Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 39

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

திண்டிவனத்துக்கு அருகில் முன்னூர் எனும் தலம் உண்டு. அவ்வூர் சிவாலயத்தின் புராணம் நல்லியக்கோடன் எனும் மன்னனின் சரிதத்தைச் சொல்கிறது.

சிவமகுடம் - பாகம் 2 - 39

திண்டிவனத்துக்கு அருகில் முன்னூர் எனும் தலம் உண்டு. அவ்வூர் சிவாலயத்தின் புராணம் நல்லியக்கோடன் எனும் மன்னனின் சரிதத்தைச் சொல்கிறது.

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

ப்போதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் தவிர்க்க முடியாதது யானை. அத்தி, ஆனை, வேழம், களிறு, கலபம், கரி, மாதங்கம், கைமா, வாரணம், குஞ்சரம் என்றெல்லாம் ஞானநூல்கள் போற்றும் யானை எனும் அந்த அற்புத விலங்குக்கும் பாண்டியப் பேரரசின் ராஜதானியாக பார் போற்றத் திகழ்ந்த மாமதுரைக்குமான தொடர்புக் கதைகள் பலவற்றைச் சிலாகித்துச் சொல்கின்றன புராணங்கள்.

புராணங்கள் வெறும் கதைகள் மட்டுமே நிறைந்ததல்ல! அறிவுப் புலனால் அளவிட்டுக் கணிக்க முடியாத காலத்தொன்மை வாய்ந்தது நம் மரபும் வரலாறும். அவ்வகையில் பல்லாயிரம் வருடங்களுக்குமுன் இம்மண்ணில் நிகழ்ந்தவற்றை வெறும் கதைகளாகவே நம்மால் அறிய முடிகிறது. தற்போதைய காலத்தவரின் எதிர்பார்ப்புக்குத் தக்க சான்றுகள் இல்லை என்றாலும், அவை எல்லாவற்றையுமே வெறும் கதைகள் என்ற அளவில் விட்டுவிடக் கூடாது.

சிவமகுடம்
சிவமகுடம்

சுவடிகள், கல்வெட்டுகள், சாசனங்கள் போன்ற ஆவணங்கள் இல்லாத நிலையிலும் பல பழங்குடிகளின் வாழ்க்கையை, மன்னர்களின் சரிதத்தை, தியாகமும் வீரமும் நிறைந்த நம் மண்ணின் கதைகளை நாட்டுப்புறப் பாடல்களும், தெம்மாங்கும், தாலாட்டும்... ஏன் ஒப்பாரிப் பாடலும்கூட தப்பாமல் சொல்லும். இந்த வரிசையில் பாட்டனும் பாட்டியும் சொல்லும் கதைகளும் அடங்கும். அந்தக் கதைகளில் சில, அழுத்தத்துக்காகவும் உயர்வுக்காகவும் கற்பனைக்கெட்டாத புனைவுகளைச் சொன்னாலும் கதையின் மையம் சம்பவத்தின் தாக்கத்தை எடுத்துரைக்கும். புராணங்களும் தலபுராணங்களும்கூட அவ்வகைதான். `கடவுளர்க் கதைகளே’ என்று அவற்றை இலகுவாய் விலக்கிச்செல்ல முடியாது. அவை அளிக்கும் அறங்களும் தகவல்களும் ஏராளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனுநீதிச்சோழனின் கதையில் அவன் சொல்லும் அறவுரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அல்லவோ பிற்காலத்தில் வள்ளலார் மூலம் மனுமுறை கண்ட வாசகம் எனும் மிக அற்புதமான ஞானநூல் கிடைத்தது.

சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையையும் நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் வெறும் கதைகள் என்று ராமதேவன் எனும் இளைஞன் நினைத்திருந்தால், பெரும் பொக்கிஷம் ஒன்றை பிற்காலச் சந்ததி இழந்திருக்கும். ஆம், அந்த ராமதேவனே பிற்காலத்தில் சேக்கிழார் என்று புகழ்பெற்றார்.அவர் அருளிய பெரிய புராணத்தை வெறும் கதைகள் என்று விலக்கிவிட முடியுமா!

