Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 60

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

அற்புதமும் அற்புதமும்!

சிவமகுடம் - பாகம் 2 - 60

அற்புதமும் அற்புதமும்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

``ஆஹா... அற்புதம்! ஓர் அற்புதம் வேறோர் அற்புதத்தை ரசிப்பதைப் பார்த்தாயா...’’

திருத்தண்டலைச் சிவாலயத்து நந்தியைச் சூழந்து நின்ற கூட்டத்தில், வயது முதிர்ந்த தந்தை ஒருவர் தன் மைந்தனிடம் சொல்ல, அவரின் அந்த வார்த்தைகளுக்குப் பொருள் புரியவில்லை என்றாலும், அவர் சுட்டிக் காட்டிய அற்புதங்களை தானும் தரிசித்து ரசிக்கவே செய்தான், அவரின் மைந்தன்.

வழக்கத்துக்கு மாறாக சற்றே கழுத்தைத் திருப்பிய வண்ணம் திகழ்ந்த நந்திதேவரை வியந்து வணங்கிக் கொண்டிருந்தார் திருஞானசம்பந்தப் பெருமான். வித்தியாசமான இந்த நந்திதேவரையும் சீர்காழிப் பிள்ளையையுமே `அற்புதம் அற்புதத்தை தரிசிக்கிறது’ என்றார் அந்த முதியவர்.

நந்தி அமர்ந்திருக்கும் அந்த இடத்திலிருந்து எதிரே கருவறையை நோக்கிய முதியவரின் மைந்தன், மூன்றாவது ஓர் அற்புதத்தைக் கண்டான். ஆம்! நெய்யூற்றிச் சுடரேற்றப்பட்ட சரவிளக்குகளும் உருவில் பெரிய நிலை விளக்குகளும் வீசிய ஒளி வெள்ளத்தில் மிகவும் பிரகாசத்துடன் லிங்கமூர்த்தமாய்க் காட்சி தந்தார் திருநீள்நெறிநாதர்.

சிவமகுடம் - பாகம் 2 - 60

`உலக மாந்தர்கள் அனைவரும் விரும்பும் திங்களாகிய சந்திரனையும் உயிர்களின் பாவங்களைப் போக்கும் புண்ணிய கங்கையையும் தாங்கிய திரு முடியை உடைவர்; ஆண் வண்டுகளும் தும்பிகளும் சூழ்ந்து ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடிய சடைமுடியோன் வீற்றிருக்கும் அற்புதமான இடம் திருத் தண்டலை. கரும்பும், செந்நெல்லும், பாக்கும் நிறைந்து வளம் கொழிக்கும் இவ்வூரையும் இங்கு உறையும் இறைவனையும் தரிசித்துப் போற்றுங்கள்’ என்று அடியவர்களுக்கெல்லாம் திருஞானசம்பந்தர் சுட்டிக்காட்டும் பரம்பொருள் இந்த இறையனாரே ஆவார்!

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே

சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்

கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்

நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே

- என்று சீர்காழிப் பிள்ளை பாடிப்பரவிய பரமன், இந்தத் திருத்தலத்தில் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார்; அதற்கு நந்தியைக் கருவியாக்கினார்.

கோச்செங்கட்சோழன் எனும் மன்னன் ஒருவன். சிவபக்தனான இன் கதையை ஏற்கெனவே இந்தத் தொடரில் விவரித்திருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - பாகம் 2 - 60

முற்பிறவியில் சிலந்தியாய்ப் பிறந்து யானையால் அதிக தொல்லைக்கு ஆளான இந்த மன்னன், இந்தப் பிறவியில் யானைகள் ஏற முடியாத மாடக்கோயில்களை அமைத்ததாக வரலாறு சொல்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்தக் கோயிலும்.

ஒருமுறை இந்தச் சோழனுக்கு, வயிற்றை நோகச் செய்யும் குன்மநோய் ஏற்பட்டது. என்ன மருத்துவம் செய்தும் பிணி நீங்காத நிலை. சிவபிரானிடம் சரணடைந்தான்.

அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. `கல்மாடு புல் தின்னும் தலத்துக்குச் சென்று வழிபட்டால் பிணி தீரும்’ என்று வழிசொன்னது அசரீரி வாக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படியான அபூர்வ தலத்தைத் தேடியலைந்த சோழன் திருத் தண்டலைக்கும் வந்தான். சிவனாரின் முதல்பிள்ளைக்குச் சமர்ப்பிக்கும் விதமாக அருகம்புல்லுடன் ஆலயத்துக்குள் நுழைந்தான். நந்தி விக்கிரகம் அருகில் வரும்போது, அந்தக் கல் நந்தி அவன் பக்கம் முகம் திருப்பி தன் நாவினால் புல்லைப் பற்றி இழுத்துத் தின்ன ஆரம்பித்தது.

அக்கணமே நோயின் கடுமை குறைவதையும் வயிறு குளிர்வதையும் உணர்ந்த மன்னன், மகிழ்ச்சியில் போற்றித் துதித்தான் திருத் தண்டலைப் பரமனை.

இப்படியொரு திருக்கதை உண்டு இத்தலம் குறித்து. புல் தின்றதற்குச் சாட்சியாகக் கழுத்தைத் திருப்பிய நிலையில் நந்தி திகழும் அற்புதத்தைக் கண்டே ஞானசம்பந்தரும் வியந்து வணங்கினார்.

இந்தக் கதையைச் சுருக்கமாக முதியவர் தன் பிள்ளையிடம் சொன்னதும் அவன் கேட்டான்: ``தந்தையே! நந்தியின் அற்புதம் சரி... அற்புதத்தை அற்புதம் தரிசிக்கிறது என்றீர்களே... இரண்டாவது அற்புத மாகச் சீர்காழிப் பிள்ளையைத்தானே சொல்கிறீர்கள்... ஏன் அப்படி?’’

அவன் இப்படிக் கேள்வி கேட்ட தருணத்தில், அடியார்கள் குழு அங்கிருந்து மெள்ள நகரத் தொடங்கியிருந்தது. மூலக் கருவறையில் பகல் பொழுது சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டிருந்தன.

வழிபாட்டுக்கு இன்னும் கொஞ்சம் நாழிகை ஆகும் என்பதால், அடியார்கள், சீர்காழிச் சிவக்கொழுந்தையும் வாகீசரையும் சற்று ஓய்வெடுக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

இருவரும் அர்த்தமண்டபத்தை நோக்கி நகர்ந்தார்கள். உடன் வந்தோர் திருக்குளத்துக் கரையிலும் பிராகாரத்திலுமாகக் களைப்பார அமர்ந்தார்கள். ஊர் சார்பில் அவர்களின் தாகம் தணிக்க நீர்மோர் வழங்கப்பட்டது.

சிவமகுடம் - பாகம் 2 - 60

தன்னிடம் கேள்வி கேட்ட பிள்ளையை அழைத்துக்கொண்டு, குருந்த விருட்சம் ஒன்றின் அருகில் வந்த முதியவர், விருட்சத்தின் நிழலில் அமர்ந்தார். மைந்தனையும் அருகில் அமரச்சொல்லிப் பணித்தார். அவன் வசதியாக அமர்ந்துகொண்டதும் சீர்காழிப் பெற்றெடுத்த அற்புதத்தின் அற்புதங்களை விவரிக்க ஆரம்பித்தார்!

``தோணிபுரத்து ஞானக் குழந்தைக்கு, நம் பரமனின் ஆணைப்படி சாட்சாத் உலக அன்னையே ஞானப்பால் வழங்கியதையும், அந்தச் சிறு பருவத்திலேயே `தோடுடைய செவியன்...’ என்று குழந்தை பாடத் தொடங்கி அருள் பெற்றதையும் நாம் எல்லோருமே அறிவோம்.

தோணி புரத்தில் மட்டுமல்ல, ஞானப்பிள்ளை போகும் தலமெல்லாம் பரமனின் அருளும் உடன்செல்கிறது என்றே நான் சொல்வேன். அப்படிப் பல தலங்களில் அவருக்குப் பரமன் அருள்பாலித்த அற்புதங்கள் உண்டு...’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளம் சிலிர்க்க கண்கள் பனிக்க திருஞான சம்பந்தரின் யாத்திரை அற்புதங்களைச் சொல்லத் தொடங்கிய அந்த முதியவர், பெரும் வணிகராகத் திகழ்பவர். கீழ்த் திசையிலும் மேற்றிசையிலுமாக பல பட்டினங்களை வலம் வந்தவர். வடக்கே சாளுக்கியம் தாண்டியும் தெற்கே குமரி தீரம் வரையிலும் விரிந்திருந்தது, அவரின் வணிகம்.

பரதக் கண்டத்தின் ஒருபுறம் நடக்கும் நிகழ்வுகள் வேறோரு புறம் பெரிதும் பேசப்படுகின்றன என்றால், இவரைப்போன்ற வணிகர்களின் பெரும்பயணக் கதையாடல்களும் அதற்கு ஒரு காரணமாகும். இந்த வணிக முதியவரும் ஒரிரு திங்களுக்கு முன்னர்தான் தன்னுடைய வணிக யாத்திரையை முடித்திருந் தார். அவ்விதமான தனது பயணங்களில், தான் காணவும் செவிமடுக்கவும் செய்த சம்பவங் களையும், தகவல்களையும் ஒரு கதைபோன்று மற்றவர்களுக்குப் பகிர்வதில் மிகவும் விருப்பம் உண்டு இந்த வணிகருக்கு.

அவ்வகையில், கடந்த பயணம் ஒரு தல யாத்திரையாகவும் அமைந்து போனது அவருக்கு. அந்தத் தலங்களிலெல்லாம் திருஞானசம்பந்தப் பெருமான் தொடர்பான அற்புதங்களை அடியார்கள் பலரும் கூறக் கேட்டு அகமகிழ்ந்துபோனார் வணிகர்.

எப்படியேனும் சீர்காழிப் பிள்ளையை தரிசிப்பது என்று முடிவெடுத்திருந்தார். இந்த நிலையில்தான் திருத் தண்டலைக்கு திருஞானசம்பந்தர் வருகை புரிந்தார். கூடவே வாகீசப் பெருமானும் வரவே வணிகர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. துணைக்கு மைந்தனை அழைத்துக்கொண்டு திருத்தண்டலைச் சிவாலயத்துக்கு ஓடோடி வந்தார்; தரிசித்தார்; மகிழ்ந்தார்!

அதே மகிழ்ச்சியோடு தான் கேள்வியுற்ற சீர்காழிப் பிள்ளையின் அற்புதங் களை தன் மைந்தனுக்கும் விவரித்தார்.

``தோணிபுரமாகிய சீர்காழியில் `தோடுடைய செவியன்’ என்று பிள்ளை பாடத் தொடங்கினார் அல்லவா? அங்கு மட்டுமல்ல, தன் தந்தையின் தோளில் அமர்ந்துகொண்டு தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்று பாடியிருக்கிறார் ஞானப் பிள்ளை.

திருக்கோலக்கா தெரியும் அல்லவா. அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மழலைக் குரலில் பிள்ளை பதிகம் பாடும்போது, கைகளைத் தட்டி தாளம் போடுமாம். பிஞ்சுக் கரங்கள் புண்ணாகுமே என்று பரமனும் அம்மையும் அவருக்கு அந்த ஊரில் பொற்றாளங்களைத் தந்தார்களாம். அந்த அற்புதத்தைக் கண்டு ஊரே வியந்ததாம்.

அதேபோல் தில்லைக்கு வடமேற்கு திசையில் இருக்கும் திருநெல்வாயில் அரத்துறை எனும் ஊரில், சம்பந்தப் பிள்ளைக்கு முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் அளித்து அருள்புரிந்தாராம் சிவபிரான்.

பெருமையும் புகழும் ஏறினால் நம் போன்றவர்களுக்கு ஆணவம் அல்லவா தலைதூக்கும். ஆனால் சீர்காழிப்பிள்ளை அப்படியில்லை. சிவனருளால் திக்கெட்டும் புகழ் பரவினாலும் அவரின் அன்பும் கருணை யும் மட்டுப்படவில்லை. குடந்தைக்கு அருகில் திருச்சேய்லூர் என்றொரு தலம். சண்டேசப் பெருமான் பிறந்த பதி. ஆகவே, அவ்வூரில் முத்துச்சிவிகையைத் தவிர்த்து, மண்ணில் இறங்கி நடந்தே சென்று தரிசித்தாராம் நம் ஞானமுதல்வர். மேலும், பரமன் அருளால் நம் சம்பந்தப்பெருமான் பிணி நீக்கிய அதிசயங் களும் உண்டு. மழவர்களின் தலைநகரம் பற்றி அறிவாய்தானே...’’

பெரியவர் உரையின் ஊடே ஒரு கேள்வியை முன்வைக்க, மகன் பதில் சொன்னான்: ``தெரியும் தந்தையே! திருப்பாச்சிலாச்ரமம் ஊர் பற்றிதானே சொல்கிறீர்கள்?’’

