மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 37

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

இந்தப் பாடல் வரியோடு, அந்தச் சீலையில் திகழ்ந்த சித்திரம், மீண்டும் பேரமைச்சரின் திருமுகத்தில் ஒளி கூட்டியது!

ள்கடந்து தேடியும் உள்ளொளியைக் காண இயலாமல் வருந்தும் ஞானியைப்போன்று, உள்ளுக்குள் மட்டுமல்லாது புறத்தே யும் இருள் சூழ்ந்து திகழ, மனம் குமைந்து கிடந்தான் இளங்குமரன். ஏதோ பாதாளத்துக்குள் சிக்கிக்கொண்டதுபோல, அந்த இருள் மிகுந்த இடத்தில் தவித்துக்கொண்டிருந்த இளங்குமரனுக்குள் எண்ணற்ற கேள்விகள்!

வைகை நதிக்கரையில் வட்டப்பாறையின் அருகில் வாள் முனையில் சிறைப்படுத்தப்பட்டவன், பெரும் வீரர்களால் சூழப்பட்டான். பதில் தாக்குதல் நடத்துவதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை என்பது அவன் புத்தியில் உறைத்த அதேகணம்... அவன் யூகித்ததை மெய்ப்பித்தான் அந்தச் சிறு படையின் தலைவன். அவன் இடக்கரத்திலிருந்த கேடயத்தால் இளங்குமரனின் பிடறியில் தடம் பார்த்துத் தாக்க, அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டான் இளங்குமரன். கண் விழித்தபோது சுற்றிச்சூழ காரிருட்டு.

மெள்ள உடலை அசைக்க முயன்றபோது, கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். எங்கும் எப்போதும் எச்சரிக்கையோடு நகர்பவன் அவன். வட்டப் பாறையில் சற்றுக் கவனப் பிசகுடன் இருந்து விட்டதை எண்ணி தன்னைத் தானே நொந்துகொண்டான். கரடுமுரடான தரை அமைப்பும் குளிர்ந்த சீதோஷ்ணமும் அந்த இடம் ஒரு குகையாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தை அளித்தன.

சிவமகுடம்
சிவமகுடம்

தான் இருக்கும் நிலையில் தப்பிப்பதற்கான மார்க்கம் சிறிதும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன், வேறு வழியில்லாமல் தன் மனதோடு உரையாடத் தொடங்கினான். எக்காரணம் கொண்டும் ஆபத்து நிறைந்த தனிமையின் தாக்கத்தை - பாதிப்பை மனத்துக் குள் கொண்டுசெல்லக் கூடாது என்பது அவன் தந்தை அவனுக்குப் போதித்த பால பாடம்.

ஆகவே, தன் மனத்தோடு உரையாடத் தொடங்கினான். தன்னைச் சிறைப் பிடித்தவர்கள் யார், பகைவர்கள் எனில் எந்தத் தரப்பினர், தாரு லிங்கங்கள் தன்னிடமிருக்கும் ரகசியத்தை அவர்கள் அறிந்தது எப்படி... மனம் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண முற்பட்டான். ஒருசில விஷயங்களை அவனால் அனுமானிக்க முடிந்தது. அந்த அனுமானங்கள் உண்மையாகும் பட்சத்தில், எவரும் எதிர்பாராத பேராபத்து ஒன்று விரைவில் பாண்டியப் பேரரசைச் சூழ்ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

இளங்குமரனின் இப்படியான எண்ணவோட்டத்தைத் தடைசெய்யும் விதம் திடுமென உண்டான அரவம், அந்த இடத்தின் நிசப்தத்தைக் குலைத்தது. பிரயத்தனத்துடன் உடம்பை அசைத்து அரவம் கேட்ட திசையை நோக்கினான் இளங்குமரன். அந்தத் திசையில் ஒளிக்கீற்று ஒன்று உட்புகுந்திருந்ததால் கண்கள் கூசின அந்த இளைஞனுக்கு. சட்டென்று இமைகள் மூடிக்கொள்ள, வெளிச்சத்தை எதிர்கொள்ள தன் நயனங்களைத் தயார்செய்து கொண்டு மெள்ள இமைகளைத் திறந்தான். ஒளிக்கீற்றின் உபயத்தால் சன்னமாகக் கிடைத்த வெளிச்சத்தில், அந்த இடத்தை அடையாளம் காண முடிந்தது அவனால். அவன் யூகித்தது சரிதான். அதுவொரு மலைக்குகை.

