திருக்கதைகள்
Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

வரும் பிப்ரவரி 5-ம் நாள் தைப்பூச நன்னாள். உலகில் நீரும், நீரிலிருந்து முதல் உயிரினமும் தோன்றிய நாள் தைப்பூசம் என்கின்றன ஞான நூல்கள். அதனாலேயே இந்நாளில் ஆலயம்தோறும் தெப்போற்சவம் நடைபெறுகின்றன. திருஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையைப் பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடந்தது தைப்பூசத்தில்தான்.


சிவமயம்
சிவமயம்

பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது மக்களின் வழக்கம் என்பதை ‘பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே’ என்கிறார் திருநாவுக் கரசப் பெருமான். தைப்பூச நாளில் புனித நீராடுவதன் பெருமையை சம்பந்தரும் பாடியுள்ளார்.

தில்லையில் தைப்பூசத் திருநாளில் வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி, மால், அயன், முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் முனிவர்கள் கண்டு மகிழ ஆடல் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதும் இந்த நன்னாளில்தான்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாளும் இதுவே. எனவே, இந்நாளில் ஈசனை வணங்கிட சகல தோஷங் களும் நீங்கும்; நலன்கள் யாவும் கைகூடும்.

`ஏன் மறுபடியும் மறுபடியும் பிறப்பெடுக்க வைத்து ஈசன் விளை யாட வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார் ஓர் அன்பர்.

ஈசன் பிறக்கவைக்கவில்லை ஐயா... அவர், உங்களுக்கு முக்தியும் மோட்சமும் அளிக்கவே விரும்புகிறார். நீங்கள்தான் ஒவ்வொரு பிறப் பிலும் கண்டதன் மீதும் பற்று வைத்துக்கொண்டு, அந்த ஆசையின் காரணமாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக் கக் காரணமாகிறீர்கள்!

கருணையே வடிவமான ஈசன், தன் அம்சமான ஜீவாத்மாவாகிய உங்களைத் தன்னோடு வைத்துக்கொள் ளவே விரும்புகிறார். நீங்களோ, மண்ணில் வந்ததும் மூலத்தை விட்டுவிட்டு மாயத்தில் சிக்கிக்கொண்டு விடுகிறீர்கள்.

ஒரு 500 ரூபாய் நோட்டு தொலைந்து விட்டது. அந்தப் பணத்தை அடைய வேண் டும் என்று தொலைத்தவன்தான் தேடுவான். அந்தப் பணமானது தான் உரியவனை அடையவேண்டும் என்று தவிப்பது இல்லை. அது எங்கோ விழுந்து கிடக்கும்.

அப்படித்தான், அண்ட சராசரங்களுக்கும் உடையவனான ஈசன், உங்களைத் தன்னில் இருந்து தொலைத்துவிட்டான். அவன் தேடியபடியே இருக்கிறான். சீக்கிரம் அவனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். மற்றபடி நீங்கள் பிறப்பெடுப்பதன் காரணம், உங்கள் வினைகள்தான் என்கின்றன சைவ நூல்கள்.

இதையே `சிவஞான வித்து’ எனும் எனது நூலில் 115 பாடல்களாக வலியுறுத்தி எழுதியுள்ளேன்.

‘தன்னை உணரா தன்மை தானே

பிறப்பெடுக்கக் காரணம்

பொன்னும் பெண்ணும் மண்ணின் ஆசை

அற்பப் புகழ்ச்சிக்கு மயங்கியே

உன்னைப் படைத்த இறையை மறந்து

எதன் எதற்கோ அலைந்திட்டாய்

அன்பும் அனைத்தும் சிவத்தில் வைத்தால்

வாழ்வில் அனைத்தும் கிடைக்குமே!’

எதன் மீது ஆசை கொண்டாலும் அந்த ஆசை பெருகிக்கொண்டே போகும். அதிலும் உறவுகள்மீது கொண்ட ஆசை விடுவதே இல்லை.

வயதானப் பெரியவர் ஒருவர் பெட்டிக்கடை வைத்துப் பிழைத் துக் கொண்டிருந்தார். அவருக்கு யோகி ஒருவர் பழக்கமாகியிருந் தார். இந்தப் பெரியவர் ஒவ்வொருமுறையும் யோகியைச் சந்திக்கும் போது, மகன் சரியில்லை, மனைவி சரியில்லை என்று புலம்பிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை, ‘`சரி எதுவும்தான் சரியில்லையே, என்னுடன் வந்து விடேன்’’ என்று அழைத்தார் யோகி.

பெரியவரோ, ‘வருமானத்துக்கு வழியில்லையே, மகன் வேலைக் குப் போய்விட்டால் நான் வந்துவிடுகிறேன்’ என்றார்.

இன்னொருமுறை பெரியவர் வழக்கம்போல் புலம்ப, அப்போதும் யோகி அவரைத் தன்னுடன் வரும்படி அழைத்தார்.

`‘மகன் இப்போதுதான் வேலைக்குப் போகிறான், அவனுக்குத் திருமணம் முடிந்ததும் வருகிறேன்’’ என்றார் பெரியவர்.

இப்படியே ஒவ்வொருமுறையும் பல சாக்குபோக்குகளைக் கூறியபடியும், அதேநேரம் புலம்பல்களை விடாமலும் நாள் களைக் கழித்தார் பெரியவர். அந்த யோகியும் இவரை விட்டு விட்டு வடக்கே சென்றுவிட்டார். காலம் உருண்டது.

மீண்டும் ஒருநாள் அந்தப் பெட்டிக்கடைக்கு வந்தார்யோகி. அங்கே பெரியவரைக் காணவில்லை. கடையில் அவரின் மகன் இருந்தான். பெரியவர் தவறிப் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன என்றான். அப்போது யோகியின் காலருகே ஒரு நாய் வந்து அமர்ந் தது. அது அந்த பெரியவர்தான் என்று கண்டுகொண்டார் யோகி.

அந்த மகனுக்குத் தெரியாமல் நாயிடம் வந்து `‘அப்பா! நீ செத்துப் போயும் இங்கே இப்படி அலையத்தான் வேண்டுமா? இப்போதாவது என்னோடு வா. தல யாத்திரை செய்து சிவனைக் கும்பிட்டுக் கடைத்தேறுவோம்’’ என்றார்.

அவரைக் கண்டுகொண்ட நாய் ‘`ஐயோ சாமி, இப்போதான் என் மருமக உண்டாயிருக்கா. கொஞ்சநாள் கழிச்சுப் பேரனைப் பார்த்துட்டு வரேன். நீங்க போய் வாங்க’’ என்றதாம்!

இதுதான் எல்லோரின் நிலையும். உண்மையில் உங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்ற நிலை வரும்போதுதான் மகிழ்ச்சி ஆகிறீர்கள். பல பிறவிகளில் நீங்கள் செய்த சஞ்சித கர்மா, உங்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும். சஞ்சித கர்மாவில் சிறுபகுதியான பிராரப்த கர்மா, இந்த பிறவியில் உங்களுக்கு நன்மை-தீமைகளைத் தரும். ஆகாமி கர்மா என்பது இந்தப் பிறவியில் நீங்கள் செய்வது. அது, உடனடியாக உங்களுக்கானப் பலனைக் கொடுத்துவிடும்.

எனவே ஆகாமி கர்மாவைக் குறைத்து, தானம் தொண்டுகளால் பிராரப்த கர்மாவை நன்மையாக்கி, கடவுள் வழிபாட்டால் சஞ்சித கர்மாவை அழித்து, அதன்வழியே பிறவியில்லாத நிலையை எட்ட லாம் என்கிறது சைவம். ‘பிறவா வரம் தாரும் பெருமானே!’ என்று பெரியோர்கள் பலரும் வேண்டியது உண்டு. அது அவரவர் கைகளில்தான் உள்ளது என்பதையும் அறிந்தவர்கள் அவர்கள். முன்னை வினைகள் ஏதும் இருந்தால், அவற்றையும் அழித்து முக்தி தரவேண்டும் என்றே அவர்கள் அங்ஙனம் வேண்டினார்கள்.

இதில் வித்தியாசமாக வேண்டியவர் சுவாமி விவேகானந்தர். ‘ஞானமின்றி, கடைத்தேற வழியில்லாத கடைசி மனிதன் இருக்கும் வரை எனக்கு மீண்டும் மீண்டும் பிறக்கும் வரம் வேண்டும்’ என்றார்.

பிறவிக்குக் காரணமானவர்கள் நீங்கள். அதை தடுக்கவும் உங்களால் முடியும். தொடர் வழிபாடுகளும் இறைமீது அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தால் இது சாத்தியம். மனமுருகி நீங்கள் வேண்டினால், நிச்சயம் பிறப்பு இறப்பு இல்லாத வாழ்க்கையை அளிப்பான் ஈசன். என்ன ஒன்று... சரியாக வேண்டத் தெரிய வேண்டும் நமக்கு. பிறவியிலாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்டாலே சகலமும் சரியாக அமைந்துவிடும். நீங்கள் இறக்கும்போது, உங்களின் கர்மப் பதிவுகள் எத்தனை இருக்கிறது என்பதில் இருக்கிறது உங்கள் பிறப்பும் முக்தியும்.

தொடர்ந்து ஈசனைப் பற்றிக் கொள்ளுங்கள். பற்றிக் கொண்டால் ‘செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன்...’ என்ற கவலை உங்களுக்கு ஏற்படாது.

உள்ளத்தின் ஆசையால் ஆன்மா களங்கமுற்று உடல் பிறவிகளில் உழலும். இந்த அறியாமை என்னும் நள்ளிருளில் மூழ்கிவிடாமல், நம்மைக் காக்கவென்றே நம் உயிருக்குள் நின்றாடுகின்றான் இறைவன் என்பதையே ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே!’ என்று விளக்குகிறார் மணிவாசகர். பிறப்பறுக்க முதலில் திருவாசகம் படியுங்கள். நலமே விளையும்.

சிவாயநம.

-பேசுவோம்...

புத்தர்
புத்தர்
kdfotografie

`மூச்சு விடும் நேரம்!’

புத்தர் ஒருமுறை தன் சீடர்களிடம் `‘ஒரு மனிதனின் வாழ் நாள் எவ்வளவு காலம்?’’ என்று கேட்டார். இந்தக் கேள்வி மிகச் சாதாரணமாகத் தெரிந்தது சீடர்களுக்கு. அதே நேரம், காரணம் இன்றி புத்தர் கேட்க மாட்டார் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.

ஒருவர் ``எழுபது’’ என்றார். ``தவறு’’ என்றார் புத்தர். அடுத்தவர் ‘`அறுபது’’ என்றார். ``இதுவும் தவறு’’ என்றார் பெருமான். இன்னொருவர் ‘`ஐம்பது’’ என்றார். மீண்டும் ``தவறு’’ என்றார் அண்ணல்.

`‘ஒரு மனிதனின் ஆயுள், ஒரு மூச்சு விடும் நேரம்’’ என்று புத்தர் சொன்னதும் சீடர்கள் புரியாமல் திகைத்தனர். உடனே புத்தர், ``ஒரு மூச்சு விடும் நேரம் ஒரு கணப்பொழுது. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதே வாழ்க்கை. நொடி நொடியாக மனிதன் அர்த்தமுள்ள வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்று உணர்த்தவே ஒரு மூச்சு விடும் நேரம் என் றேன்!’’ என்று விளக்கினார்.

நாமும் ஒவ்வொரு நொடியும் இறையுணர்வோடு முழுமையாக வாழ்வோம்.

- கி.பாண்டியன், சென்னை-44