Published:Updated:

சிவமயம்! - 6

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம் ( epastor16 )

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம்! - 6

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம் ( epastor16 )

ஓவியம்: ம.செ

வணக்கம் வாழிய நலம். போர் மேகங்கள் சூழ்ந்து உக்ரைன் பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் யாவரும் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் என்பதே சைவத்தின் பெருவிருப்பம். ஈசனின் அருளால் அது நிறைவேறட்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போம். சிவாயநம.

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா
திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா


`வீட்டில் சிவலிங்கம், நடராஜ மூர்த்தம் வைத்து வணங்கலாமா? கடுமையான நியம நிஷ்டைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், சிவனை வீட்டில் வழிபடக் கூடாது; கும்பிட்டால் வீட்டுக்கு ஆகாது என்றே என் உறவுகள் கூறுகின்றன. என்ன செய்யலாம் ஐயா?’ என்று கேட்டிருக்கிறார் அன்பர் ஒருவர்.

இவருக்கு மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலான அன்பர்களுக்கும் மனதில் இந்தக் கேள்வி இருக்கலாம்.

எளிய மக்கள் செங்கல்லையும் மரக்கட்டையையும் மற்றுமுள்ள பல பொருள்களையும் தெய்வமாகக் கருதி, சிறுதெய்வங்கள் என்றும் குலதெய்வங்கள் என்றும் வணங்கி வந்தார்கள். வேறுசிலர் பிரமாண்ட ஆலயங்களில் உறையும் கடவுள்களை வழிபட்டனர். இந்த நிலை இப்போது மாறிவிட்டது. எல்லோரும் எல்லா ஆலயங் களுக்கும் சென்று வணங்கி வர ஆரம்பித்து விட்டோம்.

இந்தச் சூழலில் இன்னமும் பல அச்சங்கள் நம்மிடையே உலவி வருகின்றன. அதில் ஒன்றுதான்... ஆலயத்தில் வழிபடும் சிவலிங்க மூர்த்தத்தையும் நடராஜரையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்பதுவும்.

வீட்டில் அம்மா-அப்பா, முன்னோர் படத்தை மாட்டி வைத் திருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களின் படத்தை வீட்டில் மாட்டக்கூடாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? சிவம் நம் தாயும் தந்தையுமான கருணை தெய்வம் இல்லையா! அது நமக்குக் கெடுதி செய்யுமா! செல்வத்துக்கு அதிபதி யான சிவன் - செல்வமே வடிவான தெய்வம் நம்மைக் கைவிட்டு விடுமா?! சிவத்தை வணங்குபவர்களைக் கவனியுங்கள்... மிகவும் சந்தோஷமாக; செல்வச் செழிப்போடு; அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நிலையில்தான் இருப்பார்கள்.

அதேபோல், `ஆடும் நடராஜரை வீட்டில் வைத்தால், வீடும் ஆட்டம் கண்டுவிடும்’ என்கிறார்கள். என்ன அறியாமை இது?!

அணுக்களைப் பிளந்து பார்த்த விஞ்ஞானிகள் அசந்து போனார் கள். அணுக்கள் சுழலும் விதம் அப்படியே நடராஜ தாண்டவம் போலவே இருப்பதைக் கண்டு வியந்துபோனார்கள். ஆக, நடராஜர் ஆடுவதால்தான் நாமெல்லாம் ஆடிக்கொண்டு இருக்கிறோம்.பிரபஞ்சத்தின் எளிய வடிவம் சிவலிங்கம்; பிரபஞ்சத்தின் எளிய இயக்கம் நடராஜ வடிவம். இதைப் புறக்கணித்துவிட்டு எவரும் வாழ முடியாது என்பதே உண்மை.

உலகத்தின் மையம் சிதம்பரம். காலச் சக்கரத்தின் மையம் உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயில். சென்னையின் மையம் திருமையம் எனும் மயிலை. சிவமே சகலத்துக்கும் ஆதாரம் எனும் போது, அதைவிட்டு வேறு எதை வணங்குவது சொல்லுங்கள்.

நடராஜரை வைத்து வணங்கினால் பேரானந்த நிலையில் உங்களுக்கு ஆட்டம் வரலாம்; வேறு எந்த கெட்டதும் வராது. சிவத்தை வணங்குங்கள்... என்னைப்போல ஆனந்தமாக, அமோகமாக இருப்பீர்கள்... நிஜம்தான்!

நடராஜர்
நடராஜர்


என் தகப்பனாருக்குக் குலதெய்வத்தின் மீது ரொம்ப நம்பிக்கை. மூன்று செங்கற்களை வைத்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, மாலை சாத்தி, அவற்றையே குலதெய்வமாகக் கருதி வழிபட்டு, சேவல் பலிகொடுத்து வணங்குவது அவர் வழக்கம். குடும்பத்தில் குழந்தை பிறந்தால், குலதெய்வத்தை வணங்கி குழந்தைக்கு முடியிறக்கி, குழந்தையும் குடும்பமும் நலமாக இருக்க வேண்டிக் கொள்வார். இவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் குழந்தைகள் தங்காமல் தவறிவிடும் என்பதும் அவர் நம்பிக்கை.

எனக்கு அவர்களின் நம்பிக்கைமீது மரியாதை உண்டு. ஆனால் நான் `சிவத்தைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டேன்’ என்ற கொள்கையில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டிருந்தேன். அதனால் என் தகப்பனாரை மறுத்து, `‘என் குழந்தைகளுக்கு உங்கள் வழக்கப்படி முடியிறக்க சம்மதிக்க மாட்டேன். அதனால் வரும் எந்த தீங்கையும் நான் சிவத்தின் பெயரால் ஏற்றுக்கொள்கிறேன். மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறேன். அதற்குள் என் குழந்தைகளுக்கு எதாவது நடந்து விட்டால், குலதெய்வம் கொடுத்த தண்டனை என்று ஏற்றுக் கொள்கிறேன். பிறகு, உங்கள் வழிப்படியே நடக்கிறேன்.

ஆனால் ஒன்று... நிச்சயம் என் சிவம் என்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறேன். அதேநேரம், மூன்று ஆண்டுகளில் குழந்தைகள் நலமாக இருந்தால், நீங்கள் சிவத்தை ஏற்றுக்கொண்டு அதையே சார்ந்து வாழவேண்டும்’’ என்றேன்.

தகப்பனார் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். கழுக்குன்றத்து பெருமான் வேதகிரீஸ்வரர் முன்னிலையிலேயே என் குழந்தைகளுக்கு மங்கல நிகழ்வுகளை நடத்தினேன். பிறகு அந்த மூன்று ஆண்டுகளில் என் குழந்தைகளுக்குச் சிறு காயம்கூட உண்டாக்காமல் என் சிவம் பார்த்துக்கொண்டது. என் வேண்டுதலுக்கு மனமிரங்கி காவல் நின்றது. சிவத்தின் கருணையால் நான் வென்றேன். என் தகப்பனா ரும் சிவத்தின் மகிமை உணர்ந்து, சிவத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார். கழுத்து நிறைய ருத்ராட்சம் அணிந்து, 94 வயது வரை அடியார்களுக்குத் தொண்டு செய்து, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போனார். அதேபோல் என் உறவுகளுக்கும் சுற்றத்துக்கும் சிவமே எல்லாமுமாய் ஆனது. எனக்குப் பின்னால் வந்த என் பேரப் பிள்ளைகளுக்கும் சிவமே எல்லாம்.

எல்லாவற்றையும்விட சிவம் மூலமான தெய்வம். சிவம் என்றாலே ‘மூலம்’ என்றும் பொருள். சிவத்தை வணங்குவது என்பதே நம்முடைய மூலத்தை அறிந்துகொள்ளத்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிவத்தைத் தேடி போகிறீர்கள் எனில், உங்களின் மூலத்தைத் தேடி போகிறீர்கள் என்றே அர்த்தம்.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எதை நோக்கிப் போகப் போகிறோம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள, நம் ஆன்மாவின் மூலத்தை அறியவேண்டும். அதை சிவம் எனும் மூலமே அறிவிக்கும்.அதனால் எதை எல்லாமோ வணங்கி சிவத்திடம் போவதைவிட, சிவத்தையே வணங்கி சிவத்திடம் சேரலாமே? அது எளிது அல்லவா!

சிவம்
சிவம்


நாம் செய்யும் பாவ-புண்ணியமே நமக்குப் பலனாக வரும். அந்த பலன்கள் நன்மையாக வருவதற்குச் சிவ வழிபாடு சிறந்தது. ஜன்ம ஜன்மாய் நாம் செய்த புண்ணிய பலன்களால்தான் நாம் இப்போது சிவத்தை வணங்கி வருகிறோம். புண்ணியம் இல்லாமல் நம் வாயில் `சிவா’ என்ற வார்த்தை எழவே எழாது.

சிவத்தை வணங்கி கெட்டவர்கள் எவரும் இல்லை; மறந்து கெட்டவர்கள் அநேகம் பேர் உண்டு, பார்த்திருக்கிறேன். எல்லா தெய்வங்களும் வணங்கிய தெய்வம் சிவம்.

நவகிரங்கள் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு தலத்துக்கும் சென்று வழிபட்டு, கிரக அந்தஸ்தைப் பெற்றனர். அந்தத் தலங்களுக்குச் சென்று சிவத்தை வழிபட்டால், அந்தந்த கிரகங்களின் தீமைகள் குறையும் என்று வைக்கப்பட்டது. ஆனால் இந்த அடிப்படையை அறியாமல் என்னென்னவோ வழிபாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். மூலத்தை அறிந்து அதில் கரைவதை விட்டுவிட்டு, நிழலை வணங்கி நிற்பது தவறு இல்லையா!

ஆகவே, சிவத்தைக் கோயிலிலும், உங்கள் வீட்டிலும், உள்ளத்திலும் வைத்து எப்போதும் வணங்கலாம்; தவறில்லை. அப்படி வணங்காமல் போனால்தான் தவறு; மீண்டும் மீண்டும் பிறந்து பாடுபட வேண்டி இருக்கும். எனவே, குழப்பம் எதுவும் இன்றி நம் பெருமானைக் கொண்டாடுங்கள். ஆனந்தமயமான சிவத்துக்கு எந்த நியதியும் நிஷ்டையும் தேவையில்லை. தூய அன்பு ஒன்றே போதும். உங்கள் மனது அன்பு மயமானால், எங்கும் எப்போதும் சிவத்தைக் கொண்டாடலாம்! சிவாயநம.

-பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism