திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 59

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

பல நாழிகைகளைத் தாண்டி உள்ளுக்குள் அவர் ஐந்தெழுத்தை ஓதியபடி சிவத்தில் திளைத்திருந்ததன் விளைவு...

ஆதிமந்திரம் அஞ்செழுத்து ஓதுவார் நோக்கும்

மாதிரத்தினும் மற்றை மந்திரவிதி வருமே...


மசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரமே ஆதி மந்திரம் ஆகும். அந்தப் புண்ணிய மந்திரம் ஒலிக்கும் இடத்தில், வேறெந்த மந்திரத் தின் ஆற்றலும் செயலற்றுப் போகும்.

இந்த தேவ ரகசியத்தை அறியாதவரா பேரமைச்சர் குலச்சிறை யார்! பல நாழிகைகளைத் தாண்டி உள்ளுக்குள் அவர் ஐந்தெழுத்தை ஓதியபடி சிவத்தில் திளைத்திருந்ததன் விளைவு... தன் தேகத்திலிருந்தும் அவரைப் பூட்டி வைத்திருந்த அந்த நிலவறைச் சிறையிலிருந்தும் மீண்டுவிட்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஆம்! ஏழாம் நூற்றாண்டின் மத்தியபாகத்தில், தென்பரதக் கண்டத்தில் பெரும்புகழுடன் திகழ்ந்த பாண்டியப் பேரரசின் பேரமைச்சரும், தென்னவன் மாறவர்மன் அரிகேசரியின் நம்பிக் கைக்கு மிக உகந்தவருமான குலச்சிறையார், அன்று அந்தச் சிறைக் கொட்டடியில் அடைப்பட்டுக் கிடந்தார்.

முந்தையநாள் மாலைப் பொழுதில், மாமன்னரை எதிர்பார்த்துக் காத்திருந்தவரை, அடிகளாரின் பிரவேசமும் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டிருந்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 59

தனது மாளிகையில் பாண்டிமாதேவியாருடன் அமைச்சர் ஆலோசித்துக் கொண்டிருந்த தருணம், திடுமென கதவுகள் திறந்து கொள்ள, வழக்கமான முன்னறிவிப்பு எதுவுமின்றி பாய்ந்து வந்த பாண்டிய வீரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

நடந்ததைக் கண்டு ஆவேசமான பாண்டிமாதேவியார், ஏக தருணத்தில் தன் வீரவாளையும் சுழற்படையையும் கரங்களில் எடுத்தார். மறுகணம் அந்த அறைக்குள் பிரவேசித்த அடிகளார் செய்த காரியம், அந்த வீராங்கனையைப் பேச்சற்ற பதுமையாய்ச் செயலற்றுப் போகச் செய்தது.

எதிர்பாராத தருணத்தில் பேரமைச்சரை வாள்முனையில் சிறைப்பிடித்தவர்கள், தன் தேசத்து வீரர்களே என்றாலும் அவர்களின் அடாத செயலைப் பொறுக்காமல் அனைவரையும் கொன்றுப் போட்டு விடும் ஆவேசத்துடன் துள்ளியெழுந்து ஆயுத பாணியானார் மகாராணியார்.

அக்கணத்தில் புயலென பிரவேசித்த அடிகளார் தன் கையிலிருந்த வஸ்துவைப் பேரரசியாரின் திருமுகத்தின்முன் நீட்ட, நீருற்றப்பட்ட கனலாய்க் கொதிப்படங்கிய அரசியார், அடுத்து செய்வதறி யாது திகைத்து நிற்க, குலச்சிறையார் எளிதில் சிறைப்பட்டார்.

அடிகளார், அரசியார் காண அவரின் திருமுன் காட்டியது, மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியின் முத்திரை மோதிரம். கயல் பொறித்த அந்த முத்திரை மோதிரத்தைத் தாங்கியவர், அதிகாரத்தில் மாமன்னருக்குச் சமம். ஆக, அடிகளாரின் ஆணையை மீறுவது, மாமன்னரை எதிர்ப்பது போலாகும்; ராஜ துரோகத்துக்கு இணையான செயல் அது.

`ராஜ மோதிரம் அடிகளாரிடம் எப்படி வந்தது... மோதிரம் இவரிடம் எனில், மாமன்னர் எங்கே...’

அடுத்தடுத்து எழுந்த கேள்விகள் பேரரசியாரைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியிருக்க, அதே கேள்விகளோடு பேரமைச்சரும் சிறைக்கூடம் வந்து சேர்ந்திருந்தார்.

கேள்விகள் அவரின் உள்ளத்தில் கொந்தளிப்பை உருவாக்க, அமைதி தேடி ஐந்தெழுத்தை ஓதி சிவச் சிந்தையில் லயித்தவர், ஆனந்தப் பெருவெளியை தரிசித்தார். அவரின் சூட்சும தேகம் பரவெளியை மிக ஆனந்தமாய் சுற்றிப் பார்த்தது. பூவுலகில் ஒளிர்கிறதே ஒரு சூரியன்... அதுபோல் பன்னிரு ஆதவரைக் கண்டார் ஆகாயத்தில்.

வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பார்க்கரன், ரவி, உலோகப்பிரகாசன், உலோகசாக்ஷி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி என ஏடுகளில் அவர் படித்தறிந்த பன்னிரு சூரியரும் மிக அணுக்கத்தில் சுழல்வதாய்க் கண்டவர், இன்னும் தொலைவில் - வேறு வேறு வட்டங்களில் மேலும் ஆயிரமாயிரம் ஆதவச் சுடர்களையும் அவற்றை மையமாகக் கொண்டு சுழலும் கோள் களையும் தரிசித்தார்.

சிவமகுடம் - பாகம் 2 - 59

அந்த ஆகாயப் பெருவெளியில் அவை அதீதமாய்ப் பிரகாசித்தன என்றாலும் சட்டென்று ஒரு நொடியில் அவை அனைத்தும் ஒரு புள்ளியில் குவிந்தன. சிவமாய்ச் சுடர்விட்ட அந்த ஒளிர்ப்புள்ளியில் தானும் ஆனந்தமாய் ஐக்கியமாகிவிடத் துடித்தது, பேரமைச்சரின் ஒளியுடம்பு.

அக்கணத்தில், தூண்டில் போட்டு இழுத்ததுபோல் மிக வலுவாய் அவரின் தேகம் பற்றி இழுக்கப்பட, துடிப்பும் துள்ளலு மாய் அந்த நிலவறைச் சிறையில் - தன் ஸ்தூல தேகத் தில் மீண்டும் அகப்பட்டார் பேரமைச்சர்.

முரட்டு உருவத்தினன் ஒருவன் எதிரில் அமர்ந்திருந்தான். உலக்கை போன்ற அவன் வலக்கரம் பேரமைச்சரின் வீரத் தோளினைப் பற்றியிருந்தது.

அதுவே சாதாரணமானதொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால், அவனுடைய அந்தச் செய்கைக்கு அக்கணமே மரணத்தைப் பரிசளித்திருப்பார் அந்த வீர புருஷர். ஆனால், தற்போதைய சூழல் வேறு!

நடக்கும் ஒவ்வொன்றையும் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மிக உன்னிப்பாய்க் கவனிக்கவும் கணிக்கவும் வேண்டிய நிலையில் இருந்தார் குலச்சிறையார்.ஆக, அவ்வேளையில் தன் தோளினை வலுவுடன் பற்றி உலுக்கி, தன் தவச் சிந்தனையை மிகச் சாதாரணமாய்ச் சலனப்படுத்தி விட்ட அந்த முரடனை உற்றுநோக்கினார்.

சிறைக்கு வெளியே சுவரில் பொருத்தப் பட்டிருந்த தீபப் பந்தம் கொடுத்த வெளிச்சத் தில், அவன் முகம் ஒருவித தீவிர பாவனையைக் காட்டினாலும், கண்கள் பணிவைக் காட்டின; தனது செயலுக்காக மன்னித்தருளும்படி வேண்டுதலைச் சமர்ப்பித்தன.

அமைச்சர் வியந்தார். `யார் இவன்?’ - சட்டென்று அவரின் புத்திக்கு அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் அவன் அவருக்கு உதவ வந்துள்ளான் என்பதை மட்டும் மிக தீர்க்கமாய்ச் சுட்டிக் காட்டியது.

``எவ்வளவு நாழிகைகள்தான் இப்படி மெளனத்தில் ஆழ்ந்திருப் பீர்... வயதில் பெரியவர் நீர்... மெளனம் காக்கலாம்... என் வயதுக்கு என்னால் மெளனத்தைச் சகிக்க முடியாது. என் வளர்ப்பு அப்படி. ஒன்று களமாடவேண்டும் அல்லது கதையாட வேண்டும். அதுவும் இல்லையெனில், விளையாட வேண்டும்... இங்கு இப்போது பகடை வேண்டுமானால் ஆடலாம். வருகிறீரா...’’

கரடுமுரடாக அவன் பேசியதை ரசிக்கத் தோன்றியது பேரமைச்சருக்கு. அவன் விளையாட அழைக்கவில்லை; ஏதோ விளைவு சொல்ல அழைக்கிறான் என்பதும் புரிந்தது. ஆகவே, ஒரு புன்னகையை வீசிச் சம்மதம் தெரிவித்தார்.

அவன் தாமதிக்காமல் கரித் துண்டால் தரையில் குறுக்கும் நெடுக்குமாய்ச் சில கோடுகள் கிழித்தான். அவற்றில் சில கோடு களுக்கு அழுத்தம் கொடுத்தான்; சிலவற்றை இரண்டு கோடுகளாக எழுதினான். இடையிடையே அமைச்சரின் திருமுகத்தை அவன் உற்றுநோக்கவும் தவறவில்லை.

அந்த வேளையில் சிறையறையைக் கடந்துசென்ற காவல் வீரர்கள் ஓரிருவர், சற்று நிதானித்து அவர்களைக் கவனிக்காமல் இல்லை. எனினும் அவர்களுக்குச் சந்தேகம் எழவில்லை. இருவரும் விளையாடவே ஆயத்தமாகிறார்கள் என்று கண்டுகொண்டு திருப்தியுடன் நகர்ந்தார்கள்.

கட்டத்துக்கு எதிர்ப்புறத்தில் கால் நீட்டி வசதியாக அமர்ந்து கொண்ட முரடன், இடைக்கச்சையிலிருந்து காய்களை எடுத்தான். அவற்றை ஒருமுறை தன் நெஞ்சில் வைத்து ஏதோ முணுமுணுத்தான்.

பார்ப்பவர்களுக்கு, அவன் தன் வெற்றிக் காகக் குலதெய்வத்தைத் துணைக்கு அழைப்ப தாகத் தோன்றும். ஆனால், பேரமைச்சரோ அவன் முணுமுணுக்கத் தொடங்கியதுமே தன் செவிப்புலன்களைக் கூர்தீட்டிக் கொண்டார். ஆம்! அவன் அந்த முணுமுணுப்பின் மூலமாக அவருக்கு ஒரு ரகசியம் சொன்னான். அடுத்து, காய்களைத் தரையில் வீசினான்.

வீசு காய்களின் வீழ்ச்சி அவனுக்குச் சாதகமாய் இருக்கவே, அதற்கேற்ப நகர்த்தல் காய்களை இடம் மாற்றினான். ஏற்கெனவே அவன் சொன்ன முணுமுணுப்பு ரகசியம் அமைச்சருக்குள் ஆச்சர்யத்தை விளைவித் திருக்க, இப்போது அவன் நகர்த்திய காய்களில் ஒன்று தாரு லிங்கமாய்த் திகழ்ந்ததைக் கண்டு பெரும் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் ஆளானார்!

ஆனால் அவரின் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை. திடுமென ஒளிப் பந்தம் அணைந்துகொண்டது. ஓரிருவரின் காலடிச் சத்தங்களைச் செவிமடுத்த பேரமைச்சர், சாளரத்தின் வழியே சிறைக்குள் நுழைந்த நிலவொளியின் மெல்லிய வெளிச்சத்தில், அந்த விபரீதத்தைக் கண்டார்.

முரட்டுக் கரம் ஒன்று, அவரின் எதிரில் அமர்ந்திருந்தவனின் வாயைப் பொத்தி அவன் கண்களைத் துணியால் கட்ட, மற்றொரு கரம் அவன் கழுத்தில் குறுவாளைப் பதித்தது!

விளமல் என்று தற்காலத்திலும் திருவிளமர் என்று அக்காலத் திலும் வழங்கப்பட்ட அந்த ஊரிலிருந்துப் புறப்பட்டது, திருஞான சம்பந்தரின் திருக்கூட்டம்.

திருக்காறாயில், திருத்தேவூர், திரு நெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத் தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திரு வெண்டுறை ஆகிய தலங்களின் வழியே பயணித்து, அந்தத் தலங்களில் எல்லாம் கோயில் கொண்டுள்ள ஈசனையும் அம்பிகை யையும் வணங்கித் தொழுதபடி பயணித்து, திருத்தண்டலை நீணெறி எனும் பதியை அடைந்திருந்தது.

தன்னகத்தே அருளும் நீள்நெறி நாதரின் திருவருளால், அடியார்களின் வயிற்றுப் பிணிகளைப் போக்கும் அற்புதப் பதி திருத் தண்டலை. குறிப்பாக பசிப்பிணி அறவே நீங்கிட அருள் தரும் க்ஷேத்திரம்.

இங்ஙனம் உடற் பிணிகளை மட்டுமல்ல, உள்ளத்தைப் பிணியில் வீழ்த்தும் கர்வத்தினை யும் பங்கம் செய்யும் தலம் இது.

`எம்பெருமான் ஈசனுக்கான அமுது தரையில் சிந்தி வீணானதே,’ என்று கலங்கிய அடியவர் ஒருவர், தானே அதற்குக் காரணம் என்று எண்ணித் தண்டனை ஏற்கும்பொருட்டு, தன் கழுத்தைத் தாமே அறுத்து உயிர்விடத் துணிந்தபோது சிவனாரால் தடுத்தாட் கொள்ளப்பட்ட ஊர் இது.

சிவனருளால் சோழ மாமன்னன் கோச்செங் கணின் குன்மநோய் தீர்ந்ததும் இங்கேதான். அதுமட்டுமா? கல்மாடு புல் தின்ற அற்புதம் நடந்தேறியதும் இங்குதான்.

இப்படியான மகிமைகளால் பேறுபெற்ற இந்த மண், நம் அற்புதரான சீர்காழிப் பிள்ளையின் பாதம் பதிந்ததால் மேலும் சிறப்புப் பெற்றது.

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே

சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்...


- என்று அவர் மூலம் பதிகப்பாடலும் பெற்றது!

- மகுடம் சூடுவோம்...