நம் கதை நிகழும் காலத்தில் பாண்டியரும் பல்லவரும் எழுச்சியுடன் திகழ்ந்திருக்க, அக்காலத்தில் வாழ்ந்த சோழன் யாரென்று சரித்திர ஆர்வலர்களால் அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில், நம் நாயகியாம் மங்கையர்க்கரசியாரைக் குறித்தும், அவரின் தந்தை மணிமுடிச்சோழர் எனும் தகவலையும் அருளியது மேற்காணும் நூல்கள் அல்லவா?! தலபுராணங்களை எடுத்துக்கொள்வோம்... யானைகள் புகமுடியாதபடி கட்டமைக்கப்பட்ட மாடக்கோயில்களில் பலவும் கோச்செங்கட் சோழனின் பெருமையைப் பேசும். உறையூர் சோழர்தம் தலைநகரம், அவ்வூருக்குக் கோழியூர் என்றுமொரு பெயர் உண்டு என்ற தகவல் அவ்வூர் ஆலயத்தின் கதையில் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டிவனத்துக்கு அருகில் முன்னூர் எனும் தலம் உண்டு. அவ்வூர் சிவாலயத்தின் புராணம் நல்லியக்கோடன் எனும் மன்னனின் சரிதத்தைச் சொல்கிறது. நாகர்கோவில் அருகிலுள்ள முப்பந்தல் எனும் ஊரின் கதை மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றிணைந்த தகவலை விவரிக்கும். தக்கோலம் அருகிலுள்ள திருமாதலம்பாக்கம் சிவாலயத்தின் திருக்கதை, சோழ மன்னன் ஒருவன் தன் மனக்கிலேசம் தீர்ந்து, போரில் வெற்றிபெற்ற கீர்த்தியைச் சொல்கிறது. கொல்லிமலை மற்றும் கொல்லிப்பாவையின் சிறப்புகளை இலக்கிய நூல்களே போற்றுகின்றன. காளையார்கோவில் தலபுராணம் மருது சகோதரர்களின் மகிமையைச் சொல்லும், சங்கரன்கோவிலின் கதை பூலித்தேவனின் கதையையும் சொல்லும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மாமதுரைக்கும் யானைகளுக்குமான தொடர்பு குறித்த புராணச்செய்திகள் ஏராளம்!

சிவமகுடம்
சிவமகுடம்

துர்வாச முனிவரால் காட்டு யானையாக மாறும்படி சபிக்கப்பட்ட தேவலோகத்து ஐராவதம் யானை அமரலோகத்திலிருந்து பூலோகம் வந்து பல காலம் காடுகளில் அலைந்து திரிந்தது. அந்த யானை கடம்பவனத்தை அடைந்ததும் அங்கே ஒரு குளத்தைக் கண்டு, அதில் மூழ்கி எழுந்தது. உடன், அதன் கரியநிறம் நீங்கி தனக்கே உரிய வெள்ளை நிறத்தையும் பொலிவையும் பெற்றது. அத்துடன் அருகில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அனுதினமும் மகிழ்ச்சியோடு பூஜை செய்து வந்த யானை, அதன் பலனால் சிவதரிசனமும் மீண்டும் அமரலோகம் செல்லும் பாக்கியமும் கைகூடப்பெற்றது. ஐராவதம் பூஜித்த இடம் தற்போது ஐராவதநல்லூர் என அழைக்கப்படுகிறது. அங்கு ஐராவதேஸ்வரர் ஆலயத்தையும் உள்ளே ஐராவத விநாயகரையும் தரிசிக்கலாம்.

