Published:Updated:

சிவமயம்!

சிவமயம்!
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்!

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம்!

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்!
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்!

நவராத்திரி விழாக்காலம் தொடங்கவுள்ளது. தீமையை அழிக்க, தர்மத்தை நிலைநாட்ட இறை கட்டாயம் வரும் எனும் நம்பிக்கை நமக்குள் எப்போதும் நிலைத்திருக்க உருவானவையே நம் பண்டிகைகளும் விழாக்களும். அவற்றில், பெண்மையைச் சக்தியாய்க் கொண்டாடும் வைபவமே நவராத்திரி.

சிவமயம்
சிவமயம்


பெண்மையை மதிக்காத கூட்டம்; பெண்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் இனம் மண்ணோடு மண்ணாகிவிடும் என்று உலக சரித்திரம் தனது வழியெங் கும் சொல்லியபடியே உள்ளது. பெண் களை மதிப்பதில் சைவம் உயர்ந்த நிலை யைக் கொண்டது.

ஏன் இந்தத் தகவல் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்!

`பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காகவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்கிறார்களே...’ என்றொரு கேள்வி வந்தது நமக்கு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே சைவத்தில் பெண்கள் ஓதுவார்களாக, அர்ச்சகர்களாக, நாயன்மார்களாக, சைவத் திருமுறைகள் அருளிய குருமார்களாக இருந்துள்ளார்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் ஈசன், `அம்மையே’ என்று அழைத்து, அன்பின் மிகுதியால் தன்னை ஆண்ட ஒரு பெண் அடியாரைத் தாயாக ஏற்றுக் கொண்டான். ஆம், 63 நாயன்மார்களில் காரைப்பேயார் மட்டுமே ஆலயங்களில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பனந்தாள் கோயிலில் பூசை செய்து வந்த தாடகை எனும் பெண் அர்ச்சகரின் மானம் காக்க, தனது சிரம் தாழ்த்தி மாலையை ஏற்றுக்கொண்டார் ஈசன். சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு கோச்செங்கணானை ஈன்றளித்த கமலவதியின் தியாகத்தை இன்றும் சைவப் பேருலகம் போற்றுகிறது.

மேலும் மங்கையர்க்கரசியார், இசைஞானியார், சைலம் அக்கமகாதேவியார், திருவண்ணாமலை அம்மணி அம்மாள் என்று பெண்களைத் தெய்வமாகவே கொண்டாடும் திருக்கூட்டம் நம்முடையது. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் மனைவி மதங்க சூளாமணியார், அப்பூதி அடிகளின் மனைவி அருள்மொழி தேவியார், சுந்தரரின் மனைவியரான பரவை, சங்கிலி நாச்சியார்கள் என அநேக நாயன்மார்களின் துணைவியார்களின் தொண்டும் அர்ப்பணிப்பும் சொல்லச் சொல்ல நீளுமே.

இன்றும் நாம் பாடி வரும் தேவாரங்களின் பண்களை வகுத்துக் கொடுத்தவர் ஒரு பெண் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். நம்பியாண்டார் நம்பியாரைக் கொண்டு தேவாரங்களைச் சிதம்பரத்தில் மீட்டெடுத்தார் ராஜராஜ சோழர். சமயக் குரவர் நால்வர் காலத்தில் இசைக்கப்பட்ட அதே பண் முறையில் தேவாரப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், பல பாடல்களின் பண் அமைப்புகள் தெரியாமல் போயின. ஈசன் அவர்களுக்கு வழிகாட்டினான்.

ஆம், திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மனைவியான இசையரசி மதங்க சூளாமணி அம்மையாரின் வழி வந்த பாடகி ஒருவரே தேவாரங்களுக்குப் பண் அமைத்து அருளினார் என்கிறது வரலாறு. அவரின் திருப்பெயர் ‘வள்ளி’ என்றும் கூறப்படுகிறது.

செம்பியன்மாதேவி, குந்தவை, மதுரை மங்கம் மாள் போன்ற தமிழ்நாட்டின் அரசியார் பலரும் சைவத்துக்குப் பல தொண்டுகள் செய்துள்ளனர். அதிலும் திலகவதியார் என்ற பெருமாட்டியின் தியாகமும் தொண்டும் சைவம் மறக்க முடியாத மாண்புகளைக் கொண்டது இல்லையா!

முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். அதில் காலத்தால் மூத்தது நாவுக்கரசர் அருளிய 4, 5, 6-ம் திருமுறைகள். இந்த மூன்று திருமுறைகளில் முதல் பாடல் ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’. இந்தப் பாடல் தோன்றியது திருவதிகையில், அதுவும் திலகவதியாரின் முன்னிலையில். உழவாரத் திருப்பணியை நாவுக்கரசருக்கே அறிமுகம் செய்தவர் திலகவதியார். திருநீற்றின் பெருமையை நாவுக்கரசருக்கு காண்பித்தவர்; திருநாவுக்கரசரை மீட்டெடுத்து சைவத்தின் பெரும் சொத்தாக மாற்றிக்கொடுத்தவர்!

தன்னை மணம் முடிக்கப் பேசப்பட்ட நாயகன், போர்க்களத்தில் இறந்துவிட்டார் என்பதை அறிந்ததுமே கைம்மை கோலத்தை விரும்பி ஏற்றவர் திலகவதியார். இப்படி இவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகின்றன சைவ நூல்கள்.

`புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்

மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்

நிகழும்மலர்ச் செங்கமல நிரைஇதழின் அகவயினில்

திகழவரும் திருஅனைய திலகவதியார் பிறந்தார்’

- என்று திலகவதியாரின் அவதாரத்தைச் சிறப்புறப் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.

திலகவதியார் மட்டும் நாவுக்கரசரை சைவத்தின் பால் திருப்பி அருளி இருக்காவிட்டால், எத்தனை கோயில்கள் சிதைந்து போய் இருக்கும்? நினைக்க நினைக்க நெஞ்சில் நன்றி மேலோங்கிட, திலகவதியாரை என்றென்றும் சைவம் போற்றியே வந்துள்ளது.

சைவம் போற்றும் பெண்மை
சைவம் போற்றும் பெண்மை


இப்போது சொல்லுங்கள்... சைவம் பெண்களை எப்போதாவது ஒதுக்கி உள்ளதா... இல்லை! மாறாகப் போற்றியே வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால்... பெண்களும் முக்தி அடைய முடியும் என்று முதன் முதலில் சைவமே கற்பித்தது.

வீரசைவர்கள் பிறப்பு தொடங்கி இறப்பு வரை யிலான எந்தத் தீட்டுகளையும் கடைப்பிடிப்பது இல்லை. மேலும் பால் பேதம் சொல்லிப் பெண்களை ஆன்மிக விஷயங்களில் இருந்து ஒதுக்கிவைப்பதும் இல்லை. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே பசவண்ணர் காலத்தில் விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டது வீரசைவம். இன்றும் சிவதீட்சை பெற்ற பிறகு அனைவரையும் ஒன்றாகவே கருதுவது சைவம். இங்கு பக்தியே பிரதானம்.

கன்னட உபநிடதங்கள் என்று போற்றப்படுபவை சைவ வசனக் கவிதைகள். இவற்றை இயற்றியவர்களில் முன்னோடியான தேவரதாசிம்மையா 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். இவர் தனது பாடலில்...

‘மேலே முடி வந்தால் பெண்ணென்பார்

தாடி மீசை வந்தால் ஆணென்பார்

நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல

பெண்ணும் அல்ல காண் ராமநாதா!’ - எனப் பாடு கிறார். ஆண்-பெண் பேதமே சைவத்தில் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இதையே திருவாசகத்தில் மாணிக்க வாசகரும் பலவாறு கூறியுள்ளார்.

‘பிறப்போடிறப்பென்று மில்லாதான் காண்; பெண்ணுரு வோடாணுருவ மாயினான் காண்!’ என முதல் திருமுறையும் கூறும். இப்படிப் பெண் இல்லாமல் ஆணே இல்லை என்பதை எல்லா காலத்திலும் வலியுறுத்தி வந்துள்ள சமயம் சைவம். இதில் பெண்களுக்கு குறைவு என்று எதுவும் நடந்ததே இல்லை. அவர்களுக்கான பாதுகாப்பு என்றென்றும் இருந்து வந்தே உள்ளது.

எனவே எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்கும் சைவ சமயம், பெண்களைக் கொண்டாடு வதிலும் சிறப்பாகவே உள்ளது என உறுதியாகக் கூறலாம். சிவாயநம!

- பேசுவோம்...

அஷ்டலட்சுமி ஆலயம்
அஷ்டலட்சுமி ஆலயம்


தாமரைப் பூ தீபம்!

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் ஒரு கி.மீ தொலைவில், ஜெ.ஜெ நகரில் அமைந்துள்ளது அஷ்டலட்சுமி ஆலயம். பிரதான தெய்வமாய் மகாலட்சுமி அருள்பாலிக்க, சுற்றிலும் தனித்தனிச் சந்நிதிகளில் மற்ற லட்சுமியர் அருள்கிறார்கள்.

இந்தக் கோயிலில் தொடர்ந்து 12 வாரங்கள்... வெள்ளிக்கிழமை- சுக்கிர ஓரை அல்லது குரு ஓரையில் தாமரை மலரில் தீபமேற்றி வைத்து, குண்டுமல்லி பூக்கள் சார்த்தி, பால் நைவேத்தியம் செய்து ஆதிலட்சுமியை வழிபட்டால், புத்தரப் பாக்கியம் கிடைக்கும். அதேபோல், சுக்கிர ஓரையில் சுக்கிரனுக்கும், ஆதிலட்சுமிக்கும் வெண்தாமரை மாலை சார்த்தி வழிபட, கல்யாண வரம் அமையும் என்கின்றனர்.

- சி.ராஜு, கரூர்