஏந்தியபடி உற்றுக் கவனித்தார்.

ஏற்கெனவே ஓரிருமுறை அந்த ஆரத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டார். ஆரத்தில் ருத்ராட்சங்களுக்கு இடையே கோக்கப்பட்டிருந்த வட்டச் சுவடிகளில் ஒன்றின் வரிகளை மட்டுமே தெளிவாகப் படித்தறிய முடிந்தது அவரால். பழுப்பும் பழைமையும் ஏறாத அதன் நிலை, அது புதிதாகக் கோக்கப்பட்ட சுவடி என்பதைக் காட்டியது.

`பொங்கிதேவியால் அனுப்பப்பட்டது’ என்ற தகவலைத் தாங்கி யிருந்த அந்தச் சுவடி, பொங்கியால் புதிதாகக் கோக்கப்பட்டிருக்கும் என்பதை தேவியாரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் மற்றச் சுவடிகளின் வரிகள், புரிந்துகொள்ள முடியாதபடி சூட்சுமம் நிறைந்ததாய்த் திகழ்ந்தன. தருணம் வாய்க்கும்போது உரிய வல்லுநர்களை வைத்து ஆய்ந்தறியலாம் என்று அப்போது முடிவு செய்திருந்தார் பாண்டிமாதெவியார்.

ஆனால் இறையனார் அளித்த பூ வாக்கு, ஆரத்தின் சூட்சுமத்தை ஆய்ந்தறிவது அவசர அவசியம் என்பதை உணர்த்திவிட்டது. ஆகவே, தாமதிக்காமல் ஆரத்தை ஆய்வுசெய்ய ஆயத்தமானார்.

பண்டைய காலத்தில் பலவகை வடிவங்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன சுவடிகள். நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்பதும் அறிந்திருப்பதும் நீள்வடிவ செவ்வகச் சுவடியையே. அது மட்டுமன்றி குறுஞ்சுவடி, சுருள் சுவடி, வட்டச் சுவடி, லிங்கச் சுவடி என பல வடிவங்களில் சுவடி ஓலைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன.

இவற்றில் குறுஞ்சுவடியானது நீள்வடிவச் செவ்வகச் சுவடியைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். எல்லோரும் அறியத் தக்க பாசுரத் தொகுப்புகள், இலக்கிய கோப்புகள், சோதிட விளக்கங்கள் முதலானவற்றுக்கு இவை இரண்டும் பயன்பட்டுள்ளன.

உருவில் லிங்கம் போன்றே கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் லிங்கச்சுவடிகளில் பெரும்பாலும் சைவ இலக்கியங்கள் - விளக்கங்கள் இடம்பெற்றிருக்குமாம். இவை தவிர, சுருள் மற்றும் சக்கரச் சுவடிகளில் பெரும்பாலும் மந்திர அட்சரங்கள், சூத்திரங்கள் மற்றும் சூட்சுமத் தகவல்களைத் தொகுத்து வைப்பார்களாம்.

தற்காலத்தில் இவ்வகைச் சுவடிகளைப் புழக்கத்தில் காண்பது அரிது. எனினும் மதுரை சரஸ்வதி மஹாலிலும், சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலும் அரிய வகைச் சுவடிகளைப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். ஆய்வாளர்கள் விரும்பினால், முறைப்படி அனுமதி பெற்று ஆய்வு செய்ய இயலும் என்கிறார்கள்.

இவ்வகைச் சுவடிகளில் வட்ட வடிவச் சுவடிகளையே சக்கரச் சுவடிகள் என்பார்கள். நம் பாண்டிமாதேவியாரின் கரத்திலிருந்த ருத்ராட்ச ஆரத்திலும் இவ்வகைச் சுவடிகளே கோக்கப்பட்டிருந்தன. நான்கு ருத்ராட்சங்களுக்கு இடையே சில வட்டச் சுவடிகள் எனத் திகழ்ந்தது ஆரம்!

இருள் சூழத் தொடங்கிவிட்டபடியால் அருகில் தன் அணுக்கப் படை முகாமிட்டிருந்த குகைப் பகுதியை அடைந்தார். மலைப் பாறைகளே ஒன்றோடு ஒன்று சாய்ந்து குகைபோல் அமைந்திருக்க, உள்பகுதியில் ஒளிக்காக பந்தம் ஏற்றி வைத்திருந்தார்கள்.

வீரர்களின் சிர வணக்கத்தை ஏற்றபடி மகாராணியார் உள்ளே நுழைந்தார். தரை விரிப்பு ஆயத்தமாயிருந்தது. வசதியாக அமர்ந்து கொண்டவர், அருகிலிருந்த வீரனுக்குக் கண்களால் கட்டளையிட, அவன் பந்தம் ஒன்றைக் கொண்டு வந்து, தகுந்தவாறு நிலைபெறச் செய்து அந்த இடத்தில் அதிக வெளிச்சம் பாயச் செய்தான்.

சிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்!

மிகக் கவனத்துடன் ஆரத்தைப் பிரித்து, சுவடிகள் ஒவ்வொன்றாய், தன் அறிவுப்புலனுக்கு எட்டும் அளவில் ஆராய்ந்தார் பாண்டிமா தேவியார். பல நாழிகைகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு அவர் கண்ணில் தென்பட்ட சுவடியொன்றின் லிங்க முத்திரைகள் அவர் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. சுவடியில் லிங்க முத்திரைகளின் அருகிலிருந்த சில அட்சரங்களை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த அட்சரங்களை மாற்றி மாற்றிக் கோத்தபோது பெரும் ரகசியம் சொல்வதாய் உருவானது ஒரு வார்த்தை. அந்த வார்த்தை காட்டும் அடையாளத்தை இன்னும் தெளிவுபடுத்தும் புதியதொரு தகவலோடு அங்கே வந்து சேர்ந்தான் இளங்குமரன்!

