Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசக சித்தர் சிவ தாமோதரன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்

சிவமயம்

திருவாசக சித்தர் சிவ தாமோதரன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்
வணக்கம். வாழிய நலம்!

உலகமே குதூகலித்துக் கொண்டாடும் மதுரையம்பதி சொக்கநாதப்பெருமான் ஆவணிப் பெருவிழா 29.8.22 அன்று தொடங்கவுள்ளது. எளியோர்க்கு எளியோனான எம்பெருமான் ஆலவாயன், தினம்தோறும் பல லீலைகள் புரிந்து தன் பக்தர்களைக் காக்கும் அற்புத விழா இது.

கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, நாரைக்கு முக்தி கொடுத்த லீலை, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை, உலாவக்கோட்டை அருளிய லீலை, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, வளையல் விற்ற லீலை, நரியைப் பரியாக்கிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலை என... அப்பப்பா... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் சொக்கநாதனை தரிசிக்க ஓராயிரம் கண்கள் வேண்டும்!

தலையில் சுழியுள்ளது சீவன், அதற்குப் பிறப்பும் அதனால் இறப்பும் உள்ளது. அந்த சீவன்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பது சிவன். அதற்குப் பிறப்பே இல்லை என்பதால் தலையில் சுழியில்லை. எழுதிப் பாருங்கள் `சீ' என்றால் சுழி உண்டு; `சி' என்றால் சுழி இல்லை. நம் தலையில் சுழி விழ வைப்பதும், அந்தச் சுழியை நல்லவிதமாக மாற்றிவைப்பதும் சிவமன்றி வேறு யாரும் இல்லை. சிவத்தைச் சரண் அடைந்துவிட்டால் அவத்தை எது உண்டு. சிவத்தைத் தவிர வேறு எதையும் வணங்குபவரைக் கண்டால் அச்சம் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

‘புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்

கற்றைவார் சடைஎம் அண்ணல்

கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றும்ஓர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்கு

அற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே’


சைவத்தைக் கற்றுக்கொள்வது எப்படி, சகலமும் சிவம் - சைவம் என்றால் எல்லோரும் சிவனைத்தானே வணங்கவேண்டும் என்று கேள்விகள் வந்துள்ளன அன்பர்களே!

சிவபெருமான்
சிவபெருமான்

சைவத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. சைவம் ஒரு வாழ்வுநெறி. அதனால் அதைக் கற்பதோ, கற்பிப்பதோ இயலாது. சைவம் என்பது ஒரு மலரைப் போல உங்களுக்குள் மலர்வது. எங்கே அன்பு சுரக்கிறதோ அங்கே சைவம் மலர்ந்துவிடும். உங்களுக்குள் சைவம் என்னும் அற்புதமான நெறி மலர்ந்துவிட்டால், அதன் பின் உங்கள் வாழ்க்கை அசைக்க முடியாத இடத்துக்கு வந்துவிடும். திருநீறும், திருமுறைகளும், சிவ ஆராதனையும் உங்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திவிடும், சிவமயமாக்கிவிடும். அதன்பிறகு ஆனந்த மயம்தான்.

ஒரு பழம் முற்றிலும் பழுத்தபின் கீழே விழுந்துவிடும் என்பதே உண்மை. புவி ஈர்ப்பு விசையே அந்தப் பழத்தை கீழே விழ வைக்கிறது. அதுவரை அந்தப் பழம் விழாததன் காரணம், புவி ஈர்ப்பு விசையைவிட, அந்த பழத்தைத் தாங்கியிருந்த காம்பின் ஈர்ப்பு விசை அதிகமாக இருந்ததே. எப்போது காம்பின் ஈர்ப்பு விசை வலுவிழக்கிறதோ, அப்போது புவிஈர்ப்பு விசை வென்றுவிடும்; பழம் கீழே விழுந்துவிடும்.

சிவமயம்


இப்படித்தான் நம் வாழ்க்கையும். உலக இச்சைகள் இழுத்துக்கொண்டு இருக்கும்வரை நம்மால் இறைவனைச் சென்று சேர முடியாது. இச்சைகள் குறையக் குறைய இறைவனை நோக்கிப் பயணப்படத் தொடங்குவோம்.

சைவம் தோன்றியதில்லை. அது அநாதி காலம் தொட்டு எப்போதுமே இருப்பது. எல்லாம் இருக்கும்போதும், எதுவும் இல்லாத போதும் இருப்பது சைவம். ஊழியிலும் படைப்பிலும் இருப்பது. ஒரே ஒரு புள்ளியாக வும் விரிந்து பரந்த பிரபஞ்சமாகவும் இருப்பது சைவம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணு விலும் இருப்பது சைவம். எங்கு சிவம் நிலை பெற்று நிற்கிறதோ அங்கெல்லாம் சைவம் நிலைகொள்கிறது.

சகலமும் சிவம், சைவம் என்றால் எல்லோரும் சிவனைத்தானே வணங்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள்.

ஆதிமனிதர்கள் ஆடையற்று இருந்தார்கள். எனில், இன்றும் எல்லோரும் ஆடையில்லாமல் அல்லவா இருக்கவேண்டும் என்று சொல்ல இயலுமா? அது விதண்டாவாதம் இல்லையா?

உண்மையில் உலகில் இருக்கும் ஆடை அணிந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆதிமனிதனும் இருக்கிறான். இன்னமும் உறக்கத்தில் கீழே விழுந்துவிடுவதைப் போல தோன்றி உடல் நடுங்குகிறதே, ஏன்?

ஆதியில் கிளையில் தூங்கிக் கீழே விழுந்ததை இன்னமும் நமது மரபு அணுக்கள் மறக்கவில்லை என்பதே காரணம்! சைவமும் அப்படியே, ஒருவர் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எதை வணங்கினாலும் அவருக்குள் சைவம் வாழ்கிறது என்றே அர்த்தம்.

சிவ. தாமோதரன்
சிவ. தாமோதரன்


அன்பில்லாத உயிர் எங்கு இருக்க முடியும். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு சிவமும் இருக்கும். ஆக சிவம் எங்கெங்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதையே ‘தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...’ என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.

எங்கும் நிறைந்துள்ள சிவம் நம் தென்னாட்டில் சிவன் என்றும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு பெயர்களில் வணங்கப் படுகிறார் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

எங்கெல்லாம் வழிபாடு இருக்கிறதோ அங்கெல் லாம் சைவமே நிலைத்து நிற்கிறது. `வழிபாடு' என்பதே `வழிபடுத்தல்' என்ற வேர்ச்சொல்லில் தோன்றியது.

வழிபடுத்தல் என்றால் நம் முன்னோர்கள் வழியில் நடத்தல் என்று அர்த்தம். உலகம் தோன்றியபோதே மனிதன் மலைகளை, நெருப்பை, சுடரை, வானத்தை, பூமியை, நீரை, காற்றை வணங்கத் தொடங்கிவிட்டான் என்கிறது மானுடவியல். அதை இன்றும் செய்து வருவது சைவம் ஒன்றே.

உயர்ந்த தத்துவங்கள், உண்மையான அன்பு, தியாக உணர்வு கொண்ட குருமார்கள் இல்லாத எந்தச் சமயமும் அழிந்துவிடும் என்பது நியதி. சைவத்தில் இவற்றுக்கு எந்தக் குறையும் இல்லை. காலம்தோறும் எத்தனையோ குருமார்கள், நாயன் மார்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் அருளிய ஞான நூல்களைப் படிக்கவே ஓர் ஆயுள் போதாது.

ஆக, சைவம் ஆதியானது; ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டது; உலக வாழ்வின் அத்தனை தேவைகளை யும் தன்னுள் கொண்டது. அறிவியல், கலைகள், போர்முறைகள் என அனைத்தும் கொண்டது சைவம்.

அது யாராலும் உருவாக்கப்படவில்லை; பிரபஞ்சத்தோடு மலர்ந்தது. எனவே சைவன் என்ற பெரும் தகுதியைப் பெற அன்போடு நெறி யோடு இருந்து வாருங்கள்; சகலத்தையும் கற்றுக் கொள்ள லாம். உணர்ந்தும் கொள்ளலாம்!

- பேசுவோம்...

பிரளய கால அம்மன்!


காஞ்சி பெரிய கோயிலான ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அருள்மிகு பிரளயகால அம்மனை தரிசிக்கலாம். சிவாம்சம் நிறைந்த தெய்வம் இவள்.
ஏகாம்பர நாதரை மணக்க விரும்பிய ஏலவார்குழலி அம்மையால் உருவாக்கப்பட்ட காவல் தெய்வமே சம்ஸ்கிருதத்தில் பிரளய பத்தினி என அழைக்கப்படும்
ஶ்ரீபிரளய கால அம்மன்.

பூமியில் காஞ்சித் தலத்தில் மாமரத்தடியில் தபஸ் செய்த அம்மையைச் சோதிக்க விரும்பிய இறைவன், கங்கையை அனுப்பினார். காவல் தெய்வம் பிரளயகால அம்மனின் தலைக்கு மேல் கங்கை வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இதனால் பிரளய கால அம்மன் சிரசில் கங்கை உள்ளது. இன்றும் காஞ்சிக்கு கீழே கங்கா நதி ஓடுவதாக ஐதீகம்.
பலருக்குக் குலதெய்வமாகத் திகழும் பிரளயகால அம்மனை வழிபட, மனச் சங்கடங்கள் தீரும் என்பது உறுதி