தொடர்கள்
Published:Updated:

சிவமயம்-26

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா.

வணக்கம். வாழிய நலம்! மார்கழி பிறந்து ஆலயம் தோறும் விசேஷ வழிபாடுகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. உலகம் யாவும் இன்புற்று வாழ எல்லாம்வல்ல ஈசனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

சிவமயம்
சிவமயம்


`மனம் அமைதியில்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு கவலை எப்போதும் இருந்தபடியே இருக்கிறது. இதனால் பக்தி, வழிபாடு எதிலும் ஒன்றி ஈடுபட முடியவில்லை. என்ன செய்வது?' என்று ஒரு கேள்வி!

மனம் என்றால் ஏதோ தனித்த உறுப்பு என்பதைப் போல நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர் கள். அது தவறு. உங்கள் எண்ணங்கள்தான் மனம் என்று உணருங்கள். உங்கள் சிந்தனையை நல்ல விஷயத்தில் மடை மாற்றுங்கள். தானாகவே மனம் அமைதியாகும். தேவையற்ற கவலைகள் மறைந்துவிடும்.

ஒட்டகம் பாலைவனத்தில் உள்ள முள் தாவரங்களைக் கடித்துத் தின்னும். அப்போது முள் கிழித்து ரத்தம் பெருகி வாயில் ரத்த சுவை உண்டாகும். அதை முட்களில் இருந்து வரும் சாற்றின் சுவையென எண்ணி, ஒட்டகம் வேகமாக முட்களை உண்ணும். உண்மையில் தனது ரத்தம்தான் அது என்பதை ஒட்டகம் உணராது. அதுபோலவே கவலைகளால் உங்களுக்கு ஒரு சுகம் என்று எண்ணிக் கொள்கிறீர்கள். அதை மாற்றிக் கொள்ளுங்கள். அழுவதற்கா நாம் பிறந்து இருக்கிறோம்.

ஆனந்தமாக நம் ஐயனை கொண்டாட அல்லவா இங்கு வந்து இருக்கிறோம். இசை உங்களை மகிழ்விக்கும். மனம் ஒன்றி செய்யப்படும் ஒரே இறை ஆராதனை இசை மட் டுமே. இசையோடு திருமுறை களைக் கேட்டுப் பழகுங்கள். விரக்தியும் வேதனையும் மறையும். அடியார்களோடு பழகுங்கள். நிச்சயம் மனம் ஆனந்தம் கொள்ளும். எங்கெல் லாம் உயர்ந்த நேர் மறை ஆற்றல்கள் கிளம்புகின்ற னவோ, அங்கே இருந்து கொள் ளுங்கள். ஈசனே பெரும்துணை என்று உணர்ந்துகொள்ளும் மனம், நிச்சயம் அமைதி கொள்ளும். இதையே மாணிக்கவாசகர் இப்படிச் சொல்கிறார்.

'சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில்சூழ்

பெருந்துறையாய் அடியேன்நான்

உடையானே உனையல்லா துறுதுணை மற்றறியேனே!'

மனம் அலைபாய்பவர்கள் தனிமையில் இருப்பது நல்லதல்ல. கூடுமானவரை சத்சங்கத்தில் இணைந்து இருங்கள். முடிந்த தொண்டுகளை ஆலயத்துக்கும் இறை அன்பர்களுக்கும் செய்யுங்கள். ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள்... இங்கு இருப்பவர் களுக்கும், இனி வரப்போகும் அன்பர்களுக்குமான சுவாசக் காற்றையும் பிராண ஆற்றலையும் நிரப்பி வைத்துக்கொண்டு காத்திருக்கிறானே நம் ஈசன், அவன் எந்த காலத்திலேயும் உங்களைக் கைவிட மாட்டான். வீண் கற்பனைகளை விட்டுவிடுங்கள். ஆனந்தம் என்பது வருவதில்லை; நீங்கள் உருவாக்கிக் கொள்வது. பாதுகாப்பாக உணரும்போது ஆனந்தம் வந்துவிடும்.

இரண்டாவது உலகப்போரில், ரஷ்ய ராணுவ வீரர்கள் சிலர் பனி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது பனிப் புயலில் சிக்கிக் கொண் டார்கள். வழி தெரியாமலும் கடுமையான குளிராலும் எல்லோரும் கூச்சலும் அழுகையுமாக இருந்தனர். குழுவின் தலைவன் மட்டும் திடமாகவும் நம்பிக்கையோடும் இருந்தான். அவன் உதவியாளான மகன் அவனை அணுகி `அப்பா எல்லோரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தவிக்கிறார்களே... நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே... என்ன செய்யலாம் சொல்லுங்கள்!' என்றான். உடனே தலைவன் தன்னுடைய வாளை உருவி வேகமாக மகனின் கழுத்தை நோக்கி வெட்டப் பாய்ந்தான். எல்லோரும் பயந்து கூச்சலிட்டார்கள். அவர் மகனோ அமைதியாகவே இருந்தான்.

