Published:Updated:

சிவமயம் - 14

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

சிவமயம்

சிவமயம் - 14

சிவமயம்

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

`அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்

மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள்

தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்

கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று!'

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா


காரைக்கால் அம்மையார் ஈசனிடம் வேண்டிப் பெற்ற மாங்கனி குறித்து சேக்கிழார் பெருமான் வியந்து பாடியது இப்பாடல். இந்த ஜூலை மாதம் (10 முதல் 14-ம் தேதி வரை) காரைக்காலில் மாங்கனித் திருவிழா களைகட்டும்.

13-ம் தேதி ஈசனார் வெட்டிவேர் மாலை அணிந்து, அடியார் வேடத்தில் காரைக்கால் அம்மையாரை நோக்கி உணவு எடுத்துக்கொள்ளச் செல்லும் கோலத் தில் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் கூடி, வேண்டுதல் நிறைவேற மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டால் முக்தியும் மோட்சமும் நிச்சயம். புனிதவதி எனும் அந்தப் புண்ணியவதியின் தொண்டினையும் தியாகத்தையும் போற்றி ஈசன் அடி துதிப்போம். சிவாயநம!

`ஐயா, எல்லாமே சிவத்தால்தான் நடக்கிறது என்றால், நல்லவை மட்டும்தானே நடக்கவேண்டும். ஏன் கெடுதல்களும் நடக்கின்றன?'

- என்று அன்பர் ஒருவர் கேட்டுள்ளார்.

எல்லா நாட்டிலும் அமைதியைக் காக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் அமைதி மட்டும்தான் நிலவுகிறதா? வாகனம் ஓட்ட பல வகை விதிகள் உள்ளன. எனினும் விபத்துகள் நடக்காமல் இருக்கின்றனவா? நீங்கள் கவனமாக இருந்தாலும் எதிரே வருபவர் உங்கள் மீது விபத்தை உண்டாக்கலாம் இல்லையா!

இன்னார்தான் என் தாய்-தந்தை, இந்த நாட்டில் நான் பிறக்கவேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்தீர்களா? இல்லை... நீங்கள்தான் அவர்கள் பிள்ளை என்பதை உங்கள் தாய்-தந்தை நிர்ணயித்தார்களா. நிங்களோ, அவர்களோ நிர்ணயிக்கவில்லை அப்படித்தானே? ஆனால், நீங்கள் இந்த விதம் வாழவேண்டும். இந்தப் பதவியை, வசதியை அடைய வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். ஆம், உங்கள் பிறப்பில் சிலவற்றை உங்களால் தீர்மானிக்க முடியும்; சிலவற்றைத் தீர்மானிக்க முடியாது. அதுவே உண்மை.

ஆனால், நம்மில் பலரும் நம்மால் முடியாத விஷயத்தில் மூடத்தனம் காட்டிப் பிடிவாதம் செய்கிறோம். நம்மால் செய்ய இயலும் விஷயங்களில் அசட்டையாக இருக்கிறோம். இதுவே பல கெடுதல்களுக்குக் காரணம். ஆக, ஒழுக்கமும் பக்தியும் நிச்சயம் உங்களுக்கு நல்லதே உருவாக்கும்.

உங்கள் அசட்டையால் பல நோய்கள் உருவாகின. நவீன அறிவியல் அந்த வியாதி களை ஒழித்தது. அதில் உங்கள் முயற்சியும் இருந்தது. பலரைக் காப்பாற்ற முடிந்தது.

ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங் கள். நீங்கள் மரணத்தை ஒழிக்க முடியாது. அது இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது. முயற்சி திருவினையாக்கும். நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமல் கெடுதல் வந்து விட்டது என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். மேலும் எது கெடுதி, எது நன்மை என்று நம்மில் யாருக்குத் தெரியும்.

நீங்கள் நன்மையை நோக்கி ஓர் அடி நகர்ந் தால், உங்களுக்காக ஈசன் ஆயிரம் அடிகள் எடுத்து வைப்பார். இது நிஜம். உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தே அனுப்பி வைத்துள்ளார் ஈசன். அவற்றைப் பயன்படுத்தி நன்மை அடைவது உங்கள் சாமர்த்தியம்!