``அதே தலம்தான். மழவர்களின் தலைவன் கொல்லிமழவனின் மகள் முயலகன் நோயால் வருந்தித் தவித்தாளாம். அவ்வூருக்குச் சென்ற நம் சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி அவளின் நோயையும் மழவனின் பெருங்கவலையையும் நீக்கி அருள்பாலித்தாராம். இங்கே இப்படியென்றால், வேறோர் இடத்தில் ஒரு கூட்டமே குளிர்ச் சுரத்தால் அல்லல்பட்டது. அவர்களின் துயரத்தையும் தீர்த்து வைத்தார் சம்பந்தர்!’’

``அப்படியா? அது எந்த இடம்... அங்கே சம்பந்தர் செய்த அற்புதம்தான் என்ன?’’ - ஆவல் மேலிட கேட்டான் தனயன்.

தந்தை தொடர்ந்தார்...

``திருக்கொடிமாடச் செங்குன்றூர்தான் அந்த இடம். அங்கே சிவ பிரானைத் துதித்து அடியார்களின் குளிர்ச்சுரம் நீங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வியாழக்குறிச்சி பண்ணில் அற்புதமாய் ஒரு பதிகம் பாடித் தொழுதார் பிள்ளை. பெருமான் மனம் கனிந்தார்; அடியார்களின் சுரம் நீங்கியது.’’

``அது என்ன பதிகம்... தங்களுக்குத் தெரியுமா தந்தையே?’’

மகன் கேட்க, இசையிலும் சற்று ஞானம் கொண்ட பெரியவர் பண் பிசகாமல் பாடினார் அந்தப் பதிகத்தை.

``அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழல்

போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா

திரு நீலகண்டம்...’’

`முற்பிறவிகளின் வினைக்கேற்பவே இப்பிறப்பிலும் வினை செய்து பலன்களை அனுபவிக்கிறோம் என்பதை அறிவோம். எனினும் வினை களிலிருந்து விடுபட வழியைத் தேடாமல் இருப்பது குறை அல்லவா. நாம் சிவனாரின் அடியார்கள். சிவப்பணிகளைச் செய்து அந்த இறைவனின் கழல்களைப் பற்றுவோம். அதனால் பழைய வினைகள் நம்மை அணுகாது. இது திருநீலகண்டனின் மீது ஆணை’

இந்தக் கருத்துடன்கூடிய - பிற்காலத்தில் திருநீலகண்ட பதிகம் என்று புகழ்பெற்ற அற்புதப் பதிகத்தின் முதல் பாடலை அவர் பாடி முடிக்கவும், புயலெனப் பாய்ந்துவந்த வெண்புரவி ஒன்று, ஆலய வாயிலில் வெகு சிரமத்துடன் வேகம் அடக்கி நிலைகொள்ளவும் சரியாக இருந்தது!

அதேநேரம், திருத்தண்டலையை வந்தடைந்த வெண்புரவிக்கு இணை யான உருவமும் வேகமும் கொண்ட வேறொரு புரவி, கனத்த சரீரத்தினர் ஒருவரைச் சுமந்தபடி ஒரு மலைச்சரிவை அடைந்திருந்தது.

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் புரவியிலிருந்து இறங்கிய அந்த மனிதர், ஏதோ சலனத்தால் தூண்டப்பட்டவராய் புரவியை நகர்த்தியபடி பெரும்பாறை ஒன்றின் பின்னால் தன் தேகத்தை மறைத்துக்கொண்டார்.

ஒருசில கணத் துளிகள் நிதானித்தவர், பின்னர் மெள்ள தலையை நீட்டி சூழலை உற்றுநோக்கினார். பாறையின் எதிர்புறத்தில் மலைச்சரிவிலிருந்து உருவம் ஒன்று மெள்ள மேலெழுவதைக் கண்டார். அடுத்தடுத்த கணத் துளிகள், உருவில் பெரிய ரிஷபத்தையும் சூலப் படையை ஏந்தியவாறு அதன்மீது அமர்ந்து வந்த மர்ம நபரையும் புரவி மனிதரின் கண்களுக்குக் காட்டிக்கொடுத்தன.

காளை வாகனரின் கம்பீரத் தோற்றத்தைப் பார்த்தபோது, தென்னாடு டைய சிவனே ரிஷபம் ஏறி வருவதாகத் தோன்றியது புரவி மனிதருக்கு.

ஆனால் காளை மனிதரோ, `நான் காலகாலன் அல்ல; உம் உயிரைப் பறிக்கப்போகும் காலனே’ என்பது போல், தன் சூலப்படையை இவர் இருக்கும் திசை நோக்கி ஏவினார்!

- மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism