திருத்தலங்கள்
Published:Updated:

சிவமயம் - 16

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவ.தாமோதரன் ஐயா

வணக்கம். வாழிய நலம்!

கற்பூரம் அணைந்துவிடுவது, தேங்காய் அழுகிவிடுவது போன்றவை எல்லாம் அபசகுனமா என்று பலரும் பலவாறு கேட்டபடியே இருக்கிறீர்கள்.

சிவாயநம
சிவாயநம

சைவம் அதன் ஆழ்ந்த தத்துவங்களில் மக்களை நல்வழிப்படுத்தி அமைதிக்கும் மோட்சத்துக்கும் வழிகாட்டுவது. அது வெறும் சடங்குகளில், சகுனங்களில் மட்டும் நம்பிக்கைக் கொண்டது இல்லை.

காற்று அடித்தால் கற்பூரம் அணையும். தேங்காய் பார்த்து வாங்காவிட்டால் அழுகத்தான் செய்யும். எதையும் சிரத்தை யோடு செய்ய வேண்டும் என்பதற்காக தீய சகுனம் என்று சொல்லி இருக்கலாம். அதற்காக வருந்தத் தேவையில்லை.

எண்ணத்தில் சிவம் நிறைந்து இருந்தால் செயல் செம்மை யாகும். பிறகு எந்தத் தீய அறிகுறிகளும் தோன்றவே தோன் றாது கவலையை விடுங்கள்; கற்பகத் தருவான நம் சிவனைப் பற்றிக்கொள்ளுங்கள்.

`நிலையில்லாத இந்த உலகில் சொத்து சேர்ப்பது, அதை பாதுகாப்பது எல்லாம் சைவத்துக்கு எதிரானதுதானே!' என்று ஓர் அன்பர் கேட்டுள்ளார்.

நாம் எல்லோருமே ஞானிகள் ஆகிவிட முடியாது. இந்த உலகில் வாழ சில அடிப்படைத் தேவைகளும் உண்டு. அதை நியாயமான முறையில் சம்பாதித்து, நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்து, இறைப்பணிக்கும் பங்களித்து வாழ்வதே இல்லறத்தோருக்கு விதிக்கப்பட்ட பணி.

துறவிகளைக் கவனித்துக்கொள்வதே இல்லறத்தார் பணி என்றால், அந்த இல்லறத்தான் எதுவும் இல்லாமல் இருப்பது கூடாது அல்லவா! அதேவேளையில் பேராசைப்பட்டு மேலும் மேலும் பொருள் தேடி பதுக்கி வைப்பதும் கூடாதது என்று அறிவுறுத்துகிறது சைவம்.

எதையும் துறக்கச் சொல்ல வில்லை சைவம். ஆனால் எதையும் எப்போதும் துறக்கும் நிலைக்குத் தயாராக இருக் கும்படி சொல்கிறது சைவம்.

`சிவத்தைத் தவிர இங்கு எதுவும் எப்போதும்சதமில்லை என்று உணர்ந்து உலக வாழ்க்கையில் பட்டும்படாமலும் இருந்து கொள்' என்கிறது. ஒரே நொடியில் அனைத்தையும் துறந்தவர்கள் தான் சைவத்தில் மாபெரும் குருமார்களாக விளங்கி வருகிறார்கள். திலகவதியார், திருநாவுக்கரசர், பட்டினத்தார் ஆகியோரின் சரிதம் நமக்கு சொல்வது துறவு, நிலையாமையை மட்டும் அல்ல. வைராக்கிய பக்தியையும் அல்லவா.

துறவிகள் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே இல்லறத்தார் தொண்டும் சைவத் துக்கு முக்கியம். இதை நீலகண்ட குயவனார், இளையான்குடிமாற நாயனார், அப்பூதி அடிகள் போன்ற அருளாளர்களின் திருக் கதை நமக்கு உணர்த்தும். எவ்வளவு செல்வம் வந்தபோதும் சிவத்தைப் பற்றியபடியே இருங் கள். செல்வமே இல்லாதபோதும் சைவத் தொண்டை மறவாது இருங்கள். இதற்கு ஒரு கதை உண்டு.

சிவமே கதியென வாழ்ந்த துறவியின் குடிலுக்கு ஒரு பணக்காரன் வந்தான். அங்கு ஒன்றிரண்டு மண் பாத்திரங்கள், ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு கோரைப்பாய், ஒரு விளக்கு... இவை மட்டுமே இருந்தன. வந்தவர் அமர, ஒரு நாற்காலி கூட இல்லை.

பணக்காரன் தன் துன்பங்களை எல்லாம் அந்த துறவியிடம் கூறி ஆறுதல் பெற வந்திருந் தான். ஆனால் துறவியின் நிலையோ இப்படி இருக்கிறதே என்று விழித்தான். பின்னர் ஒருவாறு தேறி, ``ஐயா இங்கே ஒரு நாற்காலி கூட இல்லையே, இங்கு எப்படி வாழ்கிறீர்கள்' என்று கேட்டான். துறவி புன்னகையுடன் ``நீங்கள் பெரும் செல்வந்தவராயிற்றே, உங்கள் நாற்காலி எங்கே?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த பணக்காரன், ``நான் இங்கே விருந்தினராகத்தானே வந்திருக்கிறேன். போகும் இடமெல்லாம் நாற்காலிப் படுக்கை யைக் கொண்டுபோக முடியுமா?' என்றான்.

உடனே துறவியும் ``அப்பனே! இந்த அடியேனும் இந்த உலகத்துக்கு தற்காலிகமாக தான் வந்துள்ளேன், அதனால் நானும் எதை யும் கொண்டு வரவில்லை'' என்றார்.

நாம் ஈசன் அருளால் இங்கே பயணம் வந்து இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தால், பெரும் சுமைகளைச் சுமந்து கொண்டிருக்க மாட்டோம். சுமைகள் என்றால் பொருள்கள் மட்டுமல்ல, வினை களும்தான். அதிக சுமைகள் பயணத்துக்கு மட்டுமல்ல, நம் மோட்சத்துக்கும் தடையாக அமையும் என்பதே சைவம் கூறும் செய்தி.

சைவம்
சைவம்

தீய வழியில் பொருள் சேர்க்காதீர்கள், யாரிடமும் கடன் வைத்துவிடாதீர்கள், இலவசமாக எதையும் வாங்காதீர்கள்... முக்கியமாக கொடுக்க வேண்டும் என்றே எப்போதும் நினையுங்கள், வாங்க வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கையே நரகமாகி விடும். கொடுப்பவர்களைப் பாருங்கள்... நிச்சயம் வசதியாகவும் நிம்மதியாகவுமே இருப்பார்கள். வாங்கிக் கொண்டே இருப்ப வர்கள் செல்வம் இருந்தாலும் வறியவர்களே!

சைவர்கள் இருப்பதைக் கொண்டு சுகமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆடம்பரமான எந்த வஸ்துவுக்கும் அடிமையாகி விடாதீர்கள். மீண்டும் ஒரு கதை.

சந்நியாசி ஒருவர் ஆற்றங்கரையில் குடிசையில் வாழ்ந்து வந்தார். தினமும் சிவபூஜை செய்தபிறகு மதியம் ஒருவேளை மட்டும் கீரைகளைப் பறித்து, நீரில் அவித்து உண்டு வாழ்ந்தார். அந்த ஊர் அரசன் இந்த சந்நியாசியைப் பற்றி கேள்விப்பட்டு, தம்மை வந்து சந்திக்கச் சொன்னான். துறவியோ மறுத்துவிட்டார்.

அதனால் அவரைப் பார்க்க மந்திரி வந்தார். சந்நியாசி மதியம் கீரையை அவித்து உண்பதைக் கவனித்துவிட்டு, ``ஐயா! நீங்கள் மட்டும் அரசரை சந்தித்துப் புகழ்ந்து பேசினால், இந்த கீரையை உண்ண வேண்டிய அவசியம் இருக்காதே'' என்று பரிவோடு பேசினார்.

உடன் சந்நியாசி ``அப்பனே! நீ மட்டும் இந்தக் கீரையை உண்ணப் பழகி இருந்தால், யாரையும் புகழ வேண்டிய அவசியம் இருக்காதே!'' என்று கூறிச் சிரித்தார். மந்திரிக்கு தன் நிலை புரிந்தது. தானும் துறவு பூண்டு சிவபூசையில் மூழ்கினார்.

உண்மையான பக்தன் கடவுளைத்தவிர வேறு எதையும் முக்கியமெனக் கொண்டாடாமல் வாழ வேண்டும். இதை வலியுறுத்தவே சைவத்தில் நிலையாமை தத்துவம் நிலைபெற்றது. மற்றபடி எல்லாவற்றையும் துறந்துவிட்டு இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

விருந்தோம்பல் நமது சைவத்துக்குச் சிறப்பம்சம். வரும் அடியவர்களுக்கு அன்னம் பாலித்தல் சைவத்தின் மிகச் சிறந்த தொண்டு. அடியவர்களுக்கு செய்யும் மாகேஸ்வர பூஜைக்கு நிகரான சிவபூஜை இல்லவே இல்லை என்று சைவம் கூறும். இல்லறத்தாரே விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது விதி. விருந்தோம்பலே இல்லறத்தாருக்கு சிறந்த அடையாளம் என்கின்றன இலக்கியங்கள்.

எனவே நிலையில்லாத உலகில் உங்கள் புகழ் நிலைத்திருக்க சைவத்தொண்டு செய்யுங்கள். அதற்கு உங்கள் நியாயமான செல்வம் உபயோகப் படட்டும். சிவாயநம!

`வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்

பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ!'

- பேசுவோம்...

சிவபெருமானுக்கு லட்டு சமர்ப்பணம்!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலவாயர் திருக்கோயில். லிங்கத் திருமேனி மீது பாசக்கயிறு விழுந்ததால் சிவம் சீற்றம் கொண்டது. அவரைச் சாந்தப்படுத்த எமதர்மன் இங்கு வந்து வழிபட்டார் என்கிறது புராணம்.

இங்குள்ள அம்பிகையும் மீனாட்சியே!

16 திங்கட்கிழமைகளில் இந்தச் சிவனாருக்கு விரதமிருந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை லட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகியன கலந்து 16 லட்டு பிடித்துப் படைப்பார்கள்.

- தி.சபாபதி, மேலூர்