பாண்டியப் பேரரசு குறித்து மங்கையர்க்கரசியார் தன் மனத்தில் உருவாக்கி வைத்திருக்கும் பெருந்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் அற்புதத் தகவல்தான் அது!

திருப்புகலூரில் முருகனாரின் இல்லத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை யும் உவகையையும் அளித்திருந்த அவர்களின் கூடுகையும் உரையாடலும் ஏறக்குறைய நிறைவடையும் தருணம், பரஞ்ஜோதியாரின் சீடர் அதிக நெகிழ்ச்சிக்கு வசப்பட்டிருந்தார்.

முருகனாரிடமும் மற்ற அடியார்களிடமும் விடைபெற்றுப் புறப்பட யத்தனித்த சீடர், வாகீசப் பெருமானை வணங்கி எழுந்தார். தொடர்ந்து சீர்காழிப்பிள்ளையையும் வணங்கி நின்றவர், குரல் தழுதழுக்க ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

``ஸ்வாமி! அடியேனிடம் விண்ணப்பம் ஒன்று உண்டு...’’

நெகிழ்ச்சி மிகுதியால் வார்த்தைகள் தடைப்பட, பேசுவதற்குச் சிரமப்பட்ட அந்தச் சீடரை ஆற்றுப்படுத்திய சம்பந்தப் பெருமான், ``விண்ணப்பம் எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்...’’ என்றார் கனிவுடன். விழிகளில் துளிர்த்த நீரைத் துடைத்தபடி பேசினார் சீடர்.

``சுவாமி! தாங்கள் இருவரும் எங்கள் திருமறைக்காடு தலத்துக்கு விஜயம் செய்ய வேண்டும். அதனால் அவ்வூரின் மக்கள் மகிழ்வார் கள்...’’

திருமறைக்காடு - இந்தப் பெயரைக் கேட்டதுமே வாகீசர், சீர்காழிப்பிள்ளை இருவரின் முகமும் அன்றலர்ந்த தாமரையாய் மலர்ந்தன.

மறைகள் விருட்சங்களாகி நின்று ஈசனை வழிபட்டுப் போற்றிய புண்ணியத் தலம் அல்லவா அது. அதனால்தானே அந்தத் தலத்துக்கு திருமறைக்காடு வேத வனம் என்றெல்லாம் எனும் திருப்பெயர்கள் வாய்த்தன! சிவக் கட்டளைக்கு இணங்க தென்னகம் வந்த குறுமுனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருக்குச் சிவம் திருக்கல்யாண கோலம் காட்டிய தலங்களில் இதுவும் ஒன்றல்லவா.

இவை மட்டுமா?

சப்த விடங்க தலங்களில் இரண்டாவது தலம், பதினாறு சபைகளில் 12-வது தேவபக்த சபை எனும் சிறப்புக்குரிய பதி, நாமகள் கலைகளின் வடிவமாக நின்று சிவ வழிபாடு செய்த க்ஷேத்திரம்... இப்படி பல மகிமைகள் உண்டே திருமறைக்காட்டுக்கு.

எல்லாவற்றுக்கும் மேலாக... `வேதாரண்யம் விளக்கழகு’ என்று சிறப்புச் சொல்வழக்கு பெற்ற அந்தத் தலத்தின் கருவறைத் தீபத்தைச் சுடர்விடச் செய்ததற்குப் பலனாக, எலி ஒன்று மறுபிறப்பில் மகாச் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றது என்றால், அற்புதமான அந்தத் தலத்தின் பெருமையை என்னவென்பது?!

ஆக, அந்தத் திருத்தலத்தின் பெயரைக் கேட்டமாத்திரத்தில் வாகீசரும் சம்பந்தப் பெருமானும் பேருவகைக் கொண்டதில் வியப்பில்லைதான். இருவரும் அறிவார்கள், அத்தலத்தின் பழம் பெருமைகளை. இருப்பினும் அவற்றைப் பரஞ்சோதியாரின் சீடரது வாய்மொழியில் கேட்க விரும்பினார்கள். மட்டுமன்றி, அதன் மூலம் அங்கிருக்கும் மற்றுமுள்ள அடியார்களும் திருமறைக் காட்டின் உன்னதத்தை அறிவார்களே! ஆகவே, திருக்கதைகளைச் சொல்லும்படி சீடரைப் பணித்தார்கள்.

அவர்களின் அன்புக் கட்டளையைத் தன் பாக்கியமாகக் கருதிய சீடர், திருமறைக்காட்டின் மகிமைகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லத் தொடங்கினார். அந்தத் திருக்கதைகள் அளித்த உந்துதல், வாகீசர் திருஞானசம்பந்தர் இருவருக்கும் அந்தத் தலத்துக்கு விரைவில் செல்ல வேண்டும்; மறைக்காடரை கண்ணார தரிசிக்க வேண்டும் எனும் பேராவலைத் தந்தது!

ஆம், பாண்டிமாதேவியருக்கு அளித்த பூ வாக்கை நிறைவேற்ற அவர்களைக் கருவியாக்கிச் செயல்படுத்தியது சிவப்பரம்பொருள்!

- மகுடம் சூடுவோம்...