சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

சிவமயம்-27

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

சிவமயம்

வணக்கம். வாழிய நலம்! பொங்கல் திருவிழாக்கள் வரவுள்ளன. உழவையும் உழவுக்குத் துணையான சக்தி களையும் வழிபடும் உன்னதத் திருவிழா இது. தேசமெங்கும் செழிப்பும் அமைதியும் பெற்று சிறப்புடன் வாழ ஈசனை வேண்டிக்கொள்கிறேன்.

சிவமயம்
சிவமயம்


`வேலையின் நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கிறேன். சிவ பக்தனான நான், புலால் மறுத்து அன்றாடம் மனதுக்குள் சிவபூஜை செய்தும், பஞ்சாட்சரம் ஓதியும் வருகிறேன். இங்குள்ள சட்டப்படி என்னால் விபூதி-ருத்ராட்சம் தரிக்க இயலவில்லை. இதுவே மனதுக்குள் கவலையாக உள்ளது. வேறு எப்படி என் ஈசனை ஆராதிக்கலாம் சொல்லுங்கள்' இப்படி ஒரு கேள்வி.

உண்மையிலேயே உங்களை வணங்குகிறேன் ஐயா! நம் ஊரிலேயே எத்தனையோ பேர் ஆலவாயனுக்கு அருகிலேயே, ஆத்மநாதனுக்கு அருகிலேயே இருந்தும், வழிபடாது வீணே வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் எங்கோ தூரதேசத்தில் இருந்தும் உண்மையான பக்தியுடன் வாழ்ந்து வருகிறீர்கள். இதுவே போதும் ஐயா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருவாசகம் படித்து வாருங்கள். சைவம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல; உயர்ந்த வாழ்க்கை நெறி.

அன்போடு இருப்பதுவும் அடுத்தவருக்கு உதவுவதும்தான் சைவத்தின் அடிப்படை. அதை எங்கிருந்தும் செய்யலாம். உங்களுக்கு சாக்கிய நாயனார் கதை தெரியும்தானே. பௌத்தராக இருந்தும் ஈசனை மனதால் வணங்கி, கல்லெறிந்து வழிபட்ட அருமையான அடியார் அல்லவா அவர்.

குழந்தையைக் கொஞ்சி மகிழ்வார்கள் பலர்; சிலர் கன்னத்தைப் பிடித்து கிள்ளி மகிழ்வார்கள். அப்படிச் சிவத்தை அடித்து மகிழ்ந்தவர் சாக்கியர். அவரின் அன்பை யும் ஈசன் ஏற்றுக்கொண்டான். ஒருமுறை, கல்லெறிய மறந்துபோன சாக்கியரின் வருகைக்காக ஈசன் தவித்தும் போனாராம். அப்படிப்பட்ட கருணை தெய்வம் நம் சுவாமி.

`எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே, துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம், தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்' என்று சாக்கியரை வியப்பார் சேக்கிழார்.

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி, எந்தத் தொழில் செய்தாலும் சரி, ஈசனைத் தலைவனாகக் கொண்டு வணங்கிவிட்டால் போதும். அவன் உங்களுக்காக அருள்செய்ய காத்திருப்பான்.

சிவமயம்-27
Mehendra


அன்பு கொண்ட உள்ளமே சிவம் வாழும் கோயில். அந்த கோயிலைக் கண்டுகொள்ளவே ஒவ்வோர் அடியாரும் ருத்ராட்சமும் திருநீறும் அணிகிறோம். உங்களால் முடியாவிட்டால் வருந்த வேண்டாம். நின்று ஐயனை வணங்குங்கள் போதும். ஒரு கதை...

அவர் ஓர் அற்புதமான துறவி. அவரிடம் பயின் றால் எந்த மன்னரிடமும் ஆலோசகராகப் பணி புரியலாம் என்பது எல்லோரின் நம்பிக்கை. அவரிடம் பாடம் பயில ஓர் இளைஞன் வந்தான். அவனுக்கு ஏற்கெனவே வில், வாள், குதிரையேற்றம் போன்ற சகல கலைகளிலும் தேர்ச்சி இருந்தது. அவனுக்கு வேண்டியது நீதி பாடங்களே என்பதை குரு உணர்ந்தார்.

அவனுடன் அருகிலிருந்த மலைக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அதன் உச்சியில் இருந்த கனியை அம்பெய்தி விழ வைக்கச் சொன்னார். அப்படி விழவைத்தால், அவனைத் தன் சீடனாக்குவதாக உறுதி சொன்னார். இளைஞன் அந்த மரத்தின் உச்சியை உற்று நோக்கினான். அந்த பழம் இருந்த கிளையில் ஒரு பறவை கூடுகட்டி முட்டைகள் இட்டு இருந்தது.

வேகமாக அம்பு செலுத்தினால், நிச்சயம் கூடு கலைந்து கீழே விழும். முட்டைகள் உடைந்துவிடும். அம்பு எய்தாவிட்டாலோ, இந்த குருவிடம் சீடனாக முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்த இளைஞன், தன்னால் அம்பு எய்த முடியாது என்று தோல்வியை ஒப்புக்கொண்டான். அந்தக் குருவும் தானும் உன்னை சீடனாக்கிக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் சோகமான இளைஞன் திரும்பச் செல்லத் தொடங்குகையில்...

``அன்பான இளைஞனே, முட்டையை விட்டு வெளியே வராத ஜீவன்களுக்குக் கூட கருணையைக் காட்டும் உன்னை, நான் எப்படிச் சீடனாக்க முடியும். உனக்குக் கற்றுத் தர என்ன இருக்கிறது என்னிடம்! எனவே, நீ என் தலைமை மாணாக்கன் என்று ஓலை தருகிறேன். எங்கு சென்றும் வென்று வா!' என்று வாழ்த்தினார்.

இதைப்போலத்தான் சைவமும்! கருணையும் ஒழுக்கமும் கொண்டவர்கள் பூரணமானவர்கள். அவர்கள் சடங்கு களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. உலகின் அத்தனை செயல்களுக்கும் விடை அளிக்கக் கூடியவை திருமுறைகள். அவற்றை நாம் வெறும் ஸ்தோத்திரப் பாடல்களாகவே பார்த்து விட்டோம். திருமூலர், மாணிக்கவாசகரைப் போன்ற விஞ்ஞானிகள் வேறெங்கும் இதுவரை தோன்றவே இல்லை.

ஒரே ஒரு பரமாணு பிரபஞ்சமாக விரிந்தது. பூமியில் ஒரே ஒரு மூல அணு வளர்ச்சியடைந்து 118 தனிமங்களாகத் தனித்து நிற்கின்றன. அவை ஒன்றுக்குள் ஒன்றுகூடி பலவிதமான சேர்மங்களாகி, இந்தப் பிரபஞ்சத்தில் பல பொருள்களாகி நிற்கின்றன.

அவற்றில் நாம் இரண்டு தனிமங்களைப் பற்றி மட்டுமே காண்போம். அண்டத்தில் 75 சதவிகிதம் நிரம்பியுள்ள தனிமம் ஹைட்ரஜன். இது நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய அபாயகரமான குணம் கொண்டது. ஆக்சிஜன்! இதுவும் நிறம், மணம், சுவையற்ற தனிமமே. சகல ஜீவராசிகளும் சுவாசிக்கத் தேவையான எளிய தனிமம் இது.

அணுகுண்டையும் உருவாக்க பங்களிக்கும் அபாயகரமான ஹைட்ரஜன், ஆக்சிஜனுடன் இணைந்ததும் உருவாவது நீராகத்தான். 2 ஹைட்ரஜனை 1 ஆக்சிஜனுடன் இணைத்து வைத்தது யார்? இது தற்செயலாக நடந்ததா? நீர் உருவானதும், அதிலிருந்து முதல் ஜீவராசி பிறந்ததும் யாரால்? இது எல்லாமே ஈசன் செயல் என்பதைச் சைவம் ஆணித்தரமாக நிறுவி வந்துள்ளது.

அறிவியல் எழுப்பும் அத்தனை கேள்விகளுக் கும் திருமூலரும் மாணிக்கவாசகரும் தங்களின் பாடல்களில் பதிலை வைத்துள்ளார்கள். அதனால் சைவம் என்பது வெறும் வழிபாடு நடத்தும் கூட்டம் என்று நினைத்து விடாதீர்கள். மூடத்தனங்கள் கொஞ்சமும் இல்லாத ஆழ்ந்து அகன்ற அறிவுசார் கூட்டம் இது. அதனால்தான் எத்தனையோ தாக்குதல் களைத் தாண்டியும் இன்னமும் உலகளாவிய அளவில் நிலைத்துள்ளது.

`இல்லாதது ஒன்றிலிருந்து இருப்பது பிற வாது' என்பது சைவ அடிப்படை. அதையும் நவீன அறிவியல் ஒப்புக்கொண்டது. பிக்-பேங்க் கொள்கை எனும் அணு வெடிப்பு செயல் போன்றவற்றை அப்போதே சொன் னது சைவம். அறிவியல் அதை இப்போது ஒப்புக்கொள்கிறது.

அறிவியலில் மட்டுமல்ல சகிப்புத்தன்மை, சமயப் பொறை போன்ற எல்லாவற்றிலும் முன் உதாரணமாக நிற்பது சைவமே. நாயன் மார்களில் சாக்கியர் பௌத்தர் சரி... நரசிங்கம் என்ற பெயர் கொண்டவர்கூட நாயன்மாராக இருப்பது அதிசயமே. பன்னிரு திருமுறை ஆசிரியர்களில்கூட திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி ஆகிய இருவரும் வைணவர்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இப்படித் தன்னுள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டது சைவம்.

அதனால்தான் சுந்தரமூர்த்தி நாயனார் `அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்!' என்று உலகத்தார் அனைவரையும் சிவனடியாராக ஏற்று வணங்கியும் விட்டார்.

எனவே அன்பரே... எல்லாமுமாய் இருக்கும் ஈசனிடம் உண்மையாக இருங்கள். உபசாரங் களில் அவருக்குப் பெரிதாக கவலை இருக்காது என்பதே நாயன்மார்கள் கதை சொல்லும் நீதி. சைவம் காட்டும் நெறியோடு வாழுங்கள். நலமே விளையும்.

சிவாயநம!

- பேசுவோம்...