வணக்கம். வாழிய நலம்!
எல்லை இல்லாத கருணை கொண்ட நம் தந்தையின் ஆனி உத்திர அபிஷேகம் வரும் ஜூலை 5-ம் நாளும், ஆனி உத்திர தரிசனம் அடுத்த நாளும் வர இருக்கின்றன.

ஆனித் திருமஞ்சனமும் அபிஷேகமும் கண்டவர்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று வழி காட்டுகிறார்கள் சைவப் பெரி யோர்கள். ஓர் ஆனி உத்திர நாளில் தான் ஈசன், திருவாசகத்தைத் தந்தருளிய மாணிக்கவாசகருக்குக் குருந்தை மரத்தடியில் இருந்து உபதேசம் செய்தாராம். அதனால் இன்றும் திருப்பெருந்துறை கோயிலில், ஆனித் திருமஞ்சன நாளின் அதிகாலைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.
பிறகு வெள்ளித் தேரில் மாடவீதி உலா வந்து அருள்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். எனவே இந்த ஆனி உத்திர நாளில் ஈசனை வழிபட, ஞானம் உண்டாகும். குழந்தைகளின் கல்வி-கலைகள் மேம்படும். மேலும், திருமஞ்சன தரிசனம் காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வர்; இந்தத் தரிசனத்தைக் காணும் கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும் என்று சைவப் பெருமக்கள் நம்பிக்கைக் கொண்டுள் ளார்கள். எனவே, தவறாமல் ஆடல் அரசனை இந்தத் திருநாளில் தொழுது நலம் பெறுங்கள்
சிவாயநம!
`ஐயா, நந்தியின் காதில் சொன்னால்தான் ஈசன் கேட்டுக்கொள்வாரா? நம் பிரார்த்தனைகளை நந்தியின் காதில் சொல்கிறோமே ஏன்?' என்று அன்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
பிரதோஷக் காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நம் ஈசனார், அண்டம் அதிர ஆடினார் என்பதால், நந்தி வழிபாடு பிற்காலத்தில் பிரபலமானது.
அதனால், நந்தியிடம் சொன்னால் ஈசன் கேட்டுக்கொள்வார் என்று நம்புகிறார்கள் போலும். உதவியாளரிடம் சொன்னால் உயர் அதிகாரி கேட்டுக்கொள்வார் என்ற மனோபாவம் காரணமாக இருக்கலாம்.
ஆனால்... நாம் வேண்டிய பிறகு, அருளக்கூடியவனா நம் ஈசன். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலச்சிறந்த கருணை வள்ளல் அல்லவா அந்த தேவாதிதேவன்!
`வேண்டத் தக்கது அறிவோய் நீ... வேண்ட முழுதும் தருவோய் நீ!' என்று திருவாசகம் படித்தவரும்கூட, ஈசனிடம் சென்று வேண்டு வதைக் கேட்டால், வியப்பாகத்தான் இருக்கிறது. நீங்கள் கருவறைக்கு அருகே செல்லும் போதே உங்களுக்கான தேவை என்ன என்பது அவனுக்குத் தெரியும். அப்படியிருக்க, `இது வேண்டும்... அது வேண்டும்...' என்று கேட்பதுவா பக்தி. உங்களுக்கு என்ன வேண்டும் என்பது ஈசனுக்குத் தெரியாதா?!
ஆகவே, பக்தி மட்டும் செய்யுங்கள்; பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள் போதும். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான். அழுத பிள்ளைக்காக பாற்கடலையே வரவழைத்த பரமதயாளன் அவன். உண்மையான பக்தி, ஈசனைக் கண்டதும் உருகுவது மட்டுமே என்றிருக்கும். அங்கு வேண்டுதலே இருக்காது. உங்களின் தேவைகளை அவன் பார்த்துக்கொள்வான்.

ஈசனைத் தொழும் பணியை, அவன் உறையும் ஆலயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டால் போதும், அவன் உங்களைக் கவனித்துக்கொள்வான். இதை அடியேன் சொல்லவில்லை, அப்பர் கூறுகிறார்.
`நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே!'
இங்கு `கடன்' என்றால் `கடனே' என்று செய்வது இல்லை; கடமையாகச் செய்வது என்றே பொருள். ஈசனுக்கு ஒரே ஒரு கடன்தான். அது அடியவர்களைத் தாங்குதல்.
`என்னைத் தாங்கவேண்டியது உன் கடமை. அப்படி நீ செய்தால், என் கடன் உனக்கான பணியைச் செய்வது!' என்று உறுதிபடச் சொன்னவர் அப்பர் பெருமான். அப்படியே அதுவும் நடந்தது. எனவே சிவத்தை மட்டுமே நம்புங்கள். அது உங்களைத் தாங்கும்.
வேண்டுவது என்பது கோயிலில் மட்டுமே நடக்கக் கூடியதா? இல்லை. அனவரதமும் சிவத் தியானத்தில் இருந்து, அகிலம் சிறக்க வேண்டுவதுதானே சிறந்த சிவனடியார்களின் வேண்டுதல். நம்மில் பலருக்கும் ஈசனிடம் வேண்டத் தெரியவில்லை என்பதுதான் உண்மை!
புனிதவதியாருக்கு வேண்டத் தெரிந்தது. அவர் வேண்டியதும் மாங்கனி கிடைத்தது; பேயுரு கிடைத்தது; கயிலாயத் திருக்காட்சி கிடைத்தது; அகலாதத் திருவடிப்பேறும் கிடைத்தது. தமக்கென எதையும் வேண்டாதவருக்கு எல்லாம் கிட்டும் என்பதைப் புனிதவதியார் மட்டுமல்ல, திலகவதியாரும் நிரூபித்தார்!
திலகவதிக்கு அப்போது என்ன வேண்டும் என்று புரிந்தது. அவள் வேண்டுதல் இறைவருக்கும் புரிந்தது. அதனால் அவர் கேட்டதெல்லாமும் கிடைத்தன. திலகவதியின் வேண்டுதலால், தருமசேனர், திருநாவுக்கரசர் என்றானார்; சைவம் மீண்டெழுந்தது. புண்ணியவதியான அந்தப் பெருமாட்டியின் வேண்டுதல் சைவத்துக்கு உரமானது. அவரால் உருவான திருநாவுக்கரசர் சைவத்தை மீட்டெடுத்தார். நம் வேண்டுதலும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
பன்றிக்குட்டிகளுக்குத் தாயாகி பால் கொடுத்த ஈசன், நம் வேண்டுதல்களை எல்லாம் நிச்சயம் நிறைவேற்றித் தருவான். ஒருவேளை நிறைவேற்றவில்லை என்றால், அது நிறைவேறுவதற்கான காலம் இது இல்லை என்று நம்புங்கள். ஆகவே, ஈசனை விட்டுவிட்டு சம்பிரதாயங்களில் மூழ்கிப் போகாதீர்கள்.

நந்தி மட்டுமல்ல, ஆகம விதிப்படி எந்த விக்கிரகத்தையும் தொடாமல் பக்தி செலுத்துவதே சிறந்தது. ஆனால், கோயிலுக்குப் போகும் பலரும் சிறு சந்நிதிகளில் உள்ள தெய்வங்களைத் தொட்டு வணங்குவதும், கண்ட இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றுவதும் எனச் செயல்படுகின்றனர். இது வேண்டாம்.
சிவத்தைத் தாங்கும் விடை அது. அதன் பணி, சுமப்பது மட்டுமே. அதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். ஈசனை நினைத்தாலே போதுமே; உங்கள் வேண்டுதல் நிறைவேறிவிடுமே. நிறைவேறும் வண்ணம் உங்கள் பக்தி இருக்க வேண்டும். அதை விடுத்து நந்தி காதில் ஓதுவது, சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டுவது எல்லாம் வேண்டாமே!
ஈசனை வணங்குவது என்பது `அன்பு செய்வது' என்றே பொருள்படும். எல்லாமும் சிவம் என்று இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் நேசிக்கவும் தெரியும். `கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!' என்கிறாரே, கவியரசர்.
உங்களிடம் அன்பு இருந்தால்... அன்பு வடிவான ஈசன் துணை இருந்தால்... வேண்டுதலே தேவை இருக்காதே! அதன்பிறகு வேறு எதை நீங்கள் வேண்டுவீர்கள். உண்மையான சைவர்கள் வெறும் சடங்குகளை நம்ப மாட்டார்கள். நீங்களும் செய்ய வேண்டாம். உங்களைப் படைத்தவனுக்கு உங்கள் தேவையும் தெரியும் என்று இருங்கள். நிம்மதி தானே வரும். அப்போது சந்நிதியில் இருப்பதைப் போன்ற சந்தோஷமும் பரவும்!
- பேசுவோம்...
விதுர நீதி சொல்லும் ஆறு விஷயங்கள்!
ஆபத்துக் காலத்திலும் தன் மனதைத் துன்புறுத்தாதவன், தவறாமல் முயற்சி செய்பவன், துக்கங்களை சகித்துக் கொள்பவன் எவனோ அவனே மகாத்மா ஆவான் என்கிறது விதுர நீதி.
அதேபோல் விடக் கூடாத ஆறு விஷயங்களையும் விட்டொழிக்க வேண்டிய ஆறு விஷயங்களையும் விதுரநீதி விவரிக்கிறது.
மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறாமை இல்லாமை, பொறுமை, தைரியம் ஆகிய ஆறு குணங்களை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.
தினமும் பொருள் வரவு, நோய் இல்லாமை, அன்பு கொண்ட மனைவி, பிரியமாகப் பேசுதல், தனக்கு அடங்கிய பிள்ளை, பொருளை அளிக்கும் கல்வி இந்த ஆறும் உலகிலுள்ள மனிதனுக்குச் சுகத்தை அளிக்கும்.
பொருள் சம்பத்துகளை விரும்பும் ஒருவன் அதிக நித்திரை, சோம்பல், பயம், கோபம், முயற்சி செய்யாலம் இருத்தல், காரிய தாமதம் ஆகிய ஆறு தோஷங்களையும் விட்டுவிட வேண்டும்.
- கே.கல்பனா,
சென்னை-44