Published:Updated:

சிவமகுடம் 85

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவமகுடம்

சிவமகுடம் 85

சிவமகுடம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமும், உவமை இல்லா கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒருங்கே துலங்க, காரிருளை விலக்கும் ஞானச்சூரியனாய் மதுரையம்பதியில் கால் பதித்தார் திருஞானசம்பந்தர்.

சிவமகுடம்
சிவமகுடம்


பணிவோடும் பக்தியோடும் குலச்சிறையார் அவரை வரவேற்று தொழுது நிற்க, சீர்காழிப் பிள்ளையாம் திருஞானசம்பந்தர், `மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை...’ எனத் தொடங்கி, பதிகம் பாடிப் போற்றினார் திருஆலவாய்ப் பெரும்பதியை.

`தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பான மங்கையர்க் கரசியார், நாள்தோறும் சிவத்தொண்டு செய்து போற்றும் மண் இது. அதன் காரணமாக ஓங்கி எரியும் நெருப்பு போன்ற செந்நிற மேனியை உடையவரும் வேதப்பொருளை அருளிச் செய்தவருமான சிவபெருமான் அங்கயற்கண்ணி மீனாட்சி தேவியுடன் அருளும் பதி இந்த ஆலவாய்’ என்றெல்லாம் போற்றிப் பரவினார்.

அந்தத் தலத்தை மட்டுமா? பாண்டிமாதேவியாரின் சிறப்பையும் சிறப்பு செய்தது திருஞானசம்பந்தரின் பதிகம். மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்றுவதால் வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தாங்கி யிருக்கும் சிவபெருமான் இந்தத் தலத்தில் உமையம்மையோடு இன்புற்று வீற்றிருக்கிறார் என்றும் மகிழ்கிறது!

மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையாரின் திருப்பணிகளைப் போற்றும் இந்தப் பதிகத்தில், சோமசுந்தர பெருமான் - மீனாட்சி யம்மை இருவரின் சேர்த்தித் திருக்கோலத்தையும் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர். ஆக, இந்தப் பதிகத்தைப் பாடி வழிபடுவதால் சகல மங்கலங்களும் கைகூடும்; இல்லறம் நல்லறமாகும் என்பார்கள் பெரியோர்கள்.

இந்தப் பதிகத்தில் நம் பாண்டிமாதேவியாரைப் போற்றும் அடைமொழிச் சொற்களும் அற்புதமானவை. சேலன கண்ணாள், செந்துவர் வாயாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் என்றெல்லாம் கூறிப் போற்றுகிறார் திருஞானசம்பந்தர். இது பாண்டிமாதேவியார் பெற்ற கொடுப்பினை.

இங்ஙனம் திருஆலவாய் கோயிலின் கோபுரத்தைத் தூரத்திலிருந்தே தரிசித்து பதிகம் பாடிப் பரவிய திருஞானசம்பந்தர் விரைவில் அடியாருடன் கோயிலை நோக்கி விரைந்தார். அங்கேயோ திருஞானசம்பந்தரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மங்கையர்க்கரசியார்!

அந்தத் தருணத்தில்தான் `சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்’ எனும் பதிகத்தைப் பாண்டிமாதேவியார் கசிந்துருகிப்பாட, அதன் தொடர்ச்சியாய் அந்தப் பதிகம் பாடப்பட்ட சூழலையும், அதனால் விளைந்த அற்புதத்தையும் பொங்கி தேவிக்கு எடுத்துரைக்க வேண்டியதாயிற்று.

திருஆலவாய்
திருஆலவாய்


வியப்பு மேலிட கேட்டாள் பொங்கிதேவி: ``பதிகம் பாடியதால் விஷப் பாதிப்பிலிருந்து இளைஞன் மீண்டானா?’’

``ஆம்! உமைத்தாயிடம் பாலமுது அருந்திய தெய்வப்பிள்ளை பாடினால் மீளாமல் இருப்பானா?’’ என்று பதில்கேள்வி விடுத்தார் பாண்டிமாதேவியார்.

பொங்கிதேவிக்கு ஆர்வம் தாளவில்லை. ``அம்மா! பிள்ளை வரும் வரையிலும் திருமருகலில் இந்தப் பதிகம் தொடர்பாய் நிகழ்ந்ததாகச் சொன்னீர்களே... அந்த அற்புதக் கதையைச் சொல்லுங்களேன்...’’ என்று கேட்டுக்கொண்டாள்.

வாஞ்சையுடன் அவளைப் பார்த்த பாண்டிமாதேவியார், திருமருகல் திருக்கதையைச் சொல்லத் தொடங்கினார்.

``திருநாகைக்காரோணம் தலத்திலிருந்து புரவியில் சென்றால் சிலநாழிகைப் பொழுதுகளில் அடைந்துவிடும் தூரத்தில் இருக்கிறது திருமருகல். அங்கே பொங்கிப் பெருகி ஓடும் பொன்னி நதியின் தென்கரையில் அமைந்திருக்கிறது ரத்தினகிரீஸ்வரர் ஆலயம்.

உனக்குத் தெரியும் அல்லவா... மருகல் என்பது வாழையின் ஒரு வகை. இந்தத் தலத்திலும் அதுவே தலவிருட்சம். ஆகவேதான் திருமருகல் எனும் பெயர் உண்டாயிற்று.

இந்தத் தலத்துக்கு அருகிலேயே உள்ள ஊர் வைப்பூர். அங்கே வசித்த தனவணிகன் ஒருவனுக்கு ஏழு மகள்கள். அவர்களில் ஒருத்தியைத் தன் ஏழை மருமகனுக்கு மணம் செய்துவைப்பதாக உறுதியளித்திருந்தான் வணிகன்.

ஆனால் எழுவரில் மூத்தவர்கள் ஆறுபேரையும், பெரும்பொருள் படைத்த செல்வந்தர்களுக்கு மணம் செய்துகொடுத்துவிட்டானாம். அதனால் ஏழை மருமகன் மீது இரக்கம் கொண்டாள் ஏழாவது மகள். அதுவே அவன் மீது காதலாகப் பரிணமிக்க இருவரும் மணம் செய்துகொண்டார்கள். எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்ட இருவரும் திருமருகலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கோயிலின் அருகில் ஒரு மடத்துத் திண்ணையில் இருவரும் தங்கினார்கள். அப்போது, இரவில் சர்ப்பம் தீண்டி மணவாளன் மாண்டுபோனான். உதவிக்கு எவரும் இல்லாத சூழலில் பரிதவித்தாள் அந்தப் பெண். திக்கற்ற அந்தப் பெண் ஆலயத்தின் வாயிலை நோக்கினாள். உள்ளே உறைந்திருக்கும் ஈசனை வேண்டி அழுது புலம்பினாள்.

இந்த நிலையில் திருச்செங்காட்டங்குடியில் இருந்து திருமருக லுக்கு எழுந்தருளியிருந்த நம் ஞானப்பிள்ளை, அதிகாலை வேளையில் பெண்ணொருத்தி அழுது அரற்றும் தகவல் அறிந்து அவள் தங்கியிருந்த மடத்துக்கு விரைந்தார். அவளின் நிலை அறிந்தார். `அஞ்சாதே’ என்று அபயம் அளித்தார். அவளின் இன்னல் தீரவும், வாளரவின் விடம் நீங்கவும் அருளும்படி திருமருகல் இறைவனை வேண்டிப் பதிகம் பாடினார்.

பக்த பகீரதனுக்காக கங்கையை விடுவித்த ஈசனின் கருணையை, `நீரே தஞ்சம்’ என்று சரணடைந்த சந்திரனைக் காத்த எம்பெருமா னின் அருளை எல்லாம் போற்றிப் பாடி, அந்தப் பெண்ணின் துயரையும் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர் பாடி முடித்ததும் இறையின் கருணையால் அந்த ஆடவன் உயிர்பிழைத்து எழுந்தானாம்!’’

கதையைச் சொல்லி நிறுத்திய பாண்டிமாதேவியார், சிலநொடிகள் நிதானித்துப் பிறகு பொங்கியிடம் சொன்னார்:

``உனக்கொன்று தெரியுமா பொங்கி... சிலநாள்களாக நானும் தினமும் இந்தப் பதிகத்தைப் பாடி வருகிறேன். நம் தேசத்தைத் சூழ்ந்திருக்கும் தீவினை விஷம் நீங்கவேண்டும்; பாண்டியதேசம் செழிக்க வேண்டும் என்று!’’

``நிச்சயம் உங்கள் பிரார்த்தனை பலிக்கும் அம்மா. உங்கள் வழிபாட்டின்-பிரார்த்தனையின் பலனாகவே திருஞானசம்பந்த பெருமான் நம் எல்லைக்கு வந்திருக்கிறார். சூரனை வெல்ல வேலவனை அனுப்பியதுபோல், நம்பிரான் நம்மைக் காக்க சீர்காழிப் பிள்ளையை அனுப்பியிருக்கிறார் நம் ஈசன்!’’

பொங்கிதேவி இதைச் சொல்லி முடிக்கவும், ஆலவாய் ஆலயத்தின் மணி ஒலித்தது. பெரியவர் எவரோ உள்நுழைவதற்கான விஜய பேரிகைகளும் துந்துபிகளும் முழங்கின. தொடர்ந்து ஏக காலத்தில் ஐந்தெழுத்து முழக்கமும் உச்சஸ்தாதியில் ஒலிக்க, தேவியாரின் திருமுகம் மலர்ந்தது.

அவர் யூகித்தது சரிதான்... அடியார்களுடன் ஆலவாய் திருக்கோயிலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார் திருஞானசம்பந்தர்.

``பொங்கிதேவி... பிள்ளை ஈசனை தரிசித்து வரட்டும். அதுவரையிலும் அவருக்கு நாம் தொந்தரவு தரவேண்டாம். அவர் தரிசித்து வெளிவரும் வழியில் நாம் காத்திருப்போம்’’ எனக் கூறி பொங்கி தேவியையும் மற்ற அணுக்கத் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தார் பாண்டிமாதேவியார்.

பாண்டிய தேசத்தின் பேரமைச்சர் குலச்சிறையாருடனும் தம் அடியார்களுடனும் திருஆலவாய் கோயிலை அடைந்த திருஞான சம்பந்தர், நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரத்தை வணங்கினார். முறைப்படி ஆலயத்தை வலம் வந்து அண்ணலின் சந்நிதியை அடைந்தார்.

சொக்கநாதரை, சோமசுந்தரரை, மதுரை நாயகியாம் மீனாளைக் கைப்பிடித்த நாதனை பலவாறு துதித்தார். உள்ளம் பரவசத்தில் திளைக்க பலமுறை பலவாறு தொழுது வணங்கினார். அக்கணத்தில் அவரின் உள்ளம் கசிந்துருக, கண்கள் நீரைப் பெருக்கின.

இந்தக் காட்சியை பிற்காலப் புலவரான சேக்கிழார் பெருமான் மிக அழகாக விவரிக்கிறார்...

`அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவின்றி வணங்கிப்

பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் மொழியுஞ்

செங்கண் நீர்தரும் அருவியும் திகழ்திரு மேனி

எங்குமாகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்...’ என்று.

மிக அருமையான பாடல் அல்லவா?

இங்கே இவ்விதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க அரண்மனை மாளிகையில் மாமன்னர், முக்கிய விவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

தன் அணுக்கர்களுடன் மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி நிகழ்த்திய அந்த விவாதம், இதுவரையிலும் பாண்டிமாதேவியார் மிகக் கவனத்துடன் காப்பாற்றிக் கொண்டிருந்த சிவமகுடம் குறித்த ரகசியங்களை ஒவ்வொன்றாய் உடைத்துப்போட்டது!

- மகுடம் சூடுவோம்...


சிவத் தலங்களில் திருமால் தரிசனம்!

திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள்

கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள்

கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள்

சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள்

திருநணா - ஆதிகேசவப் பெருமாள்

சிக்கல் - கோலவாமனப் பெருமாள்

திருநாவலூர் - வரதராஜப் பெருமாள்

திருநெல்வேலி - நெல்லை கோவிந்தர்

திருப்பழனம் - கோவிந்தர்

பாண்டிக் கொடுமுடி - அரங்கநாதர்

திருப்பத்தூர் - ரங்கநாதர்

திருவக்கரை - அரங்கநாதர்

- எம்.சேகர், சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism