Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 38

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சக்ரவர்த்தி அவர்களே, தங்களிடம் ஓர் உதவி வேண்டுகிறேன். தயவுகூர்ந்து என்னை மீண்டும் இதே இடத்தில் கட்டிப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்!

சிவமகுடம் - பாகம் 2 - 38

சக்ரவர்த்தி அவர்களே, தங்களிடம் ஓர் உதவி வேண்டுகிறேன். தயவுகூர்ந்து என்னை மீண்டும் இதே இடத்தில் கட்டிப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்!

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

திசயங்களால் நிறைந்தது இந்தப் பூவுலகம். படைப்புகளோ சம்பவங்களோ மண்ணில் மனிதனுக்குச் சாத்தியப்படாத ஒவ்வொன்றும் அவனைப் பொறுத்தவரையிலும் அதிசயம்தான். சிகரங்கள் அதிசயம்; சிகரம் தொட்டுத்தவழும் முகிலினங்கள் அதிசயம்; முகில் உடைந்து மண்ணில் பொழியும் மழை அதிசயம்; மழையின் நீர்ப்பெற்று முளைவிடும் விதை அதிசயம்; விதைக்குள் விருட்சம் அதிசயம்!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்... நம் கற்பனைக்கெட்டாத அதிசயனான அந்தக் கடவுள் அனவரதமும் நிகழ்த்தும் அற்புதங்களை!

சிவமகுடம்
சிவமகுடம்

அந்த வரிசையில், இதோ இளங்குமரனின் கண்ணெதிரில் குகைச்சுவரில் வலை பின்னிக்கொண்டிருக்கும் சிலந்தியும் அதன் வாயில் பிறக்கும் நூலிழையும் அவனுக்குப் பேரதிசயமாகத் தோன்றியதில் வியப்பில்லைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிப்புறத்தில் சிலந்தியென்றால், உள்ளுக்குள்ளோ அவன் மனமும் பல திட்டங்களைக் கோத்து மிகப் பெரியதான ஒரு வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதில் சிக்கித் தவிக்கப் போவது யார்... சேரர் தரப்பா அல்லது களப்பிரர்கள் தரப்பா... இதற்குப் பதில், அந்த இளைஞனுக்கும் அவனைக் கருவியாக்கிக் கொண்டிருக்கும் அந்தக் கடவுளுக்கும்தான் தெரியும்!

இப்போது, அவன் கைகால்கள் மீண்டும் பிணைக்கப்பட்டிருந்தன. அப்படி அவனை மீண்டும் கட்டுத்தளைக்கு ஆளாக்கியவர், பாண்டிய மாமன்னர். ஆம்! முன்னிரவில் முரட்டு வீரர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டதும், இந்தக் குகைக்குள் பிரவேசித்துவிட்டார். இளங்குமரனைத் தன்னுடன் வரும்படியும் பணித்தார். ஆனால், அவனோ திட்டவட்டமாக மறுத்துவிட்டான். காரணம் கேட்டபோது, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் குறித்த ரகசியத்தை அறிந்தாக வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தான்.

‘‘வேறு யாராக இருக்கும்... வெளியே அந்தப் பெண்ணைச் சிறைபடுத்த முயற்சி செய்தவர்களே இதையும் செய்திருப்பார்கள். அவர்களைத்தான் நான் விரட்டிவிட்டேனே... மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாயா குமரா’’ என்று கேட்டார் பேரரசர்.

சிவமகுடம்
சிவமகுடம்

அவர் அப்படிக் கேட்டதும் தன்னிலை மறந்து சிரித்துவிட்டான் இளங்குமரன். எனினும் மறுகணமே தன்னுடைய அந்தச் செயலுக்காக மன்னிப்பு கேட்கவும் தயங்கவில்லை அவன்.

``மன்னவா மன்னியுங்கள்! அனைத்தையும் தெரிந்துகொண்டு நீங்கள் அப்படிக் கேட்டது தான் எனக்குள் நகைப்பை ஏற்படுத்திவிட்டது. உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்... என்னைச் சிறைப்படுத்தியது இந்த முரடர்கள் அல்லர்; வேறு தரப்பினர் என்று. எனினும் என்னைச் சோதித்துப் பார்க்கிறீர்கள். இருக்கட்டும்... உங்களின் இந்தச் சோதனையை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்... என்னைச் சிறைப்படுத்தியவர்கள் யார் என்பதை விரைவில் தெரிந்துசொல்கிறேன்’’ என்று உணர்ச்சி மேலிட பேசி முடித்தவன், சற்று நிதானித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக, மாமன்னரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான்.

