Published:Updated:

சிவமயம் - 18

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

சிவதாமோதரன் ஐயா

சிவமயம் - 18

சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

இறை பக்தியால் எந்நேரமும் நன்மையே செய்து வருபவர்கள், பரிகாரங்கள் குறித்து அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. `சிவாய நம' மந்திரமும் திருமுறைகளும் உங்களை நிச்சயம் காக்கும்; கவலையை விடுங்கள்.

சிவாய நம
சிவாய நம

வணக்கம். வாழிய நலம்!
தமிழகம் எங்கும் மழை பொழிந்து ஆறெங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எல்லோரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க எல்லாம்வல்ல ஈசனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். எத்தனையோ கேள்விகள் வந்து குவிகின்றன. இயன்றவரை அனைத்தை யும் ஒருங்கிணைத்துப் பதில் சொல்லி வருகிறேன். குறிப்பாகப் பரிகாரங்கள் குறித்தே அதிகக் கேள்விகள் வருகின்றன. இறை பக்தியால் எந்நேரமும் நன்மையே செய்து வருபவர்கள், பரிகாரங்கள் குறித்து அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. `சிவாய நம' மந்திரமும் திருமுறைகளும் உங்களை நிச்சயம் காக்கும்; கவலையை விடுங்கள்.

`இறை அடியார்கள் எப்படி இருக்கவேண்டும். அடியார்களின் இலக்கணம் என்ன?' என்றும் ஒரு கேள்வி வந்துள்ளது.

அடையாளம் இல்லாமல் இருப்பதே இறை அடியார் களின் அடையாளம் என்கின்றன ஞான நூல்கள். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்தாமல் எல்லாம் சிவமென சிந்தித்து இருப்பதே அடியார்களின் இலக்கணம். முக்கியமாக ஆணவம் இன்றி வாழ்வதே சிறந்தது. உடலெங்கும் திருநீறும் ருத்திராட்சங்களும் தரிப்பது மட்டும் அடியார்களின் அடையாளம் அல்ல. சொல்லாலோ ,செயலாலோ எவரையும் காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்.

சிவ வடிவமே ஆணவத்தை அடக்கிய அருள்கோலம்தானே?! எவராலும் அடக்க முடியாத மகா கங்கையின் ஆணவம் அடக்கி தலையில் சூடிக்கொண்டார் ஈசன். அழகால் ஆணவம் கொண்ட சந்திரன் கலையிழந்தான். பின்னர் தவறுணர்ந்து ஆணவம் துறந்தான். அவனை மன்னித்து இழந்த கலைகளைத் திரும்பத் தந்து, அவனைத் தலையில் சூடிக் கொண்டார் பெருமான்.

வலிமையால் ஆணவம் கொண்ட வாசுகிப் பாம்பையும் கார்கோடகப் பாம்பையும் அடக்கி ஆபரணமாக உடலில் அணிந்து கொண்டார். தாருகாவனத்து ரிஷிகள் தவ பலத்தால் ஆணவம் கொண்டு ஏவிய யானை, புலியை அழித்து தோலாடையாக அணிந்து கொண்டார். மானை, மழுவைத் தன் கரத்தில் ஏந்திக் கொண்டார். ஆட்டிப்படைக்கும் சோம்பல் எனும் முயலகனை ஒடுக்கி காலடியில் வைத்துக் கொண்டார்.

சிவவடிவம்
சிவவடிவம்
Kanchan Sabale

இப்படி சிவவடிவம் மொத்தமும் ஆணவத் தைக் கண்டிக்கும் விதமாகவே இருப்பதைக் கண்டும் நாம் ஆணவம் கொள்ளலாமா?

ஆணவத்தால் பொய்யுரைத்த பிரம்மனையும் காமக் கணை தொடுத்த மன்மதனையும் ஈசன் தண்டித்த திருக்கதைகள், மனிதநேயம் இல்லாத கல்வியும் முறையில்லாத காமமும் தவறு என்று உணர்த்தவன்றோ!

வல்லமை அதிகம் கொண்ட கார்த்தவீரியன் தன் மனைவியரோடு நர்மதை ஆற்றில் ஜலக் கிரீடை செய்து கொண்டிருந்தான். தனது ஆற்றலை மனைவியருக்குக் காட்டவென்று தன்னுடைய ஆயிரம் கரங்களால் நர்மதை யின் நீரை தடுத்து, வழிமாறி ஓடச் செய்தான்.

அதேவேளையில் தூரத்தில் நர்மதையில் நின்று சிவபூஜை செய்து கொண்டிருந்த ராவணன், நீர்வரத்து தடைப்பட்டதால் பூஜையை நிறுத்தினான். தடம் மாறி ஓடிவந்த நர்மதையின் நீர், ராவணன் செய்துவைத்திருந்த மண்ணால் ஆன சிவலிங்கத்தையும் அழித்து விட்டுச் சென்றது. இப்படி சிவபூஜை நிற்கும்படி சிவ அபவாதம் செய்தது யார் என்று சிந்தித்தான் ராவணன். கார்த்தவீரியன் என்று அறிந்து அவனுடன் யுத்தம் புரிந்தான்.

ஆற்றலில் வல்லவனான கார்த்தவீரியன் போரில் வென்றான். ராவணனைக் கட்டிப் போட்டு ஒரு சிலந்தியைப் போல தலைகீழாகத் தொங்கவிட்டுச் சிரித்தான்.

அவன் ராவணனின் சிவபூஜைக்கு இடையூறு நிகழ்த்தியதாலோ - மணலால் ராவணன் செய்த சிவலிங்கத்தை அழித்ததாலோ நிர்குணனான சிவம் கோபிக்கவில்லை. ஆனால் பூதகணங்கள் வெகுண்டன. ப

தினெண் கணங்களில், சிவவிருப்பத்தை அறிந்தவுடனே பணியாற்றும் சில கணங்கள் வெகுண்டெழுந்து நர்மதையின் கரைக்கு வந்தன. ஆணவம் கொண்ட கார்த்தவீரியனை நையப் புடைத்தன; ராவணனை மீட்டன.போரில் தோற்றாலும் சிவபூஜையின் மகிமை அறிந்த ராவணன் ஈசனுக்கு விருப்பமானவ னாக மாறினான். பல பரிசுகளும் ஈஸ்வரப் பட்டமும் பெற்றான்!

ஆணவமற்று இருந்தால் ஈசனுக்குப் பிரியமானவராக மாறலாம் என்பதை நாயன்மார்கள் பலரின் திருக்கதைகள் நமக்கு உணர்த்தியபடியே உள்ளன.

ஆணவம் இல்லாமல், கிஞ்சித்தும் பிறரை நோகாமல் அன்போடு வாழ்வதே அடியார் களின் இலக்கணம். முடிந்தவரை இன்சொல் பேசி மற்றவரை மகிழ்வியுங்கள். ‘யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி; யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே என்று திருமந்திரம் நமக்கு வழி காட்டுகிறதே!

அதேபோல் கொஞ்சம் இருப்பினும் அதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழப் பழகுங்கள். இறுதிப் பயணத்தில் நமக்காகக் கொண்டு செல்லும் ஒரே வழிச்செலவுச் செல்வம் புண்ணியம் மட்டுமே. வறியவர்களுக்கு என்ன கொடுத்தோமோ, இறைப்பணிக்கு நாம் எவ்வளவு கொடுத்தோமோ அவ்வளவு புண்ணியம் நமக்கு உண்டு. முடிந்தவர்கள் கொடுக்கலாம். முடியாத வர்கள் கொடுக்க ஆசையாவது படவேண்டும். அறம் செய்ய விரும்பு என்று வழிகாட்டுகிறாரே, ஓளவை!

அன்போடு அறம் செய்யுங்கள். கொடுத்துப் பாருங் கள்; நிச்சயம் உங்கள் செல்வம் வளரும். கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்களிடம் தரித்திரம் நிலைப்பது இல்லை.

