Published:Updated:

சிவமயம் - 8

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா.

சிவமயம் - 8

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா.

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!
சித்திரை பிறந்து கடுமையான கோடை காலம் வரவிருக்கிறது. இந்த நாள்களில் சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு தாராபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

சிவமயம்
சிவமயம்

`கோடை காலத்தில் தானம் செய்வது நலம்’ என்கிறது சைவம். குறிப்பாக நீர்மோர் பந்தல் வைப்பது சிறந்த தொண்டு. கடுமையான வெப்பத்தால் தவித்த அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் ஈசனே நீரும் சோறும் அளித்த அருளாடல்கள் எல்லாம் நீங்கள் அறிந்தது தானே! எனவே சிவத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்; இனிமையானச் சூழலை எப்போதும் அனுபவிக்கலாம்.


கோடையின் வெப்பம் நம்மை வாட்டாதிருக்கவும் ஜுரம், கட்டி, போன்ற வெப்பு நோய்கள் நீங்குவதற்கும் திருஞானசம்பந்த மூர்த்தி பெருமான் அருமையான வைத்தியம் ஒன்றை நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதுவே திருநீற்றுப் பதிகம்.

தினமும் காலை, மாலை என இருவேளையும் குளித்துவிட்டு, திருநீறிட்டு இந்தப் பதிகத்தைப் பாடி வழிபட்டால், நிச்சயம் அங்கு குளிர் சூழும்; வெம்மை விலகும். சிவாயநம!

`வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;

போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;

ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;

சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!’

`அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு எனும் பழமொழிப்படி சிவனும் ஹரியும் ஒன்றுதானே ஐயா’ என்று அன்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

உண்மையில் இந்தப் பழமொழியின் அர்த்தமே வேறு. தமிழ் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். மோனை இலக்கணப்படி முதல் வரியில் ‘ரி’ வந்தால் அடுத்த வரியிலும் ‘ரி’-யே வரும். இங்கு முதலில் சின்ன ‘ரி’ வருகிறது, அடுத்து பெரிய ‘றி’ வருகிறது. இது எப்படி இருக்க முடியும். பழமொழியே தப்பாகிவிடும் இல்லையா! இப்படித்தான் பல பழமொழிகளை நாம் தவறாகவே புரிந்து கொள்கிறோம்.

உதாரணத்துக்கு ஒரு பழமொழியை எடுத்துக்கொள்வோம்.

`பந்திக்கு முந்து படைக்கு பிந்து’ இப்படியொரு பழமொழி. வலது கையின் பெருமையைச் சொல்லும் வாசகம் இது.

பந்தியில் உணவை எடுக்கும்போது வலக் கை முன்னே வரும். அதேநேரம் படைகளைக் கையாளும்போது... வில்லோ, வாளோ, ஈட்டியோ... படை ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது நம் வலக் கரம் முதலில் பின்னோக்கி செல்லும். பின்னரே விசையுடன் முன்னோக்கி ஆயுதங்களை ஏவும். இப்போது புரிகிறதா இந்தப் பழமொழியின் அர்த்தம்.

அப்படித்தான்... `அரியும் சிவனும்’ எனும் பழமொழியையும் உள்ளார்த்தத்துடன் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ‘அறியும் சிவன் ஒண்ணு; இதை அறியாதவன் வாயில் மண்ணு!’ என்பதே உண்மையான பழமொழி. அதாவது நீ அறிந்துகொள்ளும் பரப்பிரம்மம் ஆகிய சிவன் ஒரே ஒருவர்தான். அந்தச் சிவத்தை நீங்கள் அறிந்துகொள்ளாவிட்டால், இந்தப் பிறப்பு வீண் என்பதே இதன் அர்த்தம்.

சிவன்
சிவன்
f9photos


எது ஆதியோ, எது பூரணமோ, எது எல்லாமுமாகி நிற்கிறதோ... அந்தச் சிவத்தை அறியாதவர்கள்-வழிபடாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, மீண்டும் மீண்டும் இறந்து போய், வாயில் மண் விழ சுழன்றுகொண்டே இருக்க நேரிடும் என்பதுதான் அர்த்தம்.

சிவத்தை வணங்குபவர்களுக்குப் பிறப்பே கிடையாது என்பதே சைவத்தின் அடிப்படை நம்பிக்கை. மீண்டும் ஒருமுறைச் சொல் கிறேன்... ‘அறியும் சிவன் ஒன்று. அதையே வணங்குங்கள். இதை அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டால் மீண்டும் மீண்டும் உங் களுக்கு ஜனன - மரண துன்பம் இருந்து கொண்டே இருக்கும். சிவம் என்பது அநாதியான பிரம்மம்.