இறைவன் வந்து ஊட்டிவிடத்தான் செய்வார். அதை மென்று, உமிழ்நீர் கலந்து விழுங்கவேண்டியது நமது வேலை. பிறகு செரிப்பதும் அதைச் சக்தியாக்குவதும் அவன் வேலை. நீங்கள் மெல்லாமலும் விழுங்காமலும் இருந்தால், இறைவன் என்ன செய்வார். சிந்திக்கும் ஆற்றலை இறைவன் அளித்தார். அதில் என்னவிதமாக சிந்திக்க வேண்டும் என்பதை நீங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். நல்ல சிந்தனைகள் இல்லாதவர்களுக்கு கட்டாயம் கெடுதல் வந்துசேரும்.

ஓர் ஊரில் ஒரு மர வியாபாரி இருந்தான். அவனிடம் பல மாதங்களாக சந்தன மரக் கட்டைகள் பலவும் விற்காமல் தேங்கிவிட்டன. அந்த ஊர் அரசன் நகர் உலா வரும்போது, அவரைக் கண்ட மர வியாபாரி, `இந்த அரசன் செத்துப்போனால் நம் சந்தனக் கட்டைகள் யாவும் இவரை எரிக்கவென்று விற்றுப்போகுமே' என்று கண நேரம் அல்பமாக சிந்தித்தான்.

அந்த எண்ண அலைகள் பரவி, அரசனை அடைய, என்னவோ காரணம் இன்றி அந்த வியாபாரியைக் கண்டு வெறுப்போடு நகர்ந்து போனான் அரசன்.

`எல்லோருக்கும் பொதுவான நான் ஏன் காரணம் இன்றி, இந்த வியாபாரியைக் கண்டு வெறுப்பானேன்' என்று வியந்து மந்திரியிடம் ஆலோசனை கேட்டான். மந்திரியும் தாம் விசாரிப்பதாகக் கூறிச் சென்றான். வியாபாரியிடம் பேசினான். அப்போது அந்த வியாபாரியின் எண்ணத்தை அறிந்தான்.

பின்னர், `மன்னரின் பிறந்த நாள் வரவுள்ளது. அன்று அவரை மகிழ்வூட்ட பல சந்தனச் சிற்பங்கள் செய்ய இருக்கிறோம். உன்னிடம் இருக்கும் சந்தனக் கட்டைகளை என்னிடம் விற்றுவிடு!' என்று கூறி மந்திரி வாங்கிக் கொண்டான். தொடர்ந்து வியாபாரியை மன்னரிடம் அழைத்துச் சென்றான்.

சந்தனக் கட்டைகள் விற்றுத் தீர்ந்ததால் மகிழ்ச்சியில் இருந்த வியாபாரி மன்னனைக் கண்டதும் மனதுக்குள், `அரசர் நீண்ட காலம் வாழவேண்டும், நானும் அவரி டம் பல வியாபாரம் செய்ய வேண்டும்' என்று எண்ணினான்.

இந்த எண்ண அலைகள் பரவி அரசனை அடைய, மன்னன் மகிழ்ந்து வியாபாரிக்கு மேலும் பொன்னும் பொருளும் அளித்து அவனை மகிழ்வித்தார்.

இந்தக் கதை கூறுவது என்ன? `எண்ணம் போல வாழ்க்கை' என்பதையே! ஆக கர்மா, பாவம், புண்ணியம் என்பன உங்கள் சிந்தனையைப் பொறுத்தவை. எனவே நன்றும் தீதும் பிறர் தாரார் என்பதை உணர்ந்து, உயந்த சிந்தனை - சிந்தனைக்கு ஏற்ப வார்த்தைகள் - வார்த்தைக்கேற்ப நல்வாழ்க்கை என்று வாழுங்கள். உங்களுக்குக் கெடுதலே வராது.

எல்லாம் அவன் செயல்தான். ஆனால், அவன் வழங்கியதை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதே நன்மை தீமையைத் தீர்மானிக்கும். எண்ணத்தில் கவனம் இருந்தால் போதும், உங்கள் வாழ்க்கையும் உங்கள் சந்ததியின் வாழ்க்கையும், உங்கள் பரவுலக வாழ்வும் கூட நலமாகவே அமையும்.

- தரிசிப்போம்...