புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

சிவமயம் - 25

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

வணக்கம். வாழிய நலம்! திருவண்ணாமலை தீபத் திருவிழாவை எல்லோரும் கண்டு பரவசம் அடைந்து இருப்பீர்கள். இருளை ஒளி வெல்லும் நிகழ்வே தீபத் திருவிழா. இறைவனின் கோடான கோடி ரூபங்களில் ஒளி முதன்மையானது. அதனாலேயே அது விமரிசையாக வணங்கப்படுகிறது.

சிவமயம்
சிவமயம்


`ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே

சித்தத்துள் தித்திக்குந் தேனே...'

என்றல்லவோ திருமாளிகைத்தேவர் இறை வனை ஒளியாக வணங்குகிறார்.

`எவ்வளவு சம்பாதித்தாலும் நிம்மதியில்லை. குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரமில்லை' என்று கவலைப்பட்டிருந்தார் ஓர் அன்பர்.

இதற்கு நான் ஆறுதல் சொல்வதைவிடவும் அவரே சிந்தித்துப் பார்ப்பது நல்லது. எங்கு தவறு, எதனால் தவறு என்று சீர்தூக்கிப் பார்த்து செயல் படுவது நலம். தொடர்ந்து பிரச்னைகள் என்றால், உங்களிடமே தவறு இருக்கலாம். ஆகவே, அதற்குக் காரணம் விதி என்றோ, தெய்வக் குற்றம் என்றோ பொருள்கொள்ள வேண்டாம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடாது. உங்களிடம் கார் இல்லாமல் இருக்கலாம்; கார் வைத்திருப் பவர்களிடம் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம்.

குறை உடையவர்கள் நிறைவை அடைய முயற்சி செய்யவேண்டும். அதற்கு இறை பக்தி உதவும். `இது இல்லை... அது இல்லை...' என்று புலம்புகிறீர்கள். இதுதான் உங்கள் நிம்மதியைக் கெடுக்கிறது. யோசித்துப் பாருங்கள்... `ஒருவேளை நீங்கள் நிம்மதியாக செயலாற்றினால் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்' என்பேன். பறவைக்குச் சிறகு இல்லை என்றால் குறை. தந்தம் இல்லை என்று புலம்புவது முரண் அல்லவா?

தெய்வ பக்தி கொண்டவர்களுக்கு ஞானம் அவசியம். ஞானம் கொண்டவர்கள் எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதனால் நிம்மதியை இழப்பதும் இல்லை.

ஈசனின் தராசு நியாயமானது. அது உழைப் புக்கேற்ற, ஒழுக்கத்திற்கேற்ற கூலியை நிச்சயம் தந்துவிடும். ஒரு கௌபீனத்துக்கு இணையாக எதுவுமே நிற்கவில்லை என்பதை அமர்நீதி நாயனார் வரலாறு உணர்த்தவில்லையா? ஆகவே, உங்களுக்கானது உங்களைச் சேரும். கவலை வேண்டாம்.

`கடுமையாக உழைக்கிறேன்' என்கிறீர்கள். குடும்பத்துக்காக சம்பாதிப்பவர்கள், குடும்பத்தை அனுபவிப்பதே இல்லை என்பது துயரமான உண்மை. குழந்தைகளிடம் பேசக் கூட நேரமில்லை என்பவர்கள் சம்பாதிப்பதில் அர்த்தம் இல்லை.

ஒருவனின் வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே போகிறது. அதை அவன் எடுக்கவும் இல்லை; பிறருக்குக் கொடுக்கவும் இல்லை என்றால், அந்தப் பணத்தால் என்ன பயன்? செல்வம் வரம்! அதைச் சாபமாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை நிம்மதி இழக்கச் செய்யும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.

தூக்கம், தியானம், உடற்பயிற்சி, குடும்பத்துக்கான நேரம், நிதானமாக உண்ணும் வழக்கம், விழாக்கள்- விசேஷங் களுக்குச் செல்வது என அனைத்துக்கும் நேரம் ஒதுக்குங்கள். அவற்றுடன் உங்கள் பணியும் இருக்கட்டும். நல்லவர்களுடன் உங் களை இணைத்துக் கொள்ளுங்கள். சத்சங்கம் உங்களை நல்வழிப்படுத்தும்.

உங்களை நீங்களே உணர சத்சங்கம் அவசியம். உங்களை உணர்ந்து கொண்டால் நிம்மதி பரவும். நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டாம். நீங்கள் இருக்குமிடமே கோயி லாக வேண்டும். நீங்கள் உண்பதே இறைவனுக் கான பிரசாதமாக வேண்டும். உங்கள் வார்த்தைகளே மந்திரமாக வேண்டும். உங்கள் இருப்பே ஈசனுக்கான பூசையாக வேண்டும்.

அப்படி வாழுங்கள். பணம் அவசியம்; பணத்தைவிட அவசியமானவையும் பல உள்ளன. உங்களை நீங்களே சுத்தப்படுத்தி உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கு சைவம் நிச்சயம் உதவும். வளைந்து வணங்கும் சைவமே உங்களை நிமிர்ந்து வாழவும் வைக்கும்.

சிவமயம்
சிவமயம்
ePhotocorp


ஒரு நாட்டில் எலிகளை எல்லாம் பிடித்து ஒழித்துவிட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டு இருந்தான். காட்டில் இருந்த புலி ஒன்று இது கேட்டு தலைதெறிக்க ஓடியது.

அதை வழி மறித்த நரி `ஏன் இப்படி ஓடு கிறாய்' என்று கேட்டது. 'எலிகளை எல்லாம் பிடிக்கிறார்களாம். அதனால் ஓடுகிறேன்' என்றது புலி.

`நீதான் புலி ஆயிற்றே, ஓடாதே நில்!' என்று நரி கேட்டது. உடனே, `என்னை எலி என்று அரசு சொன்னால், அதை எப்படி நான் மறுப் பது?' என்றதாம் புலி.

உங்களைக் குறைவாக மதிப்பிட்டுக் கொள் ளாதீர்கள். பல நூறு பிறப்பெடுத்து, அதில் சிறந்ததான மானிட வடிவெடுத்து, அதிலும் தமிழகத்தில் பிறந்து, சிவநாமத்தைச் சொல்லும் பேரின்பத்தை அடைந்த நீங்கள், நிச்சயம் உங்கள் பிறப்புக்கான நோக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். அவ்வாறு நீங்கள் உணரும்படிச் செய்வான் நம் ஈசன்.

எல்லா கவலைகளுக்கும் ஒரே மூலம்தான். அது ஒப்பிட்டுப் பார்ப்பது. மற்றவர்களை எண்ணி வீணே கவலை வேண்டாம். ஈசனைப் பற்றிக்கொள்ளுங்கள். பயணத்தையே இனிமையாக மாற்றிக் கொள்ளுங்கள். ஊர் சேர்வதைப் பற்றி கவலை வேண்டாம். அதை ஈசன் பார்த்துக் கொள்வான்.

இங்கு எதுவுமே நிலையில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வீண் கவலை வராது. கடனாகப் பெற்ற உடலை, ஒருநாள் கடன் கொடுத்தவனிடமே ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும் ஆன்மா.

ஆறடிதான் சொந்தம் என்பார்கள். அதுகூட இல்லை என்பதே உண்மை. உனக்கு முன்னே எத்தனைப் பிணங்களோ, உனக்குப் பின்னே எத்தனைப் பிணங்களோ அதே இடத்தில். இங்கு சிவத்தைத் தவிர எதுவுமே நிலை இல்லை.

`என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்

பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்

உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே!'

- என்று சிவத்தை மட்டுமே சரண் அடைந்த பட்டினத்தார் உரைத்ததை நினைவில் கொள்ளுங்கள்.

நிலையாமையை வலியுறுத்த இப்படிச் சொல்ல வில்லை. சைவம், எதையும் துறந்துவிடச் சொல்வது இல்லை. எதையும் துறந்துவிட தயாராக இருக்கச் சொல்வதே சைவம். ஈசனின் அன்பான ஆளுகையில் நிம்மதியாக வாழுங்கள். உங்களின் நியாயமான உழைப்பு நிச்சயம் நல்ல பலனை அளிக்கும்.

கண்ணால் கேட்க முடியாது; காதால் பார்க்க முடியாது. இது ஈசன் விதித்த விதி. ஆனால் கண்ணால் பார்ப்பதை, காதால் கேட்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். நல்லதைக் காணுங்கள். நல்லதைக் கேளுங்கள். நலமே விளையும். சைவத்தின் வழி நின்று சிவத்தைப் போற்றுங்கள்; நிம்மதி பிறக்கும். அதனால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வ மும் நீங்காத ஆரோக்கியமும் கிட்டும்.

மழைக்கு ஒதுங்குவது போல கோயிலுக்குச் செல்லாதீர்கள். ஆன்மா லயிக்கும் இடம் அது. அங்கே உண்மையாய், ஒழுக்கமாய், எளிமையாய் செயல்படுங்கள். உங்களின் அமைதியால் அங்கே ஈசனின் இருப்பை உணர்ந்து கொள்ளலாம்.

சிக்கென அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைத்தவிர நிம்மதி பிறக்க வேறொரு உபாயமும் அடியேன் அறியேன். இறைவனைப் பிடித்துக் கொள்ள திருமுறைகள் உதவும். குறிப்பாக திருவாசகம் படியுங்கள். அது உங்களை வழி நடத்தும்.

சிவாயநம!

- பேசுவோம்..

மஞ்சள் சார்த்தினால் மணமாலை நிச்சயம்!

சௌந்தரராஜபெருமாள் ஆலயம்
சௌந்தரராஜபெருமாள் ஆலயம்


திண்டுக்கல்லிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்குள்ள சௌந்தரராஜபெருமாள் ஆலயம் பிரசித்திபெற்றது. இங்கு அருளும் தாயாரின் திருநாமம்- கல்யாண சௌந்தரவல்லித் தாயார்.

இவரின் சந்நிதிக்கு எதிரே ரதியும் மன்மதனும் காட்சி தருகின்றனர். `அரங்கனே மணாளனாக வரவேண்டும்' என்ற ஆண்டாளின் பிரார்த்தனை நிறைவேற துணை நின்றவன் மன்மதன் என்பது ஐதிகம்.

இதையொட்டி வியாழக் கிழமைகளில் இங்கே மன்மதனுக்குச் சிறப்புப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருமணத் தடையுள்ள ஆண்கள் ரதிதேவியையும், பெண்கள் மன்மதனையும் மஞ்சள் சார்த்தி, தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில் வழிபடவேண்டும். ரதிதேவி மற்றும் மன்மதனின் கழுத்தில் உள்ள மாலையைத் தினமும் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பத் இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!