Published:Updated:

சிவமயம் - 7

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம் - 7

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

வணக்கம், வாழிய நலம்!

சித்திரைத் திருவிழா வரவிருக்கும் நிலையில் மதுரையம்பதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சொக்கநாதப்பெருமானும் அன்னை மீனாளும் உங்கள் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற அருள் புரியட்டும்! அடியேனும் உலக நன்மைக்காகவும் அடியார் பெருமக்களின் விருப்பத்துக்காகவும் தமிழகம் எங்கும் சென்று திருவாசக முற்றோதல்கள் நடத்தி வருகிறேன். அங்குதான் எத்தனை எத்தனை இனிய அனுபவங்கள்; எத்தனை அற்புதங்கள் நடைபெறுகின்றன!

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா
திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா


விரைவில் அவை பற்றி எல்லாம் எழுத இருக்கிறேன். திருவருள் துணை புரியட்டும்!

பெரும்பாலான வாசகர்கள் `மன அமைதி இல்லை, எப்போதும் ஒருவித பதற்றத்தில் இருக்கிறேன். ஏதோவோர் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது... இதற்கு என்னதான் தீர்வு?' என்று கேட்டுள்ளீர்கள்.

நீறணிந்தவருக்கு வேறு கவலை எதற்கு? எல்லாவற்றையும் அந்த சிவத்திடம் ஒப்படைத்துவிடுங்கள். வாழ்க்கையை நிம்மதியாக அனுபவியுங்கள். அப்படியும் கவலை என்றால் இருக்கவே இருக்கின்றன பதிகங்கள்... அதிலும் `திருப்பூந்தராய்' எனும் பதியில் திருஞான சம்பந்தர் அருளிய `தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்...' என்ற பதிகம் உங்கள் மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கிவிடும்.

இப்பதிகத்தில் வரும்

'பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்

ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்

சிந்தை நோயவை தீர நல்கிடும்

இந்து வார்சடை யெம்மிறையே' - என்ற வரிகள் நிச்சயம் உங்களை ஆற்றுப்படுத்தும். சிவாயநம!

சிவமயம்
சிவமயம்


முருகப்பெருமானின் கையில் உள்ள வேலை வணங்குவதுபோல சிவத்தின் கையில் உள்ள திரிசூலத்தை வணங்கலாமா என்று கேட்டு இருக்கிறார் அன்பர் ஒருவர்.

முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் சக்திதேவியின் பிரதி பிம்பமாக அவருக்குக் கொடுக்கப் பட்டது. ஆக வேலை வணங்கினால் சக்தியை வணங்குவது போலாகும். மேலும் அது பகை வெல்லும் ஆயுதமாகவும், அறியாமை கொண்டவருக்கு ஞானமாகவும் விளங்குகிறது. எனவே, வேலாயுதத்தை வணங்குவது நம் தொன்றுதொட்ட வழக்கம்.

சிவத்தின் கையில் உள்ள சூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழிக்கும் பேராயுதம். இந்த மலங்களை விலக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவே அதை கையில் வைத்துள்ளார் சிவம். அதை வணங்க வேண்டியதில்லை.

அந்தகாசுரன் எனும் அசுரனின் கதையைப் பார்ப்போம். ஒருமுறை அம்பிகை விளையாட்டாக சிவத்தின் திருக்கண்களை மூடினாள். அப்போது அண்டசராசரங்களும் ஒரு கணம் இருண்டன. அடுத்த கணமே `இந்த நிலை நீடிக்கக் கூடாது' என்று எண்ணிய சிவம், மூன்றாவதாக ஒரு திருக்கண்ணை நெற்றியில் தோற்றுவித்து ஒளியை வெளிப் படுத்தியது. (சிவத்துக்கு மட்டுமே ஏன் மூன்றாவது கண் என்று ஒரு அன்பர் கேட்ட கேள்விக்கு இதுவே பதில்) மும்மலங்கள் எப்போது வெளிப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் இந்த மூன்றாவது கண் வெளிப்படும். அதேபோலவே சூலமும்.

நக்கீரருக்கு ஆணவம் தோன்றியது, தாட்சாயினிக்கு மாயை தோன்றியது, காமனுக்கு ஆணவம் தோன்றியது. இவற்றை எல்லாம் அழித்தது நெற்றிக்கண். ஈசனின் கண்களை அம்பிகை மூடிய பொழுதில் பிறந்தவன் அந்தகாசுரன். `நீ தவறு செய்யாதவரை உனக்கு அழிவில்லை' என்று வரம் அளித்தது சிவம்.

சிவம்
சிவம்


இங்ஙனம் வரம் அளித்த சிவமே, அவன் மும்மலங்களால் ஆட்பட்டு அடுத்தவரை வதைத்தபோது, தனது திரிசூலத்தால் அந்தகனை சம்ஹாரம் செய்தார். சிவம் திரிசூலத்தைத் தாங்குவதே மலங்களை ஒழிக்கத்தான்.

அம்பிகையின் சூலம் கீழ்நோக்கி இருக்கும். அது தீமைகளை அழிக்க. ஈசனின் சூலம் மேல்நோக்கி இருக்கும். இது அஞ்ஞானத்தை அழித்து ஞானம் அளிக்கும். எனவே தனியாக சூலத்தை வணங்க வேண்டியதில்லை. சிவத்தை வணங்கும்போதே சூலத்தையும் வணங்கிவிடுகிறோம் என்பதே உண்மை. அப்போது, அது அதற்கான வேலையைச் செய்து நம் அஞ்ஞானத்தை அகற்றிவிடும்.

நாம் உண்ணும் உணவு ருசியாக இருக்க ஊறுகாயைத் தொட்டுக் கொள்கிறோம். ஊறுகாவையே சோறு மாதிரி உண்ண முடியுமா?

ஆனால் நாம் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம். சிவம் எனும் பரம்பொருளை ஊறுகாய் போல அவ்வப்போது சிந்தனையில் கொள்கிறோம். குடும்ப வாழ்க்கையையே சோறு போல நினைக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

அனவரதமும் சிவத்தைப் பற்றிக்கொண்டு உங்கள் குடும்பத்தை நடத்திப் பாருங்கள். அது அற்புதமாக அமையும். அப்போது எந்த குழப்பமும் வராது. சிவத்தைத் தவிர வேறு எதையும் வணங்க வேண்டியதில்லை.

முருகப்பெருமானும் ஈசனும் ஒன்று என்பது சிலரின் நம்பிக்கை. முருகவேள் சிவத்தின் அம்சமாக விளங்குபவர். சூரியன் மண்ணில் இறங்க முடியாது. ஆனால் அதன் கதிர்கள் இறங்கலாம் என்பது போல முருகப்பெருமான், சிவத்தின் ஒரு அம்சமாகத் திகழ்பவர்.

பெருமான், ஈஸ்வரன் என்ற பட்டங்களை எல்லாம் பல கடவுளர்கள் தாங்கி இருக்கிறார்கள். மண்ணில் பிறந்த ராவணன்கூட ஈஸ்வர பட்டம் பெற்று இருக்கிறான். அதனால் சிவத்தை எந்த அடையாளமாகவும் வணங்க வேண்டாம். சூலத்தையும் நந்தியையும் சிவச் சின்னங்களாகக் குறிப்பிடலாம். மற்றபடி சிவத்தை வணங்கினாலே சகலத்தையும் வணங்கி விட்டதாகவே அர்த்தம்.

எதற்குள்ளும் அடங்காத பொருளாக இருப்பதுவே சிவம். `சிவமே' என்று இருப்பது அமைதியின் வடிவம். அதை வணங்க சகலமும் கிடைக்கும். சிவம் என்ற பதம், அர்த்தம் மதங்களைக் கடந்தது. மாற்று மதத்தார்கூட `நான் சிவமே என்றிருந்தேன், என்னைத் தொந்தரவு செய்கிறான்' என்று சொல்வது உண்டு.

ஆக சிவம் என்பது வடிவம் அல்ல, அது அற்புதமான பண்பு. கருணையே வடிவமான ஒரு குணம். எனவே சூலபாணியான சிவத்தை வணங்குங்கள்; போதும்.

எல்லாமே அழியக்கூடியது என்றால் நமக்கு சிவம்தானே துணையாக இருக்க முடியும் இல்லையா! எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் சிவத்தை எந்நாளும் சிந்தித்து இருப்போம். சிவாயநம!

- பேசுவோம்...

காற்று சொல்லும் பாடம் என்ன தெரியுமா?

`பிரபஞ்சமும் இயற்கையும் நமக்கு அனுதினமும் பாடம் நடத்துகின்றன. அவற்றிடமிருந்து நாம் கற்கவேண்டியவை ஏராளம் உண்டு' என்பார்கள் மகான்கள்.

தத்தாத்ரேயர் அற்புதமான அறிவுரையைச் சொல்கிறார்:

பூமியிடம் இருந்து பொறுமையையும், காற்றிடமிருந்து பரந்த நோக்கத்தையும், ஆகாயத்திடமிருந்து எது நேர்ந்தாலும் பாதிக்காத தன்மையையும், நீரிலிருந்து தூய்மையையும், தீயிடமிருந்து எதையும் சேர்த்துவைக்கக் கூடாது எனும் தன்மையையும் கடலிடமிருந்து கம்பீரத்தையும், விட்டில் பூச்சியிடமிருந்து உருவத்தைக் கண்டு மயங்கக் கூடாதும் எனும் பாடத்தையும் மீனிடமிருந்து நாவை வளர்ப்பது உயிருக்கே ஆபத்து எனும் அனுபவத்தையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்பது தத்தாத்ரேயரின் அருளுரை!

- கே.காவ்யா, திருப்பூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism