Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 57

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ஆங்காங்கே தீப ஸ்தானங்களில் ஏற்றப்பட்டிருந்த பந்தங்கள் யாவும் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன என்றாலும், காற்று அவற்றையும் விட்டு வைக்கவில்லை.

சிவமகுடம் - பாகம் 2 - 57

ஆங்காங்கே தீப ஸ்தானங்களில் ஏற்றப்பட்டிருந்த பந்தங்கள் யாவும் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன என்றாலும், காற்று அவற்றையும் விட்டு வைக்கவில்லை.

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ழகு ததும்பும் மாமதுரையின் பொன்மாலைப் பொழுது மெள்ள மயங்கி, அந்த மாநகரின் எழிலுக்கு மேலும் எழில் சேர்க்கும்விதமாய்ச் சந்திரோதயத்துக்கு வழிவிட்டது. பூரணச் சந்திரனின் பொன்னொளிப் பொழிவால், பாண்டியன் மாளிகை யின் மகுடமாடங்கள் எல்லாம் புதுவிதமான வண்ணக் கலவையை ஏற்று, கற்பனைச் சரிதத்தின் வண்ணச் சித்திரங்களாய்க் காட்சி தந்தன.

கோட்டையின் பிரதான வாயிலில்... வெகு நாள்கள் கழித்து அரண்மனைக்கு எழுந்தருளப்போகும் சக்ரவர்த்திகளை வரவேற் கும் விதமாய் அமைக்கப்பட்ட தோரணப் பந்தலின் முத்தாரங் களும் மணி விளக்குச் சரங்களும் வைகைக் காற்றின் விசையால் ஊசலாடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே தீப ஸ்தானங்களில் ஏற்றப்பட்டிருந்த பந்தங்கள் யாவும் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன என்றாலும், காற்று அவற்றையும் விட்டு வைக்கவில்லை.

ஆயினும் அவற்றில் ஒருசில, காற்றின் வேகத் துக்கு அணைந்து விடுவதுபோல் பாசாங்குக் காட்டினாலும், கூடுதலாய் ஊற்றப்பட்ட எண்ணெய்யின் உதவியோடு மீண்டும் சுடர் விட்டுப் பொலிந்தன. இப்படி, அவை அவ்வப்போது ஒளி குறைந்தும் மீண்டும் ஒளியூட்டியும் திகழ்ந்த காட்சி... மாமன்னரை வரவேற்க, விண்ணின் மீன்களும் தரையிறங்கி வந்தமர்ந்து ஆவலுடன் கண்சிமிட்டிக்கொண்டிருப்பது போல் பட்டது பேரமைச்சருக்கு.

சிவமகுடம் - பாகம் 2 - 57

இந்தக் காட்சிகளை மட்டுமன்றி, பந்தலை யொட்டி நிற்கவைக்கப்பட்டிருந்த பட்டத்துக் களிறின் பிளிறல், காவற் படைகளின் அணி வகுப்பு ஆயத்தம், அவர்களை வழிநடத்தும் விதமாய் அவ்வப்போது முழங்கி அடங்கிய சங்கநாதம்... ஆகிய அனைத்தையும் தன் மாளிகையின் பிறைமாடத்தில் அமர்ந்தபடி ஏக காலத்தில் கவனித்துக் கொண்டிருந்தார் பேரமைச்சர். திடுமென அவரின் சிந்தனையைத் தன்பாற் ஈர்த்தது ஒரு சத்தம்.

பிறைமாடத்துச் சாளரம் ஒன்றின் திரைச் சீலையை அலைக்கழித்த வண்ணம் சிறகடித்து உள்நுழைந்தது பச்சைக்கிளி ஒன்று. அதனால் உண்டான அரவம்தான் பேரமைச்சரைச் சலனப்படுத்தியது. மிக உரிமையோடு அமைச் சருக்கு எதிரில் இருந்த வேறோர் சாளரக் கதவம் மீது வசதியாக வந்தமர்ந்துகொண்ட அந்தக் கிள்ளை, `கீச்... கீச்’ என தன் மொழியில் ஏதோ பேச, அதைப் புரிந்துகொண்டவர்போல் புன்னகைத்தார் பேரமைச்சர்.

அப்படி அவர் புன்னகைத்ததும், புரியவைக்க வேண்டியதை அவருக்குப் புரியவைத்துவிட்டதாகத் திருப்திகொண்ட அந்தக் கிள்ளை, வந்தவழியே பறந்து சென்றது. பேரமைச்சரின் புன்னகை மேலும் வளர்ந்தது. ஆம்! இன்னும் சில நாழிகைகளில் தன் மாளிகைக்கு பேரரசியார் எழுந்தருளப் போகிறார். அவரின் விஜயத்தையே அவருடைய வளர்ப்புக் கிள்ளை அறிவித்துச் செல்கிறது என்பதை குலச்சிறையார் புரிந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - பாகம் 2 - 57

இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தன் கிள்ளைகளுக்கு மிக அற்புதமாய்ப் பயிற்சி கொடுத்திருந்தார் மகாராணியார். தகவல் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, சில தருணங் களில் உளவு வேலைகளுக்குத் தகுந்தபடியும் அவற்றை அவர் பழக்கப்படுத்தியிருந்த விதம் கண்டு பேரமைச்சரே பெரிதும் வியந்திருக்கிறார்.

மதில்புறத்தில் பேரிகை ஒன்று முழங்கியது.

அந்தப் பக்கம் திரும்பிய குலச்சிறையார் இரட்டைக் கயல்கள் பொறிக்கப்பட்ட செந்நிறக் கொடியுடன் வீரன் ஒருவன் உள் நுழைவதைக் கண்டார். `ஐந்து நாழிகை பயண தூரத்தில் இருக்கிறார் மாமன்னர்’ என்பதை அறிவிப்பதற்கான அடையாளமே அந்த வீரனின் வருகை!

பேரமைச்சர் ஏற்கெனவே மாமன்னரை வரவேற்க ஆயத்தமாகவே இருந்தார். வெகு நாள்களுக்குப் பிறகு மாமன்னரைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே, அவருக்குள் புதுவித உத்வேகத்தை அளித்திருந்தது. அத்துடன், பாண்டிமாதேவியார் தெரிவிக்கச் சொன்னதாக இளங்குமரன் வந்து சொன்ன தகவலும் இணைந்து, மாமன்னரைக் காணும் அவரின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் யாவையும் `மிக முக்கியமான முடிவுகளை நோக்கிப் பாண்டிய தேசம் நகரப் போகிறது’ என்பதை அவருக்கு உணர்த்தின. அதுகுறித்து மாமன்னருடன் அவர் பேசியாக வேண்டும். அப்போதுதான் மன்னரின் உள்ளக் கிடக்கையைத் துல்லியமாக அறியமுடியும்.

ஒருவேளை தன் திட்டங்களுக்கு மாமன்னர் ஒப்புக்கொள்ளவில்லை எனில் என்ன செய்வது என்ற எண்ணமும் அவருக்குள் எழாமல் இல்லை. மற்ற காரியங்களை ஒப்புக்கொண்டாலும் அந்த வஞ்சகனைத் தண்டிக்க நிச்சயம் மாமன்னர் சம்மதிக்க மாட்டார் என்பதையும் குலச்சிறையார் அறிந்தே வைத்திருந்தார்.

அவரை எப்படியேனும் சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்குத் தேவை அந்த வஞ்சகனின் சதித்திட்டங்களை நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்கள். அவற்றைப் பேரமைச்சர் குலச் சிறையார் ஒரளவு சேகரித்து வைத்திருக்கிறார்தான்.

ஆனாலும், மாமன்னரைத் திருப்திப்படுத்த அவை மட்டுமே போதாது. அதுகுறித்து மேலும் என்ன செய்யலாம் என்று அவர் சிந்தித்திருந்த வேளையில்தான் இளங் குமரன் நம்பிக்கை அளிக்கும் அந்தத் தகவலைக் கூறிச் சென்றிருந்தான்.

ஆகவே, இனியும் நடவடிக்கையைத் தாமதப் படுத்தக்கூடாது என்று முடிவெடுத்திருந்தார் பேரமைச்சர். எனினும், `பேரரசியாரும் வந்து விடட்டும். அவரிடமும் ஆலோசித்தால், மேலும்பல வலுவான விஷயங்களை அவர் பகிரக்கூடும்’ என்று எதிர்பார்த்தார். ஆகவே அவர்கள் இருவரின் வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருந்தார்; வழக்கமான வேறு காரியங்களைக் கவனிக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.

`இன்னும் இரண்டொரு நாழிகைகளில் தேவியார் வந்துவிடுவார். அடுத்த சில நாழிகைகளில் மாமன்னரின் விஜயம் இருக்கும். அதுவரை என்ன செய்யலாம்..?’

பேரமைச்சரின் முடிவுக்காகக் காத்திருக்கவில்லை அவரின் சிந்தனை. மீண்டும் கோட் டைத் தலைவாயிலை நோக்கி அமைச்சரின் பார்வை திரும்ப, அவரின் சிந்தனையோ கோட்டைவாயிலையும் கடந்து பயணிக்கத் தொடங்கியது. வைகை தீரத்தையும்... தெற்கே பொதிகையையும் - பொருணை தீரத்தையும் தாண்டி பரந்துபட்ட பண்டைய குமரிக்கண்டம் வரை நீண்டது அவரின் சிந்தனை.

குமரி, பஃருளி நதி தீரங்களையும் அவற்றுக்கு இடைப்பட்டு திகழ்ந்த நாற்பத்தொன்பது வளநாடு களையும் அகத்தில் தரிசித்து மகிழ்ந்தது. ஏறக்குறைய ஒரு தியான நிலைக்கு ஆளானார் அமைச்சர்..

பண்டையத் தலைநகரங் களான தென்மதுரையும், கபாட புரமும் அவரின் சிந்தனைக் காட்சியில் விரிந்தன. அங்கே நீண்டு நெடிது ஆட்சிபுரிந்த நெடியோனின் மாண்புகளும், அவன் அவையில் தொல்காப்பியம் எனும் ஒப்பற்ற பொக்கிஷம் அரங்கேறிய காட்சியும், நெடியோனாகிய வடிவலம்பனின் வழிவந்த குடுமியனின் பரிமேத வேள்வி களும், பேரரசியார் போல் அக்காலத்தில் திகழ்ந்த வீர மங்கைகளின் தீரங்களும் நிகழ் காலத்தில் நிகழ்வது போல் அமைச்சரின் மனக் கண்ணில் தோன்றி மறைந்தன.

`ஆஹா... அந்தப் பொற்காலம் மீண்டு வர வேண்டும். பண்டு புகழ் சூடிய பாண்டியர்தம் கயற்கொடி உலகெல்லாம் பட்டொளி வீசிப் பறக்கவேண்டும்’ - பாண்டியதேசத்தை, அதன் பாரம்பர்யத்தை உயிரெனப் போற்றிய அந்த மாவீரரின் உள்ளம் மிக ஆரவாரம் செய்தது.

அப்போது... இடியென முழங்கிய விஜய பேரிகையின் முழக்கம் அவர் சிந்தனை ஓட்டத்தைச் சட்டென்று தடைசெய்தது. பேரிகை மட்டுமல்ல ஏக காலத்தில் துந்துபிகளும் சங்கங்களும் முழங்கின.

`இது மாமன்னரின் வருகையைத் தெரிவிப்ப தல்லவா... எனில் பாண்டியர் வந்துவிட்டாரா...’

மிக ஆர்வத்துடன் தலைவாயிலை நோக்கிய பேரமைச்சர், தலையில் பேரிடி விழுந்ததுபோல் அதிர்ந்தார்.

ஏறக்குறைய மாமன்னருக்கான கோலாகல வரவேற்பையெல்லாம் ஏற்றபடி, பாண்டிய மாமன்னர் வழக்கமாய் ஆரோகணித்து வரும் வெண்புரவியின் மீது மிகக் கம்பீரமாய் அமர்ந்து கோட்டைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார் அந்த நபர்.

ஆம்! `வஞ்சகன்’ என்றும், `நிச்சயம் தண்டித்தே தீருவது’ என்றும் எவர் குறித்து பேரமைச்சர் குலச்சிறையார் சங்கல்பம் செய்து கொண்டிருந்தாரோ, அந்த நபர்தான் மாமன்ன ருக்குச் சமமாய், வீரர்கள் அளித்த மரியாதை களைக் கரிசனத்தோடு ஏற்றுக்கொண்டபடி கோட்டைக்குள் நுழைந்துகொண்டிருந்தார்!

அந்த அடியவர்க் கூட்டம் வந்துசேர்ந்திருந்த அந்த இடத்தில் விளா மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஆகவேதான் அந்த ஊருக்கு திருவிளமர் என்ற நாமம் வந்திருக்கவேண்டும்.

திருப்புகலூரிலிருந்து பலநாள்களாக பயணம் செய்து, வழியில் அம்பர்மாகாளம், அம்பர்பெருந்திருக்கோயில், திருக்கோட்டாறு, திருக்கடவூர், ஆக்கூர் தானதோன்றிமாடம், மீயச்சூர், திருவீழிமிழலை திருவாஞ்சியம் ஆகிய பல திருத்தலங்களையும் தரிசித்தபடி அங்கு வந்து சேர்ந்திருந்தது, அந்த அடியார்க் கூட்டம்.

இப்போது அவர்கள் தங்கியிருக்கும் விளமர் எனும் அந்த ஊர் ஆரூருக்கு அருகில் இருந்தது; சொல்லப்போனால் ஆரூரின் ஒருபகுதி என்றே சொல்லலாம். அங்கே ஆற்றங்கரையில் அழகுடனும் அமைந்திருந்த சிவத்தளியில் கூடி யிருந்தது அந்தத் தொண்டர்க்கூட்டம்.

தற்காலத்தில் மக்கள் வழக்கில் விளமல் என்று அறியப்படுகிறதே அதே ஊர்தான் அக்காலத்தில் திருவிளமர் என்று திகழ்ந்தது. திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது

அங்கே கூடியிருந்த தொண்டர்க்கூட்டமும் அவர்களுக்குத் தலைமையான சீர்காழிப் பிள்ளையிடமும் கேட்டால். மிக அழகாகச் சொல்வார்கள் `வள நகர்’ என்று.

ஆம், இயற்கை வளத்தில் சிறந்து திகழ்ந்த ஊர்தான் திருவிளமர். அதற்கு அருள்செய்தவர், அங்கே உறைந்திருக்கும் ஈசன் அருள்மிகு பதஞ்சலி மனோகரர்.

புலிக்கால் முனிவரோடு சிதம்பரத்தில் நம் ஈசனின் ஆடல் காட்சியைக் காணும் பேறு பெற்றாரே பதஞ்சலி முனிவர்... அவருக்கு அருள் செய்த இறைவன் ஆதலால் விளமரில் அருளும் ஈசனுக்கு இப்படியொரு திருப்பெயர்.

``இங்கு அருள்பாலிக்கும் நாதன், புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் தம் இடது பாதத்தைக் காட்டியருளினாராம்... தெரியுமா உனக்கு?’’

``அறிவேன்... அறிவேன்... ஆதிரைத் திருநாள் இங்கே மிகவும் சிறப்பு என்பதையும் நான் அறிவேன். இடப்பாதம் காட்டியருளியதால் இவ்வூரைச் சிவபாதத் தலம் என்றும் சொல் வார்களாம்... என் பாட்டனார் கூறியிருக்கிறார்...’’

அடியார்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

அவர்களுடன் வந்த வேறுசிலர், அருகிலிருந்த அக்னித் தீர்த்தக் குளத்தில் இறங்கி, தாகம் தணித்துக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் மதுரபாஷிணியாகிய யாழினும் மென்மொழி யம்மையின் சந்நிதியை நெருங்கினர்.

அவ்வேளையில், சிவச் சந்நிதியில் அந்தப் பதிகம் ஒலிக்க ஆரம்பித்தது.

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்

ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்

அத்தக வடிதொழ அருள்பெறு

கண்ணொடும் உமையவள்

வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே

- சாதாரிப் பண் அமைத்து சீர்காழிப் பிள்ளை தேனினும் இனிய தன் குரலில் பதிகம் பாட... அந்தப் பாடல் தொண்டர்களை மட்டு மல்ல, தொண்டருக்கும் தொண்டனான அந்த ஈசனையும் மயக்கியிருக்கவேண்டும்.

அதன் பொருட்டு, அந்தச் சிவம் மலர் ஒன்றை உதிர்த்து அருள் புரிந்தது!

- மகுடம் சூடுவோம்...