திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சிவமகுடம் - 61

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் ( shyams131 )

மலையே மகேசனாய்!

இயற்கையே இறை அல்லவா? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையின் இருப்பை, இயற்கை சில அதிசயங்களால் வெளிக்காட்டும். அப்படித்தான் அந்த மலைச் சிகரத்தையும் ஓர் அதிசயமாய் குலச்சிறையாருக் குக் காட்டிக்கொண்டிருந்தது.

அடிவானில் செங்கதிர்கள் மெள்ள மெள்ள விலகிக் கொண்டிருக்க, ஏறக்குறைய அன்றைய மாலைச் சந்தியாகாலம் விடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்த நட்சத்திரங்கள், சற்று நேரத்தில் கூட்டம் கூட்டமாய் மலர்ந்து சிரித்தன.

ஆகையால் விண் விதானம் மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுபோல் விநோத தரிசனம் தந்தது. அந்த அழகு விதானத்தின் கீழே விடை வாகனர் பத்மாசனத்தில் அமர்ந்து தவத்தில் லயித்திருப்பது போன்று ஓர் உருவைக் காட்டியது, அருகிலிருந்த மலைச் சிகரம்.

உண்மையில் அது சிவமே என்றால், சிவத்தின் மடியில் இருக்கும் பாக்கியம் பெற்றவராவார் குலச்சிறையார். ஆம், ஏறக்குறைய அந்தச் சிகரத்தின் மடிப்பாகமாய் அமைந்த - சிறியதும் பெரியதுமான பாறைகளும், விருட்சச் சோலைகளும் திகழ்ந்த சமவெளியில்தான் அந்த மாவீரர் உறைந்திருந்தார்.

சிவமகுடம் - 61

இப்போதைக்கு அவரைப் பொறுத்தவரையிலும் அந்த மலைச் சிகரம்தான் அவர் வணங்கும் சிவம். அந்தச் சிவத்திடம் முறையிட சில விண்ணப்பங்கள் இருந்தன அவரிடத்து. ஆனால், அவற்றைச் சமர்ப்பிக்கும்படியான அமைதிதான் அவரின் உள்ளத்தில் இல்லை; அது பெரும்புயல் தீண்டிய கடற்பரப்பாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவரோ, எப்படியேனும் தன் மனச் சமுத்திரத்தை அடக்கிவிட யத்தனித்தார். அதன் பொருட்டு அந்த மலைச் சிகரத்தை... இல்லையில்லை... தன் மகேசனை நோக்கினார்.

பிரதானமான அந்தக் குன்றின் இருபுறமும் இயற்கையாய் அமைந்திருந்த வேறிரு முகடுகள் பெருமானின் திருக்கரங்களாய்த் தென்பட்டன அமைச்சருக்கு. ஆனால், அவற்றில் மானும் மழுவும் காட்சிக்குப் புலப்படவில்லை!

இங்கே அமைச்சருக்குக் கிடைத்தது அருவுருவ காட்சி எனில், சீர்காழியாகிய தோணிபுரத்தில் கட்டுமலையின்மீது இதே அம்சத்துடன் கூடிய மான் - மழு இல்லாத ஈசனின் திருவுருவக் காட்சி கிட்டும். இதைச் சிலாகிக்கும் பதிகமொன்று `புகலி நிலாவிய புண்ணியனே எறிமழுவோடு இளமான் கையின்றி இருத்தபிரான் இது என் சொல்லாய்?’ என்று வியந்து கேட்கிறது.

மானும் மழுவும் தாருகாவனத்து ரிஷிகளால் ஏவப்பட்டவை என்பது திருக்கதை. தோணிபுரம் பிரளய வெள்ளம் வடிந்தபின் உமாமகேசனாய் இறைவன் தரிசனம் தந்த தலம். தாருகாவனத்துச் சம்பவம் நிகழ்ந்தது பிரளயத்துக்குப் பிறகே என்பதால், தோணிபுரத்தில் பெருமானின் திருக் கரங்களில் மான் மழு இல்லை என்பார்கள் பெரியோர்கள்.

சிவமகுடம் - 61

`எனில், மதுரை மண்ணிலும் ஏதேனும் பிரளயம் நிகழுமோ? அதைக் குறிக்கவே மான் மழுவின்றி எம்பிரான் காட்சிகொடுக்கிறாரோ...’ சலனமுற்ற மனம் சந்தேகக் கேள்வியை எழுப்பியது. பின்னர் அதுவே அந்த ஆதிமூலத்திடம் சரணடைந்து, மெள்ள மெள்ள சாந்தம் கொண்டது. `நடப்பது அனைத்தும் சிவச் சித்தம். அவர் திருவுளப்படி எது நடப்பினும் நிறைவில் நல்லதே விளையும்’ என்ற தீர்மானத்துடன், ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி வணங்கியது.

இப்போது பேரமைச்சரின் மனத்தில் சற்றே தெளிவு பிறந்தது. சில நாழிகைகளுக்குமுன் ரிஷப வாகனனாய் சூலாயுதபாணியாய் தன்முன் தோன்றி, எதற்கும் அசைந்துகொடுக்காத தன்னையே ஓரிருகணம் குலைநடுங்கச் செய்து விட்ட அந்த மாமனிதர் எங்கே என்று தேடினார்.

நாலா திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மனிதர் தென்படவில்லை. தன் பொருட்டு பச்சிலைகளைத் தேடிச் சென்றவர், எப்போது திரும்புவார் என்பதைக் கணிக்கமுடியாத பேரமைச்சர், சிவத் துதிக்கு அடுத்தபடியாக தனக்கு மிகவும் பிடித்த அறப் பாடல்களைப் படித்துப் பொழுதைக் கழிக்க முடிவு செய்தார்.

ஆகவே, எப்போதும் இடைக்கச்சையில் திருநீற்றுப் பொதியோடு சேர்த்து வைத்திருக்கும் ஓலை நறுக்குகளைக் கையிலெடுத்தார். ஒன்றை எடுத்து, அருகில் கனன்று எரிந்துகொண்டிருந்த பந்தம் தந்த வெளிச்சத்தின் உதவியோடு அதிலுள்ள வரிகளைப் படிக்க ஆரம்பித்தார்.

அதிகச் சத்தமின்றி, தமது திருப்தியின் பொருட்டு மெல்லிய குரலில் பாடலை அமைச்சர் படிக்கத் தொடங்கினார். பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ மந்திரம் முணுமுணுப்பதாகவே படும். பச்சிலைகளோடு வந்த நபருக்கும் அப்படியே தோன்றியிருக்கவேண்டும். ஆகவே, சந்தடி இல்லாமல் பேரமைச்சருக்குப் பின்புறமாக நெருங்கி வந்து, ஓலையைக் கவனித்தார்.

தூய வெண்ணீறு பூசப்பட்டிருந்ததால், ஓலையின் எழுத்துகள் மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய்த் தெரிந்தன...

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிரல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும்...


மேற்கொண்டு அந்த மனிதர் வாசிப்பதற்குள், அவரின் வரவை பேரமைச்சர் கண்டுகொண்டார். வந்தவரின் நிழல் அவரின் வருகையைப் பேரமைச்சருக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

உயிரினும் மேலான, தென்னகமே கைதொழும் அந்த மாமனிதர் நின்றிருக்க, அவரின் திருமுன் அமர்ந்திருப்பது தகாது என்ற எண்ணத் துடனும் அதனால் விளைந்த பதற்றதுடனும் ஓலையை இடைக்கச்சையில் சொருகிக்கொண்டு விரைந்து எழ முயன்றார் பேரமைச்சர் குலச்சிறையார்.

ஆனால் அவரால் இயலவில்லை. காலில் பட்ட காயம் அதிகம் வலியைக் கொடுத்து அவரைத் தடுத்தது. தடுமாறிய அமைச்சரைத் தாங்கிப் பிடித்த கூன்பாண்டியர், மீண்டும் மெள்ள அவரைப் பாறையில் அமர்த்தினார்.

``மன்னிக்கவும் மன்னா! என் பொருட்டு தாங்கள் அதிகம் சிரமம் ஏற்கிறீர்கள்’’ - பேரமைச்சர் வணங்கிப் பணிந்தார்.

சிவமகுடம் - 61

மாமன்னர் புன்னகைத்தார். கொண்டுவந்த பச்சிலைகளை உள்ளங்கைகளால் கசக்கியபடியே கூறினார்...

``எம் தந்தையார் பேரரசர் செழியன் சேந்தனார் இருந்து, அவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வேனோ, அதையே தங்களுக்கும் செய்கிறேன். ஆம் அமைச்சரே... தங்களை என் தந்தைக்கு நிகராகவே கருதுகிறேன்...’’

மாமன்னரின் இந்தப் பதில் பேரமைச் சரை மிகவும் நெகிழவைத்து விட்டது. எப்போதும் உணர்ச்சியை வெளிக்காட்டாத அவரின் கண்களில் நீர் துளிர்த்தது. அவரின் நிலையை உணர்ந்த மாமன்னர், பேரமைச்சரின் சிந்தையை திசை திருப்ப எண்ணினார்.

``ஆமாம்... ஏதோ பாடலொன்று படித்துக்கொண்டிருந்தீர்களே... மங்கிய வெளிச்சத்தில் என்னால் அதனைப் பொருளுணர்ந்து படிக்க இயலவில்லை.எங்கே நீங்கள் உரக்கப் படியுங்கள்... சற்றுச் செவிமடுக்கிறேன்’’

பச்சிலைகள் மாமன்னரின் கரங்களில் கசங்கிச் சாறினை வெளிப் படுத்தத் தொடங்கியிருந்தன. அவர், பாறையில் அமர்ந்திருந்த அமைச்சரின் முழங்காலுக்கு நெருக்கமாய்க் குனிந்தார். காயத்தால் சிவந்து வீக்கம் கண்டிருந்த பாகத்தில் பச்சிலைச் சாறுத் துளிகளை விழச் செய்தார். சாறு பட்டதும், ஏற்பட்ட விநோதமான விறுவிறுப்பு உணர்வு, வலிக்கு இதமாக இருந்தது அமைச்சருக்கு.

கூன்பாண்டியர் மாறவர்மர் தன் பணியைத் தொடர்ந்தவாறே மீண்டும் கேட்டார். ``அமைச்சரே! பாடல் படிக்கச் சொன்னேனே...’’

பச்சிலைச் சாறு தந்த இதத்தால் தன்னையுமறியாமல் இமைகளை மூடித் திறந்த பேரமைச்சர் பதில் சொன்னார்...

``மாமன்னா! பாடலைப் படிப்பதைவிடவும் விளக்கத்தைச் சொல்லி விடுகிறேனே...’’

``அதுவும் நல்லதுதான்... இந்தத் தருணத்திலும் எங்கள் பேரமைச்சரைப் படித்து ரசிக்கத் தூண்டுகிறது எனில், அந்தப் பாடலின் விளக்கத்தை நானும் அறிவது அவசியம்தான். சொல்லுங்கள்... சொல்லுங்கள்...’’

மாமன்னரின் ஆவலை ரசித்தபடியே பேரமைச்சர் விளக்கினார்.

``கொல் களிரும் விரைந்து செல்லும் குதிரை யும் கொடி பறக்கும் தேரும், அஞ்சாத போர் மறவரையும் உடையவனாய் இருக்கிறாய். அவை பெருமை தரும் என்றாலும் அறநெறியை முதலாக உடையதே அரசனின் சிறப்பாகும். ஆதலால் `நம்மவர்’ என்று அறம் கோணாது, `அயலார்’ என்று அந்நியரின் நற்குணங்களை வெறுத்து அவர்களைக் கொல்லாது, ஞாயிறு போன்ற ஆண்மையும், திங்கள் போன்று அருளும், மழை போன்று கொடைத் தன்மையும் கொண்டவனாய்த் திகழ்வாயாக... இதுதான்...’’

அமைச்சர் முடிப்பதற்குள் மாமன்னர் இடைமறித்து, ``ஆஹா... பேரமச்சரே இது முற்காலப் புலவர் பாடியதா... அல்லது இந்த மாறவர்மன் அரிகேசரிக்காக என் அமைச்சர் பாடியருளியதா?’’ என்று வினா தொடுத்ததுடன், வேறொன்றையும் சொல்ல, பேரமைச்சர் பெரிதும் வியந்துபோனார்!

``அமைச்சர்பிரானே, தாங்கள் முதலாவதான சில வரிகளை விடுத்து அதன்பிறகான வரிகளுக்கு மட்டுமே பொருள் விளக்கம் தருகிறீர்... ஏனென்ற காரணத்தைக் கேட்கப் போவதில்லை. ஆனாலும்...’’

மாமன்னர் சற்று நிறுத்த அமைச்சர் கேட்டார்: ``என்ன மன்னவா... கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேட்கலாம். நான் தங்களின் அடிமை!’’

தனது மேல் வஸ்திரத்தைக் கிழித்து அதைக்கொண்டு பேரமைச்சரின் காயத்துக்குக் கட்டுப்போட்டு முடித்திருந்த மாமன்னர், பேரமச்சரின் திருமுகம் நோக்கி நிமிர்ந்தார்.

``நீங்கள் சொல்லும் அற இலக்கணங்களுக்கு நான் பொருத்தமானவன்தானா?’’

இந்தக் கேள்வியை மாமன்னர் கேட்டதும் பதைபதைத்துப் போனார் பேரமைச்சர். உடல் குலுங்க, காலின் வலியையும் மீறி எழுந்து நின்ற அந்த மாவீரர், இடையிலிருந்த குறுவாளை எடுத்துப் வலக் கை பெருவிரலைக் கீறி, துளிர்த்த குருதியைத் தன் உயிரினும் மேலான பேரரசரின் பாதங்களுக்குச் சமர்ப்பித்தார். இதை சற்றும் எதிர்பாராத மாமன்னர் அப்படியே குலச்சிறையாரை அணைத்துக் கொண்டார்.

பேரமைச்சர் குரல் தழுதழுக்கச் சொன்னார்: ``சக்ரவர்த்தி அவர்களே! தென்பரதக் கண்டத் தில் தங்களைவிடவும் அறச் சீலர் வேறு எவர் உள்ளனர். எங்கள் தென்னவன், மக்களின் தெய்வம் அல்லவா?’’

பேரமைச்சர் இப்படிச் சொன்னதும், அவர் மீதான தன் அன்புப் பிடியைத் தளர்த்திய மாமன்னர் கூறினார்: ``நீங்கள் தெய்வம் என்கிறீர்கள்... ஆனால், உங்கள் தென்னவனை தென்னாட்டிலிருந்தே அகற்றிவிட சதி நடக்கிறது தெரியுமா?’’

கூன்பாண்டியரின் இந்தக் கேள்வியால் நிலை குலைந்து போனார் குலச்சிறையார். அடுத்த கணமே, மாமன்னர் கூறியது உண்மைதான் என்பதை நிரூபிப்பதுபோல் ஒரு விபரீதச் சம்பவம் நிகழ்ந்தது!

மலைச் சமவெளியில் அந்த இடத்தில் பேரமைச்சர் சந்தித்ததற்கு நிகரான வேறொரு சம்பவம் குறித்தே, திருத்தண்டலை எனும் அந்தத் தலத்துக்கு வந்துசேர்ந்த புரவி வீரனும் அடியார்களிடம் விவரித்துக் கொண்டிருந்தான்!

- மகுடம் சூடுவோம்...