ருமுறை எதிரிகளின் சூழ்ச்சியால் மதம் கொண்ட யானை ஒன்று மதுரையை நோக்கி ஏவப்பட்டது. எவராலும் அதை அடக்க முடியவில்லை. ஆயிரமாயிரம் வீரர்களைக் கொன்று குவித்தது. நிறைவில் இறை ஆணைப்படி பாண்டியன் அட்டாலை மண்டபம் ஒன்றைக்கட்ட, இறைவனே வந்து அந்த மண்டபத்தின் மீது ஏறி நின்று யானையை எதிர்கொண்டு வீழ்த்தினார் என்கிறது ஒரு திருக்கதை. அந்த யானை வீழ்ந்த இடத்தில் ஒரு மலை உருவாக, அதுவே ஆனைமலையாகத் திகழ்கிறது என்கிறார்கள்.

திருவிளையாடற் புராணத்தின் 21-வது படலம் கல் யானை கரும்புத் தின்ற கதையைச் சொல்கிறது.

அபிஷேகப் பாண்டியன் காலத்தில் அவனுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார் சிவனார். ஆகவே, எல்லாம்வல்ல சித்தராக மதுரைக்கு எழுந்தருளில் ஸித்தி விளையாட்டு களால் மக்களை வியக்கவைத்தார். மதுரையெங்கும் அவரைப்பற்றியே பேச்சு. மன்னன் அந்தச் சித்தரைச் சந்திக்க விரும்பினான். ஏவலாளிகளை அனுப்பினான். சித்தரோ, ``மன்னனை இங்கு வரச் சொல்’’ என்று கூறிவிட்டார்.

தகவலறிந்த மன்னன் ஆலவாய்க் கோயிலுக்கு விரைந்தான். அந்தத் தருணத்தில் இந்திர விமானத்தின் வடமேற்கு முனையில் அமர்ந்திருந்தார் எல்லாம்வல்ல சித்தர். அவர் யாரென்பதை அறியாத மன்னவனோ அவரின் வல்லமையைச் சோதிக்க எண்ணினான். செழித்து விளைந்த கரும்பு ஒன்றைக் காட்டி, ``இதோ கருவறை விமானத்தைத் தாங்கி நிற்கும் கல் யானைகளில் ஒன்றிடம் இந்தக் கரும்பைக் கொடுத்து உண்ணும்படி செய்தால் நீர் வல்லமை மிக்கவர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்’’ என்றான் சித்தரிடம்.

சிவமகுடம்
சிவமகுடம்

சித்தர் கல் யானையை நோக்கினார். அக்கணமே கண் விழித்துப் பார்த்தது கல் யானை. பெருங்குரலெடுத்துப் பிளிறவும் செய்தது. பின்னர் மன்னனிடமிருந்து கரும்பை வாங்கி உண்ணவும் செய்தது. அத்துடன், மன்னனின் மார்பிலிருந்த முத்தாரத்தையும் பற்றி இழுத்தது. காவல் வீரர்கள் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். மன்னர் உட்பட அனைவரும் சித்தர்பெருமானின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தனர். சித்தர் தாமே சிவமென்று அவர்களுக்கு உணர்த்தி அருள்பாலித்தார்.

யானைகள் போற்றும் மாநகரம் மாதுரை என்பதற்கு மேலுமோர் அத்தாட்சி... சொக்கநாதரின் கருவறை விமானத் தைத் தாங்கி நிற்கும் அஷ்ட கஜங்கள். அவை மாமதுரையின் எண் திசைகளையும் காவல் காப்பதாக நம்பிக்கை!

ப்படி, காலம்காலமாக மதுரையம்பதியின்மீது மாறா பற்றுக்கொண்டிருப்பதனால்தானோ என்னவோ... இதோ இந்த வனத்திலும் அந்த மதுரைக்கார பாகனிடத்தில், அவன் சொல்லுக்குச் சொல்லியவண்ணம் கட்டுப்பட்டுக் கிடந்தது அந்தக் காட்டுயானை.