``சக்ரவர்த்தி அவர்களே, தங்களிடம் ஓர் உதவி வேண்டுகிறேன். தயவுகூர்ந்து என்னை மீண்டும் இதே இடத்தில் கட்டிப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்!’’

அவனைக் கூர்ந்துநோக்கிய கூன்பாண்டியர், மெள்ள புன்னகைத்துக் கொண்டார். `இப்படியான வீரர்களால்தான் என் தேசம் தலைநிமிர்ந்து திகழ்கிறது’ என்று இளங்குமரன் பொருட்டு எழுந்த உவகையால் உருவான புன்னகை அது. எனினும் அதை இளங்குமரனிடம் காட்டிக்கொள்ளாமல், ஏதும் புரியாதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு, இளங்குமரன் அறுத்துப்போட்டிருந்த கயிற்றை எடுத்துவந்து அதன் உதவியால், அந்தக் குகைக்குள் முன்னர் அவன் கட்டுப்பட்டுக்கிடந்த அதே இடத்தில் மீண்டும் அவனைக் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றார்.

இளங்குமரன் எதிரிகளின் வரவை எதிர்நோக்கி நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த வேளையில்தான் சிலந்தி வலை அவன் கவனத்தை ஈர்த்து, அவனுக்குள் பெரும் திட்டங்களை ஊறச் செய்ததோடு, பழங்கதை ஒன்றையும் அசைபோடச் செய்துவிட்டது.

பாண்டிய தேசத்தை மீட்டெடுத்த மாவீரர் ஒருவரின் பெருமையைப் பேசும் செவிவழிக்கதை அது.

இதேபோன்றதொரு குகையில்தான் அந்த மாவீரரும் தஞ்சம் புகுந்திருந்தார். தென்னகத்தில் களப்பிரர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம் அது. இயல்பிலேயே விடுதலை வேட்கை மிகுந்த பாண்டிய தேசத்து இளம் மறவர்கள் பலரும் அந்த மாவீரரின் தலைமையில் துடித்தெழுந்தனர்.

அவர்கள்மீது அதீத அடக்குமுறையை ஏவினான் அன்றைய களப்பிர மன்னன். அதன்காரணமாக ஆங்காங்கே வனப்புறங்களில் மறைந்திருந்தது மாவீரர் தலைமையிலான புரட்சிப்படை. வனத்துக்குள்ளும் புகுந்தனர் எதிரிகள். அப்படியானதொரு தருணத்தில் குகையொன்றை கண்டார் மாவீரர். அதன் வாயிலில் பெரும் சிலந்தியொன்று வலை பின்னிக்கொண்டிருக்க, அவருக்குள் ஓர் யோசனை உதித்தது. தாமதிக்காமல் உட்புகுந்துவிட்டார். பகைவர்கள் அந்த இடத்துக்கு வருவதற்குள் சிலந்தியின் வலைப்பின்னல் முழுமையடைந்திருந்தது.

சிவமகுடம்
சிவமகுடம்

அவரைத் தேடிவந்த பகைவர்கள் அதைக் கண்ணுற்று, சிலந்தி வலை கட்டும் அந்தக் குகை வெகுநாள் ஆளவரவமற்று திகழ்வது என்று கருதி அங்கிருந்து அகன்றனர். பிற்காலத்தில் அந்த மாவீரரின் தலைமையில் பெரும்படை உருவானது; களப்பிரர்கள் வீழ்த்தப்பட்டார்கள். மீண்டும் பாண்டிய தேசம் எழுச்சியுற்றது.

