Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 58

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

பாம்பு முனிவர் பெற்ற பெரும்பேறு!

சிவமகுடம் - பாகம் 2 - 58

பாம்பு முனிவர் பெற்ற பெரும்பேறு!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ன்பும் அறனும் சேர்ந்தால் புகழும் கீர்த்தியும் மிகுந்து வாழ்வு மணக்கும். அப்பழுக்கற்ற அடியார்கள் ஒன்றிணைந்தால், அவர்கள் இருக்கும் இடத்தில் அருள் மணக்கும்; இறை சாந்நித்தியம் செழிக்கும். அப்படித்தான் அருளாளர் இருவரின் வருகையால், தமிழால் பாடப் பெற்றது; அந்தப் பாசுரங்களால் பெரும் கீர்த்தி பெற்றது திருவிளமர் எனும் அந்தத் திருத்தலம்.

ஆம்! திப்பிய வாசகன் என்றும் திருவுடைப் பிள்ளையார் என்றும் தண்டமிழ் விரகன் என்றும் ஞானநுல்கள் எல்லாம் போற்றும் திரு ஞானசம்பந்தரும் அவருடன் வாகீசராகிய திருநாவுக்கரசர் பெருமானும் சேர்ந்து வருகை தந்ததால், அன்று திருக்கயிலைக்கு ஒப்பான தலமாகத் தோன்றியது, திருவிளமர் திருத்தலம்.

அது எப்படி? அடியவர்கள் பதம் பதித்துவிட்ட ஒரு காரணத்தால், அந்த மண் பரமன் குடிகொள்ளும் கயிலைக்கு ஒப்பாகிவிடுமா என்ன?

ஆம், அப்படித்தான்! அந்தக் கயிலைநாதன் அந்த மலையைக் காட்டிலும் தன் அடியவர்தம் உள்ளத்தில் குடியிருப்பதையே மிகவும் உவப்பாகக் கருதுவார். ஆக, அடியவர் உறையும் இடம் அந்த ஆண்டவன் உறையும் இடமே ஆகும்.

சீர்காழிப் பிள்ளையின் பதிகம் ஒன்று மிக அழகாகப் விவரிக்கிறது... `தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்...’ என்று. ஐந்து யானைகளை அடக்கிய அடியார்கள் மலரிட்டு ஈசனை வழிபடும் இடம் கேதாரம் என்கிறது இந்தப் பாடல்.

சிவமகுடம் - பாகம் 2 - 58

ஐந்து யானைகளை மனிதன் அடக்குவதா?

ஆம், நம்முள் இருக்கும் ஐம்புலன்களே ஐந்து யானைகள். அவற்றை அறிவு, உறுதி ஆகிய ஆயுதத்தால் அடக்கி நல்வழி நடப்பவன் மேன்மை பெறுவான். அங்ஙனம் மேன்மை பெற்றவர்கள் அடியார்கள்; அவர்கள் வசிக்கும் இடம் கேதாரம் என்பது கருத்து.

ஆக, அத்தகைய அடியார்கள் உறையும் இடம் அனைத்தும் இறைவனுக்கு உவப்பான, கயிலை - கேதாரத்துக்கு ஒப்பான க்ஷேத்திரங் களே. திருவிளமர் தலமும் அப்படியொரு பெருமையைப் பெற்று மகிழ்ந்தது என்றால், அத்தலத்தின் கோயிலருகே துலங்கிய அக்னி தீர்த்தமும் பெரும் பாக்கியம் பெற்றது போலும்.

பொன்னார்மேனியனின் பிள்ளைகள் தன் கரையில் தங்கியிருப்பதை அறிந்த பூரிப்பில் தன் அங்கமெல்லாம் தங்கமாக்கிக் கொண்டு விட்டது போன்று, மாலைக் கதிரொளியில் தகதகத்துக் கொண்டிருந்தது, அந்தத் தீர்த்தத் தின் நீர்ப்பரப்பு.

அதன் கரையில் அமர்ந்தபடி, அன்று அவ்வூர் சிவச் சந்நிதியில் சீர்காழிப் பிள்ளை பாடிய பதிகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார் வாகீசப் பெருமான்.

`மடமாதுஎன வளர் மதில்அவை

எரிசெய்வர் விரவுசீர்ப்

பீடென வருமறை உரை செய்வர்...’

- பாடலின் வரிகள், அவரின் பக்தி தாகத்தை அதிகப்படுத்த சிவத் திளைப்பில் களித்திருந்த வாகீசரை, பிள்ளையின் மென்மையான அழைப்பு மொழி உசுப்பியது.

``அப்பர் பெருமானே...’’

``சொல்லுங்கள் பிள்ளாய்...’’

``என்ன மெளனத்தில் ஆழ்ந்து விட்டீர்கள்...’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வேறொன்றும் இல்லை. தங்களின் பதிகம் என்னுள் எம்பெருமானைத் திருநடனம் புரியச் செய்துவிட்டிருக்கிறது. அந்தக் களிப்பில் திளைத்திருக்கிறேன் ஐயா...’’

``உண்மைதான்... அவன் ஆடும் இடத்தில் மெய்ப்பொருள்கள் எல்லாம் மெய்யுருகி அசையா பொருளாகிவிடுகின்றன. அவன் ஆட்டத்தை - அதன் அருமையை உணராத இடத்திலோ, சடப் பொருள்களும் சதிராட்டம் போடுகின்றன. விளைவு துன்பங்கள் மிகுத்து வீழ்கின்றன...’’

``உண்மை... உண்மை... சிவத்தால் தமிழ் வளர்ந்த... தமிழால் சைவம் செழித்த பாண்டிய திருநாடும் ஏறக்குறைய அப்படியான நிலையில் தான் இருக்கிறது பெருமானே...’’

``என்ன சொல்கிறீர்கள் சுவாமி...’’

``நடப்பதைச் சொன்னேன்... அங்கே, பாண்டியன் சமணம் சார்ந்திருக்கிறான். அதன் பொருட்டு அந்நியர்களின் ஆதிக்கம் மிகுந்துவிட்டதாம். தல யாத்திரை சென்று மீண்ட என் அணுக்கன் தகவல் சொன்னான்...’’

சிவமகுடம் - பாகம் 2 - 58

``ஓஹோ... அதனால்தான் அன்று அவ்வாறு திகைத்தீர்களோ...’’

``திகைப்புக்குக் காரணம் அதுமட்டுமல்ல... நாம் இருக்கும் இடம் குறித்துத் தகவலறிந்து வர ஆள் அனுப்பியிருக்கிறாராம் பாண்டியப் பேரரசி. திருப்புகலூர் வரை வந்து விசாரித் திருக்கிறார்கள், அரசியின் தூதுவர்கள். விரைவில் நம்மை அவர்கள் சந்திக்கக் கூடும்.’’

``நம்மைக் குறித்த தகவல் சேகரிப்பு ஏனோ...’’

``பாண்டியப் பேரரசியார் மாதவச் செல்வி ஆவார். மணிமுடிச் சோழரின் புதல்வியான அவர், சிவ பிரானை இமைப்பொழுதும் மறவாதவர். அவராலேயே பாண்டிய நாட்டுக்கு விடிவு பிறக்கும். இறைச் சித்தமும் அதுதான் என்பதை நன்கு உணரமுடிகிறது என்னால்...’’ என்று தொடங்கி உறையூர் போரை, அதன் முடிவில் சோழரின் மகள் பாண்டியனின் கைப் பிடித்த கதையை, பாண்டிய தேசத்தின் தற்போதைய நிலையை விளக்கி முடித்தார் வாகீசப் பெருமான்.

அந்தக் கதை நிறைவுறவும் திருக்கோயிலின் மணி ஓங்கி ஒலித்து சுப சகுனத்தைச் சொன்னது. இருவரும் எழுந்து நின்று கோயிலின் திசை நோக்கிக் கரம்கூப்பி வணங்கினார்கள்.

தொடர்ந்து... `நமசிவாய... நமசிவாய’ ஐந்தெழுத்தை ஓதியவாறு கோயிலை நோக்கி நகர்ந்தார்கள், மீண்டும் பதஞ்சலி மனோகரரின் தரிசனம் காண.

பதஞ்சலி முனிவர்தான் எத்தகைய பேறு பெற்றிருக்கிறார். திருவிளமரில் அருளும் இறைவன் தமது திருநாமத்தோடு இந்த முனிவரின் திருப்பெயரையும் அல்லவா சேர்த்துக்கொண்டிருக்கிறார். வந்து வணங்கும் அடியவர் ஒவ்வொருவரும் முனிவரின் பெயரா லேயே இறைவனை அழைத்துப் போற்றி வழிபடுகிறார்கள்.

இப்படியான நிலையைத்தான் தெய்வ நிலை என சான்றோர்கள் போற்றுகிறார்கள் போலும். பதஞ்சலிக்கு இந்நிலை கிடைக்க யாது காரணம். வாருங்கள் சற்றே புராணத்தைப் புரட்டிவிட்டு வருவோம்.

தாருகா வனத்தில் பிட்சாடனராகத் தோன்றி, முனிவர்களின் ஆணவத்தைத் தகர்ந் தெறிந்த சிவப் பரம்பொருள், புலித் தோலை அரைக்கணிந்து, பாம்பு அணிகலன்களைச் சூடி, ஆனந்த தாண்டவம் ஆடி அருளினார்.

அந்தத் திருநடனத்தை, ஆனந்தமாகவும் மானசீகமாகவும் கண்டு களித்தார் திருமால். ஆதிசேடன் மீது அமர்ந்தபடி திருமால், இந்த ஆனந்தக் காட்சியைக் கண்டு புன்னகைக்க, ஆதிசேடனுக்கு அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவல். திருமாலிடம் கேட்டார்.

திருமால் சொன்னதைக் கேட்டு, தானும் சிவ தாண்டவத்தைக் காண ஆசை கொண்டார். திருமாலிடம் தன் ஆசையை ஆதிசேடன் தெரிவித்தார்.

சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படியும், அவர் அருளால் பூமிக்குச் சென்று பிறக்கும்படியும் திருமால் வழி சொல்லிக் கொடுத்தார்.

அப்படியே செய்தா ஆதிசேடன். விளைவு... சிவபெருமான் அருளால் அத்திரி முனிவரின் மனைவி அநசூயையின் கரங்களில் சிறு பாம்பாகத் தோன்றினார். அநசூயை, பாம்பென்று பார்த்துக் கைகளை உதற, அவளுடைய கால்களில் அஞ்சலி செய்து பாம்பு பணிய, பதங்களில் அஞ்சலி செய்ததால், ‘பதஞ்சலி’ ஆக... ஆதிசேடனின் அவதாரமாகப் பதஞ்சலி தோன்றினார்.

பரம்பொருளின் நடனக் காட்சியைக் காணும் ஆவலை ஆதிசேடன் வெளிப்படுத்திய போது, பூமியில் பிறந்து, ஏற்கெனவே அத்தகைய காட்சியைக் காண்பதற்காக சிதம்பரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் வியாக்ரபாதருடன் இணைந்து அங்கேயே காத்திருக்கும்படி கூறினார் சிவபெருமான்.

அதன்படியே, பதஞ்சலியும் காத்திருந்தார். புலிக்கால் முனிவரான வியாக்ர பாதருக்கும், பாம்பு முனிவரான பதஞ்சலிக்கும், சிதம்பரம் தலத்தில், திருநடனத் திருக்காட்சி கிட்டியது.

பாம்பு முனிவர் திருவிளமர் தலத்துக்கும் வந்து வழிபட்டிருக்கிறார் போலும். இவ்வூர் இறைவனும் அவர் பெயரை ஏற்று அருள்மிகு பதஞ்சலி மனோகரராக அருள்பாலிக்கிறார்.

அந்த விளமர் நகர் வித்தகரின் சந்நிதியில் வாகீசரும் சீர்காழிப் பிள்ளையும் மெய்யுருகி வழிபட்டுக்கொண்டிருக்க, அந்த இறையோ மதுரையில் பெரும் பிரளயத்தை உருவாக்கி விட்டிருந்தது.

மாமன்னரின் வரவைப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்து போன வருத்தத்திலும், மன்னருக்கு நிகராக அடிகளாரின் வருகையைக் கண்டு பேரதிர்ச்சிக்கு ஆட்பட்ட நிலையிலும் நிலைகுலைந்து போயிருந்த பேரமைச்சர் குலச்சிறையாரை, பாண்டிமா தேவியாரின் வருகை ஓரளவு நிதானப்படுத்தி யிருந்தது.

பாண்டிமாதேவியார் வந்து கால்நாழிகைப் பொழுது வரையிலும் ஏதும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டிருந்தார்.

ஒருவாறு அவர் சிந்தனையிலிருந்து மீண்டு, மதுரையம்பதியைச் சூழ்ந்திருக்கும் அபாயம் குறித்து பேரமைச்சரிடம் விவரிக்க வாயெடுத்த வேளையில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

திடுமென அறைக் கதவங்கள் பெரும் சத்தத்துடன் திறந்துகொண்டன. அவ்வாறு அவற்றை வலுவுடன் திறந்துகொண்டு உட்புகுந்தனர் முரட்டு வீரர்கள் சிலர். என்ன ஏதென்று யூகிக்கவும் இடம் கொடுக்காமல், பேரமைச்சர் குலச்சிறையாரைச் சடுதியில் சிறைப் பிடித்தார்கள்.

அதே வேகத்தில் அவர்களை வீழ்த்த பேரரசியாரும் உறையிலிருந்து வாள் எடுத்துப் பாய்ந்தார்!

- மகுடம் சூடுவோம்...