சற்று நேரத்துக்கு முன்னர்தான் அருகிலுள்ள காட்டாற்றில் அந்த யானையைக் குளிப்பாட்டியிருப்பான் போலும். அதனால் உண்டான பொலிவு, சிறு மலைக்குன்று போல் திகழ்ந்த அந்தக் களிறின் மேனியில் வெளிப்பட்டது. `ஆ... ஊ... ஊ... ஹே... ஹே...’ என்று பலவாறு விநோதமாய் குரல் எழுப்பி ஆணையிட்டு, அந்த யானையைத் தன் இஷ்டப்படி இயக்கவும் நகர்த்தவும் முடிந்தது அவனால். மெள்ளஅந்த வனப்புறத்தின் புற்கள் அடர்ந்திருந்த சமவெளி பாகத்துக்கு யானையை அழைத்து வந்தவன், அங்கே அதைப் படுக்குபடிச் செய்தான்.

யானையும் அவன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு படுக்கவே செய்தது என்றாலும், அதற்கு முன்னதாக தன் துதிக்கையால் பூரணச் சந்திரன் போன்று பிரகாசிக்கும் அவன் திருமுகத்தைத் தடவிக்கொடுக்கவும், அதே துதிக்கையால் அவனின் இடுப்பைச் சுற்றிவளைத்து தன் பக்கம் இழுப்பதுபோல் இழுத்து பிறகு அவன் எதிர்பார்க்காத நிலையில் புறத்தே தள்ளிவிட்டு விளையாடவும் தவறவில்லை!

சிவமகுடம்
சிவமகுடம்

அந்தக் காலத்தில் சாளுக்கியனும், பல்லவனும், சேரனும், பரத கண்டத்தின் எல்லையைத் தாண்டி சீன தேசத்தவர்களும், யவனர்களும்கூட பொறாமை கொள்ளும்படி பார்போற்ற மாமதுரையின் புகழை உயர்த்திப்பிடித்துக் கொண்டிருந்த அந்த மாமனிதருக்கு, அவரையறிந்த மனிதர்கள் வேண்டுமானால் கட்டுப்படலாம்; மரியாதை செலுத்தலாம். ஆனால், ஐந்தறிவே கொண்ட அந்தக் காட்டு யானை அவருக்குப் பணிந்து பணிசெய்கிறது என்றால், அதற்குக் காரணம் அதன்மீதும் அதன் கூட்டத்தின்மீதும் அவர் காட்டிய அன்பும் அணுக்கமும்தான்.

ஆம்! பேரரசர் கூன்பாண்டியராகிய மாறவர்மன் அரிகேசரிதான் அந்த வனத்தில் அப்படிக் காட்டு யானை தன்னுடன் விளையாட இடம்கொடுத்து தானும் அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.இல்லையில்லை... கரியக்குன்றெனத் திகழும் அந்தக் களிறோடு மட்டுமல்ல, அவரின் விளையாட்டு ஒட்டுமொத்த தென்னகமெங்கும் வியாபிக்கப்போகிறது என்பதை அடுத்தடுத்து அவர் செய்த காரியங்கள் உணர்த்தின.

முந்தைய நாள் வனக்குகையில் இளங்குமரனின் வேண்டுகோளுக்கிணங்க அவனை அங்கேயே கட்டிப்போட்டவர், பின்னர் அங்கிருந்து நகர்வது போல் அவனிடம் காட்டிக்கொண்டாரே தவிர, உண்மையில் அவர் அங்கிருந்து அகலவில்லை. குகையிலிருந்து வெளியேறி பெரும் விருட்சத்தின் கிளைகளில் தன்னை மறைத்துக்கொண்டார்.

சில நாழிகைப் பொழுது கழிந்ததும் இளங்குமரன் எதிர்பார்த்தது போலவே அந்த எதிரிகள் வந்துசேர்ந்தனர். அவன் கூறியது போலவே, வந்தவர்கள் அந்தப் பெண்ணை மடக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை அவர்களின் சங்கேத பாஷையைக் கொண்டும் நடை உடை பாவனைகளைக் கொண்டும் கண்டுகொண்டார். `அவர்களால் இளங்குமரனின் உயிருக்கு ஆபத்து நிச்சயம்’ என்று மனம் எச்சரிக்கவே, அதற்குமேலும் காத்திருக்க விரும்பாமல் சட்டென்று பிரவேசித்து விட்டார் குகைக்குள். அவர் கணிப்பு சரியாகவே இருந்தது. இரண்டொரு கணங்கள் அவர் தாமதித்திருந்தாலும் இளங்குமரனைக் கொன்று போட்டிருப்பார்கள் அந்தக் கயவர்கள். அவர் உள்ளே பிரவேசித்தபோது, கட்டுப்பட்ட நிலையி லிருந்த இளங்குமரனைப் பீடம் போன்று திகழ்ந்த ஒரு பாறையின்மீது முகம் பதியும்படி மண்டியிடச் செய்து, அவன் சிரத்தைக் கொய்வதற்குத் தயாராக இருந்தார்கள்.

தலைக்கவசத்துடன் இணைந்த வலைத்துணியால் முகத்தை மறைத்துக்கொண்டிருந்த அந்தக் கயவர்களை நோக்கி, வெகு ஆங்காரத்துடன் தன் வீரவாளை உருவிக்கொண்டு பாய்ந்த அதேவேளையில், அந்தக் குகை அதிரும் வண்ணம் விநோதக் குரல் எழுப்பவும் தவறவில்லை மாமன்னர்.

அவரது பிரவேசத்தால் முதலில் அதிர்ச்சியுற்றாலும் பிறகு சுதாரித்துக் கொண்டு அவரைத் தாக்கத் தயாரானார்கள் எதிரிகள். அவர்கள் முந்துமுன் மாமன்னர் பாய்ந்துவிட்டார். சடுதியில் சிறு யுத்தம் மூண்டு விட்டது அந்தக் குகைக்குள். சுழற்படைபோல் சுழன்ற அவரின் வீரவாள், எதிரிகளைக் காயப்படுத்தி அலறச் செய்தது. எனினும், எண்ணிக்கையில் அதிகமான அவர்களை ஓர் அரை நாழிகைப் பொழுதுதான் சமாளிக்க இயலும் என்ற உண்மையையும் அவரால் புறந்தள்ள இயலவில்லை. அதேநேரம், தன்னுடைய விநோதக்குரல் அழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை உறுதியாய் அவர் நம்பினார்.

அவரின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மெள்ள குகை அதிர்ந்தது. அதன் விளைவால் பாறைகளிலிருந்து கற்சிதறல்கள் பெயர்ந்து விழத் தொடங்கின. அந்த விளைவுக்குக் காரணம் மாமன்னருக்குப் புரிந்தது. எதிரிகளுக்குப் புரியவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள் குகை வாயிலில் பெரும் களிறுகள் பிளிறும் சத்தம் கேட்டது. அடுத்தடுத்த விநாடிகளில் காட்டுக் களிறுகளின் மோதலால் குகையின் பாறைகள் நொறுங்க, பயம்கொண்ட எதிரிகள் பின்வாங்கினார்கள். அந்தக் குகைக்கு வேறொரு நுழைவாயிலும் உண்டு என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டார்கள் இளங்குமரனும் மாமன்னரும். களிறுகளுக்குப் பயந்து, பிரதான வாயிலுக்கு நேரெதிராக குகைக்குள் இருந்த பாறையைப் புரட்டி, வழி ஏற்படுத்திக்கொண்டு வெளியேறினார்கள் எதிரிகள்.

