திருக்கதைகள்
Published:Updated:

சிவமயம் - 22

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

வணக்கம். வாழிய நலம்!

எவை வேண்டும், எவை வேண்டாம் என எல்லாம் அறிந்தவன் சிவன் ஒருவனே. எல்லையில்லா பேரன்பு கொண்ட சிவன் அனைத்தையும் உங்களுக்கு அருள்வான். அதற்கு அவன் திருத்தாள்களைப் பற்றிக் கொண்டால் போதும். உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் பலிதம் ஆகும்.

சிவமயம்
சிவமயம்


பல வேண்டுதல்கள் குறித்து நீங்கள் எழுதி அனுப்புகிறீர்கள். அவை அனைத்தையும் ஈசன் செய்து முடிப்பான் எனும் நம்பிக்கை யோடு நானும் உங்களுக்காக விண்ணப்பித்துக் கொள்கிறேன். சிவாயநம!

`உழவாரத்தின் பெருமை என்ன? அப்பர் சுவாமி உழவாரத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்' என்று ஒரு கேள்வி. இது அருமையான கேள்வி. பலரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது.

அப்பர் சுவாமி சைவ சமயம் சார்ந்த காலம், இந்தியா முழுக்க புற சமயங்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்த காலம். குறிப்பாக தென்னகம் முழுக்க இருந்த பிரமாண்ட ஆலயங்கள் யாவும் அவர்களின் ஆக்கிரமிப்பால் சிதிலமாகி வழிபாடு இல்லாமல் போயிருந்தன. ஆலயங்கள் இல்லையேல், அந்த ஊரில் நமது தர்மம் நிலைத்து இருக்க முடியாது. ஓர் ஊரில் ஆலயம் என்பது பல விஷயங்களுக்காகப் பயன்பட்டு வந்தது. `ஆலயங்களைக் காப்பது' என்பதற்கு, நம் தொன்மையைக் காப்பாற்றுவது என்றே பொருள். எனவே திலகவதியாரிடம் திருநீறு பெற்று சைவம் சார்ந்த அப்பர் பெருமான், அவரது ஆணைப்படியே உழவாரம் எனும் திருக் கோயில்களைப் புனரமைக்கும் திருப்பணிகளை மேற்கொண்டார். அவருடன் அலை அலையாக திருத்தொண்டர்கள் கூட்டம் கூட, தமிழகம் எங்கும் பல ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன.

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா
திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா


ஆலயங்களும் சைவ மடங்களும் பெருகப் பெருக சைவமும் அதன் சித்தாந்தங்களும் பெருகத் தொடங்கின. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்து அவரை அடையலாம் என்கிறது சைவம். இதில் உடலால் தொண்டு செய்து இறைவனை அடையும் எளிய பணியே உழவாரம். இதை முதன்முதலில் கடைப்பிடித்து சகலரையும் உய்ப்பித்தவர் அப்பர் பெருமான். நூற்றுக்கும் அதிகமான ஆலயங்களை அப்பரும் அவர் தம் திருக்குழாமும் புதுப்பித்தார்கள். அதில் முக்கியமானது பழையாறை வடதளி எனப்படும் சோமநாதீஸ்வரர் திருக்கோயில்.

ஒருமுறை, ஆருரிலிருந்து கிளம்பி பழையாறை வந்தார் அப்பர். தூரத்தில் வரும்போதே பிரமாண்ட கோபுரத்தைக் கண்டு கரம் குவித்து மேலாக வணங்கினார். அது கண்டு அங்குள்ளோர் நகைத்து, ‘அப்பரே! இப்போது இந்த ஆலயத்தின் சிவமூர்த்தம் மறைந்து போயுள்ளது’ என்றனர். அப்பர் பெருமான் மனம் வெதும்பி, அங்கேயே அமர்ந்து உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கிவிட்டார். (உலகின் முதல் உண்ணாநோன்பு போராட்டம் இதுவே என்கிறது வரலாறு)

‘வடதளி நாதனே, ஐயனே, தீயவர் வஞ்சனையால் மறைக்கப்பட்ட நின் திருமேனி காணாமல் எழ மாட்டேன். இது உன் மீது ஆணை!’ என்று இருந்துவிட்டார். அவரோடு திருக்கூட்டமும் நாள் கணக்கில் அமர்ந்துவிட்டது. பழையாறை மன்னன் மணிமுடிச்சோழனின் கனவில் தோன்றிய ஈசன், ‘மறைந்திருக்கும் எம்மை வெளிக்கொணர்ந்து, உண்ணாமைப் பூண்டிருக்கும் நாவுக்கரசரின் மனம் குளிர ஆவன செய்!’ எனக் கூறினார்.

அரசனும் வேண்டியது செய்து அப்பர் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆலயத்தைப் புனரமைத்தான். இன்றும் இந்த ஆலயக் ஆள் அரவமின்றியும் கோபுரம் சிதிலமுற்றும் திகழ்கின்றன. சிவத்தின் கருணையால் இது சீர் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

பழையாறை சோமநாதீஸ்வரர் திருக்கோயில்
பழையாறை சோமநாதீஸ்வரர் திருக்கோயில்


அப்பர் பெருமானின் பெருமைகளில் வேறொன்றும் உண்டு. ஒருமுறை அப்பர் பெருமான் தல யாத்திரையாக திருவீழிமிழலை சென்றார். அங்கு அப்பருடன் சம்பந்தரும் சேர்ந்து தங்கியிருந்தபோது, அப்பகுதியில் கடும் பஞ்சம் நிலவி வந்தது. அடியார் பெருமக்களின் பசி தீர்க்க இருவரும் இறைவனை வேண்டி னார்கள்.

‘உம்பால் நிலவும் சிவநெறி சார்ந்தோர் வாட்டம் அடையா வண்ணம் நாளும் ஒரு பொற்காசு கிழக்கும் மேற்குமாக அமைந்த பலிபீடத்தே தருவோம்’ என அருளினார் ஈசன். அவ்வண்ணம் கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு இருவரும் தம் அடியார்களின் பசியாற் றினர். எனினும் அப்பர் மடத்தில் எல்லோரும் உணவு உண்டபின்தான் சம்பந்தர் மடத்தில் சமையலே தொடங் கும். கால தாமதத்திற்குக் காரணம் சம்பந்தரின் காசு மாற்று குறைவாக இருப்பதே என்பதை அறிந்தார் சம்பந்தர். அப்பர் கைத்தொண்டு செய்து தொழுவதால் அவருக்கான காசு உயர்வானது என்றும் அறிந்துகொண்டாரம் சம்பந்தர்.

பின்னர் சம்பந்தரும் இறையை வேண்டி நிறைவான காசு பெற்றார் என்கிறது புராணம். ஆக, உழவாரம் எனும் திருத்தொண்டின் பெருமையை ஆளுடைய பிள்ளைக்கே அறிய வைத்தவர் நம் ஈசன்.

ஈசனுக்கான இறைப்பணியில் பொருள் கொடுக்க முடியாதவர் இருக்க லாம். அவர்கள் தம்முடைய உடலால் சிவாலயப் பணி சிறிது நேரம் செய்தாலே போதும் சிவசாயுச்சியம் பெறலாம் என்கிறது சைவம்.

‘உழவாரம் முதலில் தேவாரம் பிறகு’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆலய உழவாரம் என்பது ஆலயத்தோடு உள்ள திருக்குளம், நந்தவனம் போன்றவற்றையும் சீர்படுத்துவதுதான்.

இதனால் இயற்கையையும் நீங்கள் பராமரிக்கிறீர்கள் என்றே பொருள். நீராதாரத்தைப் பெருக்கி அரிய வகை மரம் செடிகளைக் காக்கும்போது நிச்சயம் இறைவன் மகிழ்வான். அதன்வழியே உங்கள் ஊரும் செழிப்படையும். பாழ்பட்ட ஆலயம் கொண்ட ஊரில் மக்களும் செழிப்பாக இருக்க மாட் டார்கள் என்பது உறுதி. ஆகவே, முடிந்த அளவுக்கு சிதிலமான ஆலயத்தைப் பராமரியுங்கள்.

உங்கள் ஊர் ஆலயம் சிதைந்து கிடக்க, நீங்கள் வேறு ஊர் ஆலயத் திருவிழாவுக்குப் போவது, விரதங்கள் இருப்பது எல்லாம் வீண். உங்களால் முடிந்த திருப்பணிகளைச் சிதிலமான ஆலயங்களுக்குச் செய்யுங்கள். அதன் பலனாக உங்களின் ஏழேழ் தலைமுறையும் சிறப்போடு வாழும். உழவாரத்தைத் தேர்ந்தெடுத்து அதன்வழியே சைவத்தைச் செழிக்க வைத்த அப்பர் பெருமானின் திருவடிகளைப் போற்றி உழவாரம் செய்வோம். உவப்பான அனுபவம் பெறுவோம்.

‘ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி. சிவாயநம!

- பேசுவோம்...

கண்ணன் விளையாடிய இடங்கள்!

வடமதுராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது 'விஸ்ராம் காட்'. வராஹ அவதாரத்தின்போது இறைவன் ஓய்வெடுத்த இடம் இது என்பர். கம்சனைக் கொன்ற பின் கண்ணபிரான் ஓய்வெடுத்த இடம் என்றும் கூறுவர்.

கண்ணபிரான், கம்சனை வதம் செய்த இடம் 'கம்ஸட்டிலா' எனப்படுகிறது. இதேபோல், காம்யக வனம் எனும் இடத்தில் உள்ள ஒரு பாறைக்கு, 'பிசாலினி சிலா' என்று பெயர். இந்தப் பாறையில்தான் கிருஷ்ணர் தனது தோழர்களுடன் சறுக்கி விளையாடினாராம். இங்கு வரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் பாறையில் சறுக்கி விளையாடுகின்றனர். இந்தப் பாறையில் விளையாடிச் சென்றால், வாழ்க்கையில் சறுக்கிவிடாமல் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை!

வ்யோமாசுரன் என்பவன், கண்ணனுடன் விளையாடும் குழந்தைகளைத் தூக்கி வந்து, ஓரிடத்தில் மறைத்து வைத்தான். இதையறிந்த பலராமர் அங்கு சென்று வ்யோமாசுரனுடன் போரிட்டு, குழந்தைகளை மீட்டார். வ்ரஜ பூமியில் உள்ள அந்த இடம், 'வ்யோமாசுரபூபா' எனப்படுகிறது.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை-4