அரி, அயன் உட்பட முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் பல்வேறு தலங்களில் சிவவழிபாடு செய்ததைப் புராணங்கள் சொல்கின்றன. இப்படிச் சகலரும் பூஜித்து வணங்கிய கடவுள் சிவம். ஆனால் எங்கேனும் சிவம் பூஜை செய்தது, யாரையாவது கை எடுத்து வணங்கியது என்று சொல்ல முடியுமா! ‘சேர்ந்தறியா கையானே’ என்று திருவாசகம் புகழும் பெருமானை எவரோடும் ஒப்பிடக் கூடாது என்கிறது சைவம்.

ஆக, தலையில் சுழி இல்லாத, வயிற்றில் நாபி இல்லாத பிறப்பிலா பெருமானான ஈசனை வணங்குங்கள். அதுவே சகலத்தையும் வணங்கியதற்குச் சமம்.

‘மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த

கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ’

- என்று போற்றுகிறது திருவாசகத்தின் திருக்கோத்தும்பி. எனவே சகலரும், ஓர் உரு ஒரு பேர் ஒன்றுமிலாத ஈசனை வணங்கி வழிபட்டு அருள் பெற வேண்டும் என விண்ணப்பித்துக் கொள்கிறேன். சிவாயநம!

- பேசுவோம்...

சீர்காழிக்கு எத்தனை பெயர்கள்?

சீர்காழி
சீர்காழி

திருஞான சம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் ஊட்டி அருள் பாலித்த திருத்ததலம் சீர்காழி. `ஊரின் பெயரை வாயால் சொல்லும் போதே சிவஞான இன்பம் கிடைக்கும்’ என்று பெரியோர்கள் போற்றும் சீர்காழிக்குப் பல பெயர்கள் உண்டு.

காளி வணங்கிய பதி என்பதுதான்  + காளி - சீகாழி என்று மருவியது என்பது ஆன்றோர் சிலர் சொல்லும் கருத்து. அதுவே சீர்காழி என்று மருவியது என்பார்கள். `காழி' என்றால் வலிமை யானது என்று பொருள். சீரும் வலிமையும் நிறைந்ததால் சீர்காழி ஆனது என்று சிலர் விளக்கம் கொடுப்பார்கள்.

இன்னும் பல காரணப்பெயர்களைப் புராணங்கள் சொல்கின்றன. பிரம்மதேவன் வழிபட்டதால் பிரமபுரம்; சிவம் மூங்கில் வடிவத்தில் தோன்றி அருளியதால், வேணுபுரம்; பிரளய காலத்தில் உலகம் முழுமையும் வெள்ளத்துக்குள் மூழ்க, உமையம்மையை அருகில் இருத்திக் கொண்டு, சுத்த மாயை என்பதையே ஒரு தோணி யாக்கி, இறையனார் தங்கியிருந்த இடம் ஆகையால் தோணிபுரம்; சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகல் (அடைக்கலம்) தேடிய இடம் என்பதால் புகலி என்ற பெயர்கள் சீர்காழிக்கு உண்டு.

குருவாக வணங்கப்படும் வியாழன் பூசித்துத் தனது குருத்துவத் தைப் பெற்றதால் வெங்குரு; பூமியைப் பிளந்து கொண்டு சென்ற ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கனை அழிக்க வராஹ அவதாரம் எடுத்த நிலையில், விஷ்ணுமூர்த்தி வழிபட்டதால் பூந்தராய்; பாம்புத் தலை கொண்ட ராகு பூசித்ததால் சிரபுரம்; சண்பைப் புல்லால் அடித் துக் கொண்டு அழிந்து போன யாதவ குலத்தின் பழி தீர, கண்ண பரமாத்மா வழிபட்ட தலம் என்பதால் சண்பை.

மச்சகந்தியைப் (பின்னாளில் சத்யவதி) பற்றிய கொச்சை மொழிகள் நீங்குவதற்காகப் பராசரர் வழிபட்டதால் கொச்சை வயம்; தம்மைப் பற்றிக் கொண்ட மலங்கள் நீங்க (உ)ரோமச முனிவர் வழிபட்டதால் கழுமலம்; அக்னிதேவன் புறா வடிவில் வந்து சிபி மன்னனுக்கு அருளியதால் புறவம் ஆகிய பெயர்களும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism