Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

சிவமயம் - திருவாசக சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம்

சிவமயம் - திருவாசக சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

அடியேன் திருவாசக முற்றோதல் செய்யப் போகும் இடங் களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது. எத்தனையோ வேண்டுதல்கள், எத்தனையோ குறைகள் என்று என்னிடம் கூறி மன்றாடுகிறார்கள். அவர்களுக்குத் தீர்வாக நான் சொல்லும் ஒரே செய்தி இதுதான்:

`நமசிவாய எனும் ஐந்தெழுத்தைத் தவிர நலம் அளிக்கும் உபாயம் வேறில்லை. திருநீறு, பதிகங்கள் மட்டுமே அனைத்தை யும் நிறைவேற்றும் மாமருந்து. நம் ஈசனைத் தவிர பெரிய மருத்துவன், வரப்பிரசாதி வேறு எவரும் இல்லை. எனவே ஈசனைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குறைகள் நீங்கும்; வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்!'


ஒரு பதிகம் ஒன்றையும் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் எந்தக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய இந்தப் பதிகம், பஞ்சாட்சர திருப்பதிகம் ஆகும்.

'துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே.'

திருநீறு அணிவதன் தத்துவம் என்ன என்று ஓர் அன்பர் கேட்டிருக்கிறார், `முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பலாகத்தான் போவார்' என்பதைத் தினமும் நினைவுறுத்துவதே திருநீறு' என்று பொருள் கொள்ளலாம். எதை எரித்தாலும் சாம்பல்தான் மிஞ்சும். சாம்பலையும் நீரில் கரைத்துவிட்டால் எதுவும் மிஞ்சப்போவது இல்லை. இந்த உலகமே நித்தியம் இல்லை; சிவத்தைத் தவிர எல்லாமே மாயை என்றும் கொள்ளலாம்.

மதுரை
மதுரை



எல்லாம் மாறும் என்ற சிவத்துவத்தைத் திருநீறைப் போல வேறு எதுவும் உணர்த்துவது கிடையாது. சாம்பல் கெட்டுப் போகாதது. அதனால் அது சிவத்தின் அடையாளம் ஆனது. பட்டினத்தார் `ஒரு பிடிச் சாம்பலுக்கும் உதவாத, இந்த மெய் (உடல்) எனும் பொய்யைச் சுத்தமாக்குவது நீறு' என்கிறார். திருநீறிடவே நெற்றி, நெற்றிக்கு அணிகலனே நீறுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

திருநீறைவிட மேலான மாமருந்து கிடை யாது என்பதைச் சொல்வதாகவும் திருநீற்றுத் தத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்சத்தின் மூலப் பொருளாக இருப்பதால் `விபூதி' என்று பெயர். எந்த வேண்டுதலையும் பலிக்க வைப்பதாலும், பிரம்ம அந்தஸ்தைக் கொடுப்பதாலும் `பலிதன்' என்ற பெயரும் திருநீறுக்கு உண்டு.

எதையும் அழித்துவிடும் ஆற்றல் இருப்ப தால் `பஸ்மாகரம்' என்றும் அழைப்பார்கள். திருநீறு அணிந்தவர் மதிக்கத்தக்கவர் என்று மாறுவதால், `கண்டிகை' என்றும் பெயர் உண்டு. நம்மைக் காப்பதால் `காப்பு' என்றும் அதுவே மேலான நிதி என்பதால் `ஐஸ்வர்யம்' என்றும் பெயர்கள் உண்டு. மேலும், இருளை அகற்றுவதால் பசிதம்; குற்றம் போக்குவதால் சாரம்; தீமையிலிருந்து காப்பதால் ரட்சை ஆகிய பெயர்களும் உண்டு.

திருநீறு அணிதல் -
திருநீறு அணிதல் -



உங்களை யாரும் மனவசியம் செய்துவிடக் கூடாது என்றால் நெற்றியில் திருநீறு இடுவது ஒன்றே வழி என்கின்றன சித்தர் நூல்கள். மேலும் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரிய வெளி எனும் சுடர் ஒளி தோன்றும். அந்த இடத்தில் தினமும் நீறு பூசி வந்தால் நிச்சயம் அருள்ஜோதி தோன்றும். இதைக் குறிக்கவே நீறு இடும் வழக்கம் ஆதி முதலே உருவானது.

திருநீற்றின் வகைகள், திருநீறை வாங்குவது, எப்படி அணிவது என்பது வரையிலும் எத்தனையோ விதிகள் இருக்கின்றன.

இருக்கட்டும்... நீங்கள் தினமும் நெற்றி நிறைய திருநீறை அணிந்து பாருங்கள், உங்கள் ஆக்ஞா சக்கரம் நன்கு செயல்பட்டு, குண்டலினி யோகம் தானாகவே செயல்படத் தொடங்கிவிடும். மற்றவரை விட அற்புதமாகச் சிந்திப்பீர்கள்; வேகமாக செயல்படுவீர்கள். உங்கள் பேச்சும் செயலும் சீராகும். அதிகாலை எழுவது தொடங்கி, ஆரோக்கியமான உடல், திடமான மனஉறுதி, தெளிவான திட்டமிடல் என உங்களையே அந்தத் திருநீறு மாற்றிவிடும்!

திருநீறு அணிவது எப்படி?

மோதிர விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் எனும் மூன்று விரல்களில் நீறெடுத்து, கிழக்கு முகமாக நின்று பஞ்சாட்சரம் சொல்லி திரிபுண்டரமாகப் பூச வேண்டும். இதனால் அவஸ்தை நீங்கி ஞானம் அடையலாம்.

திருநீறு அணியும்போது கீழே சிந்துதல் கூடாது. எவ்வளவு திருநீறைக் கீழே சிந்துகி றோமோ, அவ்வளவு பிறப்பு எடுக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. செல்வம் பெருக, வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசலாம்.

எவ்வளவு முயன்றாலும் திருநீற்றின் பெருமைகளை முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அவ்வளவு மகிமைகள் உண்டு. திருநீறும் ருத்ராட்சமும் சைவ பூஷணம் என்றே போற்றப்படுகின்றன. முழு நீறு அணிந்தவரை சிவமாகவே கருதி வணங்க வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.

திருவாசகச் சித்தர் 
சிவ தாமோதரன் ஐயா
திருவாசகச் சித்தர் சிவ தாமோதரன் ஐயா



திருநீற்றின் மகிமை!

பஞ்சமா பாதகங்களைச் செய்த ஒருவன், யாருமின்றி கோயில் தெருவில் செத்துக் கிடந்தான். கோயில் உள்ளே படுத்துக் கிடந்த நாய் ஒன்று, அங்கு சிந்திக் கிடந்த திருநீற்றின் மீது புரண்டு வெளியே வந்தது. யதேச்சையாக செத்துக் கிடந்தவனின் மீது நாயின் வால் பட்டுவிட, அவனைக் கொண்டு சென்ற யமகிங்கரர்கள், அவன் பாவங்கள் யாவும் திருநீற்றால் நீங்கிவிட்டதை அறிந்து அவனை சிவலோகத்தில் விட்டுச் சென்றார்களாம்! அதற்காக பாவம் செய்யலாம் என்று எண் ணிக் கொள்ளாதீர்கள். உங்களை பாவமே செய்யவிடாமல் காக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டு என்பதே உண்மை.

பாண்டியனின் நோயைத் தீர்த்தது, திருவானைக்காவில் உழைத்தவருக்குக் கூலியானது, ராவணனுக்குப் பொலிவைத் தந்தது, அப்பரின் சூலையைத் தணித்தது...எல்லாமே திருநீறுதான். ஆசையோடு அந்த அணியை அள்ளிப் பூசுங்கள்! உங்கள் அவதிகள் யாவும் நீங்கி, அண்டத்தவர் பணிந்தேத்தும் அடியார் நிலையை எட்டுவீர்கள் என்பது நிச்சயம்!

- பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism