Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா.

சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா.

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

அன்பர்களுக்கு வணக்கம்!

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், இனி ஆலய வழிபாடுகளும் திருவிழாக்களும் களை கட்டும். தை, மாசி, பங்குனி மாதங்கள் தேர்த் திருவிழாக்களும் பிரம்மோற்சவங்களும் அதிகம் நடைபெறும் காலம். பக்தர்கள் அதிக அளவு கூடி இறைவனை ஆராதிப்பது வழக்கம்.


பக்தி இருக்கும் அதே அளவுக்கு உங்கள் நலத்தின் மீது அக்கறையும் இருக்கட்டும். அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு விழிப்போடு கொண்டாடுங்கள். எல்லாம்வல்ல ஈசன் எல்லோரையும் காக்கட்டும் என்று அடியேனும் வேண்டிக்கொள்கிறேன். தொடர்ந்து வரும் கடிதங்களும் விசாரிப்புகளும் நெகிழச் செய்கின்றன.எல்லாம் சிவமயம் என்றிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பமில்லை.

இனி உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்...

? பிப்ரவரி 15 நடராஜர் அபிஷேகம் வரவுள்ளது. சிவன் ஏன் அபிஷேகப் பிரியன் எனப்படுகிறார்?

- எம்.முருகானந்தம், சென்னை-4

நமது ஒரு வருடம் (365 நாள்கள்) தேவர்களுக்கு ஒரு நாளாகக் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் நடராஜருக்கு நாம் ஓர் ஆண்டில் செய்யும் ஆறு கால அபிஷேகங்கள், அங்கே ஒருநாளுக்கான ஆறுகால பூசையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்கின்றன சைவ நூல்கள்.

நடராஜருக்கு மட்டும் ஏன் அபிஷேகம் செய்யப்படுகிறது என்றால்... சிவனின் அம்சங் களாக ருத்ரன், ஈஸ்வரன், மகாதேவன், சதாசிவம் ஆகிய நால்வரும் குறிப்பிடப்படுகிறார்கள். இதில் சதாசிவம் என்பது நடராஜப்பெருமானைக் குறிக்கும். உருவ வடிவான நடராஜருக்கு மட்டும் ஆறு கால அபிஷேக பூஜை நடைபெறுகிறது.

இதில் மூன்று அபிஷேகங் கள் திதி அடிப்படையிலும் மூன்று அபிஷேகங்கள் நட்சத்திர அடிப்படையிலும் நடைபெறுகின்றன.

கணபதி நைவேத்தியப் பிரியர், முருகன் நாமாவளிப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர், அம்பிகை ஸ்தோத்திரப் பிரியை, சூரியன் நமஸ்காரப் பிரியர் என்ற வரிசையில், சிவம் மட்டுமே அபிஷேகப் பிரியர் என்கின்றன ஆகமங்கள்.

இதில் நடராஜருக்கு மேற்படியான ரூபம் 25 முகங்கள் கொண்ட சதாசிவம். அவருக்கும் மேற்படியான பரம் ஆதிசதாசிவம். இது அருஉருவங்களால் செயல்படுகிறது (அதாவது சிவலிங்க வடிவில்). சிவலிங்க மூர்த்தத்திற்கு சிவராத்திரி அன்று நான்கு ஜாமங்கள் பிரிக்கப்பட்டு மகா அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது.

ஒரு நாள் ஆனாலும் சிவராத்திரி விரதத்தை மிஞ்சிய வழிபாடு இல்லவே இல்லை. இந்த சிவராத்திரி இரவில், நான்கு கால பூஜையைக் காண்பார்கள். ஒவ்வொரு பூஜையும் ஒவ்வொரு பலனை அளிக்கக்கூடியது. ஒவ்வொரு பூஜையிலும் ருத்ரன், ஈஸ்வரன், மகாதேவன், சதாசிவம் என்ற திருவடிவங்கள் வெளிப்படும் என 18 புராணங்களும் கூறுகின்றன.

மணிவாசகப் பெருமான்
மணிவாசகப் பெருமான்


ஈசனை எவ்விதமாக ஆராதித்தாலும் அது அபிஷேகத்துக்கு இணையாக அமைவது இல்லை என்கிறது ஆகமம். லோக க்ஷேமத்துக்காகவும் அந்த ஊரின் நன்மைக்காகவும் சிவம் லிங்க வடிவிலோ நடராஜர் வடிவிலோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.இப்படித் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் சிவத்தை பால், தேன், கருப்பஞ்சாறு என திரவியங்களால் குளிர்விக்கும் போது, அங்கு அருமையான அதிர்வுகள் உண்டாகின்றன.