அப்போது ஒருவனை மடக்கிப்பிடிக்க முயன்றார் பேரரசர். ஆனால், வியர்வை வழியும் அந்த எதிரியின் மேனி அவனைக் காப்பாற்றியது. பிடியிலிருந்து நழுவிவிட்டான். ஆனால், பிடிக்குள் இருந்த அந்த ஒருகணத்தில், அச்சம் நிறைந்த அவனுடைய விழிகளை நோக்கும் வாய்ப்பு கிடைத்தது மாமன்னருக்கு. மிகவும் அணுக்கமாய்ப் பார்த்துப் பழகிய விழிகளாய்த் தெரிந்தன அவை!

கயவர்கள் தப்பியதும் இளங்குமரனை விடுவித்தவர், அடுத்தடுத்து பல ஆணைகளைப் பிறப்பித்தார் அவனுக்கு. அவனும் ஆணைகளை நிறைவேற்றப் புறப்பட்டான். பிறகு, தங்களைக் காப்பாற்றிய களிறுகளை அங்கிருந்து நகர்த்தினார். கூட்டத்திலிருந்து தனக்குப் பிரியமான இந்தக் காட்டு யானையை மட்டும் பிரித்து அதன்மீது ஏறிக்கொண்டு மனதுக்குள் ஏதோ திட்டங்கள் வகுத்தவராகப் பயணப்பட்டார். சேர நாட்டு எல்லையையொட்டிய இந்த இடத்துக்கு வந்துசேர்வதற்குள் ஒருநாள் பொழுது கழிந்துவிட்டிருந்தது.

யானையின் விளையாட்டை நிறுத்தி, அன்புடன் கடிந்துகொண்டு அதை அடக்கிப் படுக்கவைத்தவர், சிறிது நேரம் அதன் மேனியில் தன்னுடம்பைச் சாய்த்தபடி தரையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார். மெள்ள வீசிய காற்று அவரின் சிந்தனையைக் கலைக்க, சட்டென்று எழுந்துகொண்டவர் தன் மடி முடிப்பிலிருந்து வெள்ளைநிறத்திலான சுண்ணாம்பு பிசைந்து உருவாக்கிய எழுதுகோல் போன்ற வஸ்துவை எடுத்து, யானையின் திருமேனியில் ஏதேதோ கோடுகளும் சித்திரங்களும் தீட்ட ஆரம்பித்தார். அவை யாவும் இணைந்து பெரும் போர்த்திட்டத்தின் வியூகமாய் வடிவம் கொண்டன!

சட்டென்று ஒரு சலனம்... அதனால் தலை நிமிர்த்திய பெருங்களிற்றின் கண்களில் கடும் சீற்றம்! இங்கே இப்படியென்றால், அரண்மனையில் வேறொரு சலனம் பாண்டிமாதேவியாரின் கரத்திலிருந்த பைங்கிளியைக் கலவரப்படுத்தியது!

- மகுடம் சூடுவோம்

பாகவதம் வந்தது எப்படி?

வேதங்களைத் தொகுத்து வகைப் படுத்தியவர் வேத வியாசர். மேலும் அவர், பைல முனிவர் மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம், சுமந்து என்பவர் மூலம் அதர்வணம்- என சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக் கற்பிக்க வழி செய்தார்.

பைல முனிவர்
பைல முனிவர்

வேதங்களின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ள 18 புராணங்களையும் இயற்றினார். எனினும், வேத வியாசரின் மனதில் அமைதி இல்லை.

இதை நாரதரிடம் கூறினார். உடனே அவர், ‘‘முனிவரே... புராணங்களையும், சாஸ்திரங் களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண குணங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைப் பேசும் ஒரு நூலை நீர் இயற்றும்.’’ என்றார்.

அதன்படி ‘ஸ்ரீமத் பாகவதம்’ எனும் நூலை இயற்றினார் வியாசர்.

- டி. பூபதிராவ், காஞ்சிபுரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism