திருக்கதைகள்
Published:Updated:

சிவமகுடம்

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சிவமகுடம்

`உதயகிரி மத்தியத் துறுசுடர் போலத்

தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வெளிப்பட்டுச்

சூழியானை செலவுந்திப் பாழிவா யமர் கடந்தும்...’

விண்ணதிர ஒலித்தது, தென்னவர் - பாண்டியப் பேரரசர் - மாறவர்மன் அரிகேசரியைப் போற்றும் மெய்க்கீர்த்தி முழக்கம்.

சிவமகுடம்
சிவமகுடம்


திரு மடம் அமைந்திருந்த வீதியின் இருபுறமும் அணிவகுத்து நின்றிருந்த சேனை வீரர்கள் யாவரும் வாள்களைக் கேடயத்தில் மோதியும், வேல்களின் தண்டு பாகத்தைத் தரையில் ஓங்கிக் குத்தியும் எழுப்பிய ஆரவார ஓசைகள் மிகக் கம்பீரமாக வரவேற் றன பாண்டிமா தேவியாரை.

வளவர்கோன் பாவை திருமடத்துக்கு எழுந்தருள, வழக்கமான வரவேற்பு மரபு சீருடன் நடைபெற்றது. மடத்தின் வாயிலில், திருஞானசம்பந்தப் பெருமானின் அணுக்கத் தொண்டர்கள் ஐந்தெழுத்தும் பதிகங்களும் ஓதினார்கள். அனைத்தையும் ஏற்றுப் பணிந்த அரசியார், திருமடத்துக்குள் நுழைந்தார்.

அங்கே, ஞானத்தின் திருவுருவாய் வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தாய் திகழ்ந்த ஞானப்பிள்ளையை வணங்கிப் பணிந்தார். சீர்காழிப்பிள்ளையின் தாமரைத் திருவடி களை வணங்கிப் பற்றிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சரும் பணிந்து வணங்கினார்.

ஞானப்பிள்ளை பேசியது. ``திருவுடைய பிள்ளைகளே வருந்த வேண்டாம். இறையருளால் எல்லாம் நலமாகும். தென்னவரும் திருநீறு அணியும் நாள் வரும்!’’ என்று அருளியது.

எழுந்துநின்ற மங்கையர்க்கரசியார்... பனி தேங்கிய மலர் போன்று நீர் துளிர்த்து திகழ்ந்த கண்களால் பிள்ளையை நோக்கினார். நீர்த் திரை பிள்ளையின் திருமுகத்தை மங்கலாகக் காட்டியது. அதனால் விழிநீரைத் துடைத்தபடி பேசத் தொடங்கினார் அந்த வீரத்தாய்.

``பெருமானே! கொடியவர்கள் செய்த வஞ்சகங்கள் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனாலும் சிவனருள் பொருந்திய தங்களை வஞ்சனைகளால் எதுவும் செய்ய இயலாது என்று துணிந் தோம். அதேநேரம், வஞ்சகர்கள் செய்த பாவம் எங்கள் மன்னவரைப் பற்றிக்கொண்டுவிட்டது. பாவிகள் மடத்துக்கு இட்ட தீ, வெம்மைப் பிணியாக மாறிப் பேரரசரின் மீது பாய்ந்துவிட்டது. அவரின் பிணிதீர நீங்கள்தான் அருளவேண்டும்.’’

அவரின் வேண்டுதலுக்கு ஞானப்பிள்ளை பதில் மொழிந்தது.

``வருந்தற்க! எம்பிரானின் அருளால் வாதப்போர் நிகழும். அதில் வெற்றியும் கிட்டும். தென்னவரும் திருநீறு இட்டுக்கொள்வார். மந்திரமாகும் நீறு வெந்துயர் தீர்த்தருளும். அதைக் கண்டு நீங்களும் பெருமகிழ்ச்சி அடைவீர்கள்!’’

அரசியாரும் பேரமைச்சரும் பேருவகை அடைந்தார்கள். அப்போதே மாம்மன்னரின் பிணி தீர்ந்துவிட்டதைப் போன்ற பெரும் நிம்மதி அவர்களின் மனதில். மன்னரின் பிணி மட்டுமா, பாண்டிய தேசத்தை வியாபித்திருக்கும் நோயும் விரைவில் விலகப் போகிறது என்ற நம்பிக்கையும் எழுந்தது அவர்களுக்குள்.

``தென்னாடு செய்த தவத்தின் பலனே உங்களை இங்கே வரவழைத்தது போலும். இனி எங்களுக்குக் கவலை இல்லை. தென்னாட்டைக் காக்க ஈசன் திருவுளம் கொண்டுவிட்டார். ஆகவேதான், இதோ தன் பிள்ளையையே இங்கு அனுப்பிவைத்து விட்டார். ஆம்! எங்களின் விழிகள் தங்களைக் குமரக் கடவுளாகவே காண்கின்றன...’’ என்று உள்ளம் உருகப் பேசினார் குலச்சிறையார்.

காழிப்பிள்ளையார் புன்னகைத்தார் ``ஆவதும் நடப்பதும் ஆலவாயரின் செயல். நாம் கருவிகளே!’’ என்றுரைத்த ஞான சம்பந்தப் பெருமான், அப்போதே புறப்பட ஆயத்தமானார்.

பரங்குன்றின் பெரும்பாறைகள் சில சரிந்தும் சேர்ந்தும் இயற்கை யாய் உருவாக்கிவைத்த அந்தப் பெருங்குகை மங்கியதொரு வெளிச் சத்துக்கு ஆட்பட்டிருந்தது. வெள்ளொளி பொலிந்து கொண்டிருந்த காலைக் கதிரோனின் கிரணங்களும் தங்கள் பங்குக்குச் சிறிது வெளிச்சத்தைக் குகைக்குள் தெளித்துக் கொண்டிருந்தன.

குகைச்சுவரின் இடுக்குகளில், முந்தைய நாள் இரவில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த எரிபந்தங்களில் சில எரிந்து முடித்திருக்க, அதிலிருந்து வெளியான புகை ஒருவித தைலம் கலந்த நாற்றத்தை ஏற்படுத்தியது. எரிந்து முடிந்து கனன்று கொண்டிருந்த பந்தங்களைப் போன்றே அங்கு குழுமியிருந்தோரின் உள்ளங் களும் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.

``நாமே அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம்’’

குழுமியிருந்தோரில் மையமாக இருந்தவர் முதலில் வாய் திறந்தார்.

``நம் மீது என்ன தவறு இருக்கிறது?’’ வேறொருவன் கேட்டான்.

``முறையாகத் திட்டமிடாமல் தவறிழைத்து விட்டோம்.’’

``இனி என்ன நடக்கும்... அதைப் பற்றி பேசுவோமே...’’ அங்கிருந்த வர்களில் சற்று வயதானவராகத் தோன்றியவர், பேச்சை மடை மாற்றினார். நடப்பதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பது அவரின் சித்தமாக இருந்தது போலும்.

``குலச்சிறையார் அரசியை அந்தப் பாலகனிடம் அழைத்துச் செல்வார். விரைவில் அரண்மனைக்கு அவன் விஜயம் செய்வான். மெள்ள மெள்ள நம்மிடமிருந்து மன்னரைப் பிரிக்கும் செயலை வேகப்படுத்துவார்கள்...’’

``விடக்கூடாது நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்!’’

``இதில் வேகம் கூடாது. விவேகம் தேவை. சற்றுப் பிசகினாலும் மன்னரின் நம்பிக்கையை நாம் இழப்போம். விளைவு பாண்டிய தேசத்தில் நம் பிடிமானம் அற்றுப்போய்விடும்.’’

``எனில் நம் திட்டம் என்னவாக இருக்கவேண்டும்?’’

``இனி அவர்களின் திட்டமே நமக்கான திட்டம். அவர்கள் மந்திரத்தைக் கையில் எடுத்தால் நாமும் மந்திரம் தொடுப்போம். தர்க்கம் புரிந்தால் நாமும் தர்க்கம் புரிவோம்; எதிர் வாதம் செய்வோம். வழியில்லாத நிலையில், தந்திரத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிக்காட்டுவோம்.’’

அறியாமையும் ஆதங்கமுமாய் அவர்களின் உரையாடல் நீண்டு கொண்டிருக்க, மீண்டும் முதியவர் தலையிட்டார்.

``எனக்குள் ஏனோ சலனம் ஏற்படுகிறது. வந்திருப்பவன் சாமானியன் அல்ல என்று மனப்பட்சிச் சொல்கிறது. கனவுக் காட்சிகளும் - சகுன நிமித்தங்களும் பாதகத்தையே காட்டுகின்றன. குலச்சிறையாரை ஒருபோதும் `அவர் இப்படித்தான்’ ஒரு நிலையில் மதிப்பிட முடியாது. கணத்துக்குக் கணம் வியூகத்தை மாற்றிக்கொண்டிருப்பவர். ஆகவேதான் சொல்கிறேன்... எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என்று கூறி முடித்தவர், சில கணங்கள் ஏதோ சிந்தித்தவராக அமைதி காத்தார். பிறகு மெளனம் கலைத்து மீண்டும் கேட்டார்...

``ஒருவேளை அவர்கள் தரப்பில் ஏதும் செய்யாமல் அமைதி காத்தால்... பாலகனைத் தேடிப் போகாமல் இருந்தால்...’’

``அந்த நிலையும் நமக்குச் சாதகமானதே. ஆனால் அப்போதும் அந்தச் சிறுவனை விரட்ட ஏதாவது செய்தாக வேண்டும். நேரம் வாய்க்கும்போதெல்லாம் மாமன்னரை அவனுக்கெதிராக உசுப்பி விட வேண்டும்...’’

சிவமகுடம்
சிவமகுடம்

மையத்தில் இருந்தவன் கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டிருக்க குகையின் வெளிப் புறத்திலிருந்து ஒருவன் ஓடோடி வந்தான். அவனுடைய வேகமும் பதற்றமுமே ஏதோ அவசரத் தகவலோடு வருகிறான் என்பதைக் காட்டின.

வந்தவன் மூச்சிறைக்க செய்தி சொன்னான்: `` விரைவில் அவன் அரண்மனைக்கு வருவதாகத் தகவல். தற்போது அவனும் அவன் அணுக்கர்களும் ஆலவாய்க் கோயிலுக்குப் புறப்பட்டு விட்டார்களாம்!’’

கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் சிந்தனை அவசரகதியில் செயல்படத் தொடங்கியது!

நான்மாடக்கூடல் எனும் பெயருக்குப் பொருத்தமாக இலங்குகிற திருக்கோயில். அம்பிகை மீனாட்சியின் கோயிலும், ஐயன் சொக்கநாதரின் கோயிலும் அருகருகில் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தாலும், தடாதகைப் பிராட்டியாய் கோலோச்சிய அன்னை மீனாளை முன்னிலைப்படுத்தி, முதலில் அன்னையை தரிசிப்பது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப் பூவாய் திகழும் அந்தத் தேவியின் திருமுகத்தைப் போலவே, விண்ணிலிருந்து பறவைப் பார்வையில் நோக்கினால், ஒரு கமலத்தைப் போன்று காட்சி தரும் மதுரையம்பதி. மையத்தில் ஆலவாயர் அருள்புரியும் பெருங் கோயில் மகரந்தப் பகுதி போன்று திகழ, சுற்றிலும் உள்ள நெடும் வீதிகள் இதழ்களாக விரிந்துகிடக்கும்!

எல்லாம்வல்ல சித்தனாம் சிவபெருமான் மண்ணில் இறங்கி வந்து திருவிளையாடல்கள் புரிந்த அற்புதமான அந்த நகரின் வீதிகளில் நகர்ந்து ஆலவாய்க் கோயிலை அடைந்தது திருஞானசம்பந்தரின் கூட்டம். கோயிலுக்குள் நுழைந்த பிள்ளை அம்மையைக் கண்டு வணங்கியது. ஆலவாய் அப்பனையும் தரிசித்துப் போற்றியது.

அண்ணலை, அப்பனை, சொக்கனை, சோமநாதனை தரிசித்து மகிழ்ந்த திருஞானசம்பந்தர் அற்புதமாய் பதிகமும் பாடித் துதித் தார். ஆலவாயரின் சந்நிதியில் அப்போது அவர் பாடியருளியவை `காட்டுமாவுரி’, `வேதவேள்வி’ ஆகிய பதிகங்கள்.

செயற்கரிய செயல்களைச் செய்யுமுன் இறைவனைத் தொழ வேண்டும்; அவர்தம் ஆசியைப் பேரருளைப் பெற வேண்டும். அவ்வகையில், ஞானப் பிள்ளை எந்த நோக்கில் பாண்டிய தேசம் புகுந்தாரோ, அந்த நோக்கம் செவ்வனே நிறைவேற சொக்கரைப் பாடித் தொழுதார் என்றே கூறலாம்.

ஆம்! ஏற்றுக்கொண்ட முயற்சி வெற்றியில் முடிவுறச் சிவப் பரம்பொருளின் அருள்வேண்டித் துதிக்கும் அற்புதப் பதிகம் வேத வேள்விப் பதிகம்.

`ஞாலம் நின்புகழே மிகவேண்டும். தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று போற்றி அந்தப் பிள்ளை பாடித் துதிக்க, பரமன் மனம் குளிர்ந்தார். பிள்ளையின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தார். அந்தப் பிள்ளை மாமதுரையில் எடுத்துக்கொண்ட காரியம் இனிதே நிறைவேற அருள்புரிந்தார்!

பரமனின் ஆசி கிடைத்தைப் பறைசாற்றும் வகையில் ஆலய மணிகள் `ஓம்... ஓம்...’ என்று பிரணாவகாரமாய் நாதம் எழுப்பி ஒலித்தன!

- மகுடம் சூடுவோம்...

நம்பிக்கையே வாழ்வு தரும்!

ஒருமுறை அன்னை சாரதாதேவியை தரிசிக்க வந்த சீடர் ஒருவர், ‘`அன்னையே... புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் மனிதர்களும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்கு களும் மடிந்து போகின்றன. ஆனால், நீர்வாழ் உயிரிகளான மீன் போன்றவை அழிவதில்லையே... எப்படி?’’எனக் கேட்டார்.

மெள்ள புன்னகைத்த சாரதாதேவியார், ‘`மீன்கள் மட்டுமே நீரின் போக்குக்கு எதிர்த் திசையில் நீந்தும். அவற்றுக்கு, ‘தங்களைக் காக்கும் வல்லமை நீருக்கு உண்டு’ என்ற நம்பிக்கை அதிகம். எனவேதான் புயலோ, மழையோ எது வந்தாலும் மீன்கள் பாதிக்கப்படுவதில்லை. நம்பிக்கை ஒன்றே நல்வாழ்வைத் தரும்’’ என்றார்.

- ராமு, கரூர்