அந்த இடத்தில் குழுமி இருக்கும் ஆன்மாக்களின் உடலில் அந்த அதிர்வுகளும் சக்தியும் சேர்ந்து அவர்களுள் நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. இதுவே சிவாலய அபிஷேகங்களின் நோக்கம்.

சிவவழிபாட்டின் அத்தனை அம்சங்களும் ஆன்மாக்களின் நன்மைக் காகவே என்பதை உணர்ந்தால், மனம் அந்த வழிபாட்டில் ஆனந்தமாய் லயித்து, சிவ ஆராதனையை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும் என்பதே உண்மை.

? திருவாசகம் மட்டும் முக்கியமாகப் பாராயணம் செய்யப்படுவது ஏன்?

- வி.சிதம்பரம், கரூர்

ஈசனுக்கான சோடசோப உபச்சார மஹா மந்திரங்கள் 16. அவை ஈசானியம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோ ஜாதம், சிரசு, நேத்திரம், சிகா, இருதயம், அஸ்தம், கவசம், நிவர்த்தி, பிரதிஷ்டை, வித்யா, சாந்தி, சாந்தி அதீதம் என்பவை.

இதில் எட்டாவது மந்திரம் சிகா மந்திரம். அதனால் எட்டாம் திருமுறையாக இருக்கிறது திருவாசகம். எட்டாம் மந்திரம் என்பதாலோ என்னமோ பாமரர்களுக்கு எட்டாத மந்திரமாக வைத்துவிட்டார்கள். இப்போது அனைவரும் எட்டிப்பிடித்து இன்புறுகிறார்கள். திருமுறைகளில் மற்ற பாடல்களைப் பாடிய பிறகே பலன் கிடைத்தது. உதாரணமாக, வேதாரண்யம் கோயிலில் கதவு திறந்ததும், திருமருகல், திருமயிலையில் மாண்டவர்களை எழுப்பியதும், முதலை வாயிலிருந்துப் பிள்ளையை மீட்டதுமான அற்புதங்களைச் சொல்லலாம்.

சிவம்
சிவம்

ஆனால், மணிவாசகப் பெருமான் திருவாசகம் பாடுவதற்காக இறைவனே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டார். பிரம்படி பட்டும் குருவாக வந்தும் அவரே அவரைப் பற்றி பாடவும் வைத்துக் கொண்டார். மணிவாசகர் சொல்ல திருவாசகத்தைத் தமது கை வருந்த தாமே எழுதியதுடன், `எழுதியது தாம்' என்று கையொப்பம் இட்டும் தந்தார் ஈசன். இதுவும் திருவாசகத்தின் தனிச்சிறப்புக்கு காரணம் எனலாம்.

மேலும் அனைத்து நூல்களும் துவைதத்தை போதித்த நிலையில், திருவாசகம் மட்டுமே அத்வைதத்தை போதித்தது. அதாவது சிவமும் நாமும் வேறல்ல என்று உணர்த்தியது. உதாரணம், `சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட...' எனச் சிறப்பிக்கிறது. அடியார் பெருமக்கள் துரு பிடித்த இரும்பாக இருந்தாலும் சிவம் என்ற காந்தத்தில் இணைவதால் இரும்பும் காந்தமாக மாறுகிறது. சிவம் என்ற நெருப்பில் அடியார் என்ற துரும்பு சேர்வதினால் அதுவும் நெருப்பாக மாறுகிறது. அப்படியாக நாமும் சிவமும் ஒன்றாகும் தன்மையினைப் போதிப்பது திருவாசகம்.

வேத மந்திரங்கள் எவ்வளவு ஓதினாலும் கண்ணீர் வருவதில்லை. ஆனால் திருவாசகத்தின் ஒரே ஒரு பாடலும் கூட நமக்குள் நெகிழ்வை உண்டாக்கி அழுகையைத் தந்துவிடும். திருஅம்மானை பதிகத்தில் `செப்பார் முலை பங்கன்...' என்கிற பாடலுக்கு மொழி அறியாத விக்டோரியா மகாராணியே உருகினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருவாசகத்தின் வழியே சைவம் வளர்ப்பது எளிமையாக இருக்கிறது என்பதே திருவாசகம் எங்கும் பரவக் காரணமாக இருக்கிறது. எல்லோருக்கும் நல்ல குரு கிடைத்துவிடுவது இல்லை. குரு இல்லாத அடியவர்களுக்கு நல்ல குருவாக இருப்பது திருவாசகம் மட்டுமே. திருவாசகத்தைப் படியுங்கள், சிந்தை தெளிவாகும்; உங்கள் சொல்லே மந்திரமாகும்; உங்கள் செயல் சிவத்தைத் தேடி தரும்!

(பேசுவோம்...)