`வாள் உன் கழுத்தருகே இருந்தபோது ஏன் அமைதியாக இருந்தாய்?' என்று தலைவன் கேட்க, `அது உங்கள் கையில் இருந்ததால் அப்பா. நிச்சயம் நீங்கள் என்னை வெட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையால் நான் கத்தாமல் இருந்தேன்!' என்றான் மகன். `அதே நம்பிக்கைதான் என் தகப்பனாகிய இறைவன் மீதும் நான் கொண்டிருக்கிறேன். நாமெல்லாம் அவர் கையில் இப்போது இருக்கிறோம். நிச்சயம் நம்மை அவர் காப்பார். கவலை கொள்ளாதீர்கள்' என்றான் தலைவன்.

அவர்கள் அனைவருமே பத்திரமாக மீட்கப் பட்டார்கள் என்கிறது வரலாறு. இறைவன் மீதான நம்பிக்கை ஒரு பலத்தைக் கொடுக்கும். அந்த ஆத்ம பலம் நம் எண்ணங்களை, செயல்களைத் தெளி வாக்கி வெற்றியையும் ஆனந்தத்தையும் கொடுக்கும்.

`ஹோடெய்' எனும் சிரிக்கும் புத்தர், தன் சிரிப்பையே உலகுக்கு போதனையாக அளித்தவர். ஜொராஸ்ட்ரிய மத நிறுவனர் ஜொராஸ்ட்ரர் எனும் ஞானி சிரித்தபடியே பிறந்தார். சீனத்துறவி லாவோட்சு 82 ஆண்டுகள் கருவில் இருந்தபிறகு ஆனந்தமயமாக பிறந்தார் என்பர். சகல மதங்களும் ஆனந்தமயமாக வாழ்வதையே வலியுறுத்துகிறது.

சிதம்பரப் பெருமான்
சிதம்பரப் பெருமான்
mohameda

ஆடல் வல்லானான நம் சிதம்பரப் பெருமான், ஆனந்த நடனமிட்டு அல்லவோ நமக்கு அருள்கிறார். அவரைப் பற்றிக்கொள்ள துன்பங்கள் ஏதும் நம்மை அண்டுமோ? அனலைப் புழு பற்றுமோ, அரனடி யார்களை வினை பற்றுமோ!

`அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

பெருந்திறல் அருந்தவர்க் கரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த

போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த

செல்வமே சிவபெருமானே

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்...' எனும்படி ஈசனைப் பிடித்துக்கொள்ளுங்கள் போதும். மனம், சித்தம், அறிவு, வாக்கு, செயல் அனைத்தையும் அவன் தெளிவாக்குவான்.

குழம்பை ருசி பார்த்தால் உப்பும் உறைப்பும் தெரிய வரும். வாழ்க்கையை ருசி பார்க்க இறை நம்பிக்கையோடு இருங்கள்... அது அவசியம். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் இல்லாதவர்களே, மற்றவர்களுக்காக தொண்டுகளைச் செய்ய முடி யும். தொண்டு செய்பவர்கள் மட்டுமே ஆனந்தத்தை பெறவும் முடியும். உங்கள் கவலைகளே உங்களை தின்று கொண்டிருந்தால், எதையும் நீங்கள் சாதிக்க முடியாது.

எனவே எழுந்திருங்கள்... சுறுசுறுவென ஏதாவது வேலை பார்த்துக்கொண்டே இருங்கள். மனம் தானே அடங்கும். மனம் ஓர் அற்புதமானப் பொற் குடம். அதில் சகதியை வைத்துக் கொண்டிருக்காதீர் கள். மனதை ஆனந்தத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குச் சிவவழிபாடு ஒன்றே துணை செய்யும். சிவாயநம!

- பேசுவோம்...

கெளரி தாண்டவர்
கெளரி தாண்டவர்

கெளரி தாண்டவர்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூரில் உள்ளது அருள்மிகு திருத்தளி நாதர் திருக்கோயில். இங்கே திருத்தளிநாதர், சிவகாமி அம்பாள், யோக பைரவர், ஆடல்வல்லான் என அனைவரும் யோக நிலையில் இருப்பதாக ஐதிகம். எனவே இந்தத் தலத்தை, யோக பூமி எனப் போற்று கிறார்கள் பக்தர்கள்.

இங்கு வந்து, திருத்தளிநாதரையும் அம்பிகையையும் வணங்கித் தொழுதால், வாழ்வில் எல்லா நலனும் பெற்று, ஞானமும் யோகமும் கிடைத்து வாழலாம் என்பது ஐதிகம்.

தேய்பிறை அஷ்டமியில் யோக பைரவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் நிச்சயம் என்கின்றனர். மாணிக்கவாசகர் வணங்கிய தலம்; வியாக்ரபாத முனிவர் வழிபட்ட ஆலயம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், திருவாதிரை வைபவங்களைத் தரிசிப்பது விசேஷம்.

அன்றைய நாளில் கெளரி தாண்டவரை வழிபட்டால், சகல கல்யாண வரங்களும் கிடைக்கும்; வீட்டில் எப்போதும் சுபிட்சங்கள் நிரம்பியிருக்கும் என்பது நம்பிக்கை.

- ஆர்.நித்யா, ராமேஸ்வரம்