மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 56

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

ஒரு காலத்தில் அந்தக் கோயிலில் எலி ஒன்று வசித்ததாம். ஒருநாள் அதற்கு உண்ண எதுவும் கிடைக்கவில்லை. கருவறைக்கு அருகில் அணையும் நிலையிலிருந்த விளக்கில் ஏறி, அதிலிருந்த எண்ணெய்யைக் குடிக்க முயன்றதாம்.

அருள் கதைகளால் நிறைந்து திகழ்வன, இந்தப் புண்ணிய பூமியில் துலங்கும் சிவத் தலங்கள் பலவும். ஒரு கதை சிவப் பரம் பொருளின் கருணையைச் சொன்னால், மற்றொன்று அவரின் வீரத்தைச் சொல்லும்.

காமனை எரித்தது, காலனை உதைத்தது, வேழத்தின் தோலுரித்தது, திரிபுரம் அழித்தது, பிரம்மனின் சிரம் கொய்தது, தட்சனின் யாகத்தை சிதைத்தது, ஜலந்திரனை வதைத்தது எனச் சிவனாரின் வீரச் செயல்களைச் சில கதைகள் சொல்லும் எனில், உமைக்கு மேனியில் இடம் அளித்தது, அமரரின் துயர் தீர்க்க ஆலகால விஷம் அருந்தியது என அவரின் தண்ணருள் நிரம்பிய அருள்திறனை வேறு கதைகள் சொல்லும்.

சிவனாரின் திருக்கதைகள் மட்டுமா, அவரின் அருளைப் பெற்ற அருளாளர்களின் கதைகளும் பிறவாப் பெருநிலையைத் தரும் பெரும் வல்லமை பெற்றவை. அப்படித்தான் எலி ஒன்று மகாபலி ஆன திருக்கதையை, முருகனார் அகத்தில் உள்ளோரிடம் அழகுபடச் சொல்லிக்கொண்டிருந்தான் பரஞ்ஜோதி யாரின் சீடன்.

``எங்கள் ஊர்க் கோயில் விளக்கு அலங்காரத்துக்குப் பெயர் பெற்றது. மாலைச் சந்தியில் ஆதவன் கடலில் இறங்கியபிறகும் கடற்கரையில் வெளிச்சத்துக்குக் குறை இருக்காது. ஏன் தெரியுமா, மறைக்காடர் கோயிலில் ஒளிரும் தீபங்கள் போதும். அவற்றின் பேரொளியே வெளிச்சம் பாய்ச்சி, கடலோடிய பரதவர்கள் கரை திரும்புவதற்கு வழிகாட்டி விடும்.

சிவமகுடம் - பாகம் 2 - 56

ஆம், எண்ணிக்கையில் அதிகமாய் அகல்களும், நிலை விளக்கும், கிளை விளக்கும், தூங்கா விளக்கும், , தூண்டாமணி விளக்கும், சர விளக்கும், நெடுநிலை விளக்கும், பாவை விளக்குமாக தீபச் சுடர்களால் ஒளிரும், எங்கள் மறைக்காடரின் கோயில்.

ஒரு காலத்தில் அந்தக் கோயிலில் எலி ஒன்று வசித்ததாம். ஒருநாள் அதற்கு உண்ண எதுவும் கிடைக்கவில்லை. கருவறைக்கு அருகில் அணையும் நிலையிலிருந்த விளக்கில் ஏறி, அதிலிருந்த எண்ணெய்யைக் குடிக்க முயன்றதாம். அப்போது அதன் மூக்கின் நுனி பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டது. அதனால் அந்த விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்தது. எலியோ அஞ்சி ஓடிவிட்டது.

அப்படி விளக்கைத் தூண்டிய புண்ணியத்தால், மறுபிறவியில் மகா சக்கரவர்த்தியாகப் பிறந்ததாம். அவரே, மகாபலி மன்னர் என்று எங்கள் ஊர்ப் பெரியவர்கள் திருக்கதை சொல்வார்கள்...’’ என்று சொல்லி நிறுத்தியவன் சில நொடிகளை ஓய்வுக்கு எடுத்துக்கொண்டு, பிறகு விழிகள் விரிய தன் வியப்பை வெளிப்படுத்தினான்...

``ஐயனின் அருளை என்னவென்பது... இன்ன பலன் கிடைக்கும் என்று தெரியாமல், இதுதான் முறை என்று எதையும் அறியாமல் செய்த புண்ணிய காரியத்துக்கே சக்கரவர்த்தி ஆகும் பாக்கியத்தைக் கொடுத்தார் என்றால்... காரண காரியம் தெரிந்து, முறை அறிந்து உரிய விதிகளோடு செய்யும் வழிபாட்டுக்கு அவர் எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அருள்வார்?’’

வியப்போடு அவன் கேட்ட கேள்விக்கு புன்னகையையே பதிலாக அளித்தனர் அருளாளர்கள் இருவரும்.

அவன் தொடர்ந்தான்...

``அதுமட்டுமா? எங்கள் ஊருக்கு இன்னும் பல பெரும் சிறப்புகள் எல்லாம் உண்டு. மறைகள் வந்து வழிபட்ட ஊர். ஆதலால் திருமறைக்காடு என்ற திருப்பெயர் எங்கள் ஊருக்கு உண்டு என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும். வேறு பெயர்களும் உண்டு. மறைவனம், சேதுவனம், ஆதிசேது, சத்யகிரி... இப்படியும் சில ஞானநூல்கள் மறைக்காட்டின் மகிமையைச் சொல்கின்றன.

ராமாயணக் கதை தெரியுமன்றோ... ராமபிரான் லங்காபுரிக்குச் செல்ல சேதுவில் பாலம் அமைக்குமுன், மறைக்காட்டு சமுத்திர தீரத்தில் பாலம் அமைத்தாராம். ஆகவே, எங்கள் ஊருக்கு ஆதிசேது என்ற பெயரும் உண்டு என்று ஊர்ப்பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எங்கள் ஊரில் அப்பன் மறைக்காட்டுப் பெருமான் வரம் வாரி வழங்கும் கருணாமூர்த்தி என்றால், எங்கள் அம்மை கற்பக விருட்சம். காமதேனு என்றும் சொல்லலாம். கேட்டதையெல்லாம் அருள்வாள். அன்னையின் திருநாமம் என்ன தெரியுமா... யாழைப் பழித்த மொழியம்மை. இனிமையான குரலைப் பெற்றவள் என்பதால் இந்தப் பெயராம். அதனால்தானோ என்னவோ... கலைகளுக்கெல்லாம் தெய்வமான கலைவாணி எங்கள் தலத்தில் வீணை இல்லாமல் காட்சி தருகிறாள் போலும்...’’

தனக்குத் தெரிந்தவை எல்லாவற்றையும் எவ்வித மிகையும் இல்லாமல், அதேநேரம் தகுந்த விளக்கத்துடன் அவன் விவரித்ததை ரசித்துக் கொண்டிருந்த சீர்காழிப் பிள்ளையின் திருமுகம், மறைக்காட்டின் விளக்கொளியாய் ஒளிர்ந்தது. அதைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் வாகீசர்.

சிவமகுடம் - பாகம் 2 - 56

`யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு. ஆண்டவனின் பெருமையை அவன் உறையும் ஆலயத்தின் மகிமையை அடியார் சொல்ல, அதை அந்தப் பெருமானின் அருள் குழந்தையே செவிமடுக்கும் காட்சியைக் காணும் பேறு, பெரும் புண்ணியம் செய்தவருக்கு அல்லவா கிடைக்கும். எனில், இந்த முருகனாரும் இன்று அவர் அகத்தில் கூடியிருக்கும் அருளாளர்கள் அனைவருமே பெரும் புண்ணியம் செய்தவர்கள்தான். அவர்களில் அடியேனும் இருக்கிறேன் எனில்... அது ஆண்டவன் அளித்த வரம்’

- சிந்தனை ஓட்டத்தில் உள்ளுக்குள் சிலிர்த்துக்கொண்டிருந்தார் நாவுக்கரசுப் பெருமான். ஆம்! அவரைப் பொறுத்தவரையிலும் சீர்காழிச் சிவக்கொழுந்தை முருகனின் அம்சமாக - சிவனாரின் பிள்ளையாகவே கண்டார். ஆகவேதான் திருக்கதையை ரசிக்கும் பிள்ளையின் திருமுக பாவனைகளைத் தான் ரசித்தார்; வியந்தார்.

அந்தத் திருமுகத்தில்தான் என்னவொரு பொலிவு; ஞானம்!

திருநாவுக்கரசர் வியந்தது போலவே பிற்காலத்துப் புலவர்களும் ஞான முதல்வராம் திருஞான சம்பந்தரின் ஞானத் திருவடிவை மகிழ்ந்து போற்றியுள்ளார்கள். அவர்களில் சேக்கிழார் பெருமான் அருளிய பாடல் அற்புதமானது.

ஞானத்தின் திருவுருவை

நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி

மண்ணில்வளர் மதிக்கொழுந்தை

தேனக்க மலர்க்கொன்றைச்

செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தின் எழுபிறப்பைக்

கண்களிப்பக் கண்டார்கள்...

என்று பாடிப் பரவுகிறார் சேக்கிழார் பெருமான்.

சிவனருள் மிகுந்த கலைஞானமே குழந்தையாய்ப் பிறந்து வந்தால் எப்படியி

ருக்குமோ, அப்படி காட்சி தருகிறாராம் சம்பந்தர். அது மட்டுமா? நான்கு மறைகளுக்கும் பெருந்துணையாய் வந்தவராம்! விண்ணில் மட்டுமல்ல, தண்ணொளி தரும் வெண்ணிலவு மண்ணிலும் உலவும் என்பதைக் காட்டுவது போன்று வந்து பிறந்திருக்கும் ஞான ஒளிச் சுடராம் அவர்!

இவை எல்லாவற்றையும்விட நிறைவாய் ஒரு கருத்தைச் சொல்கிறார் சேக்கிழார். அதாவது, தேன் சிந்தும் கொன்றை மலர்களைச் சூடிக் கொண்டிருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமையை, ஏழு இசைகளில் கோத்துப் பாடுவதற்காக, அந்த ஏழு இசைகளுமே ஓர் உருக்கொண்டு வந்து மண்ணில் சம்பந்தப் பிள்ளையாய்ப் பிறந்திருக்கிறது போலும் என்று வியந்து போற்றுகிறார் சேக்கிழார் பெருமான்.

முருகனார் இல்லத்தில் அன்றைய பொழுதில் திருநாவுக்கரசரின் அகக் கண்ணிலும் புறக் கண்ணிலும் ஞானக் கொழுந்தாகவே காட்சி தந்தார் திருஞானசம்பந்தர்.

பரஞ்ஜோதியாரின் அணுக்கன் திருக்கதை சொல்லி முடித்து, மீண்டும் ஒருமுறை மறைக் காட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க, வாகீசப் பெருமான் அருகில் வந்த அடியவர் ஒருவர், அவரின் செவியில் ஏதோ ரகசியம் உரைத்தார்.

அவர் தகவலைச் சொல்லச் சொல்ல வாகீசப் பெருமானின் திருமுகத்தில் பலவித மான உணர்ச்சிக் கொந்தளிப்புகள்!

நிறைவில் தன்னையும் அறியாமல் உரக்கக் கேட்டார்:

``பாண்டிமாதேவியாரா... யார் நம் சோழர்கோன் பாவையா? பழையாறை இளவரசியைத்தானே சொல்கிறீர்?’’

`பாண்டிமாதேவியார்' என்ற பதத்தை அவர் உச்சரிக்கவும், அங்கிருந்த அனைவரின் கவனமும் திருநாவுக்கரசரின் பக்கம் திரும்பியது.

சீர்காழிப் பிள்ளை தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றது!

திருமாலிருஞ்சோலை மலைக்குகையில் வாட்டமான ஒரு சிறு பாறையையே ஆசன

மாகக் கொண்டு, அதன் மீது அமர்ந்திருந்தான் இளங்குமரன். அவன் எதிரில் பாறைத் திண்டு ஒன்றின்மீது சாய்ந்தபடி, சுவடியில் தான் கண்டுகொண்ட வார்த்தையையும் இளங்குமரன் கொண்டு வந்த தகவலையும் இணைத்துத் தன் சிந்தையில் உதித்த யூகக் கணிப்பை எடைபோட்டுக்கொண்டிருந்தார், பாண்டிமாதேவியார்.

ஓலைச் சுவடி அவருக்களித்த ஒற்றை வார்த் தையின் விளக்கம், மிகத் தெளிவாகப் புலப்படத் தொடங்கியது அவருக்குள்!

- மகுடம் சூடுவோம்...

ஸ்ரீசக்ர தரிசனம்!

சிவமகுடம் - பாகம் 2 - 56

சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு.

இங்குள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தில், அர்த்தமேரு ஸ்ரீசக்ர தரிசனம் விசேஷம். 45 திரிகோணங்களுடன் திகழும் இந்தச் சக்கரம் 'அஷ்ட கந்தம்' எனும் எட்டு வகை மூலிகைகளால் செய்யப்பட்டது. ஆகவே, இந்த ஸ்ரீசக்ர மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம்- புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசித்து வழிபட்டால், மனக் கவலைகள் தீரும்; சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

- கே.வீரமுத்து, சென்னை-21