இப்படியான பெருங்கதையை தந்தையும் பாட்டனும் சிலாகித்துச் சொல்வதைச் செவிமடுத்து மகிழ்ந்திருக்கிறான் இளங்குமரன். இதோ இப்போது இந்தச் சிலந்திவலை மீண்டும் அந்தக் கதையை நினைவுபடுத்தி விட்டது. பாண்டிய தேசத்தை மீட்டெடுத்த அந்த மாவீரரின் திருப்பெயர் கடுங்கோன். அவரின் திருக்குமாரர் அவனிசூளாமணிப் பாண்டியர்; பெயரர் செழியன்சேந்தன். இந்தச் செழியன் சேந்தனாரின் மைந்தனே, கூன்பாண்டியர் எனும் தரணி போற்றும் பெரும் வீரராம் பேரரசர் மாறவர்மன் அரிகேசரி.

இவரின் மூதாதையான கடுங்கோன், களப்பிரரை வீழ்த்தி வெற்றிகொண்ட பெருமையை, வேள்விக்குடிச் செப்பேடுகள் வெகுவாகப் புகழ்கின்றன.

களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை

இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்

பாண்டியாதிராசன் வெளிப்பட்டு

விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து

வேலை சூழ்ந்த வியலிடத்துக்

கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்

செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்

தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்

பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்

தன்பால் உரிமை நன்கனம் அமைத்த

மானம்போர்த்த தானை வேந்தன்

ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த

கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்...

எனப் போற்றுகின்றன வேள்விகுடிச் செப்பேடுகளின் குறிப்புகள்.

இப்படி, பாண்டிய தேசத்தின் பழம்பெருமையை மீண்டும் தரணியில் நிலைநாட்டிய மாவீரர்கள் குறித்த நினைவுகளில் உழன்றபடியும், அவர்களால் கிடைத்த பெருமையை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்று எழுந்த தன்னெழுச்சியுடன் உரிய திட்டங்கள் தீட்டிக் கொண்டும் நேரம் போவதே தெரியாமல் சிந்தனையில் மூழ்கித் திளைத்திருந்தான் இளங்குமரன்.

இங்ஙனம் பகல்பொழுது மெள்ளக் கடந்துபோக, ஆதவன் மேற்கு மலைமுகட்டில் சாயத் தொடங்கும் தருணத்தில், சில புரவிகளின் கனைப்பொலியும் அவற்றின் குளம்படிச் சத்தமும் இளங்குமரனின் சிந்தனையைக் களைத்துப் போட்டன. கடும் பிரயத்தனத்துடன் மெள்ள குகை வாயிலை நோக்கித் தன் உடம்பைத் திருப்பினான் இளங்குமரன். பெரும்பாறை ஒன்று நகரும் ஓசை கேட்டது. தொடர்ந்து குகைக்குள் வெளிச்சம் பரவ, அவன் எதிர்பார்த்திருந்த எதிரிகள் உள்ளே நுழைந்தார்கள்.

ஆனால், அவர்களின் தலைவரும் உடன் வருவார் என்பதை இளங்குமரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இனி நடக்கப்போவது எதுவும் தனக்குச் சாதகமாக இருக்காது என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மெள்ள இளங்குமரனை அணுகிய எதிரிகளின் தலைவர், அவன் நிலையைக் கண்டதும் அந்தக் குகையே அதிரும்படி பெருங்குரலெடுத்துச் சிரித்தார். அவரின் அந்தக் கோரச் சிரிப்பு பாறைகளில் பட்டு மேலும் விகாரமாய் எதிரொலித்தது.

அது அடங்குவதற்குள் வேறொரு சிரிப்பொலி தோன்றி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தது!

குகைச் சூழல் இப்படியென்றால், மதுரையை யொட்டி வைகை நதி தீரத்தின் சூழல் வேறுவிதமாய் இருந்தது.

`ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை’ என்று இலக்கியங்கள் போற்றும் வைகை, அன்றைய நாளில் ஊற்றுப் பெருக்கைத் தேடியலைய வாய்ப்புக்கொடுக்காமல், கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

அந்த மாலைப்பொழுதில் கிருதமால் எனும் கிளை நதி வைகையுடன் இணையும் அந்த இடத்தில் மட்டும் குருதியாறு பாய்வதுபோல், வைகையின் பரப்பு சிவந்திருந்தது. காரணம், வானத்திரைக்குள் தான் மறைந்துகொள்ளுமுன் ஒருமுறை முகம் பார்க்க விரும்பினானோ என்று எண்ணும்படிக்கு, அந்திச் சூரியன் வைகையின் பரப்பில் தன் திருமுக பிம்பத்தைப் பதித்திருந்ததுதான்!