ஓர் ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். கோயில் வாசலில் பிச்சை எடுத்த அவனுக்கு நல்ல வருமானம். அவனிடம் சேமிப்பும் உயர்ந்து கொண்டே சென்றது. ஒருமுறை அந்தக் கோயிலுக்கு வந்த ஒரு சித்தரிடம் ஆசி பெற்றான் அந்தப் பிச்சைக் காரன். அவரும் ஆசி கூறிவிட்டு ‘எப்போதும் வாங்கிக்கொண்டே இருக்கிறாயே, எப்போது நீ கொடுப்பாய்!’ என்று விநயமாகக் கேட்டார்.

பிச்சைக்காரன் யோசித்தான். சித்தர் கேட்ட கேள்வி அவனைத் தைத்தது. அவன் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு, மலர்கள் வாங்கி வந்து தொடுத்து அந்தக் கோயில் வாசலிலேயே கடைபோட்டு விற்க ஆரம்பித்தான். அதிலும் நல்ல வருமானம் வந்தது.

சில மாதங்கள் கழித்து அதே சித்தர் வந்தார். பூ வியாபாரியை ஆசிர்வதித்து ‘இப்போது கொடுத்துவிட்டு (மலரைக் கொடுத்துவிட்டு பணம்) வாங்குகிறாய், இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண் டும். குறையவும் கூடாது; எதையும் நீ வாங்கவும் கூடாது. அப்படி மாறினால் நீ எவரையும் வணங்க வேண்டியதில்லை!’ என்று கூறிச் சென்றார்.

அந்த வியாபாரி சிந்தித்தான். தெளிவு கொண் டான். அன்பை மட்டுமே கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அது குறையவும் குறையாது. அன்பு கொண்டோருக்கு எதுவும் தேவையும் இல்லை. சிறிதளவே தேவை என்றாலும் அது அன்பாகத் தேடிவரும் என்பதை உணர்ந்துகொண்டான். தவவாழ்க்கை மேற்கொண்டு, உலகமும் உயிர்களும் நன்மை பெற வேண்டிக்கொண்டே இருந்தான். இறைநிலையை எட்டி சிவபதம் பெற்றான்.

நாமும் ஆணவம் கொள்ளாமல், அன்போடு வாழப் பழகுவோம்; இறைவனின் பேரன்பு நமக்குக் கிடைக்கும். ஆணவம் இல்லாமையும் அன்பு கொள்ளுதலுமே அடியார்களுக்கான இலக்கணம். சிவாயநம!

- பேசுவோம்...


காமேச்வரங்கள்!

காமனை எரித்த இறைவனை காமதகன மூர்த்தி, காமாரி, காம அந்தக மூர்த்தி என்றெல்லாம் அழைப்பர். இவரின் சக்தி- ரோக விக்ன நாசினி. நோய், இடர்கள் ஆகியவற்றை அழிப்பவர் என்று பொருள். காம தகன மூர்த்தியை வழிபட்டால், நமது காமம் நீங்கி நல்ல கதி கிடைக்கும்!

சிவபெருமான் காமனை எரித்த திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்குறுக்கை. கிராமிய விழாக்களில் காம தகனம் எனும் காமன் பண்டிகையும் ஒன்று. சில ஊர்களில் காமுட்டிக் கோயில் என்று சிவலிங்கம் அமைத்தும் வழிபடுவார்கள். இதனால் நல்ல விளைச்சலும், மக்கள் விருத்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் அருளால் உயிர் பெற்று எழுந்த பின் தன்னை உயிர்ப்பித்ததற்காகவும், தனது தவறுக்கு வருந்தியும் அநேக இடங்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டான் மன்மதன்.

புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் காமேச்சரம், திருச்சி லால்குடி அடுத்த பூவாளுர் மன்மதேச்சரம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருத்துருத்தி (குத்தாலம்) மன்மதேச்சரம், காஞ்சிபுரம் காமேச்சரம் ஆகிய ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவை. காசி மாநகரிலும் மன்மதன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

- கே.வேலு, சென்னை-44