வெளிப்புறத்தில் ஏதோ அதிர்வின் காரண மாக பாறைகள் புரண்டுகொடுத்து, ஒளிக்கீற்று உட்புக அனுமதித்திருக்கின்றன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

குகைச்சுவரில் நீட்டிக்கொண்டிருந்த கூர்முனைப் பாறைகளைக் கண்டதும் அவனுக் குள் நம்பிக்கையும் உற்சாகமும் பொங்கின. சற்றும் தாமதிக்காமல் செயலாற்றினான். அதீதப் பிரயத்தனத்துடன் பிருஷ்டத்தாலேயே மெள்ள மெள்ள நகர்ந்து, சுவர்ப்பகுதியை அணுகினான். பாறை ஒன்றின் கூர்முனையில், பிணைப்புக் கயிறுகளைத் தேய்த்து அறுத்து, கட்டுத்தளையிலிருந்து கரங்களை விடுவித்தான். தொடர்ந்து கால் கட்டுகளையும் அகற்றிக் கொண்டவன், அடுத்து அங்கிருந்து தப்பிக்க வழிதேடத் தொடங்கினான்.

ஒளிக்கீற்று உட்புகும் துவார வாயிலைக் கண்டடைந்தவன், அதன் வழியே வெளியே உற்றுநோக்கினான். விண்ணில் குழவித் திங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க, இருளைப் போர்த்தியிருந்த வெளிச்சூழல் அவன் கண்களுக்கு அதிபயங்கரமான ஒரு காட்சியைக் காட்டியது.

அதிர்ந்துபோனான் இளங்குமரன்!

ஆம், முரட்டு வீரர்கள் சிலரிடம் மாட்டிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி அவர்களிடமிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். அதிர்ச்சிக்குக் காரணம் அந்தப் பயங்கரக் காட்சி மட்டுமல்ல, அவனுள் சட்டென்று தோன்றிய வேறோர் எண்ணமும்தான்.

சிவமகுடம்
சிவமகுடம்

ஏற்கெனவே முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம், அணு பிசகாமல் அதே சூழலில் அப்படியே நிகழுமா என்ன! அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை!

அன்றொரு நாள், வனப்பாதையில் சற்று இடைவெளிவிட்டு பாண்டிய மாமன்னரைப் புரவியில் பின்தொடர்ந்துகொண்டிருந்தான் இளங்குமரன். சட்டென்று மாமன்னரின் புரவி வேகம் எடுக்க, தன் புரவியையும் வேகப்படுத்தினான்.

ஓரிடத்தில்... இப்போது இங்கே காணும் அதே காட்சியைக் கண்டான். இதேபோல் பெண்ணொருத்தியைச் சூழ்ந்திருந்த கயவர்கள் சிலர், மாமன்னரைக் கண்டதும் அவளை விட்டுவிட்டு ஓட்டமெடுத்தார்கள்.

இப்போதும் அதேபோல் அதே சம்பவம்..!

எப்படியேனும் அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று இளங்குமரனின் மனம் பரபரத்தது. ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காதபடி நிகழ்ந்தது அடுத்தச் சம்பவம்.

ஆம்... தூரத்தில் ஒரு புரவி வருவது தெரிந்தது. பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டான். பிறைச்சந்திரனின் கிரணங்கள் புரவியில் வருபவரின் மார்புக் கவசத்தில் பட்டு எதிரொளிக்க, ஒளியில் தகதகத்தன மீன இலச்சினையின் கண்கள்.

எனில், வருவது... அவரேதான்!

இளங்குமரனின் இதயம் வெகுவேகமாக அடித்துகொண்டது. நடந்து முடிந்தவொரு சம்பவம் மிகத் துல்லியமாக மீண்டும் நிகழ்வதைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்தான். இதெல்லாம் சாத்தியம்தானா... மீண்டும் வினா எழுப்பத் தொடங்கியது மனம்!

இந்தப் பிரபஞ்சம் பல ரகசியங்களையும் விநோதங்களையும் உள்ளடக்கியது. அவையாவுமே நம்மைச் செயல்படுத்துகின்றன. அந்தச் செயல்பாடுகள் துளியும் பிசகுவதில்லை. மனம், புத்தி, சித்தம் என்று மூன்று விஷயங்களால் ஆளப்படுகிறோம் நாம். மனம் எண்ணத்தை உருவாக்கும்; புத்தி செயல்படுத்தும்; சித்தம் அனுபவிக்கும்; அனுபவிப்பதைப் பிரபஞ்சத் திலும் பதியவைக்கும். அப்படிப் பதிவாகும் எண்ண அலைகளுக்கேற்ப நிகழ்வுகள் தொடரும். மொத்தத்தில் எதை நினைக்கிறோமோ அதையே பெறுகிறோம்.

இதோ, இப்போது நிகழும் இந்த விநோதமும் அவ்வகையானதுதானோ! இளங்குமரனைப் பொறுத்தவரையில், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் அப்படியோர் ஆபத்து நிகழக்கூடாது என்றே விரும்பினான். ஆனால், அந்தப் பெண்ணின் துடிப்பும் வேகமும் மீண்டும் அவளுக்கு அப்படியோர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே அவன் சிந்தை நம்பியது.

இப்போது அது பலித்தது போலும். ஆனால், தற்போதும் தப்பித்துவிட்டாள்! ஆக, ஆபத்துகள் நேர்ந்தாலும் அதனால் அவளுக்குப் பழுதில்லை என்ற சிந்தை இளங்குமரனுக்குள் எழ, ஒருவழியாய் திருப்தியடைந்தது மனம்.

அதேநேரம், மிக அணுக்கமாக ஒலித்த குரல் அவன் சிந்தையை ஈர்த்தது.

``பணி முடிந்தது போகலாமா இளங்குமரா...’’ என்றபடியே, அவன் பதிலுக்குக் காத்திருக்காமல், தன் உறுதியான கரத்தை அவன் தோள்மீது போட்டுச் சேர்த்து அணைத்தபடி, அந்தக் குகையிலிருந்து நகரத் தொடங்கினார், பாண்டிய மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி.

அங்கே மாமதுரையில், குலச்சிறையாரையும் பாண்டிமா தேவியாரையும் வேறொரு செயலை நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தது காலம்.

சிவமகுடம்
சிவமகுடம்

சம்ஹார நாதனுக்கு ஓம்காரத்தின் பொருளுரைத்த முருகனுக்கு ஒப்பான அழகோடு திகழ்ந்த சீர்காழிப் பிள்ளையின் அந்தச் சித்திரத்தை வெகுநேரம் ரசித்துக் கொண்டிருந்தார் குலச்சிறையார்.

மருதன் சொல்லச் சொல்ல பாண்டிமா தேவியார் அந்தச் சித்திரத்தை வரைந்தெடுத்து, ``இவர்தான் அந்தப் பாலகனா...’’ என்று கேட்டுக்

கொண்டிருக்கும்போதே உள்ளே பிரவேசித்து விட்டார் பேரமைச்சர்.

நுழையும்போதே சித்திரத்தைக் கண்டு கொண்டவர், அந்தச் சித்திரப் பிள்ளையிடம் பொலிந்த தெய்விகப் பேரழகைக் கண்டு சிலிர்ப்புற்றார்.

அதேநிலையில் சித்திரத்தை அணுகியவர், அதில் துலங்கும் பிள்ளை யின் பிறைநுதலை, கண்மூடி தியான நிலையில் லயித்திருக்கும் பிள்ளையின் இதழோர புன்முறுவலை ரசித்தபடியே மெய்ம்மறந்து நின்றுவிட்டார்.

``பேரமைச்சரே..!’’ என்று பாண்டிமா தேவியார் குரல்கொடுத்ததும்தான் தன்னிலை உணர்ந்தார்.

இப்போது, வந்த காரியம் மனதில் எழுந்ததால், அவரின் திருமுகத்தில் மந்தகாசம் குறைந்தது. அதைப் பாண்டிமாதேவியாரும் கவனிக்கத் தவறவில்லை.

``என்னவாயிற்று அமைச்சர் பெருந் தகையே..?’’

``நாம் எதிர்பாராத அளவு பேராபத்துகள் சூழ்கின்றன அம்மா. மாமன்னரும் இன்னும் தலைநகருக்கு வந்துசேரவில்லை. அடுத்த நகர்வு குறித்த தெளிவு புலப்பட மறுக்கிறது...’’ கவலையுடன் பதிலுரைத்தார் பேரமைச்சர் குலச்சிறையார்.

``நம் பேரரசருக்கு ஏதேனும் ஆபத்து விளையுமோ என்று அச்சம் கொள் கிறீர்களா..?’’

சிறு புன்னகையுடன் அவரிடம் கேள்வி கேட்ட பாண்டிமாதேவியாரின் கண்கள், அருகிலிருந்த வேறொரு சித்திரச் சீலையில் நிலைத்தன. பேரமைச்சரும் அதன்மீது பார்வையைச் செலுத்தினார்.

`இருளும் உண்டோ ஞாயிறு சினவின்...’

இந்தப் பாடல் வரியோடு, அந்தச் சீலையில் திகழ்ந்த சித்திரம், மீண்டும் பேரமைச்சரின் திருமுகத்தில் ஒளி கூட்டியது!

- மகுடம் சூடுவோம்...