அந்த இயற்கைச் சூழலை மிஞ்சும்படியும் நிஜமாகவே அருகில் ஒரு குருதியாறு ஓடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும்படியுமான ஒரு சம்பவத்தை உண்டாக்கக் காத்திருந்தது காலம்.

நதிக்கரையையொட்டிய சாலையில் மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது பல்லக்கு ஒன்று. வீரப்பெண்கள் புரவிகளில் முன்னும்பின்னுமாய் பாதுகாவல் புரிந்துவர, அந்தப் பல்லக்கைச் சுமந்து வந்ததும் வீராங்கனைகளே.

அந்த வீரப்பெண்மணிகளின் கேசத்தோடு, புரவிகளின் பிடரி மயிரையும் சீண்டி அவற்றை அலைபாயவைத்தபடியும், ஆற்றின் கரைநெடுக வளர்ந்துநின்ற பனை விருட்சங்களின் ஓலைகளைத் தாக்கி அவற்றை அசைந்தாடச் செய்து, அதன் மூலம் விநோத ஒலிகள் எழும்பும் படியும் வீசிக்கொண்டிருந்த இளங்காற்று திடுமென வேகம் பெற்றது. ஆனாலும் அதன் விசையால், பல்லக்கைத் திடமாகச் சுமந்துவரும் வீராங்கனைகளிடம் சிறிதும் தளர்ச்சியை உண்டாக்க முடியவில்லை!

சிவமகுடம்
சிவமகுடம்

அவர்களின் பயணம் தொடரத் தொடர காற்றின் வேகமும் அதிகரித்தது. புரவிப் பெண்மணிகள், பாதுகாப்பு கருதி இயன்றவரையிலும் பல்லக்கை விட்டு அதிகம் விலகிவிடாமல், புரவிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். பொலிவுடன் திகழும் அந்தப் பல்லக்கின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும் இலச்சினையும், அந்த வீராங்கனைகளின் துடிப்பும் பார்ப்பவர்களுக்குப் பார்த்ததுமே காட்டிக்கொடுத்துவிடும் அது எவருடைய பல்லக்கு என்றும் அதில் பயணிப்பது யாரென்றும்!

ஆம்! பாண்டிமாதேவியாரின் அணுக்கத் தோழியர் படையின் மகிமை பாண்டியதேசத்தையும் தாண்டி பிரசித்தம். அவர்களின் பாதுகாவல் வளையத்தை அவ்வளவு எளிதில் எவராலும் உடைத்துவிட முடியாது.

ஆனால், இந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் படியாக, பல்லக்குப் பயணத்தின் ஊடே அந்தச் சம்பவம் நடந்தேறியது. பல்லக்கு அணி ஒரு மேட்டில் ஏறிக்கொண்டிருந்த வேளையில், மேட்டிலிருந்து புயலெனப் பாய்ந்துவந்த ஒரு படையணி, வீராங்கனைகள் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

வீராங்கனைகள், வாள்பிடியில் கை வைப்பதற்குள் அந்த எதிரிகளின் வேல்முனைகள் நீண்டு கடுமையாய் எச்சரித்தன. வழக்கத்துக்கு மாறாக வீரமங்கையரின் திருமுகங்களில் அச்சம் வெளிப்பட்டது. படையணியின் தலைவன் புரவியிலிருந்து தரையில் குதித்தான். வெகு அலட்சியத்துடன் பல்லக்கை நெருங்கினான். தன் வாள் முனையால் பல்லக்கின் திரையை விலக்கினான். மறுகணம் அதிர்ந்தான்.

காரணம்... பல்லக்கின் உள்ளே அவன் எதிர்பார்த்த பாண்டிமாதேவியார் ஆரோகணித் திருக்கவில்லை. அவனுடைய அதிர்ச்சியை அதிகப்படுத்தியது புரவி ஒன்றின் கனைப்பொலி.

ஆம்! வேறொரு திசையிலிருந்து அவர்களை நோக்கிச் சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்தது அந்தக் கரும்புரவி!

- மகுடம் சூடுவோம்...